சிறுத்தை

ARV Loshan
26


தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் தங்கள் ஜனரஞ்சக அந்தஸ்தை நாடி பிடித்து அறிவதற்கும் வெற்றிகள் தொடர்ந்துவரும்  நிலையில் தமது அடுத்த கட்ட உயர்ச்சியாக வெளிப்படுத்தவும் பயன்படுத்தும் இரட்டை வேடத்தை கார்த்தி பத்துப் படங்களுக்குள்ளேயே ஏற்றுள்ள படம் சிறுத்தை.

இதுவரை கார்த்தி நடித்துள்ள எந்தவொரு படமும் படுதோல்வி ஆனதில்லை என்ற தயாரிப்பாளரின் நல்ல பிள்ளைப் பெயரோடு மீண்டும் ஒரு மசாலா கலவை.

தெலுங்கு மெகா ஹிட் திரைப்படமான விக்க்ரமார்க்குடுவை சுட சுட ரீமேக் செய்து தமிழில் அந்த சூடு குறையாமல் தந்துள்ளார்கள்.

பட ஆரம்பத்திலேயே ஆந்திரப்பக்கம் நடைபெறுவதாகக் கதை இருந்தாலும் புரிவதற்காக பாத்திரங்கள் தமிழில் பேசுவதாக அறிவித்தல் போட்டு லாஜிக் மீறல் என்ற பேச்சு இல்லாமல் செய்கிறார்கள்.

ஆனால் படத்தில் ஆங்காங்கே வரும் முழக் கணக்கான அல்ல கூடை,லொறிக் கணக்கான பூச்சுற்றல்களை எல்லாம் கல கலப்பாகப் படம் செல்வதால் பொறுத்துக் கொள்ள முடிகிறது.
(மவனே சீரியசாப் பஞ்ச வசனம் பேசி இருந்தால் மட்டும் தாங்கி இருக்கவே முடியாமல் போயிருக்கும்)

கார்த்தி நேரெதிர் பாத்திரங்கள் இரண்டில்..
வழமையான கார்த்தியின் கலகல காமெடி பாத்திரம் ராக்கெட் ராஜாவாக சந்தானத்தொடு கல கல + இடுப்பு அழகி தமன்னாவுடன் கிளு கிளு...
நான் மகான் அல்ல இரண்டாம் பாதியில் பார்த்த சீரியசான + இறுக்கமான கார்த்தியாக நேர்மை+துணிச்சலான ரத்தினவேல் பாண்டியன் IPS ஆக விறுவிறு..
                                ஜிந்தாக்கா ஜிந்தா குத்து - ராக்கெட் ராஜா 

பரட்டைத் தலையும் தாடி மீசையுமாக கண்களில் திருட்டு முழியும் உதடுகளில் சதா வழியும் புன்னகையுமாக அலையும் ராக்கட் ராஜாவாகட்டும், கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக விறைப்பும் மிடுக்குமாக நிமிர்ந்த நெஞ்சோடும் தீர்க்கமான பார்வையோடும் முறுக்கு மீசையோடும் ரத்தினவேல் பாண்டியனாகட்டும் 'சிறுத்தை'யில் விஸ்வரூபமெடுத்து சிம்மாசனம் போட்டு இருக்கிறார் கார்த்தி.

மசாலாத்திரைப்படங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தேவையான அத்தனை விஷயங்களையும் அழகாக வெளிப்படுத்தித் தன்னை நிரூபிக்கிறார் கார்த்தி.
அண்ணன் சூர்யாவை விடக் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக மிளிர்கிறார்.
இயல்பான நகைச்சுவையில் சந்தானத்தையும் விஞ்சுகிறார்.

சரியான கலவையை இயக்குனர் சிவா வழங்கி இருக்கிறார். கார்த்தியும் வெளுத்து வாங்கி விருந்து படைத்திருக்கிறார்.

என்னைப் பொருத்தவரை ஒரே எட்டில் சிம்பு,தனுஷ்,ஜீவா வகையறாக்களைத் தாண்டி அஜித்,விஜய்,சூர்யா,விக்ரம் ஆகியோருக்கு அடுத்ததாக துண்டு போட்டிருக்கிறார் இந்தப் பருத்திவீரன்.
மிடுக்கு 

பருத்திவீரனில் ரசித்த பிறகு அனேக காட்சிகளில் கார்த்தியை ரசித்தேன்..
நான் மகான் அல்ல பார்த்த பிறகு பலரிடமும் நான் சொன்னது - கார்த்தி ஒரு போலீஸ் பாத்திரம் ஏற்றால் பின்னுவார் என்று.. நடந்திருக்கிறது.

படம் பார்க்க சென்ற ஈரோஸ் அரங்கில் ஆச்சரியமாக கார்த்தியின் ஆளுயர கட் அவுட்டுகள்.
படம் ஆரம்பித்தவுடனும் கார்த்தியின் பெயர் காண்பிக்கப்பட்டவுடனும் கரகோஷம்+காதைக் கிழிக்கும் விசில்கள்...
ம்ம்ம்ம்.. கார்த்தி மாஸ் ஆகிவிட்டார்.

