இந்தப் புதிய வருடத்தின் எனது முதல் பதிவு.
வெறும் ஒன்பதே ஒன்பது நாட்கள் இடைவெளியில் அடுத்த பதிவு.
அதற்குள் ஒரு அன்புள்ள நண்பர் லோஷனுக்கு என்னாச்சு என்று நான் ஏதோ மனம் கலங்கியோ சலனப்பட்டோ தான் பதிவுகள் எழுதுவதில்லை என்று முடிவே கட்டிவிட்டார்.
(யோவ்.. ஒன்பது நாட்களுக்கே இப்படியா?)
அவர் அவ்வாறு நினைத்த காரணம் சென்ற வருடத்தின் எனது கடைசிப் பதிவு தான்.
ஆனால் அது என் மனப்பாரத்தைக் குறைக்க இட்ட பதிவே தவிர, அதற்கு வந்த எந்தவொரு பின்னூட்டங்களோ,பின் விளைவுகளோ(அப்படி எதுவும் வரவில்லை) யாதொரு சலனத்தையும் என்னில் ஏற்படுத்தவில்லை.
சிலர் முகமில்லாமல் தங்களைத் தாங்களே நியாயப்படுத்தவும் வேறு சிலர் மீது திசை திருப்பவும் முற்பட்டு தாங்களாகவே தங்களை யாரென்று எனக்கு உறுதிப்படுத்தியது எனக்கும் மகிழ்ச்சியே.
கண்டுகொண்டேன்;கண்டுகொண்டேன்.
(அடிக்கடி முகமில்லாமல் அன்பாக நலம் விசாரிப்போருக்கு - மனிங் பிளேசில் எனக்கு ஒரு சொகுசு பங்களாவும் இல்லை :)இப்போதைக்கு வேறெங்கு வாங்கும் ஐடியாவும் இல்லை )
ஆனால், இந்த எட்டு நாட்கள் (இன்றைத் தவிர)என்னால் வலைப்பதிவுகளை வாசிக்கவே முடியாதளவு மும்முரமாக வைத்திருக்கப் பல காரணிகள்..
(சில முக்கிய பதிவுகளை புக்மார்க் செய்து வைத்து இப்போது தான் வாசித்து வருகிறேன்)
அத்தனையுமே மகிழ்ச்சியான,முன்னேற்றகரமான காரணங்கள்.
வருடத்தின் முதல் பதிவைக் கொஞ்சம் ஆக்கபூர்வமானதாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு இந்த நல்ல விஷயங்களைப் பதிவிடுவதிலும் நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதிலும் சந்தோஷமே.
கடந்த இரு மாதங்களாக கொஞ்சம் ரகசியமாக,கொஞ்சம் பலரும் அறிந்து நடந்து வந்த ஒரு மாற்றம் - எமது வெற்றி FM வானொலியும் தொலைக்காட்சியும் உரிமையாளர் மாறியிருப்பது.
இவ்வளவு காலமும் சிங்களத் தொழிலதிபர்களான காரியப்பெரும சகோதரர்களின் நிறுவனத்தின் Voice of Asia Networks (Pvt) Ltd கீழிருந்த எமது வானொலியும் தொலைக்காட்சியும் இந்த முதலாம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக Universal Networks (Pvt) Ltd என்ற புதிய நிறுவனத்தின் அங்கங்களாக மாறியுள்ளன.
ஜனகன் என்ற ஒரு தமிழரே அதிலும் இளைஞரே இந்த நிறுவனத்தை உருவாக்கி இருப்பது நம்பிக்கையைத் தருகிறது. தனது நிர்வாகத்திறனை ஏற்கெனவே இலங்கையில் புகழ்பெற்ற கணினி/தகவல் தொழிநுட்ப கல்வி நிறுவனமான IDMஇன் பணிப்பாளர்களில் ஒருவராக, பங்குதாரராகக் காட்டியுள்ள இவர் வெற்றியை மேலும் வெற்றி பெறச் செய்வார் என்பதில் அசராத நம்பிக்கை உள்ளது எனக்கு.
தேவையான வசதிகளை உடன் செய்து வழங்கி இருப்பதோடு, இவ்வளவுகாலமும் என்/எங்கள் மனதுகளோடும் கணினிக் கோப்புகளோடும் தூங்கிக்கொண்டிருந்த பல நிகழ்ச்சிகள்,பரிசுத் திட்டங்கள், புதிய செயற்திட்டங்கள் அனைத்துமே கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெற ஆரம்பித்திருக்கின்றன.
