திருட்டு சாவி போட்டு பவன் இரு பாடல்களையும் சரியாக ஊகித்திருந்தார்.
மற்ற நண்பர்கள் ஒவ்வொரு பாடல்களை சரியாக ஊகித்திருந்தனர்.
நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல்
எந்திரன் பாடலுக்குப் பிறகு உடனே என்னை ஈர்த்த மதன் கார்க்கியின் வரிகள் இப்பாடலில்.
அந்தப்பாடலில் காதலின் வேகமும் மோகமும் சொன்னவர், இந்தப்பாடலில் தாகமும் தாபமும் அமைதியான காதலின் அழ்ந்த அர்த்தமும் சொல்கிறார்.
ஆனால் பாடலின் வரிகள் மிகையேறிய இலக்கியத் தரமாக மெருகேறி மின்னுகின்றன.
என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
மின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
இந்த வரிகள் போதும் அழகான கவிநடையில் பாடலின் இனிமையையும் மீறாமல் இசையின் இயல்பையும் மீறாமல் இலக்கியத்தின் சாரலையும் தெளிக்க முடியும் என்பதைத் தந்தையின் வழியில் தனயனும் காட்டுகிறார்.
உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
அழாகாக மனதில் ஓட்டும் வரிகள்.
ஹரிஷ் ராகவேந்திராவுக்கு மிக நீண்ட நாட்களின் பின்னர் அருமையான பாடல் ஒன்று கிடைத்துள்ளது.ஹரிஸ் ஜெயராஜின் முன்னாள் ஆஸ்தான பாடகர் மீண்டும் இணைந்தவுடன் கலக்கி இருக்கிறார்.மென்மையான குரலும் ,குரலில் தெரியும் காதலும்,அழகான தமிழும் உயிர்வரை பாடலைக் கொண்டு செல்கின்றன.
சின்மயியின் குரலும் சேர்கையில் பாடலின் உணர்வும் சில இடங்களும் ஏனோ, தளபதி திரைப்பட சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை ஞாபகப்படுத்துகின்றன.
ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!
என்று விழிகள் பேசும் காதலின் இசை+இனிமையை உரைக்கிறார் கவிஞர்.
இசையின் மெட்டு ஓசைக்குள் சந்தத்துடன் வருகையில் மேலும் இனிமை.
வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?
பாடலின் உள்ளே ஒரு உவமை சிற்பம் உருவாக்கப்பட்டு அழகாகக் குரல் வழியாக வருவது இந்த வரிகளில்.
மீண்டும் மீண்டும் கேட்டு வரிகளை சிலாகித்தேன்..
உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த .. நெஞ்சில்...
என்று வரும் இடங்களும் கவிதையும் அழகான பாடலாகும் எண்டு மீண்டும் மதன் கார்க்கி நிரூபிக்கும் இடம்.
அடுத்த சரண வரிகளில் உள்ளக் காதலில் இருந்து உடல் காதலுக்கு பாடல் வரிகள் நகர்கின்றன..
காமத்துப் பாலையும் கவிதைப் பாலூட்டி கார்க்கி ரசிக்க வைக்கிறார்.
வைரமுத்து வழியில் அவரது வாரிசும்..
கனதியான காமம் அளவுகடந்து வெளியே வழியாமல் ஆடை கட்டி அழகாக அனுப்புவது இவர்களின் குடும்பக் கலை போல் தெரிகிறது.
பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே
நிறைவாக அழகாக பெண்ணின் வேண்டுகோளை வெட்கத்துடனும் விரகத்துடனும் வினயமாக நயமாக முடித்து வைக்கிறார் கவிஞர்..
விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க
காதல் காரி என்ற இந்த சொல் பாவனையும் பெண்ணின் குரலில் அழகு.
ஒரு தடவை கேட்டாலே இதயத்தில் நிறைந்து இனிக்கும் பாடல் என்பது மட்டும் உறுதி.
வரிகளை முழுக்க சுவைத்துப் பின் பாடலையும் முழுமையாகக் கேட்டு ரசியுங்களேன்..(படம் இன்னும் வரவில்லை..பிரபுதேவா இந்தப் பாடல் காட்சியைப் படமாக்கும் விதம் குறித்து ஆவலாயிருக்கிறேன்)
படம்: எங்கேயும் காதல்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
வரிகள்: மதன் கார்க்கி
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ - என்
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
மின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
___________
ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!
வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?
உருகாதே உயிரே
விலகாதே மலரே!
உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த… (நெஞ்சில்…)
___________________
பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!
ஒரு வெள்ளைத் திரையாய் - உன்
உள்ளம் திறந்தாய்
சிறுகச் சிறுக
இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க (நெஞ்சில்…)
நீலவானம் - மன்மதன் அம்பு
கலைஞானிக்குள் இருந்த கவிஞன் காதலாக மாறி வெளிவந்துள்ள மன்மதன் அம்பு பாடல் நீல வானம் கேட்ட முதல் தரத்திலேயே மனதை அள்ளிவிட்டது.
பாடகரும் அவரே..
கவிதையைப் பாடலாக மாற்றி பாடகராக உயிரும் கொடுத்திருக்கிறார்.
வரிகளின் ஆழமும் அழுத்தமும் கூடவே பயணிக்கும் வயலினின் உருக்கமும் மனதை அள்ளுகின்றன.
