நான் மகான் அல்ல.. நானும் தான்..
September 03, 2010
18
கடந்தவாரம் திருமணம் முடித்த என் தம்பி திருமணம் முடித்த பின்னர் தேனிலவுக்கு செல்லமுதல்(இப்போது மாலைதீவில் தம்பதி) வெளிநாட்டிலிருந்து வந்த உறவினரோடு சேர்ந்து போகலாம் என்று தானே தெரிவு செய்த படம் தான் 'நான் மகான் அல்ல'.
யாருக்குத் தெரியும் இப்படிக் கத்தியும் ரத்தமும் கோரமுமாகப் படம் இருக்குமென்று..
ஆனால் இன்னொரு வேடிக்கையான ஒற்றுமை நானும் மனைவியும் திருமணம் முடித்தபிறகு பார்த்த முதல் திரைப்படம் 'பச்சைக்கிளி முத்துச் சரம்'.
இந்தியாவில் ஊட்டியில் ஒரு பாழடைந்த தோற்றமுள்ள திரையரங்கில்.எப்படி இருந்திருக்கும்?
சில படங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது அந்தப் படத்தில் இழைந்துள்ள முக்கியமான உணர்வு மனசு முழுக்க இருக்கும்..
நான் மகான் அல்ல பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு நான்கைந்து பேரையாவது இழுத்துப் போட்டு உழக்கி,கை கால்களை உடைத்துப் போடவேண்டும் போல இருந்தது.
எனக்கு மட்டும் அப்படியில்லை எனப் பின்னர் அறிந்தேன்.
ஆண்டாண்டு காலமாக தமிழ்த் திரையுலகம் கண்டுவந்த தந்தை கொலை-மகன் பழிவாங்கல் கதை..
வில்லு திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும்..
ஆனாலும் கொட்டாவி விட வைக்காமல் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் படமாக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
அவரது முதல் படமான வெண்ணிலா கபடிக் குழுவிலிருந்து ஒரேயடியாக ஒரு மசாலாவுக்கு பாய்ச்சல்.
பலரும் அரைத்த மாவாக இருந்தாலும் இயல்பிலிருந்து பெரிதாக மாறாமல் வேகமாகவும்,நேர்த்தியாகவும் படத்தைத் தந்திருப்பதே சிறப்பு.
வாழ்க்கையில் கவலையே இல்லாமல்,ஜாலியாக திரிந்துகொண்டிருக்கும் ஒருவன் தந்தை கொலை செய்யப்பட்ட பின் எப்படி மாறிப் போகிறான் என்பதை மிகைப்படுத்தாமல் சொல்லியுள்ளார்கள்.
கார்த்தி பையா படம் முடித்த பிறகு நேரே இங்கேயே வந்து குதித்தவராக இருக்கிறார்.அதே சிறு தாடி,கண்களிலும் உதடுகளிலும் கொப்பளிக்கும் குறும்பு.. நகைச்சுவைக்குத் தோதாகும் உடலசைவுகள்..
அந்த நேரத்தில் ரசிக்க வைத்தாலும் இப்போது நினைக்கையில் பையாவிலும் இப்படித் தானே கார்த்தியைப் பார்த்தோம் என்று மனம் கேட்கிறது.
ஆனாலும் ரசிக்க வைக்கிறார் என்பதை ஏற்றே ஆகவேண்டும்.
கொஞ்சம் முன்னேற்றம் நடிப்பில்..ஆக்ரோஷத்தில்..நகைச்சுவையில்..
சில காட்சிகளில் இவர் செய்யும் குறும்புகள்(காதலியின் தந்தையிடம் நேரே சென்று பெண் கேட்பது,ஹாப்பி நியூ இயர் சொல்லும் ஆரம்பக் காட்சி, செல்பேசி லொள்ளுகள்,அலுவலகக் குறும்புகள்) அந்தக் கால நவரச நாயகன் கார்த்திக்கை ஞாபகப்படுத்துகின்றன.
இடைவேளைக்கு முன் வரை கலகலப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.படமும் விரைந்து பறக்கிறது.
பாஸ்கர் சக்தியின் வசனங்களில் கூர்மையும்,எளிமையும்,இனிமையும்.
பல வசனங்கள் மனசில் ஒட்டி விடுகின்றன.
வாழ்க்கையில் எதையும் நேரே சொல்லி,எளிதாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கார்த்தியும்,ஜெயப்ரகாசும் சொல்லும் இடங்களில் வசனங்கள் டச்சிங்.
கார்த்தி - காஜல் அகர்வால் காதல் சுவை..
காஜலைத் தன் பின்னால் அலைய விட கார்த்தி செய்யும் அலம்பல்கள் ரசிக்கவைக்கின்றன.
காஜல் அகர்வாலின் ரசிகன் நான்.. முன்பிருந்தே..
