முதல் படத்திலேயே என்னை ஈர்த்த K.V.ஆனந்தின் மூன்றாவது படம்.
ஒவ்வொரு படத்திலும் தெரிந்த சமூகத்தின் தெரியாத சில பக்கங்களை கொஞ்சம் அதிர்ச்சியாகத் தருவது K.V.ஆனந்தின் பாணி.
கோவில் அவர் கையாண்டிருப்பது ஊடகங்கள் vs அரசியல்..
ஒரு பத்திரிகைப் படப்பிடிப்பாளன் தான் ஹீரோ.
ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் சூழலின் பின்னணியுடன், அரசியல் சம்பவங்களின் காட்சி மாற்றங்களுடன் எந்தவொரு தொய்வும் இல்லாமல் நகர்கிறது கதை.
ஏற்கெனவே பிரபலமான Hit பாடல்களும், அற்புதமான படப்பிடிப்பும், சுருக்கமான நறுக் வசனங்களும் படத்தின் மிகப் பெரும் பலங்கள்.
வங்கிக் கொள்ளையைத் துணிச்சலாகப் படம் பிடித்து காவல் துறைக்கு உதவி ஹீரோவாகும் அஷ்வின் (ஜீவா), அந்த சம்பவத்திலேயே மற்றொரு துணிச்சலான நிருபர் ரேனுவை(புதுமுக நாயகி கார்த்திகாவை) சந்திக்கிறார்.
அதன் பின் தொடர்ச்சியாக இருவரும் ஜோடிபோட்டு துணிச்சலாக ஊழல், மோசடி, வன்முறை செய்யும் அரசியல்வாதிகளை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி தங்கள் நாளிதழான 'தின அஞ்சல்' மூலமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.
இவர்களுக்குப் பக்கபலமான நேர்மையான ஆசிரியரும் சேர்ந்துகொள்ள யாராயிருந்தால் என்ன என்று செய்திகள் சுட சுட வருகின்றன.
இடையில் நேர்மையான எண்ணத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வரும் இளைஞர் இயக்கமான 'சிறகுகள்' அமைப்பின் நல்ல செயல்களைப் புகைப்படத்துடன் செய்திகளாக்க அந்த அமைப்பு மக்களின் மனதில் இடம்பிடித்து அரசமைக்கும் அளவுக்கு உயர்கிறது.
ஒரு அமைதிப் புரட்சியினூடாக ஆட்சியை மாற்றிய பின் ஜீவாவும் அவரது பத்திரிகையும் அடுத்தடுத்து எதிர்கொள்ளும் சிக்கல்களும் திரைக்கதை எங்களுக்குத் தரும் அதிர்ச்சிகளும் கோவின் பரபரப்பான இறுதிக்கட்டத்துக்குக் கொண்டு செல்கின்றன.
ஆனால் ஒரு முக்கிய வேண்டுகோள் 'கோ' பார்த்தவர்களுக்கு.. படத்தின் முடிவை மட்டுமல்ல, இடைவேளைக்குப் பின்னதான எதையுமே பார்க்காதவர்களுக்கு சொல்லிவிடாதீர்கள். பார்க்கும் ஆர்வத்தையே இல்லாமல் செய்துவிடும்.
திரைக்கதையில் இயக்குனருடன் எழுத்தாளர்கள் சுபாவும் இணைவதால் வழமையாக சுபாவின் துப்பறியும்/மர்மக் கதைகளில் காணக்கூடிய சில பரபரப்புக்கள், திருப்பங்களைக் காணக் கூடியதாக உள்ளது.
சு(ரேஷ்) பத்திரிகை அலுவலகத்தில் ஒருவராக நடிக்கவும் செய்கிறார். எடிட்டர் அண்டனியும் வேறு ஒரு காட்சியில் வருகிறார்.
பத்திரிகைப் பின்னணியில் இருந்தவர் என்ற காரணத்தால் மிகத் தத்ரூபமாக அதைக் காட்சிகளில் கொண்டு வந்துள்ளார் ஆனந்த்.
பரபரப்பாக தலைப்புக்கள் மாற்றப்படுவது, ஆசிரியர், துணை ஆசிரியர் முறுகல்,மோதல்கள், வழக்கறிஞர் ஆலோசனைகள், புகைப்படப் பிடிப்பாளர்களுக்கு எப்போதும் கொமென்ட் அடிக்கும் சீனியர், இப்படியே பல பல..
கோட்டா சீனிவாசராவ் அதிரடி என்றால் பிரகாஷ்ராஜ் அமைதியான அதகளம். ஆனாலும் முதுகைப் பார்த்த ஜீவாவுக்கு தன் இன்னொரு முகத்தை அவர் இறுதிவரை காட்டவே இல்லையே..
