உலகக் கிண்ணப் போட்டியின் முதலாவது போட்டி நடைபெறக் கிட்டத்தட்ட ஒரு மணித்தியால நேரமே இருக்கையில் இம்முறை B பிரிவில் விளையாடும் அணிகள் ஏழினையும் பலம்+பலவீனங்களுடன் அலசும் பதிவைத் தருகிறேன்.
பங்களாதேஷ்
இம்முறை உலகக் கிண்ணத் தொடரை இணைந்து நடத்தும் மற்றொரு நாடு. அண்மைக்காலமாக குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் முன்னேற்றத்தைக் காட்டிவரும் ஒரு இளமைத் துடிப்புள்ள அணி. இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்களுடன் களம் இறங்குகிறது.
பலம் - உள் நாட்டிலேயே அனைத்து முதல் சுற்றுப் போட்டிகளும் இடம் பெறுகின்றன.(ஆடுகளம்+ரசிகர்கள்)
அணியின் பெரும் தூண்களான சுழல் பந்துவீச்சுக் குவியல்.
அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்.
ஷகிப் அல் ஹசன் என்ற சகலதுறைக் கதாநாயகத் தலைவர்
துடிப்பான களத் தடுப்பு
பலவீனம் - வேகப் பந்துவீச்சு நம்பகமானதல்ல
பெரிய அணிகளுடன் இது போன்ற பெரிய சர்வதேசப் போட்டிகளில் மோதி முன்னேறும் அனுபவக் குறைவு
கொஞ்சம் பலவீனமான இடை வரிசைத் துடுப்பாட்டம்
நட்சத்திரம் - ஷகிப் அல் ஹசன் - தனியோருவராகத் தன பந்துவீச்சு+துடுப்பாட்டம் மூலமாக ஒரு போட்டியை மாற்றவோ வெற்றி கொள்ளவோ கூடிய அனுபவஸ்தர். இளவயதிலேயே தலைமைப் பொறுப்பைத் தடுமாற்றமின்றி செய்து நிரூபிப்பவர்.
அப்துர் ரசாக்,தமீம் இக்பால் ஆகியோரும் கவனிக்கக் கூடியவர்களே.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - நயீம் இஸ்லாம் - சுழல் பந்துவீசும் சகலதுறை வீரர். கொஞ்சம் அதிரடியாக ஓட்டங்களும் குவிக்கக் கூடியவர்.
பங்களாதேஷ் அணியில் நிறைந்து காணப்படும் சுழல் பந்துவீசும் சகலதுறை வீரர்கள் வரிசையில் இம்முறை தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.
பங்களாதேஷ் இம்முறை பிரிவு ரீதியிலான போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளை நிச்சயம் வீழ்த்தும். சிலவேளைகளில் இங்கிலாந்தையும் கவிழ்க்கும் என நம்புகிறேன். எனவே கால் இறுதி நிச்சயம். அதற்கு மேலே செல்வது சந்தேகம். ஆனால் சென்றால் நிச்சயம் சந்தோசம்.
உலகக் கிண்ணம் வெல்லாத ஒரே ஒரு ஆசிய அணியும் இம்முறை சாம்பியன் ஆகட்டுமே.
இங்கிலாந்து
அதிக தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியும் (ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக) இன்னும் உலகக் கிண்ணம் வெல்லாத துரதிர்ஷ்டசாலி அணி.(1979,1987,1992)
ஆனாலும் இறுதியாக இறுதிப் போட்டியில் விளையாடியாது 1992ஆம் ஆண்டில்.
அதற்குப் பிறகு அரையிறுதிக்குக் கூட வரமுடியாது போயுள்ளது.
இம்முறையும் திடீரென form இழந்த அணியாகத் தோன்றுகிறது.
பலம் - அனுபவமும்+ஆற்றலும் கொண்ட துடுப்பாட்ட வரிசை
சமநிலையான பந்துவீச்சாளர் வரிசை
பீட்டர்சன்,ட்ரோட் ஆகியோரின் துடுப்பாட்ட formம் ப்ரோடின் கடைசி இரு பந்துவீச்சுப் பெறுபேறுகளும் தரும் நம்பிக்கை
பலவீனம் - ஆசிய ஆடுகளங்களில் முன்பிருந்தே சாதிக்கத் தவறுகின்றமை
மோர்கன் காயமடைந்தது
ஸ்வான் முழு குணமடையாதது
சுழல் பந்துவீச்சாளருக்கு எதிராக இன்னமுமே தடுமாறுவது
நட்சத்திரம் - கெவின் பீட்டர்சன் - அண்மைக்காலத்தில் இங்கிலாந்தைத் தனியோருவராக துடுப்பாட்டப் பக்கமாகத் தூக்கிச் செல்கிறார்.இம்முறை பலீனமடைந்துள்ள இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வரிசைக்குப் பலம் சேர்க்க ஆரம்ப வீரராக இறங்குகிறார். இவரது அதிரடிகளும் சுழல் பந்துவீச்சுக் கையாள்கையும் தெரிந்ததே.. எனினும் புதிய பொறுப்பில் பீட்டர்சன் சறுக்குவதும் சாதிப்பதும் தான் இங்கிலாந்துக்கு வழிகாட்டும்.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - மைக்கேல் யார்டி - சுழல் பந்துவீசும் இந்த சகலதுறை வீரர் ஏற்கெனவே தான் விளையாடியுள்ள போட்டிகளில் தன்னை நிரூபித்தே வந்துள்ளார். சாதகாமான ஆடுகளங்களில் இம்முறை சாதிப்பார் என நம்புகிறேன்.
