அன்னையர் தினமும் அல்லாடும் மனமும்

ARV Loshan
16
நேற்று அன்னையர் தினம்..

அன்றைய நாள் மட்டும் அம்மாவே தெய்வம் என்று சொல்கிற சிலருக்கான நாள் என்று இதை சொல்வோரும் உண்டு..

எமது வெற்றி FM வானொலியினால் கொழும்பில் உள்ள அன்னையர் இல்லத்துக்கு சென்று முழுநாளும் அங்கே சேவை செய்வது என்றும் அவர்களுக்கான அத்தியாவசிய, மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் முடிவெடுத்தோம்.

வர்த்தக வானொலியாக இருந்தாலும் இந்த சேவை நோக்கில் நாம் அனுசரணையாளர் எவரையும் பணரீதியாக பங்களிப்பு செய்யக் கேட்காமல், எங்களது பங்களிப்பையே ஈடுபடுத்திக்கொண்டோம். அப்படியும் தாமாக மருந்துப் பொருட்களையும்,சேலைகளையும் சில நலன்விரும்பிகள் தந்திருந்தார்கள்.


என்னைப் பொறுத்தவரை காதல், பாசம், அன்னை இப்படியெல்லாம் தனித்தனியாக நாட்கள் வைத்து நினைவுகூரப்படவேண்டிய அவசியம் எங்கள் வாழ்வியலில் தேவையில்லை. ஆனாலும் சிறப்பு நாள் ஒன்று இருந்தால் தப்பில்லையே.. அன்றைய தினத்தில் அந்தந்த தினத்துக்குரியவரை சிறப்பு செய்து மேலும் மகிழ்விக்கலாமே..

ஒரு வாழ்த்து அட்டை.. எம் கைப்பட எழுதிய சிறு வரிகள்.. அவர்களுக்குப் பிடித்த, தேவையான பரிசுப் பொருட்கள்.. அவர்களுடன் நாம் கழிக்கும் அவர்களுக்குப் பிடித்த பொழுதுகள்.. இவையெல்லாம் சின்ன சின்ன சந்தோஷங்களாக இருந்தாலும் எங்கள் வாழ்க்கையின் சலித்துப் போகும் பொழுதுகளைப் புத்துணர்ச்சியுடன் புதுப்பிக்கின்ற விடயங்களல்லவா?

நான் இந்த சிறு சந்தோஷமளிக்கும் விடயங்களில் இருந்து எப்போரும் தவறுவதில்லை.. அது எனது நெருங்கிய உறவுகளாக இருக்கலாம் .. நண்பர்களாக இருக்கலாம்.. அல்லது நெருங்கியவர்களாக இருக்கலாம்..

அன்னையர் தினத்திலும் என் அன்னைக்கும் சிறு பரிசளித்து, எனது மகனின் அன்னை(வேறு யார் என் அன்பு மனைவியே தான்)க்கும் பரிசு ஒன்றை வழங்கி சந்தோஷப்படுத்திவிட்டுத் தான் அன்னையர் இல்லத்திற்கு சென்றேன்..

முதலில் என் அன்னையும், இனால அன்னையானவளும் தானே? இதனால் தான் Twitterஇல் துணிச்சலாக சொல்லியிருந்தேன் "அன்னையர் இல்லத்தில் சேவை செய்ய வந்துளேன்.. என் அன்னையையும் என் மகனின் அன்னையையும் நான் நேசிப்பதால் எனக்குத் தகுதி உள்ளது"

தன் அன்னையை நேசிக்காத எவனுக்கும் இங்கே இடமில்லை என்பது எழுதப்படாத வாக்கியமாக அங்கே இருக்க வேண்டும்.

மொத்தமாக 24 தாய்மார். பார்க்கப் பாவமாக, பரிதாபமாக இருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் காலம் தந்த சுருக்கங்களுடன், பிள்ளைகள் தந்த கவலை ரேகைகளும்..



அதில் ஆறு பிள்ளைகள் பெற்ற அம்மா, அரைப் பைத்தியமாகப் புலம்பிக் கொண்டிருந்தார்.

ஒரு பெண் லண்டனிலாம்.. ஏனைய ஐந்து ஆண் பிள்ளைகளும் யாழ்ப்பாணத்தில். பேரப்பிள்ளைகளின் படத்தை வைத்து ஒவ்வொரு நாளும் ஆசை தீரப் பார்ப்பதும், தன் மகிழ்ச்சியான கடந்தகாலத்தை இரை மீட்பதுமே அவரது இன்றைய சந்தோஷங்கள்..

இவ்வளவுக்கும் தன் பிள்ளைகளைக் குறை சொல்லாத பொன்னான மனது.
"அவங்கள் பாவம்.. தூரம் தானே.. பிசியா இருப்பான்கள்..பிள்ளைகள் குடும்பத்தோட என்னையும் பார்க்கக் கஷ்டமாத் தானே இருக்கும்"

ஐந்து ஆண் பிள்ளைகளையும் செருப்பாலே நாலு விளாரத் தான் மனம் சொல்லியது.

