போட்டி,பொறாமை,பணம்,பெருமை,பா சம்,காதல்,குரோதம்,வன்மம் இத்தனையும் கலந்த மனித மனங்கள் சேவல்களாக மாறிக் கொத்திக் குதறும் ஆடுகளம்.
பொல்லாதவனில் சிறு திருட்டும் தேடலும் வன்மமும் கலந்து நகர்ப்புற மத்திய தர வர்க்கக் கதை சொன்ன வெற்றிமாறன் மதுரை மண்ணின் சேவல் சண்டையை இம்முறை களமாக எடுத்திருக்கிறார்.
வெற்றிமாறன் - ஒளிப்பதிவாளர் வேல்ராஜுக்கு எப்போதும் கைகொடுக்கும் ஒல்லிக்குச்சி ஹீரோ தனுஷ்,வில்லன் கிஷோர் + அடர் இருள்,மங்கல் ஒளி, மனித மன விகாரங்கள் சில,ஆக்ரோஷ பட்ஜெட் செலவு குறைவான சண்டைகள் ஆடுகளத்திலும் உண்டு.
பொல்லாதவன் போலவே வீட்டுக்கு உதவாத பிள்ளை;ஏன் என்றே தெரியாமல் உருவாகும் திடீர்க் காதல்;வன்மத்துடனான கொலைவெறி சண்டைகள் என்று ஒற்றுமை ஒப்பீடுகள் பல இருக்கின்றன.
ஆனால் ஆடுகளத்தில் ஹீரோ தனுஷை விடக் கனதியான பாத்திரம் பேட்டைக்காரராக வரும் எழுத்தாளர்/கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு.
சேவல் சண்டை நடத்தும் இரு குழுவினரின் ஜென்மப் பகையின் அடிப்படையில் கதையின் முதற்பாதி நகர்கிறது.
பேட்டைக்காரரின் முக்கியமான தூண்களாக கருப்பு(தனுஷ்),துரை (கிஷோர்), அயூப்(பெரிய கறுப்புத் தேவர்) ஆகியோர்.
இவர்களுடன் சேவல் சண்டைப் பந்தயங்களில் வந்து தொடர்ந்து தோற்றுப்போகும் போலீஸ் அதிகாரி ரத்தினசாமி(நரேன்) பேட்டைக்காரன் கோஷ்டியைத் தோற்கடிக்க பல வழிகளிலும் முயல்கிறார்.
முதலில் துரையைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியும் அயூபின் மரணத்தால் தோற்றுவிட - பேட்டைக்காரனை பந்தயத்தில் வென்றே ஆகவேண்டும் என்று ஆடுகளத்தில் இறங்கினால் அங்கேயும் அடுக்கடுக்காகத் தோல்விகள்.
பணத்தாசை காட்டி கருப்பை உசுப்பேற்றி பேட்டைக்காரனோடு கருப்புக்கு ஏற்படும் சிறு மோதலைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தால் ஒரு Twenty 20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஓவர் போல மிக விறுவிறுப்பாக இடம்பெறும் சேவல் சண்டையில் கருப்பு (தனுஷ்) ஆச்சரியமாக ஜெயித்துவிடுகிறார்.
பந்தயத்தொகையாக மூன்று லட்சம் ரூபா தனுஷிடம் வந்துசேர,தனுஷை எல்லோரும் போற்றிப் புகழ அடுத்த பேட்டைக்காரன் என்று கருப்பு அழைக்கப்பட - ஒரு பக்கம் முன்னைய வில்லன் ரத்தினசாமி கதையிலிருந்து ஒதுங்கிப்போக - புதிதாக முளைக்கும் வில்லங்கங்கள் ஆடுகளத்தை அதகளப்படுத்துகின்றன.
அதற்குப் பிறகு மூன்றே மூன்று பாத்திரங்களே திரைக்கதையை ஆக்கிரமிக்கின்றன.
வேகமாக செல்லவேண்டிய திரைக்கதை ஏனோ மெதுவாகப் பயணிப்பது போல இரண்டாம் பாதி எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா அல்லது எல்லோருக்கும் அப்படியா தெரியவில்லை.