கால் இறுதி வரை செல்லத் தடையில்லை. அதற்கு மேலே இம்முறையும் முடியாது.
முதல் சுற்றில் பங்களாதேஷுடனான போட்டியை ஆவலுடன் பார்க்கிறேன். யார் வெல்வது என்று.
இந்தியா
இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணிஎனக் கருதப்படும் மிகப் பலம் வாய்ந்த அணி. 83ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற பிறகு இன்னொரு உலகக் கிண்ணம் வேண்டித் தவியாய்த் தவிக்கிறது. கடந்த உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டு முதல் சுற்றோடு வெளியேறிய பின் இம்முறை மிகப் பெரும் எதிர்பார்ப்பின் அழுத்தத்துடன் ஆனால் பலமான வாய்ப்புக்களுடன் நுழைகிறது.
பலம் - மிகப் பலம் + அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசை
சாதனை படைத்த தனித்து ஜொலிக்கும் நட்சத்திர வீரர்கள்
உள் நாட்டு ஆடுகளங்களில் இடம்பெறவுள்ள போட்டிகள்
அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள்
சில நிமிடங்களில் போட்டியின் போக்கைத் திசை மாற்றும் அதிரடி வீரர்கள் - சச்சின், சேவாக், பதான், யுவராஜ், தோனி
பலவீனம் - அடிக்கடி தொய்ந்து போகும் பந்துவீச்சு வரிசை
உள்நாட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு + எதிர்பார்ப்பு தரும் மேலதிக அழுத்தம்
நட்சத்திரம் - சச்சின் டெண்டுல்கர் - சாதனைகளின் பெட்டகம்.அதிக உலகக் கிண்ண ஓட்டங்களைக் குவித்தவர் என்ற பெருமை;ஒரே தொடரில் கூடுதல் ஓட்டங்களைக் குவித்தவர் என்ற உலகக் கிண்ண சாதனைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் ஆறாவது உலகக் கிண்ணத்திலாவது சம்பியனாக விடைபெரவேண்டும் என்ற வெறியோடு குதிக்கிறார்.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - விராட் கோஹ்லி - கடந்த ஒன்றரை வருடமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் இளைய நட்சத்திரம். உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைத்தால் தன் ஸ்தானத்தைத் தக்க வைத்துக் கொள்வார். களத்தடுப்பிலும் இந்தியாவின் மிகச் சிறந்தவராக மாறிக்கொண்டு வருகிறார்.
கிண்ணம் வெல்லக் கூடிய பிரகாசமான வாய்ப்புக்கள் தெரிகின்றன. வழமையான கடைசி நேரத் தடுமாற்றங்கள் இல்லாவிட்டால் கபில் தேவின் பின்னர் தோனி இந்தியாவின் புது வரலாற்றை எழுதுவார்.
அயர்லாந்து
கடந்த உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை அதிர்ச்சிகரமாகத் தோற்கடித்து வெளியேற்றியதிலிருந்து பெரிய அணிகளைத் தோற்கடிக்கும் வல்லமை இருக்கிறது என்பதைத் தொடர்ச்சியான சிறப்பான பெறுபேறுகளின் மூலம் காட்டிவரும் அணி. எதிர்காலம் பிரகாசமானது என்றாலும் இம்முறை வாய்ப்புக்கள் குறைவு.
