சில திரைப்படங்கள் பார்க்கும்போது இதற்குமேல் இந்தப் படத்தை வேறு யாராலும் சிறப்பாக எடுத்திருக்கவோ, வேறு யாராலும் நடித்திருக்கவோ முடியாது என்று திருப்தியாகத் தோன்றும்..
அப்படியான ஒரு ரசனையான படம் அழகர்சாமியின் குதிரை.
பாஸ்கர் சக்தியின் சிறுகதையாக வாசித்திருந்த அழகர்சாமியின் குதிரை திரைப்படமாகவும் அதே கம்பீரத்துடனேயே உலா வருகிறது.
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் காட்டிவரும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். இவர் இயக்கும் அடுத்த படத்தை இப்போதே எதிர்பார்க்கும் முதலாமவன் நான் ஆகட்டும்.
சிறுகதைகளோ நாவல்களோ திரைப்படங்களாக மாறும்போது இயல்புகள் மீறப்படுவதும், மூலப்பிரதியில் கண்டசுவை இல்லாமல் போவதும் பல தடவை நாம் கண்ட அனுபவம்.
ஆனால் அழகர்சாமியின் குதிரையில் அந்தக் குறை இல்லாததற்கான காரணம் /காரணங்கள் என நான் நினைப்பது....
படத்தில் முக்கியமான பாத்திரங்களை ஏற்றிருக்கும் அநேகர்/ எல்லோருமே புதுமுகங்கள்.. இதனால் பாத்திரங்களில் நடிக,நடிகையரின் இமேஜ் உறுத்தல்கள் தொற்றவில்லை.
இசைஞானியின் மூன்றே மூன்று பாடல்கள் என்பதால் படத்தின் கதையோட்டத்தை அவை பாதிக்கவில்லை.
சிறுகதையில் தரப்பட்ட பாத்திரங்கள் தவிர எவற்றையும் நகைச்சுவைக்காக இயக்குனர் இணைக்கவும் இல்லை; கிளைக்கதைகள் எவற்றையும் புகுத்தவும் இல்லை.
ஆனாலும் கதையை எதுவித மாற்றமும் இல்லாமல் திரைக்கதையை சுசீந்திரன் உருவாக்கி இருப்பது முதல் பாதியின் மெதுவான நகர்வுக்குக் காரணம் என நினைக்கிறேன்..
பாஸ்கர் சக்தி இத் திரைப்படத்தின் இணை இயக்குனராகவும் இருப்பது படத்தின் மற்றொரு பலம் போல் தெரிகிறது.
மூடநம்பிக்கைகளும், போலியான கடவுளர் உருவாக்கமும் சாதாரண மக்களின் வாழ்வில் செலுத்தும் தாக்கமும், கிராமங்களில் இந்தக் கடவுள்களும் கடவுள்களின் ஏஜென்ட்களான மந்திரவாதிகள், பூசாரிகள் செய்கின்ற பித்தலாட்டங்களும் கதையில் நன்றாக உரிபடுகின்றன.
தேனிப்பக்கம் உள்ள மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் கண்ணுக்குக் குளிர்ச்சியாக வருவதை மண்ணின் மைந்தன் தேனி ஈஷ்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கண்ணுக்கு உறுத்தலும் இல்லை; தேவையற்ற தொழினுட்பங்களும் இல்லை.
இயக்குனர் சொல்ல வந்த கதையை எங்கள் கண்களுக்கு நாங்களே பார்ப்பதாகக் காட்டியுள்ள ஒளிப்பதிவும், சிரத்தையான நேர்த்தியான படத்தொகுப்பும் சர்வதேசத் திரைப்படமொன்றின் பிரமிப்பை வழங்குகின்றன.
(படத்தொகுப்பு - காசி விஸ்வநாதன்)
அண்மையில் பார்த்த சில ஜப்பானிய, சீன மொழித் திரைப்படங்களில் மனதை அள்ளும்சிறு சிறு உணர்ச்சி சித்திரப்படுத்தல்கள் இதிலும் உண்டு.
சில காட்சிகள் ஏனோ மைனா படத்தைக் கண்ணுக்குள் கொண்டு வந்தன. எடுக்கப்பட்ட மலைப்புறப் பிரதேசங்களாக இருக்கலாம்.
இளையராஜாவின் பாடல்கள் மூன்றும் கதையுடனேயே இணைந்து பயணிப்பதால் அவை பற்றிப் பேசாமல், இசை பற்றி அதிகமாகவே சிலாகிக்கலாம்..
பல இடங்களில் இசையைப் பேச விட்டுள்ளார் ராஜா.. பல இடங்களின் காட்சிகளின் வசனங்கள் தரும் உணர்ச்சிகளை விட இளையராஜாவின் இசை தரும் அழுத்தம் அதிகம்.
வழமையாக இப்படியான சில கலைப்படங்களில், அல்லது மசாலா இல்லாத வித்தியாசமான படங்களில் கமல்ஹாசன், விக்ரம் அல்லது சூர்யா போன்றோர் தங்கள் உடலை வருத்தி, அழகைக் குறைத்துக் குரூபிகளாக நடிப்பதைத் தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துப் பழகிய எமக்கு அப்புக்குட்டி ஒரு அதிசயமான மகிழ்ச்சி.
தமிழ்த்திரைப்பட கதாநாயகர்களுக்கான எந்தவொரு இயல்பும் இல்லாத அவலட்சண தோற்றம், குள்ள உருவத்தோடு இந்தக் கதையின் நாயகனாக அப்புக்குட்டி.
