அரோகரா அரோகரா - தேர்களின் தொல்லை

ARV Loshan
26
ஊர்களில் தேர்கள் எல்லாம் ஆலய வெளி வீதிகளில் ஓடும்.. அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சி.
கடவுள் பக்தி இல்லாதோருக்கும் கூட அந்த தேர்பவனிக் காட்சியின் அழகு மனதில் ரசனையைத் தரும்..


சின்ன வயதில் ஆலயத் தேர் உற்சவங்கள் எனக்கு உற்சாகம் தருவன. வழிபடப் போவதை விட வேடிக்கை பார்க்கப் போவதும்,அப்பாவை.அம்மாவை நச்சரித்து வாங்கும் விளையாட்டுப் பொருட்களுக்காகவும்..
அப்பா எங்களைத் தவறாமல் அழைத்து செல்லும் சில தேர் உற்சவங்கள், யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் தேர், மருதடி விநாயகர் தேர், இணுவில் ஆலயங்கள் மூன்றின் தேர்கள்(சிவகாமி அம்மன்,கந்தசுவாமி,மடத்துவாசல் பிள்ளையார்).


அப்போது கொஞ்சமாவாது பக்தி இருந்ததால் கும்பிடுவதற்காகவும் போவதுண்டு. ஆனால் அத்தனை சனக் கூட்டத்தின் மத்தியில் பக்திமயமாக ரத உற்சவங்களை நான் எப்போதுமே பார்த்ததில்லை..ரதத்தின் அழகை,வடம் பிடித்த அழகை,அரோகராக் கோஷங்களின் தொனியையும்,தேர்ச் சக்கரங்களுக்கு முட்டுக் கொடுத்து அழகாய்த் திருப்பும் அழகையும் ரசிப்பதுண்டு.


கொஞ்சம் வளர்ந்து கொழும்பு வந்தபிறகு கொழும்பு ஆலயங்களின் தேர்களுக்கு அப்பா,அம்மா அழைக்கும் போது எப்படியாவது எஸ்கேப்பாகக் காரணங்கள் கண்டுபிடித்து நானும்,தம்பிமாரும் தப்பிவிடுவதுண்டு.


அருகிலேயே இருந்த மயூரா அம்மன் தேருக்கு மட்டும் ஒன்றோ இரண்டு தடவை போன ஞாபகம்.
யாழ்ப்பாணத்தில் ஆலயத்தின் அகன்ற வீதிகளில் வலம் வந்த பிரம்மாண்ட தேர்களைப் பார்த்த எமக்கு நகர வீதிகளில் போக்குவரத்து பஸ்கள்,கார்களுக்கிடையில் இயந்திரமயமாக நகரும் இந்த சிறு தேர்கள் பிடிக்கவில்லை.


கொஞ்சம் வயசும் மனசும் பக்குவப்பட தேர் உற்சவங்கள் என்றாலே மனதில் ஒருவித வெறுப்பும் வேறு..
பின்னே ..
வீதிப் போக்குவரத்துக்களை நிறுத்தி,நேர விரயத்தை ஏற்படுத்தி.. தேவையற்ற மேலதிக செலவுகள் என்று பார்க்கும்போதே இது தேவை தானா என்று மனதில் சலிப்பும் எரிச்சலும் ஏற்படும்..


இது தனியே இந்துக் கோயில்களின் தேர் உற்சவங்களுக்கு மட்டுமல்ல.. விகாரைகளின் பெரஹெராக்கள்,கிறிஸ்தவ ஊர்வலங்களுக்கும் தான்..


அண்மையில் நடந்த ஆடிவேல் விழா ரதபவனி,கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி தேர்,இன்று வெள்ளவத்தைப் பகுதியைத் திணறடித்த மயூராபதி அம்மன் தேர் என்று இவற்றைப் பார்த்த பிறகு மனதிலே தோன்றிய சில விஷயங்கள் தான் இவை..


பகல் நேரங்களிலே,வேலை நேரங்களிலே வீதிகளை மணிக்கணக்காக மறித்து இத்தனை ஆடம்பர ஊர்வலங்கள் தேவையா?


கடவுள் இப்படிக் கேட்டாரா?


கண் முன்னே தெரியாத கடவுளுக்காக எத்தனை அப்பாவிகளின் நேரத்துடன் விளையாடுகிறீர்கள்?


அரசியல்வாதிகள்,பிரமுகர்கள் செல்வதற்காக பாதைகள் மூடப்படும் நேரம்(இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது) முணுமுணுத்து சபிக்கும் உங்களைப் போலத் தானே இந்த தேர்கள்,ஊர்வலங்கள் வீதியில் செல்கையிலும் மற்றவர்கள் வசைபாடுவார்கள்?