அத்துடன் பொல்லாதவன் பார்த்த பிரமிப்பில் வெற்றிமாறனிடம் நான் இன்னும் அதிகமாய் எதிர்பார்த்தேனோ?
இரண்டாம் பாதித் திருப்பங்கள்.. திருப்பங்கள்.. பாத்திரங்களின் குணாம்ச மாற்றங்கள் என்னை ஈர்க்கவும் இல்லை;ஆச்சரியப்படுத்தவும் இல்லை.
ஆனால் ஒரு திரைப்படமாக இல்லாமல் ஒரு சிறுகதையாக திரைக்கதையையும் வசனங்களையும் மிக ரசித்தேன்.(ஆனால் நான் பார்த்த ரொக்சி திரையரங்கத்தின் ஸ்பீக்கர்கள் என் செவிப்புலனை ரொம்பவே சோதித்துவிட்டன. இடையிடையே அவர்களின் Projector அறையில் எரிந்த டியூப் லைட் தந்த எரிச்சல் வாயில் சில கெட்ட வார்த்தைகளையும் முணுமுணுக்க வைத்ததில் தனுஷ் டப்சியைப் பார்த்துப் பேசிய சில லவ் டயலாக்ஸ் மிஸ் ஆகிவிட்டன )
மதுரைத் தமிழில் வன்மம்-வெறி தொனிக்கும் வசனங்களைப் பேசும் முகங்களை,கலவரம் எறிக்கும் கண்களைக் காட்டும் Close up shots ஆகட்டும், புழுதி பறக்கும் விறுவிறு சேவல் சண்டைகளைக் காட்டும் Graphics உதவியுடனான High tech ஒளிப்பதிவாகட்டும், மங்கல் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட குடியிருப்புக் காட்சிகள் ஆகட்டும், இருட்டில், நிலாவின் ஒளியில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் ஆகட்டும் நின்று சாதிப்பவர் - என்னைப் பொரறுத்தவரை ஆடுகளத்தின் Real ஹீரோ ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான்.
அதிலும் மூன்று பாடல்கள் மனதை அள்ளுகின்றன.
அய்யய்யோ,ஒத்தை சொல்லாலே, யாத்தே..
மூன்றிலும் உன்னிப்பாக அவதானித்தால் மூன்று விதமான ஒளிப்பதிவு.. வெவ்வேறு விதமான ஒளியமைப்பு.
வேல்ராஜைக் கண்டு கை குலுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் அவருடன் பாராட்டப்படவேண்டிய இன்னும் ஒருவர் எடிட்டர். கத்தரிபும் சேர்க்கையும் படத்தின் வேகத்தைக் கூட்டுவதில் ஓரளவாவது முயன்றுள்ளது.
மேலும் தேவையற்ற காட்சிகளை விலக்கியுள்ளது.
அதே போல கலை இயக்குனர். அண்மையில் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் இயக்குனர் வெற்றிமாறன் இந்தப் படத்துக்காக மூன்று வருடம் செலவழித்தது ஏன் என்று காரணங்களை அடுக்கி இருந்தார்.
இயற்கையா செயற்கையா என்று பிரித்தறிய முடியாமல் வரும் குடியிருப்புக்கள், சேவல் சண்டைத் திடல்கள், கருப்பு வீடு என்று ஆடுகளத்தின் களத்தோடு எம்மை ஒட்ட வைப்பது கலை இயக்குனரினதும் வெற்றி தான்.
இசை - ஜி.வீ.பிரகாஷ் தன் மீது வைக்கப்பட்ட பாரத்தை அழகாக சுமந்து ஜெயித்துள்ளார். இப்படியான படத்துக்குத் தேவையான சில இடங்களில் பொங்கும்,சில இடங்களில் அடங்கும் அளவான இசை. யோகி பீயின் குரலில் வரும் Rap பாடல்களைக் காட்சிகளுடனே பின்னணியாக வழங்கியதும் கலக்கல்.
பாத்திரங்கள் அனைத்தையுமே தத்தமது பல்வேறு குணாம்சங்கள்,மன இயல்புகளோடு செதுக்குவது தமிழில் மிகச் சில இயக்குனர்களே.