பலம் - இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளில் பெற்ற அனுபவத்துடன் போராடக் கூடிய வீரர்கள்
பெரிய அணிகளையும் தடுமாற வைக்கும் கட்டுக்கோப்பான அணி
பலவீனம் - நிரூபிக்கப்பட்ட சுழல் பந்துவீச்சாளர்கள் இன்மை
ஆசிய ஆடுகளப் பரிச்சயம் குறைவு
நட்சத்திரம் - போல் ஸ்டேர்லிங் - அண்மைக் காலத்தில் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்.அனுபவத்தை இத்தொடரில் மேலும் அதிகமாக்கிக் கொள்வார்.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - ஜோர்ஜ் டோக்ரெல் - இளம் வயதிலேயே சுழல் பந்துவீச்சில் பிரகாசிக்கும் டோக்ரேலுக்கு தனது திறமைகளைக் கட்ட சிறந்ததொரு சந்தர்ப்பம்.
முதல் சுற்றைத் தாண்டாது. நெதர்லாந்தை வெல்வது நிச்சயம்.
நெதர்லாந்து
96ஆம் ஆண்டிலிருந்து உலகக் கிண்ணத்தில் விளையாடி வருகிறது.(99 தவிர) இந்த உலகக் கிண்ணத்தின் மிகப் பலவீனமான அணிகளில் ஒன்று.
பலம் - டென் டூஷேட் என்ற ஒரு அனுபவம் வாய்ந்த சகலதுறை வீரரும் இன்னும் சில குறிப்பிடத் தக்கோரும்
பலவீனம் - பலவீனமான பந்துவீச்சு வரிசை
நம்ப முடியாத துடுப்பாட்ட வீரர்கள்
வெற்றிக்கான வாய்ப்புக்கள் குறைவு
நட்சத்திரம் - ரயன் டென் டூஷேட் - சர்வதேச ரீதியிலும், இதைவிட அதிகமாக இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளிலும் தன்னை நிரூபித்துல்லவர்.
சர்வதேசத் தரமிக்க ஒரு சகலதுறை வீரர்.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - டோம் கூப்பர் - தென் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி வரும் வீரர்.பெற்றோர் வழியாக நெதர்லாந்துக்காகவும் விளையாடும் வாய்ப்புப் பெற்றவர்.
நேர்த்தியான துடுப்பாட்ட வீரர். நெதர்லாந்து எதிர்பார்க்கும் துடுப்பாட்ட ஸ்திரத்தன்மையை வழங்குவார்.
அடுத்த சுற்று வாய்ப்பு அறவே இல்லை. தனி நபர்களின் அசாத்திய முயற்சிகள் அயர்லாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினால் நெதர்லாந்துக்கு எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாகும்.
தென் ஆபிரிக்கா
முதலாவது உலகக் கிண்ணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள துரதிர்ஷ்டசாலிகள்.அரையிறுதிகளுக்கு மூன்று தடவை வந்தது இதுவரை மிகச் சிறந்த பெறுபேறு. இம்முறை அரையிறுதிகளுக்காவது வரும் என்று எதிர்பார்க்கப்படும் நான்கு அணிகளில் ஒன்று.
பலம் - மிகப் பலம் வாய்ந்த,நிரூபிக்கப்பட்ட துடுப்பாட்ட வரிசை
மிகச் சிறந்த ஆரம்ப வேகப் பந்துவீச்சாளர்கள்
கலிஸ்,அம்லா ஆகியோரின் ஆசிய ஆடுகளப் பெறுபேறுகள்
பலவீனம் - தனித்துப் போட்டிகளை வெல்வர் என்ற நம்பிக்கை தராத சுழல் பந்துவீச்சாளர்கள்
அணியின் ஆறாம்,ஏழாம் இடங்கள் பற்றிய சந்தேகம்
முக்கியமான தருணங்களில் சறுக்கி,சொதப்பும் பலவீனம்
நட்சத்திரம் - ஜாக்ஸ் கலிஸ் - உலகின் மிகச் சிறந்த சகலதுறை வீரர் என்ற முத்திரையே இவர் பற்றிச் சொல்லப் போதுமே. தென் ஆபிரிக்காவின் முதுகெலும்பு.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - ரொபின் பீட்டர்சன் - ஒரு நாள் போட்டிகளுக்கேற்ற சுழல் பந்துவீச்சாளர்.அண்மைக் காலத்தில் விக்கெட்டுக்களை எடுத்து முன்னேறி வருகிறார். சாதகமான ஆடுகளங்களில் இம்முறை பிரகாசிப்பார் என நம்புகிறேன். கொஞ்சம் துடுப்பெடுத்தாடவும் கூடியவர்.
அரையிறுதி உறுதி என்று கணக்குகள் சொன்னாலும், பாகிஸ்தானுடன் கால் இறுதி வரும் எனில் தென் ஆபிரிக்காவின் சொதப்பும் குணம் (choking) இம்முறையும் துரதிர்ஷ்டசாலிகள் ஆக்கலாம்.