அந்த அழகான விரிந்த,உருண்டையான கண்களில் காதலும், குறும்பும், அப்பாவித்தனமும், மகிழ்ச்சியும், பயமும் என்று மாறிமாறி வருவது அழகு.
கார்த்தியின் தந்தை ஜெயப்பிரகாஷ் கம்பீரமும் உருக்கமும் இயல்பும் கலந்த ஒரு கலவை.
மனதில் நிற்கும் ஒரு பாத்திரம்.
கார்த்தியின் நண்பராக வரும் சூரி,சின்னத்திரை புகழ் நீலிமா,ப்ரியா ஆகியோரும் குறிப்பிடத்தக்க பாத்திரங்கள்.
நண்பர்களாக இணைந்து கொலை செய்யும் அந்தப் பட்டாளம் மிரட்டல்.. எங்கிருந்து தேடிப் பிடித்தாரோ..
முகங்கள்,கண்களில் அப்படியொரு வெறியுடன் திரிகிறார்கள்.
அதுவும் அந்த சுருட்டை அடர் முடிக்கார இளைஞன்.. பயப்படுத்துகிறான்.
நல்ல எதிர்காலம் இருக்கிறது.
அவனின் மாமனாராக சூத்திரதாரியாக வரும் கஞ்சாக்காரன்க்காரன் போல தோற்ற முடைய வில்லனும் அபார தெரிவு.
இயக்குனர் பாத்திரத் தேர்வில் ஜெயிக்கிறார்.
அந்தப் பேட்டை தாதாவும் திரைப்படத்தில் புதுசு போல.. நல்லதொரு பாத்திரம்.
நான் மகான் அல்லாவின் இன்னொரு ஹீரோ - இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா..
படம் முழுக்க இவரது ராஜாங்கம் கொடி கட்டிப் பறக்குது.
ஏற்கெனவே இத் திரைப்படத்தின் இரு பாடல்கள் என் மனத்தைக் கொள்ளை கொண்டவை.. வாவ் நிலவப் புடிச்சு தரவா, இறகைப் போல..
இரண்டும் படமாக்கப்பட்ட விதத்தில் இன்னும் மனசில் ஒட்டிக் கொண்டுவிட்டன.
ஒளிப்பதிவாளர் பாடல்,காதல் காட்சிகளில் மனத்தைக் குளிர்விப்பதுபோல வன்முறைக் காட்சிகள்,இரண்டாம் பாதி துரத்தல்களில் வேறு கலர் டோன்களால் எங்களையும் கலவரப்படுத்தியிருக்கிறார்.
சண்டைக் காட்சிகள் அனல் பறக்கின்றன - அனல் அரசு அசத்தியுள்ளார்.
வெகு இயல்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கின்றன.
கார்த்தியின் உடல்வாகு நிச்சயமாக இந்த ஆஜானுபாகு தனித்துநின்று ஐந்தாறு பேரையாவது அடிப்பான் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.
கொஞ்சம் கோரமாகக் காட்டிய சில இடங்களும்,சில ஊகிக்கக் கூடிய திருப்பங்களும் சின்ன சின்ன ஓட்டைகள்..
பிற்பாதியில் போலீஸ் எந்த இடத்திலும் வராததும்,தாதாவும் கார்த்தியும் திடீரென நட்பாகும் காட்சியும் நம்பமுடியாத சில விஷயங்களாயினும் ரசிக்க வைத்தவை.
Climax சண்டைக் காட்சி மனதில் எங்களுக்கும் வெறி,வன்மம் தருவது படத்தோடு எங்களை ஒன்றிக்க செய்த இயக்குனரின் வெற்றி என்று தான் சொல்லவேண்டும்.
(எல்லோருக்கும் அப்படி உணர்வு வந்ததா?)
கடைசி சண்டைக் காட்சிகளின் பின் வளவளவென நீட்டி இழுக்காமல் சட்டென்று படத்தை முடித்ததும் இயக்குனரின் டச்சா?
ஏற்கெனவே அறிந்த முழு மசாலா என்றாலும் அதையும் ரசிக்கத்தக தந்தால் எல்லோரும் ரசிப்பார் என்பது 'நான் மகான் அல்ல' சொல்லும் பாடம்.
படம் பார்த்ததிலிருந்து கார்த்தி அந்த நான்கு பேரை அடித்துத் துவைத்த அதே வெறியுடன் யாரையாவது அடிக்கலாம்னு தேடிக் கொண்டே இருக்கிறேன்,. ம்ஹூம்.. யாருமே கிடைப்பதாக இல்லை..
நாம அடித்தாலும் வாங்கும் பொறுமையுடனும் திருப்பி அடிக்காத பொறுமையுடனும் யாராவது கிடைக்கணுமே.. ;)