காரணம் பாலச்சந்தர்,பாரதிராஜா , வசந்த், என் அண்மைய மிஷ்கின் போன்றவர்களின் படங்களில் பாத்திரங்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இயல்புகள் கொண்டோராக,இயக்குனரின் இயல்புடையவர்களாக வருவர்.
ஆனால் வெற்றிமாறனின் கதை மாந்தர்கள் தத்தம் தனித்துவ இயல்புகளுடன் வெளிப்படுகிறார்கள்.
தனுஷ் - கருப்பு என்ற கிராமத்து வெகுளி இளைஞனாக வாழ்ந்திருக்கிறார்.
தாயிடம் சீறுவது.. பின் உருகுவது.
பேட்டைக்காரரிடம் காட்டும் கண்மூடித்தனமான விசுவாசம்.
பாசம் காட்டுமிடத்தில் இறுதிவரை அமைதியாகவே இருப்பது.
பொருந்தாக் காதல் என்று தெரிந்தும் ஆங்கிலோ இந்தியப் பெண் ஐரீனை(டப்சி) வழிந்து வழிந்து லவ்வும் இடங்கள்..
அந்த லுங்கியோடு தில்லாகத் திரியும் இடங்கள்.
சேவல் சண்டைக்களங்களில் விடும் சவால்களும் உதார்களும்...
வசன உச்சரிப்பும் உணர்வுகளைக் காட்டும் முகபாவங்கள் + உடல் அசைவுகளும்..
தனுஷுக்கு வாழ்நாளில் முக்கிய பாத்திரம்.
கொஞ்சம் உடம்பையும் தேற்றிக்கொண்டால்(மட்டுமே) சகல பாத்திரங்களும் பொருந்தக்கூடிய ஒரு ஹீரோ.
கிஷோர் - இயக்குனர் சமுத்திரக்கனியின் குரலின் துணையுடன் ஜொலிக்கிறார்.ஆனாலும் வ.ஐ.ச.ஜெயபாலன்,தனுஷ் முன்னால் கொஞ்சம் பின் தங்கியே நிற்கிறார்.
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் - தன் கவிதைகளில் வெடிக்கிற அந்தப் புலம்பெயர் இலங்கைக் கவிஞரா இந்த மதுரைக்கார மனிதர்? வாழ்கிறார்.
அடர் மீசையும் அதற்குள் புதைந்த ஆழமான கண்களும் ஒரு திமிரான நடையுமாக ஆடுகளத்தின் சண்டைசேவல் இந்தப் பேட்டைக்காரர் தான்.
ஒரு கவிஞனுள் நூறு நடிகர்கள் இருக்கிறார்கள் என்று நான் முன்பொருமுறை ஒரு பேச்சின் போது கூறியிருந்ததை அச்சொட்டாக நிரூபித்த அய்யா ஜெயபாலனுக்கு நன்றிகள்.
ராதாரவியின் ஆழமான,அடைத்த குரல் ஜெயபாலனின் தோற்றத்துக்கு மிகப் பொருந்திப் போகிறது.
குரலின் ஏற்ற இறக்கங்கள்,அழுத்த நிறுத்தங்கள் பாத்திரத்தின் கனதியைத் தூக்கி நிறுத்துகின்றன.
தொடர் வெற்றிகளால் நிமிர்ந்த பெருமையுடன் வலம் வந்த பேட்டைக்காரருக்கும், தன்னை விட தன் சிஷ்யன் பெருமை பெறும்போது மனதில் மறுகும் பேட்டைக்காரருக்கும், கடைசியில் முற்றுமுழுதாக இயல்புகள் மாறிப்போய் உணர்வுகளால் மூடப்பட்ட பேட்டைக்காரருக்கும் காட்டப்படுகிற வித்தியாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
தகுந்த நடிகர் ஒருவரைப் பாத்திரத்தில் வடித்ததும் இயக்குனரின் வெற்றியே.
கதாநாயகி டப்சி பண்ணு - என்ன பன்னோ கின்னோ.. ஐரினாக அச்சாகப் பொருந்துகிறார்.
(இஅவரைப் பற்றி சொல்லாவிட்டால் இளைஞரின் சாபம் என்னை சும்மா விடுமா?)
சுருள் முடியும் உருள் கண்ணும் வெள்ளை வேளேரும் என்று தனுஷைக் கவர்ந்தாலும் என்னை ஏனோ அந்தளவுக்குக் கவரவில்லை.