மேற்கிந்தியத் தீவுகள்
முதல் இரண்டு உலகக் கிண்ணங்களை வென்ற அன்றைய முடி சூடா மன்னர்கள். இப்போது வெல்வது எப்படி என்று மறந்து போயுள்ளார்கள். இறுதியாக அரையிறுதி வந்து நான்கு உலகக் கிண்ணங்கள் ஆகிறது. அணிக்குள்ளும் சபைக்குள்ளும் இருக்கும் குழப்பங்கள் இம்முறையும் வாய்ப்புக்களை மங்கலாகவே வைத்துள்ளன.
பலம் - அனுபவம் வாய்ந்த மூன்று துடுப்பாட்ட வீரர்கள்.
சர்வானின் தற்போதைய form.
கெய்ல் அதிரடிக்கத் தொடங்கினால் எதிரணிகளைத் திணறடிக்கும் இயல்பு
பலவீனம் - நட்சத்திரப் பந்துவீச்சாளர்கள் இன்மை/குறைவு
அணியின் சமநிலைக் குழப்பம்
முக்கியமான இரு வீரர்களின் (பரத், கார்ல்டன் போ) உபாதைகள்
நட்சத்திரம் - ராம்நரேஷ் சர்வான் - அனுபவம் வாய்ந்த வீரர். கொஞ்சக் காலக் கவனிப்பாரற்ற நிலையிலிருந்து மீண்டு இப்பொது தொடர்ந்து கலக்குகிறார். ஆசிய ஆடுகளங்களுக்கேற்ற துடுப்பாட்டப் பிரயோகங்களும் இணைப்பாட்டங்களை உருவாக்கக் கூடிய இயல்பும் அணிக்கு உபயோகமானவை.
நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - சுலைமான் பென் - இவரது நடத்தைகள் எனக்குப் பிடிக்காவிட்டாலும் கூட, ஆசிய ஆடுகளங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்குத் தேவையான சுழல்பந்துவீச்சுப் பலத்தை வழங்குவார் என நம்புகிறேன்.உயரமும் பந்தை வீசும் கோணமும் பென்னுக்கு இம்முறை வாய்ப்புக்களையும் விக்கெட்டுக்களையும் தரலாம்.
நட்சத்திரங்கள் சிலர் இருக்கும்போதும் இந்த அணியின் தடுமாற்றங்களும் குழப்பமும் கால் இறுதி வாய்ப்புக்களையும் இல்லாமல் செய்யும் என்றே கருதுகிறேன். நட்சத்திரங்கள் ஜொலித்தால் பங்களாதேஷை வென்று(வங்க மண்ணில் இது அவ்வளவு இலகுவல்ல) கால் இறுதி வரை செல்ல முடியும்.
-------------------------
மீண்டும் வலியுறுத்துகின்ற விடயங்கள்...
இந்திய - இலங்கை இறுதிப் போட்டி நடக்கவே அதிக வாய்ப்பு என்று பல பெரிய விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் சொல்வதைப் போலவே நானும் அபிப்பிராயப் படுகிறேன்.
இம்முறை உலகக் கிண்ணம் இரு நீல சீருடை அணிகளில் ஒன்றின் இரண்டாவது உலகக் கிண்ணம்.
இவை என் ஊகங்கள், கணிப்புக்கள் மட்டுமே.. கால நிலை,கள நிலை, குறித்த நாளின் வீரர்களின் பெறுபேறுகள் முடிவுகளை மாற்றி மூக்குடைக்கலாம்.
இன்று இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆரம்பிக்க இருக்கின்ற இந்திய-பங்களாதேஷ் போட்டி முதல் வாங்க கிரிக்கெட் உலகக் கிண்ண ஜோதியில் கலக்கலாம் :) களிக்கலாம்.
இன்றைய முதல் போட்டி இந்தியாவுக்கு சாதகம் அதிகமாக இருந்தாலும், பங்களாதேஷ் அணியை யாரும் - இந்திய நட்சத்திர வீரர்கள் உட்பட - குறைத்து மதிப்பிட முடியாது.
They are not just ORDINARY.
92இல் ஆஸ்திரேலியா - நியூ ஸீலாந்து இணைந்து நடத்திய உலகக் கிண்ணத் தொடரில் முதல் போட்டி நியூ சீலாந்தில் நடந்ததும் அதில் Defending Champions + Favorites ஆஸ்திரேலியாவை அப்போது யாரும் எதிர்பாராத நியூ ஸீலாந்து வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்ததும் ஞாபகம் வந்து தொலைக்கிறது...
விறுவிறுப்பான போட்டியொன்றை உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன்..
ரசிப்போம்..
*** நாளை இலங்கையின் முதலாவது போட்டி (கனடாவுக்கு எதிராக) பார்க்க ஹம்பாந்தோட்டை செல்கிறேன்.