இன்னொரு வயோதிபத் தாய், தன் பிள்ளைகளாக எங்கள் கரங்களைப் பிடித்து வருடி, உச்சி மோந்து அன்பை வெளிப்படுத்த முடியாமல் இருக்கும் குறையைப் போக்கிக் கொண்டார்.
இன்னொரு தாய்க்குக் கண்ணெல்லாம் கலங்கி பேச முடியாமல் தவித்தார்..

பத்து மாதம் சுமந்து பாலூட்டி வளர்த்த தாய்மாரை அவர்களது முதுமைப் பருவத்தில், அவர்களின் இரண்டாவது மழலைப் பருவத்தில் தனியாகக் கொண்டுவந்து யாரோ ஒரு சிலரின் மேற்பார்வையில் இப்படியான "அன்னையர் இல்லங்கள்" எனப்படும் முதியோர் காப்பகங்களில் விட்டுச் செல்வது என்ன ஒரு ஈனத்தனமான செயல்?

கதைகளிலும், சில படங்களிலும், மேலை நாடுகளில் நடப்பதாக இதுவரை செய்திகளிலும் கேள்விப்பட்டு வந்த கேவலமான நடப்புக்களைக் கண்முன்னே எம் சமூகத்தில் கண்டபோது மனதில் கலவையான உணர்வுகள்..

அந்த அன்பான, அன்புக்கு ஏங்கும் அம்மாமார்களின் மீது பரிதாபம்; அவர்களைக் கவனிக்காமல் இங்கே கொண்டு வந்து தவிக்க விட்டுப் போன அரக்கர்களின் மீது கடுங்கோபம்; தங்கள் தாய்மாரைப்போலவே இந்த இருபத்துநான்கு பேரையும் பார்த்துக்கொள்ளும் அந்த இல்லத்துப் பெண்மணிகள் மூவர் மீது மதிப்பு; கடமையாகக் கருதாமல் தங்கள் மனமொத்து, அன்போடும், அக்கறையோடும் இவர்களை காலையிலிருந்து மாலைவரை கவனித்துக்கொண்ட எங்கள் வெற்றிக் குழுவினர் பற்றிய பெருமிதம்.

அங்கே இருந்த இன்னொரு அம்மையார் எழுபது பராயம் தொட்டுள்ள ஒருவர். எங்கள் அம்மா சிறுவயதில் குடியிருந்த டோரிங்டன் தொடர்மாடியில் அம்மாவின் வீட்டருகில் வசித்தவராம். அம்மாவின் சகோதரங்கள் அத்தனை பேரின் பெயரையும் ஞாபகம் வைத்து சொல்லி இருந்தார்.

அச்சொட்டான ஞாபக சக்தி.
அவருடன் கொஞ்சம் விசேட தேவைக்குரிய அவரையோ விடக் கொஞ்சம் இளைய ஒரு பெண்மணி.
ஆங்கில பாட ஆசிரியையாம். சிறு உரையாற்றியும் இருந்தார். அப்போது அவரது பெயரைக் கேட்டபோது செல்வி என்று குறிப்பிட்டார்.

பிறகு வீடு வந்த பின்னர் தான் அம்மா சொன்னார்.. அந்த அம்மையார் தனது சகோதரியும் சகோதரியின் கணவரும் விபத்தொன்றில் இறந்த பின்னர் அவர்களின் விசேட தேவைக்குரிய மகளைக் கவனித்துக் கொள்வதற்காக திருமணமே முடிக்காமல் செல்வியாகவே இருக்கிறார்.

இப்படியும் தியாகிகள்.. இவர்களின் முடிவும் இங்கே தான்...

மனம் கொஞ்சம் பாரமாக, கொஞ்சம் பெருமிதமாக நேற்றைய பொழுது.

--------------------------

பெருமிதத்துக்கான காரணம், எமது வெற்றி FM வானொலியும், எமது நிறுவனமான Universal Networks நிறுவனமும் இணைந்து நேற்றைய அன்னையர் தினத்திலேயே அன்னையர் இல்லத்தில் வைத்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட "எம்மால் முடியும்" சமூக சேவைத் திட்டம்.

நீண்ட காலமாக என் மனதில் இருந்த சமூகத்துக்கு ஏதாவது எம்மால் கொடுக்கப்படவேண்டும் என்ற ஆசைக்கு உரம்போட்ட இந்தத் திட்டம் நான் இட்ட பெயருடனேயே ஒரு நீண்ட கால செயற்பாடாக ஆரம்பித்தமை மகிழ்ச்சி.

எம்மால் முடியும் பற்றி விரிவாக அறிய..

http://www.vettri.lk/index.php?mainmnu=FM&page=morenews&nid=26

தமிழ் மிரரில் வந்துள்ள செய்தி 

வீரகேசரி இணையத்தில் 

------------------------------


நேற்று முன் தினம் எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள ஒரு வெற்றுக் காணியில் படர்ந்து, அடர்ந்திருந்த செடி,கொடி,பற்றைகளை ஒரு மனிதர் தனியாளாக நின்று வெட்டி, அகற்றிக் கொண்டிருந்தார்.
மாலை வரை வீட்டிலேயே இருந்ததால் பால்கனியில் நின்று அவரையே அவதானித்துக் கொண்டிருந்தேன்.. அன்றைய அனல் பறக்கும் வெயிலில் வெற்றுடல் வியர்வையில் குளிக்க, வாயில் எதோ முணுமுணுத்தபடி (பாடலோ, யாரையாவது திட்டியதோ) கருமமே கண்ணாக இருந்தார்.
உழைப்பு என்றால் அது உழைப்பு..

