கடந்த ஞாயிற்றுக் கிழமை, நான் கல்வி கற்ற கொழும்பு பம்பலப்பிட்டிய இந்துக்கல்லூரியின் வைர விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெற்ற கலை கலாசார நிகழ்வுகளுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது.
சிறப்பு அழைப்புக் கிடைத்தும் உள்ளே நுழைவதற்குள் கொஞ்சம் சலித்துவிட்டது.
அதிமேதகு ஜனாதிபதி பிரதம விருந்தினராக வருகை தருவதால் இறுக்கமான மிக இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள்..
வாகனத்தை தொலைவில் நிறுத்திவிட்டு, உடலில் இன்னொரு உறுப்பாகவே கடந்த சில வருடங்களாக ஒட்டியுள்ள செல்பேசியையும் உள்ளே வைத்துவிட்டுத் தான் விழா நடந்த கல்லூரி மைதானத்துக்குள் நுழைய முடிந்தது.
கல்லூரியின் விளையாட்டு அரங்கு (பவிலியன்)க்கு முன்னால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மேடையும், மேடைக்கு சில அடிகள் முன்னால் அமைக்கப்பட்ட தடுப்பின் பின்னால் அமைக்கப்பட்ட தற்காலிகக் கொட்டகையும் மைதானத்தின் புற்றரையை முக்கால்வாசியாவது மறைத்திருந்தன.
மைதானத்தில் நிறைந்திருந்த மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஈடாக ஜனாதிபதிக்கான பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரும் இருந்தனர்.
தலைநகரில் அறுபது ஆண்டுகளைக் கடந்து தனித்துவத்தை இழக்காமல் ஒரு பாடசாலை தனித்தமிழ் மொழியில் (கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழிக் கல்வியும் உள்ளது) இயங்கி வருவது உண்மையில் பெருமைப்படக்கூடிய விஷயம் தான்.
சிற்சில சலசலப்புகள், சர்ச்சைகள் (அதிபர், அதிகார சர்ச்சை) ஆங்காங்கே கல்லூரியை இடையிடையே 'பிரபலம்' ஆக்கிக் கொண்டிருந்தாலும் கல்லூரியின் கல்வித் தரமும், வளர்ச்சியும் ஏறுமுகமாகவே இருந்துவருகிறது.
நாற்பதாவது வருடப் பூர்த்தியைக் கல்லூரி கொண்டாடியபோது தேசியப் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது இன்னமும் மனதிலே பசுமையாக நினைவில் உள்ளது.
அது என் கொழும்பு இந்துக் கல்லூரி வாழ்க்கையில் முதல் வருடம். அதற்கு முதலும் ஒரு இந்துக் கல்லூரி தான் எனக்குப் பாடசாலையாக இருந்தது. (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி)
கொழும்பின் முதலாவது தமிழ்த் தேசியப் பாடசாலைக்கு இலங்கையின் அரச தலைவரின் முதல் விஜயம் என்று மேடையில் அறிவிப்பு செய்துகொண்டிருந்த அறிவிப்பாளர் மூன்று தடவையாவது சொல்லி இருப்பார். ஆனால் உண்மை அதுவல்ல..
ஜனாதிபதி ராஜபக்ச எமது பாடசாலைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.
ஆனால் இலங்கையின் அரச தலைவர் இந்துக் கல்லூரிக்கு வருவது இது முதல் தடவையல்ல என்பது அங்கே இருந்த அனேக ஆசிரியருக்கும், என் போன்ற நீண்ட காலம் கல்லூரியில் கற்ற பழைய மாணவருக்கும் நன்றாகவே ஞாபகம் இருக்கக் கூடியவை.
அது 1991ஆம் வருடம்..