பையன்கள் முன்பு இருந்த குஷ்பு மோகம் போல இவர் மேல் மோகம் கொண்டலைய அப்படி என்ன விசேடமாக இருக்கு என்று சத்தியமாப் புரியல..
பேட்டைக்காரரின் மனைவியாக வரும் மீனாள்,கருப்பின் நண்பர்களாக வரும் கில்லி காட்டுவாசி,ஒல்லிக் கருப்பன்,கருப்பின் தாயார்,ரத்தினசாமியின் எந்நேரமும் ஒப்பாரி ஓலமிடும் தாய்க் கிழவி, ஆங்கிலோ இந்தியப் பாட்டி ... இப்படி ஒவ்வொரு பாத்திரங்களுமே தனித்து நின்று பேசுகின்றன.
சேவல் சண்டைகள் அபாரம்.ஆனால் Graphics வேலைகள் பல இடங்களில் உறுத்தித் தெரிகின்றன.
கால் பந்து, கபடி,கிரிக்கெட், ஜல்லிக்கட்டு என்று பல்வேறு விளையாட்டுக்களை மையப்படுத்திப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.சேவல் சண்டைகளை சில திரைப்படங்களில் இடையிடையே பார்த்தும் இருக்கிறோம்.
ஆனால் சேவல் சண்டைத் திடல்களின் இடையே சேவல்கள போலவே மனித மனங்கள் மோதும் இடங்களை உணர்ச்சி பொங்கத் தந்திருக்கும் விதம் தமிழ் சினிமாவில் மற்றுமொரு முதலாவது.
ஆடுகளத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என சில நிமிடங்களுக்கு முன்னரே நான் ஊகித்தாலும் அந்தப் பணத்தின் முடிவு நிச்சயம் ஒரு அதிர்வு தான்.
ஆனால் ஆடுகளத்தின் கதையோட்டத்தில் ஒரு இடைச் செருகலாகவே கருப்பு-ஐரீன் காதலைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. பொருந்தாக் காதலில் அந்தப் பெண்ணுக்கு இவ்வளவு உயிர்ப்பு வர யதார்த்தமான காரணம் இல்லை.
ஆனால் எல்லா மனிதரும் இவ்வாறு தளம்பும் மனம் உடையவர்கள் அல்ல என்பதையும் அவரது கதை மாந்தர்களால் உணர்த்துகிறார் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
மனச் சிதைவுகளை இலகுவாக ஒரு மனிதனுள் இன்னொருவனால் ஏற்படுத்த முடியும் என்பதையும் ஆலமரமாக ஒருவனைத் தன் ஆத்மகுருவாக மனதில் கொள்ளும் ஒருவன் அந்த பிம்பம் உடைந்துவிழுகையில் ஏற்படும் வலியை எப்படி எதிர்கொள்வான் என்பதையும் சில காட்சிகளிலேயே இலகுவாகக் காட்டிவிடுவதில் இயக்குனர் தனித்துத் தெரிகிறார்.
பணமும் புகழும் ஒவ்வொரு மனிதனதும் தேடலாக இருந்தாலும் அதுவே அவனது இறுதியாக இருக்கக் கூடாது என்பதை விட இருக்க முடியாது என்பதை பேட்டைக்காரன்,கருப்பு ஆகியோரின் இறுதி frameகள் சொல்வதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு மனிதனிலும் இருக்கும் அந்த தூங்கும் மிருகத்தைத் தட்டியெழுப்ப மூன்று லட்சம் பணம் மட்டுமல்ல ஒரு மூன்று பேர் இன்னொரு மனிதனை உயர்த்திப்பேசுவதும் கூடக் காரணமாக அமையலாம்.
அலைபாயும் மனதுகள் ஆசைப்படும் மனதுகள்,வன்மப் பகைகளும் மனதுக்குள்ளே பொருமும் வன்மங்களும் குவியலாகக் கொட்டி வந்துள்ள ஆடுகளத்தை இன்னும் ஆழமாக ரசிக்க இன்னும் ஏதோ குறையாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
ஆயினும்
ஆடுகளம் - அமைதியான அதகளம் - மனங்களின் போர்க்களம்.