பிரகாஷ்ராஜ் முகத்தில் பல உணர்ச்சிகளைக் கொட்டிக் குமுறும் இடங்களில், குறிப்பாக அந்த கார் பேட்டிக் காட்சிகளில் கண்ணுக்கு முன் முதல்வன் ரகுவரன் வந்து போகிறார். இந்தப் பாத்திரத்தில் ரகுவரனைப் பொருத்திப் பார்த்தால்.. தமழ் சினிமா ரகுவரனை நிறையவே மிஸ் பண்ணுகிறது.
ஆரம்ப அக்ஷன் காட்சிகளும் இறுதிக்கட்ட காட்சிகளும் முழுமை பெறுவது அன்டனி + ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதனினால் தான்.
அந்த அரங்கக் குண்டுவெடிப்பிலும், பாடல் காட்சிகளிலும் அன்டனி ஜொலிக்கிறார் என்றால், ரிச்சர்ட் நாதனின் கைவண்ணம் பாடல் காட்சிகளில் குறிப்பாக எல்லா நட்சத்திரங்களும் வந்து ஆடிக் கலக்கும் அக நக பாடல், அமளி துமளி பாடலில் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார்.
எங்கே தான் இப்படி இடங்களை ஆனந்த் தேடிப்பிடித்தாரோ.. அழகின் உச்சபட்சமாக மலைக்கவைக்கின்றன அந்த மலை உச்சிகளும், அழகான இடங்களும்..
அக நக பாடலில் சூரியா, ஜெயம் ரவி, கார்த்தி, அப்பாஸ், தமன்னா, பரத் என்று எல்லோரும் 'ஓம் ஷாந்தி ஓம்' பாணியில் முகம் காட்டி,ஆடிவிட்டு செல்கிறார்கள்..
அதைத் தொடர்ந்துவரும் காட்சிகளில் கொஞ்சம் நடிகர்களையும், கொஞ்சம் பத்திரிகையாளரையும் கலாய்க்கிறார் இயக்குனர்.
அதிலும் ஸ்மிதா கோத்தாரியாக வரும் சோனா மச்சான்சில் ஆரம்பித்து பேசும் பிரசாரம் நமீதா ரசிகர்கள் பலரைக் கொதிக்க வைக்கும்..;)
சிம்பு நடிக்க இருந்த பாத்திரம் ஜீவாவுக்கேன்றே உருவாக்கியது போல அச்சொட்டாகப் பொருந்துகிறது. ஜீவாவின் துடிப்பும், கண்களும் பாத்திரத்துக்கு ஏற்றவை.
சிம்புவை நேரடியாகவே பொருந்திப் பார்க்க வைப்பதாக பாடல் காட்சியிலும் பின்னர் சில காட்சிகளிலும் உலவ விடப்பட்டுள்ள 'பல்லன்', ஆனந்தின் பழி தீர்த்தலா? ;)
கார்த்திகா தாய் ராதாவை ஞாபகப் படுத்துகிறார். கண்களும், உதடுகளும் உயரமும் ஈர்க்கின்றன.. ஆனால் அந்த மேலுயர்ந்த மூக்கு இவற்றைக் கொஞ்சம் பின்தள்ளி ஈர்ப்பைக் குறைக்கிறது.
துடுக்குப் பெண்ணாகத் துள்ளித் திரியும் பியாவை விடக் கார்த்திகாவுக்கு நடிக்கும் வாய்ப்புக் குறைவே.
பாடல் காட்சிகளில் கார்த்திகாவின் உயரமே குறையாகி விடுகிறது.
பியாவுக்கு ஏற்ற வேடம்.. முன்பென்றால் நிச்சயம் லைலாவை இந்த வேடத்தில் பொருத்தலாம்.. ஆனால் கவர்ச்சியையும் கொஞ்சம் சேர்த்துப் பியா கலக்கி இருக்கிறார்.
காதல் தோல்வியென்று தெரியும் கணத்திலும் கலங்கிய கண்களுடனும் தன் வழமையான சுபாவத்தை மாற்றாமல் அடிக்கும் கூத்துக்கள் டச்சிங்.
அஜ்மல் கம்பீரமாக இருக்கிறார்; திடகாத்திரமாக இருக்கிறார். அவரது பாத்திரப்படைப்பில் சிறப்பாக பரினமித்துள்ளார். மேடைகளில் பொங்கிப்பிரவாகிக்கையில் கண்களும் பேசுகின்றன.
அந்தப் பத்திரிகையாசிரியர் க்ரிஷ் ஆக வருபவர் அருமையான ஒரு தெரிவு.