கடந்த முதலாம் திகதி எமது வெற்றியின் புதிய உரிமையாளரை வானொலியில் அறிமுகப்படுத்தும் வேளை நான் சொன்னது "தமிழரால் தமிழருக்காகத் தமிழில் நிகழ்ச்சிகள் வரும் வானொலி"
(இவ்வளவு காலமுமே தமிழை எந்தவொரு இடத்திலும் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் இருந்த எம் வெற்றிக்கு ஒரு தமிழரே உரிமையாளராக வந்திருப்பதனால் எம் தடங்களை இன்னும் ஆழமாகப் பதிக்க ஏற்ற இடமாக வெற்றி மாறியுள்ளது)
வெற்றி வானொலி தெளிவாக ஒலிக்காத இடங்கள் சிலவற்றிலும் மேலும் தெளிவாக மாற்றும் நடவடிக்கையையும் முடுக்கி விட்டுள்ளோம்.
பெயரளவில் தொலைக்காட்சியாக இருந்த வெற்றி டிவியும் நிகழ்ச்சிகளோடு வரத் தயாராகிறது.
கஷ்டப்பட்டு விடா முயற்சி, சோராத தேடல்களோடு வெற்றியில் அங்கம் வகித்து வந்த நான் உட்பட்ட அத்தனை பேருக்குமே இப்போது மகிழ்ச்சியை அளித்துள்ளார் திரு.ஜனகன்.
கஷ்டப்பட்டும் இஷ்டப்பட்டும் வேலையை நேர்மையாக செய்தால் நல்ல பலன் தானாகத் தேடி வரும் என்ற என் நம்பிக்கை மீண்டும் சாத்தியமாகியுள்ளது.
திறமை+தேடல்கள் உடைய புதிய தலைமுறை இளைஞர்கள் ச்லரை என் அணியில் சேர்க்கக் கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது.அடுத்தவாரமளவில் எங்களில் பலரும் வேறுவிதமாக அறிந்த சிலரை வெற்றி மூலமாக நான் அறிமுகப்படுத்தும் மகிழ்ச்சியான நேரத்தை எதிர்பார்த்துள்ளேன்.
இவ்வளவு நாளும் சேடம் இழுக்கும் ஆரம்பக் கால அலுவலகக் கணினியோன்றோடு சென்று கொண்டிருந்த என் துன்பமான அலுவலக நேரங்களும் இப்போது புத்தம்புதிய LED monitorஉடன் கூடிய 100 GB, i5 கணினியுடன் இனிப்பாக மாறியுள்ளது.
மகிழ்ச்சிகளுடன் வேலைகளும் சேர்ந்தே வந்திருக்கின்றனவே.. ஆனாலும் no complaints.. :)
சில இலக்குகளை துரிதமாக அடைவதற்கு திடம் பூண்டுள்ளேன்/பூண்டுள்ளோம்.இதனால் இந்த பிசி பிடித்துள்ளது.
அடுத்த மகிழ்ச்சி - ஒரு பூரிப்பும் கூட.
கடந்த வெள்ளிக்கிழமை மகன் ஹர்ஷு ஆரம்பப்பள்ளி (LKG) சென்ற முதல் நாள்.
அனுமதி பெறுவதில் உள்ள சிரமங்கள் பெரிதாகத் தெரியாவிட்டாலும், இன்னும் இரண்டு வருடங்களில் நாம் தயாராகவேண்டியதைப் புரிந்துகொண்டேன்.
அலுவலகம் வந்துவிடுவதால் எனக்கு ஹர்ஷு LKG செல்வதில் ஏதும் வித்தியாசம் தெரியப்போவதில்லை.ஆனால் என் மனைவி ஒரு வாரத்துக்கு முன்னதாகவே 'அபியும் நானும்' பிரகாஷ் ராஜ் மாதிரி செண்டிமெண்ட் ஆகிவிட்டார்.
முதல் நாள் மற்றக் குழந்தைகள் அழுவது போல் ஹர்ஷு அழமாட்டான் என்று எனக்கு நன்கு தெரிந்தே இருந்தது.
ஆனாலும் மனைவி கொஞ்சம் யோசித்திருந்தார்.
வகுப்பறைக்குள்ளே கொண்டு விட்டு,ஆசிரியைகளிடம் பொறுப்புக் கொடுத்துவிட்டது தான் தாமதம்..
ஹர்ஷு பாய் சொல்லி, Flying Kissஉம் கொடுத்து எங்களை வழியனுப்பி விட்டான்.
சந்தோசம்.
வெள்ளி முதல் இன்றுவரை தனது பள்ளி பற்றித் தான் பேச்சு. இந்த ஆர்வம் தொடர்ந்தும் இருக்கட்டும்.
