இலங்கையின் ஜனாதிபதி இரண்டாவது பதவிக்காலத்துக்காகப் பதவியேற்றதும் அவரது அறுபத்தைந்தாவது பிறந்தநாளும் தான் கடந்த வாரத்தின் சூடான செய்திகள்..
ஆசியாவிலேயே இப்படியொருவர் பதவியேற்றதில்லை (எந்த மன்னரும் கூட) என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
பிறந்தநாள் முதல் நாள்,பதவியேற்பு அடுத்த நாள். எதையுமே ப்ளான் பண்ணி பண்ண மாமாவை (மகிந்த மாமா தானே) அடிக்க உலகிலேயே ஆள் கிடையாது.
அடுத்த கட்டத் திட்டமிடலும் அப்படித் தானே?
ஆயுள்வரை அவர் பெயர்,அவர் தம் குடும்பப் பெயர் சொல்ல சட்டவாக்கமும் வந்தாச்சு,திட்டங்களும் பல போட்டாச்சு.
மக்களின் வரிப்பணம் லட்சக் கணக்கில் இந்தக் கோலாகலக் கொண்டாட்டங்களுக்கு கொட்டப்பட்டது என்றாலும் பெரும்பான்மையான பொதுமக்களுக்கு (தமிழரும் சேர்த்து) இதுபற்றி கவலை கிடையாது என்றே தோன்றுகிறது.
இதெல்லாம் இனி இப்படித்தான் என்று பழகிவிட்டது என்றும் சொல்லலாம்.. மறுபக்கம் ஒருபக்கம் ஆட்சியில் உறுதி,இன்னொருபக்கம் அபிவிருத்தியில் தீவிரம் என்று நினைக்கிறார்களோ?
தமிழர் பகுதிகளில் மீள்குடியேற்றம் மட்டும் கொஞ்சம் மந்தகதியில் என்றாலும்,வீதிகள் விருத்தியாவதும் ஏனைய வசதிகளும் ஒப்பீட்டளவில் ஏனைய ஆட்சிகளை விட மிக வேகமாக.
தங்கள் குடும்பங்களுக்கு என்ன பரம்பரைக்கே சேர்த்தாலும் பரவாயில்லை;தமக்கு அதில் ஒரு சில சதவீத அளவிலாவது ஏதாவது செய்து தந்தால் போதும் என்று திருப்திகாணும் மக்கள் அல்லவா..
மன்னராட்சியில் எல்லாம் சுபிட்சம்.
ஆனால் நடுநிலை நின்று பார்த்தல் நாடு ஐந்து ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டிருப்பது தெரிகிறது.. வீதிகள்,கட்டடங்கள்,முதலீடுகள்,புதிய வர்த்தக முயற்சிகளில்.. (யுத்தம் முடிவுற்றதும் முக்கிய காரணம்)
எம் மக்களுக்கும் எதிர்பார்க்கும் தீர்வைத் தந்தால் இன்னும் அமைதி காணலாம்..
நாளை புதிய அமைச்சரவை..
கிரிபத்தில்(பாற் சோறு) கின்னஸ் கண்ட மகாராஜா நாளை அமைச்சரவையை நீட்டி மேலும் சாதனை படைப்பார் என்று எதிர்பார்ப்புக்கள் உள்ளன.
மேலும் ஒரு தமிழர் பிரதி அமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
நமக்கெல்லாம் தெரிந்த முகம் தான்.
இதேவேளை பலரும் எதிர்பார்த்த ஒருவர் - இளவரசர் தனக்குப் பதவியேதும் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.
இளவரசராக இருக்கையில் இன்னொரு பதவி எதற்கு என நினைத்தாரோ?
இதற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 'சேர்ந்து செயற்பட விருப்பம்' என்று சாதகமான சேதியை மன்னரின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக அனுப்பியுள்ளது.
பார்க்கலாம்..
இனிமேல் எல்லாம் இப்படித்தான் ...
நேற்று இலங்கையின் தனியார் வானொலிகளில் ஒன்றான சக்தி FMஇன் பன்னிரெண்டாவது பிறந்த நாள்.
இலங்கையின் இரண்டாவது இருபத்துநான்கு மணி நேரத் தமிழ் ஒலிபரப்பு இது.
என் வானொலி வாழ்க்கையை ஆரம்பித்துவைத்த இடம்.
எழில்வேந்தன் அவர்களின் முகாமைத்துவத்தில் மூன்று அறிவிப்பாளர்களுடன் ஒக்டோபர் முதலாம் திகதி நாம் பரீட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்தோம்.
நேரடியாக ஒலித்த முதல் குரல் அடியேனது.அதில் இன்று வரை ஒரு பெருமை.
'சக்தி' எனப் பெயர் சூட்டி (உரிமையாளர் தமிழர் என்பதால் இந்தப் பெயரை அவரும் மிக விரும்பியிருந்தார்) எழில் அண்ணா மங்களகரமாக ஒலிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது அதே ஆண்டு நவம்பர் 20 .