குதிரைக்கும் அப்புக்குட்டிக்கும் இருக்கும் பாசம், நெருக்கம் நெகிழ்ச்சியைத் தருவதாகக் காட்சிப் படுத்தப்படுகிறது.. அப்புக்குட்டி காட்டும் உணர்ச்சிப் பிரவாகத்துக்கேற்ற குதிரையின் அசைவுகளும், பின்னணி இசையும் டச்சிங்.
இதற்கு முதல் அப்புக்குட்டியை சிறு பாத்திரத்தில் குள்ள நரிக் கூட்டத்தில் பார்த்து ரசித்திருந்தேன்.
இதில் கனதியான பாத்திரமொன்றை ஏற்று சிறு சிறு உணர்ச்சிகளையும் கொட்டிக் கலக்கி இருக்கிறார்.
ஆனால் இனி? ஒரு காமெடியனாக, கோமாளியாக எம் தமிழ்த் திரையுலகம் அவரை மாற்றிவிடும். எம்மை ஏமாற்றிவிடும்..
பாவம்.
சரண்யா மோகன் இவரின் ஜோடி என்பதால் மட்டும் கதாநாயகி ஆகப் பார்க்கப்படுகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை அள்ளிக் கொள்கிறார்.
அழகான சரண்யாவுக்கும் அப்புக்குட்டிக்கும் எப்படி திருமணம்? ஏன் என்று அழுத்தமாக, அழகாக சொலும் கட்சி நறுக்.
காதல் ஜோடியாக கண்ணால் கதை பேசும் பிரபாகரன்-அத்வைதா ஜோடி கவர்ந்தது.
பிரபாகரன் முக்கியமான கட்டங்களுக்குத் தேவைப்படுகிறார்.
அத்வைதா அழகாக இருக்கிறார். கண்களால் பேசத் தெரிந்துள்ளது. நல்ல படங்களாப் பார்த்துக் குடுங்கப்பா..
போலீசாக வந்து போலி சாமியாராக மாறும் சூரி கலகலக்க வைக்கும் ஒரு பாத்திரம்.கதையோடு ஒட்டிச் செல்லும் நகைச்சுவையில் ரசிக்க வைக்கிறார். கிடைக்கும் வாய்ப்புக்களில் வெளுத்துவாங்கும் சூரியை யாராவது தொடர்ந்து முக்கிய படங்களில் பயன்படுத்தலாம்.
போலீஸ் அதிகாரி, கிராமத் தலைவர், கோடாங்கி, ஆசாரியார், பொன்னம்மா, கோடாங்கியாரின் மனைவி, மைனர் என்று அச்சு அசல் இயல்பான தெரிவுகள்.
ரசிக்க வைக்கும் இயல்பான நடிப்புக்கள்; கதையுடன் கூடவே பயணிக்கும் சிம்பிளான நகைச்சுவைகள்..
கிராமத்துக்கே தெய்வமான அழகர்சாமியின் வாகனமாக இருக்கும் மரக்குதிரை காணாமல் போய் விடுகிறது. கிராமத்துக்கு தெய்வ குற்றம் வந்து மழை வராமல் போய்விடும் எனப்பயந்து,அதைத் தேடித் திரிந்து போலி மாந்திரீகவாதி ஒருவனின் வழிகாட்டலில் உண்மையான வெள்ளைக் குதிரை ஒன்று அகப்பட்டுவிடுகிறது. அந்தக் குதிரையே தங்கள் கடவுளின் குதிரை என்று கட்டிவைக்க, குதிரையின் உண்மையான சொந்தக்காரனான அழகர்சாமி வேறு ஊரிலிருந்து வருகிறான்..
அந்தக் குதிரையுடன் அவன் சொந்த ஊர் செல்லாவிட்டால் அவனுக்குத் திருமணம் நடக்காது..
அதன் பின் நடப்பவை தான் முடிவாக..
கடவுளின் பெயரும் உயிர்க் குதிரையின் சொந்தக்காரனின் பெயரும் அழகர்சாமி என்பதிலிருந்து பல இடங்களில் மூட நம்பிக்கைகளையும் கடவுள், பக்தி போன்றவற்றை முட்டாள் தனமாக நம்புவதையும் கிண்டலாக, குத்தலாக சாடுகிறது திரைப்படம்.
அதுவும் கடைசிக் காட்சிகள்.. கலக்கல்..
ஓவராகப் பிரசாரப் படுத்தாமல் மேலோட்டமாகக் கதையுடனேயே இப்படியான மூடநம்பிக்கைக் கிழிப்பு இருப்பது ரசிக்கவைக்கிறது.
முதல் பாதியில் கொஞ்சம் வேகத்தைக் கூட்டி அந்தக் காதல் பாடலையும் தவிர்த்திருந்தால் இன்னும் அழகர்சாமியின் குதிரையின் ஆரோகணித்து நாம் பயணித்திருக்கலாம்..
ஆனாலும் தாதாக்களையும், தாத்தாக்களையும் வைத்து அரைத்த மாவையே அரைக்கும் தமிழ் சினிமாவுக்கு இப்படியான படங்களும், இயக்குனர் சுசீந்திரன், கதாசிரியர் பாஸ்கர் சக்தி போன்றோரும் புதிய ஊட்டச் சத்துக்கள்.
பாராட்டுக்கள் இவர்களுக்கு..
ஆனாலும் எனக்கு மனத் திருப்தியாக உள்ளது..
சுசீந்திரன் எனது அபிமானத்துக்குரிய இயக்குனர்களில் ஒருவராக இப்போதே மாறியுள்ளார்.
அழகர்சாமியின் குதிரை - அமைதியான ரசனையான சவாரிக்கு