கமலின் அறிவுஜீவித்தனமான காதல் வரிகள் அழகாய் ஆரம்பிக்கின்றன..
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
பால்வெளிப் பாயில் என்பது அண்டவெளி தாண்டி காதல்(அதையும் தாண்டிப் புனிதமானது) பரவுவதைக் கவிஞர் கமல் உணர்த்துகிறார்.
கமலில் நான் ரசிக்கும் இன்னொரு விஷயம் தன வாழ்க்கையில் அவர் காட்டும் திறந்த தன்மை. இந்தப் பாடலின் சரணமும் அவ்வாறே..
ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
காதல் எனும் பெயர் சூட்டியே என்று சொல்லும் அழுத்தம் அழகு.. (புரிகிறதா?)
காதல் மன்னன் என்று சும்மாவா சொல்கிறார்கள்?
மன்மதன் அம்பு படப்பிடிப்பு படங்களில் கமலோடு காணப்படும் வெள்ளைக்காரப் பெண்ணுடனான காதல் பற்றியாக இந்தப் பாடல் இருக்கவேண்டும்.எதோ ஒரு காரணத்தால் (ஒன்றில் அந்தப் பெண் இறக்க அல்லது )பிரிய, பின் த்ரிஷாவோடு கமல் சேர்வதாக இருக்கலாம் என்ற நிலையில் அடுத்த வரிகள் எளிமையாக ஆனால் இயல்பாக அழகாக இருக்கின்றன.
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி
காதல் பற்றி சொல்லும் வரிகளில் இது மனதில் நிற்கக் கூடியது..
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி
வரிகளின் வளமும் கமலின் குரல் வளமும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் வழமையைத் தாண்டிய புதுமையான இசையும் இந்தப் பாடலை ஈர்க்க செய்கின்றன.
பாடகராகக் கமலை ரசித்த பாடல்களில் இதுவும் இப்போது சேர்ந்துள்ளது.
திரைப்படக் காட்சிக்காக நானும் வெயிட்டிங்..
படம்: மன்மதன் அம்பு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கமல்ஹாசன், பிரியா ஹிமேஷ்
வரிகள்: கமல்ஹாசன்
நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..
நீல வானம்
Blue Sky
நீயும் நானும்
You and I
ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்
கமல் மன்மதன் அம்பு இசை வெளியீட்டில் நேரடியாகப் பாடிய காட்சி...
இனி வரும் பதிவுகளின் மும்முரத்தில் பாடல்கள் பற்றித் தனியாகப் பதிவுகள் போட முடியும் என நான் நினைக்கவில்லை..
அதனால்...
* ஆடுகளம் - யாத்தே பாடல் மிகவும் பிடித்துள்ளது. சிநேகனின் வரிகளில் G.V.பிரகாஷ்குமார் இசையமைத்துப் பாடிக் கலக்கி இருக்கிறார்.
அதே படத்தில் SPBயும் மகன் S.P.சரணும் சேர்ந்து பாடியுள்ள ஹையையோவும் ரசனை.
* மன்மதன் அம்பு கமலின் கவிதையும், கமலின் நச் வரிகளுடன் வந்துள்ள தகிடுதத்தமும் ரசனைகளின் இரு பக்கங்கள்.
*காவலன் பாடல்கள் பரவாயில்லை ரகம்.
வித்யாசாகர் பெரிதாக மினக்கேடவில்லை எனத் தோன்றுகிறது.
ஐந்தில் மூன்றில் எங்கேயோ கேட்ட வாடை.
யுகபாரதியின் வரிகளில் யாரதுவும், சட சடவும் தான் எனக்கு மிகப் பிடித்தவை.
சட சடவில் கார்த்திக் அருமையாகப் பாடி இருக்கிறார். ஆனால் பாடலின் இசை அப்படியே 3 Idiots பாடலான Zoobi Zoobiயின் இசை.
வித்யாசாகர் மந்திரப் புன்னகையின் மந்திரம் எங்கே?
காவலன் படம் வழமையான விஜய் படமாக இருக்காது என்று வந்த பேச்சுக்கள் சரி போலவே தெரியுது.
* எங்கேயும் காதல் லோலிட்டாவும் பிடித்திருக்கிறது.
*மந்திரப் புன்னகையில் வித்யாசாகரின் இசையில் அறிவுமதியின் பாடல்களும் ரசித்தேன்.
சுதா ரகுநாதன் பாடிய - குறையொன்றும் பாடலின் வரிகளின் அழுத்தம் அருமை (அண்ணன் - கண்ணன் ஒப்பீடு தான் காரணமோ?)
சட்டு சடவென என்று தொடரும் பாடலின் வரிகள் மிகவே வித்தியாசம் ..
உ+ம் - இந்தக் காதலை நான் அடைய எத்தனை காமம் கடந்திருப்பேன்
* மேதையில் (ராமராஜனின் படம்) நிலவுக்குப் பிறந்தவள் இவளோ அழகான ஒரு பாடல்.
ஆனால் படத்தில் இந்தப் பாடல் கொடுமைப்படுத்தப்படும் எனும் போது கவலையாக உள்ளது.
* மைனா பாடல்கள் கையைப் புடியும்,நானும் நீயுமும் மனசில் ரீங்காரமிடக் கூடிய பாடல்கள்.