அதன் பின் பல்வேறு அரசியல்,பொருளாதார ஆள் மாற்றங்களால் நான் இப்போது வெற்றியின் பணிப்பாளராக..
ஆரம்பித்துவைத்தவர்கள் உங்கள் பெயர்களை நேற்று நன்றிக்காகக் கூட சொல்லவில்லையே என்று ஒரு சில நேயர்கள் நேற்று ஆதங்கபட்டிருந்தார்கள்.
இதனால் எனக்கொன்றும் கவலையில்லை.
இதுந நன்றிகெட்டதனமும் அல்ல..
வானொலிகளுக்கிடையில் வர்த்தகப் போட்டி இருக்கையில் இன்னொரு போட்டி வானொலியின் பணிப்பாளரைத் தம் நேயர்களுக்கு ஞாபகப்படுத்த யார் தான் விரும்புவர்?
ஆனால் மிகப் பொருத்தமான,மகிழ்ச்சியான விடயம், நான் பயிற்றுவித்த,என் தம்பிபோன்ற, சூரியனில் நான் முகாமையாளராக இருந்தவேளை என்னுடன் பணியாற்றிய காண்டீபன் தான் இப்போது சக்தியின் பணிப்பாளர்.
அத்துடன் நேற்று சக்தியின் பிறந்தநாள் அன்று சக்தி வானொலி அறிவிப்பாளர் ஒருவரின் திருமணத்தில் அனேக தொலைகாட்சி அங்கத்தவர்களையும்,மாலை இடம்பெற்ற 'நீலாவணன் காவியங்கள்' நூல் வெளியீட்டில் சக்தியின் பிதாமகர் எழில் அண்ணாவையும், என்னுடன் சக்தியின் ஒலிபரப்பை முதல் நாளில் ஆரம்பித்த சகோதரி ஜானு-ஜானகியையும் சந்தித்தது.
உலகம் பன்னிரண்டு ஆண்டுகளில் எப்படியெல்லாம் சுற்றுகிறது....
சக்தி எனக்கு அறிமுகமும் களமும் தந்தது..
சூரியன் எனக்கு மேலும் அதிக நேயர்களைத் தந்தது. பதவியும் தந்தது.
வெற்றி இப்போது வெற்றிகளை மேலும் தருகிறது.. இன்னும் தரும்.
சக்திக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்..
இன்று மாலை நான்கு மணிக்கு கொழும்பு,பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் என் நண்பரான சித்தன்(உண்மைப் பெயர் இப்போதுவரை வேண்டாம் என்பது அவர் வேண்டுகோள்) தன ஆக்கங்களின் தொகுப்பான 'கிழித்துப் போடு' என்பதை வெளியிடுகிறார்.
வீரகேசரி வாரவளிஈட்டில் அவரது சித்தன் பதில்கள் அம்சம் பலரைக் கவர்ந்தது.
இலங்கையின் மதன் என்று நான் வேடிக்கையாகப் பாராட்டுவதுண்டு.
இதில் வேடிக்கை பலர் நான் தான் இந்த 'சித்தன்' என்று நினைத்துக்கொண்டிருபது..
கடந்த காதலர் தினத்துக்கு சித்தனின் பிரதியொன்றை நாம் 'வெற்றி'இல் வித்தியாசமான தயாரிப்பாகத் தந்ததுவும் ஒரு காரணம்.
வித்தியாசமான,ஆழமான சிந்தனையாளர்.
புதிய முயற்சிகள் என்று சிந்திக்கும் இவரது இன்றைய நூல் வெளியீடும் புதுமையோடு இருக்கும் என்று உறுதி சொல்லியுள்ளார்.
வர முடிந்தால் வாருங்களேன்..
இதோ சித்தனின் அழைப்பு..
'உங்கள் நாக்கின் நிறம் கருப்பா?' என்று இல் ஒரு நண்பர் எனக்கு கேள்வி அனுப்பியுள்ளார்..
டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிட நாடு இந்தியா நியூ சீலாந்திடம் தடுமாறுது..
தென் ஆபிரிக்காவை பாகிஸ்தான் சமநிலைப்படுத்துது..
மொக்கை அணியாக இருந்த மேற்கிந்தியத் தீவுகளோ இலங்கையையே மொத்துது..
இதெல்லாம் தான் காரணம் என்று அவர் கேள்வியில் புரிந்தது.....
அதான் நாக்பூரில் இந்தியா கலக்குதில்ல ;)
ஆனால் எதுக்கும் ஆஷஸ் தொடங்க முதலே நம்ம பிரியத்துக்குரிய ஆஸ்திரேலியா தடுமாறுவதால்..
இப்போதைக்கு என் கோஷம்...
Go England Go..
Ashes is for England..
யாரும் அன்றூ ஸ்ட்ரோசுக்கோ,அன்டி ப்ளவருக்கோ போட்டுக் குடுத்திடாதீங்கோ..
வாழ்க விக்கிரமாதித்தன்..