கொஞ்சம் சோர்ந்து போய்த் தூக்க நிலையிலிருந்த என் பங்குச் சந்தை நடவடிக்கைகள் கடந்தவார இறுதியிலிருந்து சூடு பிடித்து எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை வழங்கி இருக்கின்றன.
அடிக்கடி தாங்கள் அறிந்த நுட்பங்கள்,செய்திகளைப் பகிர்ந்து வழிகாட்டிவரும் என் தம்பி செந்தூரனுக்கும், பதிவுலகு மூலம் பழக்கமான பங்குச் சந்தை அச்சுவுக்கும் நன்றிகள்.(இருவரும் இலங்கையில் இல்லாத காரணத்தால் Expert consultancy fees கொடுக்கத் தேவையில்லை)
சேமிப்பை நோக்கமாகக் கொண்டிருந்த எனது நெருங்கிய நண்பர் ஒருவரையும் ஊக்கப்படுத்தி அவருக்குப் பல மடங்கு லாபத்தையும் வழங்கி இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னிட்டு வெற்றியின் மூலம் என்ன செய்ய முடியும் என்று யோசித்தவேளையில் வந்த ஐடியாக்களுக்கு முழுமனதோடு புதிய உரிமையாளர் ஓகே சொன்னதனால் உற்சாகம் ஆகியிருக்கிறோம்.
தைப்பொங்கல் அன்று சஸ்பென்சை உடைக்கலாம் என்று நினைத்துள்ளோம்.
உலகக் கிண்ணப் போட்டிகள் பார்க்கக் கடந்த முறை West Indies செல்லும் வாய்ப்பு ICC மூலம் கிடைத்தும் பயண செலவுகளை நாமே பொறுப்பேற்க வேண்டும் என்றதனால் செல்லவில்லை.
எனினும் இம்முறை முடிந்தளவு எல்லாப் போட்டிகளையும் பார்க்க செல்லவேண்டும் என்று மனவுறுதியோடு இருந்தமைக்கு எல்லாப் பக்கமாகவும் இதுவரையில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.
ICC யினாலும்,உலகக் கிண்ண ஏற்பாட்டுக் குழுவாலும் வழங்கப்படும் ஊடகவியலாளர் அட்டையும் அடுத்த வாரம் கிடைத்துவிடும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்தியா,பங்களாதேஷில் தங்குமிட வசதிகளையும் செய்து தரும் என்று சொல்லியுள்ளது.
ஹையா ஜாலி..
அடுத்தது நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த Media accreditation விஷயமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்துக்கு சென்ற நேரம் என்னை மறக்காமல் இருந்த நண்பர்கள்.
(மறக்கக்கூடிய ஆளா நான்? ஊடக அறிக்கைகள் வரும் நேரம் முன்பெல்லாம் தமிழ் மறக்கப்படும் நேரங்களில் சண்டை போட்ட சிலரில் நானும் ஒருவனாச்சே)
தமிழ்மணப் பதிவுப் போட்டியின் இரண்டாம் சுற்று முடிவுகள் படி என்னுடைய இரு பதிவுகள் தெரிவாகியுள்ளன என்பது இன்னொரு மகிழ்ச்சி.
முரளி 800 @காலி
A9 வழியாக யாழ்ப்பாணம் - ஒரு படப் பதிவு
ஆத்மார்த்தமாக ரசித்து,உணர்ந்து எழுதிய பதிவுகள்.
மூன்றில் தவற விடப்பட்டது ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம். ஆத்ம திருப்தி தந்த மற்றொரு நீளமான பதிவு.
வாக்களித்த நண்பர்கள் அத்தனைபேருக்கும் நன்றி.
ஆனாலும் நான் ரசித்த,மெச்சிய ஒரு சில நண்பர்களின் பதிவுகள் தெரிவு செய்யப்படாமை கொஞ்சம் கவலை.
தெரிவாகியுள்ள ஏனைய நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
என்னைப் போல உங்கள் அனைவருக்கும் கவலைகள் நீங்கிய அமைதியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த பொழுதாக இந்த வருடத்தின் ஒவ்வொரு நாட்களும் அமையட்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
பி.கு - சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் ஒரு கட்டத்தில் நாயகன் சூர்யா "I am the Happiest Man"என்று உற்சாகக் கூச்சலிடுவார். இந்த வசனத்தை நான் எனது காலை நிகழ்ச்சி விடியலில் அடிக்கடி பயன்படுத்திவருகிறேன்.
காரணம் மிக சொற்பமான நேரங்கள் தவிர நான் எப்போதுமே உற்சாகமாக,மகிழ்ச்சியாக இருக்கிற ,மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிற ஒருத்தன்.
Post a Comment
26Comments
3/related/default