நவீன ஊடகத்துறையின் முக்கிய கூறான புகைப்படத்துறை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும், செய்திகளை உருவாக்கல்(News making), பரபரப்பு செய்திகளை உருவாக்கல்(sensationalism/sensational news reporting), செய்திகளின் தாக்கங்களை மக்களின் உணர்வுகளாக்கி அந்த அலையினால் ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தல் போன்றவை பற்றியும் மிக நுணுக்கமாக ஊடகவியல் பாடம் நடத்துகிறார் இயக்குனர்.
முன்னைய படங்களான கனாக்கண்டேன், அயன் போன்ற படங்களைப் போலவே கோ விழும் காட்சிக் கோர்வைகளைத் தொடர்புபடுத்தி துரிதப்படுத்துவதில் மற்றும் ஒரு காட்சியில் வரும் பாத்திரமாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்தின் கனதியையும் தேவையையும் நியாயப்படுத்துவதிலும் ஆனந்தின் கைவண்ணம் மெச்ச வைக்கிறது.
நக்சல் தலைவனாக வரும் போஸ் வெங்கட், சிறகுகளில் ஒருவராக வரும் ஜெகன் ஆகியோரையும் புத்திசாலித்தனமாக உலவவிட்ட விதங்களையும் சமகால இந்திய அரசியல் நையாண்டிகளையும் தன்னைப் புண்ணாக்கும் விதமாக அமைந்துவிடாமல் தந்திருப்பதையும் கூடக் குறிப்பிடலாம்.
அரசியல் கிண்டல்களை விமர்சனமாக வைத்திருக்கும் இப்படமும் அரசியல் கலவையுடன் தான் வெளியிடப்பட்டுள்ளது என்பது சுவாரஸ்யமானது. (Red Giantஇன் வெளியீடு)
ஆனால் தமிழக தேர்தலுக்கு முன் வெளியாகியிருந்தால் ஏதாவது விழிப்புணர்ச்சி தந்திருக்குமா என்பது எனக்குத் தெரியாத ஒன்று.
கோ பார்த்த பிறகு மனதில் தோன்றியவை..
நல்ல கதை இருந்தால் IPL காலத்திலும் படம் ஹிட் ஆகும்
சிம்பு கோவைத் தவறவிட்டமைக்கு நிச்சயம் கவலைப்படுவார்.
K.V.ஆனந்தை 'பெரிய' ஹீரோக்கள் தேடுவார்கள்.
கார்த்திகா இனி ஆர்யா, விஷால், விக்ரம், விஜய், வினய் போன்ற உயரமான ஹீரோக்களால் தேடப்படுவார்.
ஜீவா அனைத்துப் பாத்திரங்களுகுமே பொருந்திப்போகும் ஒரு Director material
பியாவின் கதாநாயகி சுற்று இத்துடன் முடிந்தது
ஆலாப் ராஜுவின் ஆலாபனைகள் தான் இன்னும் ஆறு மாத காலத்துக்கு எல்லாப் படங்களிலும்..
ஹரிஸ் ஜெயராஜ் இனியும் தொடர்ந்து கொஞ்சமும் யோசிக்காமல் தன் முன்னைய பாடல்களையே கொஞ்சம் (மட்டும்) மாற்றிப் புதிய படங்களுக்குப் பயன்படுத்தலாம்.
கோ என்ற தலைப்பு எவ்வாறு பொருந்துகிறது என்று கொஞ்சமாவது யோசித்தால் மன்னன், ஆட்சி, தலைமை என்ற ஒத்த கருத்துள்ள சொற்கள் நினைவுக்கு வருகின்றன.
பன்ச் வசனங்கள் பேசாமல், பெரியளவு ஸ்டன்ட் காட்டாமல், புத்தி சாதுரியம், மக்கள் மீதான நேசத்துடன் போராடி வெல்லும் ஹீரோவை எங்கள் ஊடகத்துறையில் இருந்தே உருவாக்கித் தந்தமைக்கு இயக்குனருக்கு நன்றிகள்..
நேர்மைக்காகவும், மக்கள்+சமூக நன்மைக்காகவும் (படத்தினைப் பார்த்தவர்கள் இறுதியில் திரையில் தோன்றும் திருக்குறளை ஞாபகப்படுத்தவும்; மற்றவர்கள் திரைப்படத்தை முழுமையாகப் பார்க்கவும்) போராடும் ஊடகவியலாளர்களை நினைவுபடுத்தியதற்கு சிக்கலான ஒரு இடத்தில் இந்த சிக்கலான பணியைக் காமெராவை எடுக்காமல் கையில் மைக் எடுத்து முன்னெடுக்கும் ஒருவனின் நன்றிகள்.