இன்று வேளை விட்டு வந்து வாகனம் விட்டு இறங்கும் நேரம் அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த அவரை அழைத்து அன்றைய வேலைக்கு எவ்வளவு கூலி எனக் கேட்டேன்..
முன்னூறு ரூபாயாம்.. அமெரிக்கன் டொலரில் மூன்று கூட இல்லை..

என் மனைவியிடம் வந்து பேசிக் கொண்டிருக்கையில் உலகம் வழங்கும் ஊதியம் பற்றி சும்மா ஒப்பீடு செய்து பார்த்தேன்..
வேறு யாரும் ஏன்? என்னையே எடுத்துப் பார்த்தேன்..

அலுவலகத்தில் இருக்குமிடத்தில் (கூட்டங்கள்,ஒலிப்பதிவுகள், நேரடிக் கள நிகழ்வுகள் இல்லாத இடத்து)ஏசி குளிரில் இதமான சூழலில் வேலை, நேரத்துக்கு தேநீர், அலுவலக செலவிலேயே கணினிப் பாவனை, களை நீக்கக் காதுக்கு இனிய பாடல்கள்..

தேவைஎல்லாவற்றையும் நிறைவு செய்துகொண்டே அந்த முன்னூறு ரூபாயின் பல மடங்கும் சுளையான சம்பளம்..
ஆனால் வெயிலில் நாள் முழுக்க மாரடிக்கும் அவனுக்கு ????

இது தான் உலகம்..



இதை இங்கே சொல்ல இன்னொரு காரணமும் உள்ளது..

-----------------

பொதுவாக வேலை வழங்குனரிடம் இரக்க சுபாவம் கொஞ்சம் இருக்க வேண்டும் என எண்ணுபவன் நான். எனக்கு வாய்த்த முதலாளிகளிடமும் இதே குணம் இருந்ததும் இருப்பதுவும் நான் பெற்ற பேறு தான்.

பொருத்தமானவர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம் அல்லது சிபாரிசு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதனால் திறமைக்கு முதலிடம் கொடுப்பதோடு, திறமையானவர்கள் கஷ்டப்படும் நிலையில் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதிலும் நான் பின்னிற்பதில்லை.

ஆனால் இவ்வாறு இரங்கி நான் செயற்பட்ட சில இடங்களில் யாருக்கு இரக்கப்பட்டேனோ அவர்களே ஏமாற்றி செல்லும்போது மனமே வெறுத்துவிடும்.
நிறுவன உரிமையாளரின் முன்னால் ஒரு குற்றவாளி போல் நான் உணர்வதுண்டு.
முதுகில் குத்தலும், உதவி செய்யும் எம் மேலேயே குதிரை சவாரி செய்வதும் எம் துறையில் சகஜம் என்பதால் நான் தட்டிவிட்டுக் கொண்டு போய்க கொண்டே இருப்பேன்...

அப்படியான ஒரு நிகழ்வு இன்று..
ஆனால் அது இந்தக் குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து எனக்கு வரும் என்று நான் எண்ணியிருக்கவில்லை.

ஒன்பது மாதம் வேறொரு இடத்தில் ஊதியமில்லாமல் உழைத்துக் களைத்த ஒருவரை எமது நிறுவனம் புதியவரால் வாங்கப்பட்ட பின்னர் அழைத்து ஊதியத்தோடு திறமையைக் காட்ட வாய்ப்பும் வழங்கினால், சொல்லிக்கொள்ளாமல் இன்னொரு இடத்தில் நேர்முகத் தேர்வுக்கு சென்று இருப்பதை என்னவென்பது?

அதுவும் சில வாரங்களாகத் திட்டமிட்டு...

இப்படி ஒரு சிலரை முன்னர் மன்னித்து மீண்டும் வாய்ப்புக் கொடுத்துள்ளேன்.
ஆனால் இப்போது நிறுவனம் புதியதாக நல்ல அத்திவாரத்தில் வளரும் நேரம் புதியவர்களுக்கு ஒரு தவறான உதாரணமாக இது அமைந்துவிடக் கூடாது என்பதனால் களை எடுக்க வேண்டி வந்தது.

(எனது நிர்வாகத்தில் நான் செய்த ஐந்தாவது களையெடுப்பு.. மற்றையவை ஒழுக்க சீர்கேடுகளினால் செய்யப்பட்டவை.. இது நம்பிக்கைத் துரோகம்)

நிறுவனத் தலைவர்களும் கோபத்துடன் எனக்கு சொன்ன நட்பு அறிவுரை
" அதிகம் இரக்கம் காட்டினால் ஏமாளி என்று நினைத்துவிடுவார்கள்.."



Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*