வில்லன்கள் கொடூரம் என்பதை விட கோமாளித்தனம்.. ஆனால் கார்த்தியினாலும் அக்ஷன் சரவெடிகளாலும் ரசிக்க வைக்கின்றன வில்லன் - ஹீரோ மோதல்கள்.
சந்தானம் - நவீன கால கவுண்டமணி. ஹீரோவைக் கிடைக்கும் இடைவெளியில் ஓவர் டேக் பண்ணிவிடக் கூடிய அசத்தல் நக்கல்,நையாண்டிகள்.

கார்த்தியுடன் காட்டுப்பூச்சியாக சந்தானம் போடும் ரகளையில் திரையரங்கே கலகலக்கிறது.
இடைவேளைக்குப் பின்பும் சந்தானத்தின் ஆட்டம் கலக்கல்.

தமன்னா பாவம்.. ஆனந்தத் தாண்டவம் மதுமிதா முதல் லூசுப் பெண்ணாகவே இவரை மாற்றிவிட்டார்கள். ஒரு சம்பவத்துடன் ஒரு பொறுக்கி என்று ஊகிக்க்கூடியளவு அறிவில்லாதவரா என்று பரிதாபம் தான் வருகிறது.
வெளிறிய வெள்ளை வெளேர் இடுப்பை அடிக்கடி காட்டி ராக்கெட் ராஜாவை மூடாக்கி எம்மைக் காண்டாக்குகிறார்.


                                இடுப்பு 

போலீசின் குட்டி மகள் அழகாக இருக்கிறாள். பாவமாக இருக்கிறது.மகள் சென்டிமெண்ட்..
பையா தறுதலை கார்த்தியைத் தந்தையாகக் காட்டியபோதும் அதற்கும் பொருத்தமாக இருக்கிறார்.

முதல் பாதியின் நகைச்சுவைகளும் நையாண்டி வசனங்களும் ரசிக வைத்தது போலவே, இரண்டாம் பாதியில் கொஞ்சம் சீரியசான சில பிளாஷ்பக்குகளின் செண்டிமெண்ட்,சவால்,உணர்ச்சி மிகு வசனங்களும் ரசிக்க வைப்பன.
போலீஸ் கார்த்தி பயம் பற்றி சொல்லும் இடமும் போலீஸ்காரர்கள் பற்றி நீளமாகப் பேசும் இடமும் டச்சிங்.

இன்னும் சில வசனங்கள் நிறையப் பழைய உணர்வுகளைக் கொஞ்சம் கிளறிவிட்டன.
'அண்ணன் வருவார்'
'அண்ணன் வந்திட்டார்'
'தாயைக் கூட்டிக் கொடுத்தவனும் தலைவனைக் காட்டிக் கொடுத்தவனும் நல்லா வாழவே மாட்டான்'

வித்யாசாகரின் இசையில் எல்லாப் பாடலுமே முன்பே ஹிட். படத்தில் இன்னும் ரசிக்க வைத்துள்ளார்கள். ஆனால் எல்லாப் பாடலையுமே தெலுங்குப் பாணியிலேயே கலர் கலராய் சிங்கு சக்கா போட்டிருப்பது தான் கொஞ்சம் அன் சகிக்கபில்.

இன்னொரு ரசிக்க வைத்த விடயம்.. இது ஒரிஜினல் தெலுங்குப் படத்தில் இருக்கிறதா எனப் பார்த்தவர்கள் தான் சொல்லவேண்டும்..
அந்த 'ஜிந்தாக்கா தக்கா தக்கா' கைகள் கும்மும் விளையாட்டு.. கலாய்த்தலாக ஆரம்பித்து கடைசிக் காட்சி வரை கலக்குகிறது.

இடைவேளைக்குப் பிறகான சீரியஸ் ப்ளாஷ் பக்கினால் ரொம்பவே சீரியஸ் ஆகாமல் கல கல ராக்கெட் ராஜாவை வைத்து சிரிப்பாகவும் நையாண்டியாகவுமே வில்லன்களை ஐடியாக்கள் மூலமாகக் கவிழ்ப்பதும் ரசிக்கவைக்கும் டெக்னிக்.

இப்படி பல காட்சிகளை ரசித்து சிரிக்கலாம்..

அளவான காரம், சிரிப்பு,ரசிப்பு மசாலா தடவி வந்துள்ள பொங்கல் படையல் சிறுத்தை சிரித்து ரசிக்க சூப்பர் படம்.

சிறுத்தை - சீறுகிறது.

 சிரிப்பதற்காக மீண்டும் ஒரு தடவை பார்க்கலாம் என்றிருக்கிறேன்..
ஓசி டிக்கெட் தானே.. யார் யார் வாறீங்க?

* ரத்தினவேல் பாண்டியனின் மிடுக்குப் பார்த்து மீண்டும் மீசையை முறுக்கலாமா என்று ஒரு ஆசை.. ;)


Post a Comment

26Comments

Please Select Embedded Mode To show the Comment System.*