வேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்

ARV Loshan
26
விக்கிரமாதித்தனின் ராசிப்படியே பேர்த்தில் நடைபெற்ற மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பற்றிய எனது எதிர்வுகூறல் பிழைத்துப் போனது.(ஒரு சில முக்கிய விஷயங்கள் சரி வந்திருந்தன) ஆனால் அதிலும் மிக சந்தோஷமே.. பின்னே, எவ்வளவு காலத்துக்குப் பின்னர் இப்படியொரு ஆஸ்திரேலிய வெற்றி.. அதுவும் இரண்டாம் நாளில் இருந்தே உறுதி செய்யப்பட வெற்றி இது.

பொன்டிங் + ஆசி அணி - எத்தனை காலத்தின் பின் இந்த உற்சாகம் 

ஆடிக் கொண்டிருந்த, அல்லது இன்னும் ஆட்டம் கண்டுகொண்டே இருக்கின்ற பொன்டிங்கின்  தலைமைப் பதவியைக் குறைந்தது இந்தத் தொடர் முடிவடையும் வரையாவது தக்கவைக்கக் கூடிய மிகச் சிறந்த 36வது பிறந்தநாள் பரிசு இது.

இரண்டாவது டெஸ்ட்டில் மிக மோசமாக ஆஸ்திரேலியா தோற்றதன் பின்னர் வெற்றி பெரும் மனநிலைக்குத் திரும்புவதென்பது இயலாத காரியமாகவே இருக்கும் என நான் உட்படப் பலரும் நினைத்திருந்தோம். எம்மில் பொன்டிங்கும் கூட ஒருவராக இருந்திருக்கலாம்.
காரணம் நான் முன்னைய எதிர்வுகூறல் இடுகையில் சொன்னது போல, தலைவர்,உப தலைவர் மற்றும் முக்கிய பந்துவீச்சாளர்கள் தடுமாறும் ஒரு அணியால் சமநிலை முடிவைப் பெறுவதுகூட சிரமம் என்பது எல்லோருக்குமே தெரியும்.

ஆனால் பேர்த் ஆடுகளத்தின் வேகம்,பௌன்ஸ் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணித்து அதற்கேற்ற பந்துவீச்சாளரைத் தெரிவு செய்த ஆஸ்திரேலியா இங்கிலாந்தை உருட்டித் தள்ளியுள்ளது.

நான்கு வேகப் பந்துவீச்சாளரைத் தெரிவு செய்தது பற்றியும் சுழல் பந்துவீச்சாளர் பியரைத் தெரிவு செய்யாதது பற்றியும் பொன்டிங் அதிருப்திப் பட்டதாகப் பரவலாகப் பேசப்பட்டது.
ஆனால் ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளருக்கு சாதகமாக மாற்றமடையும் என் எதிர்பார்க்கப்பட்ட இறுதி நாள் வரை என்ன,நான்காவது நாளின் மதியபோசன இடைவேளை வரையே போட்டி செல்லவில்லை அல்லது ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் செல்ல விடவில்லை என்பது தான் முக்கியமானது.

69 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை முதல் நாளில் ஆஸ்திரேலியா இழந்தபோது பழைய குருடி கதை தானோ என்று நினைத்தேன்.

ஆனால் மீண்டும் இந்தத் தொடர் முழுது ஆஸ்திரேலியாவைக் காப்பாற்றும் மைக் ஹசி,ஹடின் ஆகியோரின் பொறுமையான துடுப்பாட்டம் ஓட்டங்களை சேர்த்தது என்றால் இந்த பேர்த் போட்டியில் யார் மீண்டும் formக்குத் திரும்பினால் ஆஸ்திரேலியா வெல்லும் என்று எல்லோரைப் போலவே நானும் எதிர்பார்த்தேனோ,எதிர்வு கூறினேனோ அதே மிட்செல் ஜோன்சன் அரைச்சதம் எடுத்து ஆஸ்திரேலியாவை கௌரவமான ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்து சென்றார்.