எம் இந்துக் கல்லூரி நாற்பதாவது அகவையைப் பூர்த்தி செய்த அந்த வருடத்தில் எம் பழைய மாணவர்கள், அபிவிருத்தி சபையினர், கொழும்பு கல்வியியலாளர்கள் பலரின் ஒன்றுபட்ட முயற்சியினாலும், அப்போதைய கல்வி ராஜாங்க அமைச்சராக இருந்த திருமதி ராஜமனோகரி புலேந்திரனின் தூண்டுதலாலுமே இந்துக் கல்லூரி கொழும்பின் முதலாவது தமிழ் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.
அந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாதது.. கல்லூரியில் முதல் ஆண்டிலேயே நடந்த பரிசளிப்பு விழாவில் எட்டு பரிசுகள்..
அதுவும் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அப்போதைய ஜனாதிபதியான பிரேமதாசவின் கைகளினால்.
முதல் தடவையாக வெள்ளை முழுநீளக் கால் சட்டை அணிந்து நின்ற பெருமிதம் இருந்தாலும் மனதில் அப்போதிருந்த ஒரே ஒரு விடயம், பிரேமதாசவிடமிருந்து எனக்குப் பரிசும் சான்றிதழும் கிடைக்கக் கூடாது என்பது தான்.. ஆனால் எனது பெயர் வாசித்தபோது அவர் தான் சான்றிதழ்களைக் கொடுத்தார்..
அந்தப் பரிசளிப்பு விழா நடந்தது பவிலியனில்.. இப்போதைப் போல அவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கவில்லை என்றே ஞாபகம்.
எனவே தான் முன்னர் ஜனாதிபதியொருவர் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டது என்னைப் பொறுத்தவரை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது.
ஆனால் இரண்டு முக்கிய விஷயங்கள்..
அப்போது ரணசிங்க பிரேமதாச தமிழில் உரையாற்றவில்லை..
ஜனாதிபதி மகிந்த ஒரு தமிழ்ப் பாடசாலைக்கு செல்வது இதுவே முதல் தடவை...
கவனித்த ஒரு சில விஷயங்கள்...
ஜனாதிபதியை வரவேற்ற அவர் பாணியில் சால்வை அணிந்த சிறார்கள்..
ஆனால் பவம் அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொடிகளை ஆட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.
மாலை வெயில் முகத்துக்கு அடிக்க கைகளால் அல்லது அழைப்பிழ்களால் கண்ணைக் கூசும் வெயிலை மறைத்துக் கொண்டிருந்த என் போன்ற முன் வரிசை விருந்தினர்கள்..
ஜனாதிபதியிடம் பாடசாலை, பாடசாலை சமூகம் சார்பாகக் கோரிக்கை முன்வைத்தவர்களின் அந்தக் கால ஆங்கில உச்சரிப்புக் கொஞ்சம் கடுப்பேற்றியது. இவ்வளவுக்கும் நன்றாகக் கற்றுத் தேர்ந்த புலமை வாய்ந்தவர்கள்...
அத்துடன் எல்லோருமே தனியே நீச்சல் தடாகத்தைக் கோருவதிலே குறியாக இருந்தார்கள்.
இதிலும் இந்தியாவிருத்திச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பேசும் நேரம் ஜனாதிபதியைப் புகழ்வதாக முன்னைய ஆட்சியில் பாடசாலைக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று குறைவாக சொல்லியது அவ்வளவு நாகரிகமாகப் படவில்லை.
ஜனாதிபதியின் உரையை ரசித்தேன்.. (உடனே யாராவது வந்து கும்மாதேங்கப்பா)
சிங்களத்தில் அவர் பேசப் பேச அறிவிப்பாளர் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரத்தில் ஜனாதிபதி வழமையாகவே அவர் தமிழர் மத்தியில் பேசும்போது செய்வதைப் போல,
"இங்கே நீங்கள் யாரும் சிரிக்கவில்லை என்றால் நான் எனக்குத் தெரிந்த தமிழில் பேசுகிறேன்" என்று ஆரம்பித்தார் பாருங்கள்...
"நான் இங்கே வந்ததைப் பாடசாலைக்குப் பெருமையான விஷயமாகப் பலர் சொன்னீர்கள்..