பகல் நேரங்களை விட்டு அதிகம் வாகனப்போக்குவரத்து இல்லாத இரவு நேரங்களில் இந்தத் தேர்களை உலாவரச் செய்யலாமே.. 
யாருக்கும் தொல்லையும் இல்லை.நிறைய பக்தர்களும் வருவார்களே..


கடவுள் தேர்த் திருவிழா தான் கேட்டிருந்தாலும் இந்த நேரம் தான் நடத்தவேண்டும் என்று கேட்கவில்லையே.. 
சுபநேரம் அப்பிடி இப்படி சொல்வோருக்கு- மலையகப் பகுதிகளின் பல இடங்களில் குளிரிலும் இரவுகளில் தேர்த் திருவிழாக்கள் நடக்கிறது.


தலைநகரில் கலாசார அடையாளம் காட்டுகிறோம் என்போருக்கு - இது மட்டுமல்ல.. இன்னும் பல வழிகள் இருக்கின்றன.. அவற்றிலே உங்கள் கலாசார வெளிப்பாடுகள்,பக்தி வெளிப்பாடுகளைக் காட்டுங்கள்.


அவசர வேலைகள்,கடமைகள்,ஏன் ஆபத்துக் கட்டங்களில் வைத்தியசாலை செல்வோரைத் தொல்லைப் படுத்தாதீர்கள்.


இன்று வெள்ளவத்தையில் மயூராபதி அம்மன் திருவிழாக்கோலம் பூண்டு வீதிவலம் வந்தபோது பாதைகள் திருப்பிவிடப்பட்டு,வழமையாக நான் பத்து நிமிடங்களில் கடக்கும் தூரத்தை அரை மணி நேரம் சென்றும் கடக்க முடியாமல் கடுப்புடன் காத்திருந்தவேளையில் அருகே என் போலவே நின்றிருந்த வாகனங்களில் இருந்தோர் திட்டிய திட்டுக்கள்(அதில் ஒரு வாகனத்தில் ஒரு வயோதிபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கிறார்கள் - நாங்கள் கொஞ்சப் பேர் பாதையை விலக்கி,வாகனங்களை ஒதுக்கி வழியேற்படுத்திக் கொடுத்தோம்) பக்தர்களுக்கு தான் என்றால் பக்தர்களைக் காத்து அருள் புரியும் அம்மனுக்கும் சாரும் தானே?


எல்லாம் பணம் செய்யும் வேலை.. வசூலுக்குத் தான் பகல் வேளை ,பிரதான வீதித் தேர் உற்சவம் என்றார் ஆலய சபையொன்றில் இருக்கும் நம்ம நண்பர் ஒருத்தர்.
சுவாமியைக் காட்டி வியாபாரிகள்,பெரிய வர்த்தகர்களிடம் காணிக்கை பெறும் முயற்சியாம் இது..
கடவுளே.. 


ஒரு பக்கம் போலி சாமியார்கள்,போலி பகவான்கள் சமயத்தின் பெயர்களை நாறடித்து இளையவர்களை சமயத்திலிருந்து தூர விரட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியான ஆடம்பரங்கள்,அலங்கார ஊர்வலங்கள் சாமானியர்களை சமயங்களின் மீதும் சாமிகள் மீதும் இன்னும் தூரப்படுத்தும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.




நாளுக்கொரு புத்தர் சிலைகள் ஒவ்வொரு மூலையில் முளைப்பது போலவே, சின்ன சின்ன சிலைகள் வைத்துள்ள கோவில்கள் எல்லாம் அனுசரனையாளர்களோடு பெரிசாகிக் கொண்டிருக்கின்றன.
நாளை ஒரே நாளில் ஐந்து கோவில்களின் தேர்கள் ஓடலாம்..
மக்கள் எப்பாடு பட்டால் என்ன?


இதைத் தட்டிக் கொண்டிருக்க விமான நிலையம் சென்று கொண்டிருக்கும் என் நண்பர் குகன் அனுப்பிய sms "விமான நிலையம் செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல்"


என்ன காரணம் என்று கேட்டு அனுப்பினேன்..


"எதோ ஒரு புத்த விகாரையின் பெரஹெராவாம்"


அரோகரா... சாரி.. அனே தெய்யனே..

பி.கு - இந்தப் பதிவில் இரு படங்களை (மயூராபதி அம்மன் தேர்) பதிவர் மாயாவின் தளத்திலிருந்து பெற்றேன் 

Post a Comment

26Comments

Please Select Embedded Mode To show the Comment System.*