இங்கிலாந்தின் துடுப்பாட்டம் முதல் தடவையாக இந்தத் தொடரில் சுருண்டது. ஜோன்சன் ஆறு விக்கெட்டுக்களை எடுத்த விதம் அலாதியானது. அதிலும் குக்,ட்ரொட்,பீட்டர்சன்,கொலிங்வூட் என்று நால்வரையும் ஜோன்சன் துரிதமாக அனுப்பிவைத்ததில் அவர் இந்த ஆடுகளத்தை மீண்டும் தனக்குப் பரிச்சயம் ஆக்கிவிட்டார் என்பதும் என்பதும் தெளிவாகவே புரிந்தது.
  Magic Ms - Michael Hussey & Mitchell Johnson

இத்தொடரில் இதுவரை ஆஸ்திரேலிய நாயகனாக இருக்கின்ற மைக் ஹசியின் இரு இன்னிங்க்ஸ் துடுப்பாட்டமும் அவரை Mr.Cricket என அழைப்பதுக்கான காரணங்கள் கூறும்.
இங்கிலாந்தின் குக்,பீட்டர்சன் இரட்டை சதங்களைப் பெற்றுள்ளபோதும்,ஹசி போல consistency இல்லை என்பது முக்கியமானது.
ஹசி - இவரையா தூக்க இருந்தார்கள்??

ஆஸ்திரேலியா துடுப்பெடுத்தாடிய நேரம் ட்ரெம்லெட் சிறப்பாக ஆடுகளத்தின் வேகத்தையும்,தனது உயரத்தையும் பயன்படுத்தி இருந்தாலும், மிட்செல் ஜோன்சன் உக்கிரமாகப் பந்துவீசியபோது தான் மைதானம் சில பல ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் அதிவேக மைதானமாக இருந்த அந்த நாள் ஞாபகங்கள் வந்தன.

இதற்கு முதல் அடிலெய்டில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் மரண அடி வாங்கிய நேரம் ஒரு விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய ஒரே ஒருவரான ரயன் ஹரிசும் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்து 187 ஓட்டங்களுக்கு சுருண்டபோது இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு பலருக்கும் தெரிந்துபோனது.காரணம் இருநூறு ஓட்டங்களுக்குள் சுருண்ட பின்னர் இங்கிலாந்து ஒரு டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை வென்று இருபது வருடங்களுக்கு மேலாகிறது.

வரலாறுகள் படைக்கின்ற அணியாக ஸ்ட்ரோசின் இங்கிலாந்தைப் பலர் சொன்னாலும் பேர்த்தில் ஹசி,ஜோன்சன்,வொட்சன் ஆகியோரை மீறி வெல்லும் ஆற்றல் இங்கிலாந்துக்கு இருக்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியர்கள் எதிர்பார்த்த சில முக்கிய விஷயங்கள் மீண்டும் நடக்கவில்லை.
ஹியூஸ்,பொன்டிங்,கிளார்க்,ஸ்மித் ஆகிய நால்வருமே பெரியளவு ஓட்டங்கள் பெறவில்லை.

ஸ்மித்தின் 36 ஓட்டங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் ஆறாம் இலக்கத் 'துடுப்பாட்ட' வீரருக்கு இந்த ஓட்டங்கள் போதுமா என்பது கேள்விக்குறியே..
ஆனாலும் வெற்றி பெற்றதனால் ஹியூஸ்,ஸ்மித் இருவருக்குமே அடுத்த டெஸ்ட்டிலும் விளையாடும் அதிர்ஷ்ட வாய்ப்புக் கிடைத்துள்ளது.
கிளார்க்,பொன்டிங்குக்கும் கூட மீண்டும் ஒரு (இறுதி) வாய்ப்புத் தான்.

81 ஓட்ட முதல் இன்னிங்க்ஸ் முன்னிலை ஆஸ்திரேலிய அணிக்குத் தந்தது புதிய உற்சாகம் என நினைத்தால் மீண்டும் அதே காவலர்கள் தான் காப்பாற்றிக் கரை சேர்க்கவேண்டி இருந்தது.

வொட்சனின் 95 ஓட்டங்களும்(சதங்களை நழுவவிடும் தடுமாற்றத்தை வொட்சன் விரைவில் களைந்தால் உலகின் மிகச் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மிளிரலாம்), Mr.Cricketஇன் 116 ஓட்டங்களும் மிக மிகப் பெறுமதி வாய்ந்தவை என்பது இந்த ஆஷஸ் முடியும்போது தெரியவரும்.

முதல் இன்னிங்சில் இருநூறு ஓட்டங்களையே பெறத் தடுமாறிய இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா வழங்கிய 391 இலக்கு மிகப் பெரியது என்பது மட்டுமல்ல,எட்ட இயலாததும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.
ஆனால் அடிலெய்ட் போல,பிரிஸ்பேன் போல குக்கோ,டிறோட்டோ,பீட்டர்சன்னோ யாரோ ஒருவர் நின்று பிடித்தால் இலக்கை எட்டிவிடும் இங்கிலாந்து என்ற நப்பாசை யாராவது ஒரு இங்கிலாந்து ரசிகருக்கு வந்திருக்கலாம்.
Tremlett - இங்கிலாந்தின் ஒரே ஆறுதல் 

அதை விட ஆஷஸ் ஆரம்பிக்குமுன் இங்கிலாந்து அணி பேர்த் நகரில் பத்துநாட்கள் முகாமிட்டிருந்து தம்மைத் தயார்ப் படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஐந்து தடவை தொடர்ந்து இங்கே மண் கவ்வியிருந்த அவமானத்தை இம்முறையாவது மாற்ற ஆசைப்பட்ட இங்கிலாந்தின் கனவும் நிராசையாகிப் போனது.

பேர்த் மைதானத்தில் கடைசி 12 இன்னிங்சில் இங்கிலாந்து ஏழு தடவைகள் இருநூறைத் தாண்டவில்லை. இறுதியாக முந்நூறைத் தாண்டி 24 வருடங்கள் ஆகிறது. அதே ஆண்டில் தான் இங்கிலாந்து இறுதியாக ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஷசைத் தனதாக்கியிருன்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை உருட்டிய அதே ஹரிசும் ஜோன்சனும்இரண்டாவது இன்னின்க்சிலும் கரம்கோர்த்து உருட்டினார்கள்.
மீண்டும் இருவரும் சேர்த்து ஒன்பது விக்கெட்டுக்கள். இம்முறை ஹரிஸ் ஆறு+ஜோன்சன் மூன்று.
ரயன் ஹரிஸ் - புதிய புயல் 

இங்கிலாந்தின் 123 ஓட்டங்கள் என்பது இதற்குமுன் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்துக்கு அவமானம் மட்டுமல்ல. அடுத்த போட்டிகள் பற்றி நிறையவே சிந்திக்க வைக்கின்ற அபாய சங்கும் கூட.
இயன் பெல்லை வரிசையில் மேல் கொண்டுவருவது பற்றியும், கொலிங்வுட்டை அணியை விட்டுத் தூக்குவது பற்றியெல்லாம் இங்கிலாந்து யோசிக்க ஆரம்பித்துள்ளது.
நான் கடந்த பேர்த் முன்னோட்டப் பதிவில் சொன்னது போல

எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.

இப்போது இங்கிலாந்து யோசிக்கும் நேரம்...
ஆனால் ஆஸ்திரேலியா வென்ற உற்சாகத்தில் இருந்தாலும் இன்னும் அடுத்த வெற்றி பற்றி உறுதியாக இருக்க முடியாது.

துடுப்பாட்டம் கொஞ்சம் இன்னமும் தளம்புகிறது.இன்னும் ஓட்டங்கள் பெறக்கூடிய இன்னும் இரண்டுபேராவது வேண்டும்.. தனிய ஹசி,வொட்சன்,ஹடின் எல்லாப் போட்டிகளிலும் ஓட்டங்கள் பெற முடியுமா?

அடுத்த டெஸ்ட் போட்டி சுழல் பந்துவீச்சாளருக்கு சாதகம் தரக்கூடிய மெல்பேர்ன் ஆடுகளத்தில். இங்கிலாந்தின் ஸ்வானை ஒத்த ஒருவரும் ஆஸ்திரேலியாவில் இல்லை.
ஸ்மித் ?? பியர்?? இவர்களை விட என்னைக் கேட்டால் மைக்கேல் கிளார்க் பரவாயில்லை என்பேன்..

பியர் சிலவேளை தனது முதல் டெஸ்ட் போட்டியில் (மெல்பேர்னில் விளையாடக் கிடைத்தால்) கலக்கலாம்.. யார் கண்டார். காரணம் மெல்பேர்னில் தான் வளர்ந்தார். பல உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியும் இருக்கிறார்.அத்துடன் ஷேன் வோர்னின் பூமியல்லவா? ஷேன் வோர்னின் சிபாரிசும் இவர் தான்.
எனக்கு இந்த பியர் பற்றித் தெரியாது..

ஆனால் அண்மையில் மொக்கை போட்ட விஷயம்..
நல்ல காலம் பியர் துடுப்பாட்ட வீரராக இல்லை.
இருந்திருந்தால், பொன்டிங் அடித்து ஆடுகிறார் என்று சொல்வது போல, பியர் அடித்து ஆடுகிறார் என்று சொல்வது நல்லாவா இருக்கும்? ;) 

ஆஸ்திரேலியாவுக்காக பதினொருவர் கொண்ட அணியில் ஹசி,ஹடின்,வொட்சன்,ஹரிஸ்.ஜோன்சன்,ஹில்பென்ஹோஸ் ஆகிய அறுவர் மட்டும் சிறப்பாக விளையாடி எல்லா டெஸ்ட் போட்டிகளையும் வென்று விட முடியாது.
விரல் முறிந்தால் பரவாயில்லை தலைவா, மனசு முறியாமல் பார்த்துக்கோ 

எனவே இந்த ஆறு நாட்களில் எப்படி பொன்டிங் சுண்டுவிரல் காயத்திலிருந்து மீளப் போகிறார்(இவர் குணமடையாவிட்டால் கிளார்க்கின் தலைமையில் ஆஸ்திரேலியா Boxing Day Test விளையாடப் போகிறது என நினைத்தாலே ஸ்ட்ரோசின் கையில் ஆஷஸ் கிண்ணம் இருப்பது போன்ற காட்சி கண்ணில் விரிகிறது) ஆஸ்திரேலியா அணியைப் பேர்த்தில் வென்றது போல உறுதியான +நம்பிக்கையுடைய அணியாக மாற்றப் போகிறார்  என்ற வரலாறுக்காகக் காத்திருக்கிறேன்.

ஆனால் ஒரு முக்கிய விடயம்.. பேர்த்தில் இங்கிலாந்து தோற்ற விதம்,தோற்ற பின்னர் இங்கிலாந்து வீரர்களின் முகபாவங்களைப் பார்த்தபின்னர் ஒரு விஷயம் உணர முடிகிறது.
ஆஸ்திரேலியா போல தோல்வியிலிருந்து மீண்டு வரும் ஆற்றல் இங்கிலாந்துக்குக் குறைவு.
அதே போல ஒரு சில வீரர்களைத் தவிர ஐந்து டெஸ்ட் போட்டித் தொடர் ஒன்றில் நின்று பிடிக்கும் உடல் ஆற்றலும் குறைவு.
இவை இங்கிலாந்தின் கால்களை வாரிவிடலாம்.

மிட்செல் - மீண்டும் திரும்பிய மிடுக்கு  

அத்துடன் ஆஸ்திரேலியர்கள் தங்கள் ரகசிய ஆயுதமான ஆடுகளப் பேச்சு தாக்குதலான sledgingஐ பேர்த்தில் வலிந்து மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்..

இது மனோரீதியான தாக்கத்தை இங்கிலாந்துக்கு வழங்கலாம்.
ஆஸ்திரேலியாவின் ஜோன்சன்,சிடில்,வொட்சன்,ஹடின் போன்றோர் இதில் வல்லவர்கள்.இங்கிலாந்திலும் பீட்டர்சன்,ஸ்வான் போன்றோர் இருந்தாலும் முக்கியமான 'போக்கிரி' ப்ரோட் இதிலும் இல்லையே..

மொத்தத்தில் சுவாரஸ்யமான டெஸ்ட் Boxing Dayஅன்று காத்திருக்கிறது..

படங்கள் - நன்றி Cricinfo

பி.கு 1 - பொன்டிங்குக்கு இப்போது தலைமைப் பதவி ஆபத்தில்லைஎனினும் தற்செயலாக பொன்டிங் காயம் காரணமாக விளையாட முடியாது போனால் அடுத்த தலைமைக்கான என் தெரிவு... பிரட் ஹடின்.
கிளார்க் முதலில் மீண்டும் form க்கு வரட்டும்.

பி.கு 2 - நாளை (செவ்வாய்) இந்திய - தென்னாபிரிக்க டெஸ்ட் பற்றி சிறு அலசல் வரும் :)

Post a Comment

26Comments

Please Select Embedded Mode To show the Comment System.*