ஆனால் உண்மையில் இந்தப் பாடசாலைக்கு வந்தது எனக்குத் தான் பெருமை " என்று கரகோஷங்களை அள்ளிக் கொண்டவர், விடாமல் கஷ்டமான தமிழ் வார்த்தைகளையும் கடித்துத் துப்பி அரை மணிநேரத்துக்குக் கிட்ட சொற்பொழிவாற்றினார்.
அதிலே ரசித்த முக்கிய விடயம்.. சில தமிழ் சொற்றொடர்களை சொல்லிமுடித்து அதன் அர்த்தத்தை சிங்கள மொழியில் சொன்னது.. Tele prompterகள் முன்னால் இருந்தும் அதைத் தான் பயன்படுத்தவில்லை என்று காட்ட இந்த யுக்தியா?
ஆனால் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய விடயம், Diaspora என்று புலம்பெயர் தமிழர் பற்றிக் காட்டமாக ஜனாதிபதி சொன்ன சில விஷயங்கள்..
"இங்கே இருக்கும் உங்களுக்குத் தான் இந்த நாட்டின் உண்மை நிலவரங்கள் தெரியும்.. வெளிநாட்டிலிருந்து ஒரு போதும் இங்கே வராமல் இந்த நாட்டைப் பற்றிப் பேசுவோர் இங்கே வந்து பார்க்கவேண்டும்.. அவர்களில் பலருக்கு தமிழே தெரியாது... " அப்படி அண்மைக் காலத்தில் புலம் பெயர் தமிழர்களைத் தாக்கும் தன் வழமையான பிரசங்கத்தையே நடத்தி முடித்தார்.
ஆனால் ஒவ்வொரு பஞ்ச் வசனங்களுக்கும் கிடைத்த கரகோஷங்களைப் பார்த்தால் அன்றைய கூட்டம் மேலதிகமாக ஒரு ஆயிரம் வாக்குகளை மேதகுவுக்குக் கொடுக்கும் போலத் தெரியுது..
அவரது உரை முடிந்து விருதுகள் வழங்கி விடைபெற்றதுடன் பலரையும் காணவில்லை..
பாதுகாப்புகளும் வாபஸ்..
ஜனாதிபதி சென்ற பின் கலைஞர் கருணாநிதி எழுதி இசைப்புயல் இசை அமைத்த 'செம்மொழியாம்' பாடலுக்கான நடனம் ஆரம்பித்தது..
உலகத்தை நினைத்தேன் சிரிப்புத் தான் வந்தது..
கவனித்த இன்னொரு விடயம்...
அதிபர் அடுத்த நாளுடன் தான் பதவி விலகுவதை மேடையில் அறிவித்திருந்தார்.. ஒரு பிரம்மாண்ட விழாவேடுத்துத் தான் இந்த அறிவித்தல் வரும் என்பது பலரும் எதிர்பார்த்தது தான்..
ஆனால் அவர் சொல்லாமலே இன்னொருவர் அவரது இறுதி நாளாக அதிபர் அறிவித்த நாளை விடுமுறை தினமாக இன்னொருவர் அறிவித்தது எதோ ஒன்றை சொல்வது போல் இருந்தது..
எப்போ வரும் நீச்சல் தடாகம் என்று பலர் யோசித்துக் கொண்டிருக்க, புதிய அதிபர் எப்படியிருப்பார், யார் வருவார் என்று சிலர் குழம்பிக் கொண்டிருக்க காத்திருந்த நண்பன் ஒருவனின் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் வெளுத்து வாங்குவதற்காக நான் புறப்பட்டேன்..
பி.கு - படங்கள் Facebookல் J A L A l THASS STUDIO இருந்து எடுத்துக் கொண்டேன். நன்றிகள்..
எனது புகைப்படம் ஒன்றையும் ஏற்றாமல் விட்டதற்குக் கண்டனங்கள்.
வைர விழா சிறப்பிதழ் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது..