முரளி !!! I will miss you !

ARV Loshan
22
அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் பற்றியும், நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பற்றியும் ஒரு பதிவு இடலாமென்று யோசிக்கையில் தான் அந்தத் தகவல் வந்து மனசை உடைத்து விட்டது.

Muttiah Muralitharan to announce his retirement from Test Cricket after the 1st Test match against India to be played in Galle. - Nishantha Ranatunga

அலுவலக வேலைகளிலும் அலைச்சல்களாலும் அசதியோடு வாகனமோட்டிக் கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையே வெறுமையானது போல இருந்தது.

முரளி கடுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரிக்கு விளையாடியதிலிருந்து படிப்படியாக அவரது முன்னேற்றங்கள், சாதனைகள்,உலக சாதனைகள் என்று அத்தனையையும் விடாமல் விருப்பத்தோடு தொடர்ந்து கொண்டிருப்பவன் நான்.
91 இல் பாடசாலைப் பருவகாலத்தில் பந்துவீச்சு சாதனை படைத்துப் பரிசு வாங்கியபோது...
அப்போதே இவரின் ரசிகன் நான்.. என் அப்பா என்னை அழைத்து சென்று முரளியை அறிமுகப்படுத்தி வைத்தார்.


உடனடியாக வாகனமோடிக் கொண்டே தெரிந்த (கிரிக்கெட் பற்றி,முரளி பற்றி, இந்த முடிவு பற்றி) பிரபலங்கள்,ஊடகவியலாளர்கள்,கிரிக்கெட் சபை நண்பர்கள் ஆகியோரிடம் கேட்டால் சிலர் அப்படியா என்றார்கள்.. சிலர் ஆமாம் என்று கவலைப் பட்டார்கள். சிலர் உறுதிப் படுத்தினார்கள்.

இது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் இருந்து வந்த தகவல்.
இன்னும் முரளி நேரடியாக எதுவும் அறிவிக்கவில்லையாம் என்பது ஆறுதல்.
இந்த செய்தி பொய்யாகிவிடக் கூடாதா என்று ஒரு நப்பாசை.

என்றோ ஒருநாள் ஓய்வு பெறுவார் எனத் தெரியும்.. ஆனால் அந்த நாள் இப்படி சீக்கிரம் வருகிறதே என்பது மனதைப் பிசைகிறது.

80,90களில் இருந்து எனக்கு நான் பார்த்து ரசித்து வந்த ஒவ்வொரு கிரிக்கெட் நாயகர்களாக ஓய்வுபெறும் போதும் கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்கிறது.

முதலில் வெங்க்சர்க்கார்,அலன் போர்டர், மகாநாம,ஸ்டீவ் வோ,டீ சில்வா, ஷேன் வோர்ன், ஹெய்டன், கில்க்ரிஸ்ட், ஜோண்டி ரோட்ஸ், வசீம் அக்ரம்..

இதன் பின் இப்போதைய மூவர் இல்லாமல் கிரிக்கெட்டை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது..

முரளி,சச்சின், பொன்டிங்...

இவர்கள் மூவரும் விளையாடாத ஆட்ட வகையான Twenty 20 போட்டிகள் பிடிக்காமல் போனதற்கும் இதுவே காரணமோ?

இப்படி நான் சிறு வயதில்,பின்னர் பதின்ம வயதுகளில்,அதன் பின்னர் நான் வளர வளர என்னோடு வளர்ந்த இந்த நட்சத்திரங்கள் கிரிக்கெட் உலகிலிருந்து விலக விலகத் தான் எனக்கும் வயது போவதை உணர்கிறேன்.

முரளி ஓய்வு பெறுவதை அறிவித்திருக்கும் நேரம் மிகச் சரியானதே..

அணியை விட்டு நீ வேண்டாம்..நீ எமக்கு ஒரு சுமை என்று துரத்துவதை விட,அல்லது வேண்டா வெறுப்பாக அணியில் வைத்திருப்பதை விட உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வை அறிவிப்பதே உச்ச,உயரிய நட்சத்திரங்களின் இயல்பு,பெருந்தன்மை.

நான் ரசித்த பெரும்பாலான வீரர்கள் அவ்வாறே நடந்திருக்கிறார்கள்.
(நானும் நான் மிக நேசிக்கும்,ரசிக்கும் இந்த வானொலித் துறையிலிருந்து அவ்வாறே விலக விரும்புகிறேன்.. ஆனால் இப்போதைக்கு இல்லை )

நீ போகாதே,.. நீ தேவை என்று மற்றவர்கள்,ரசிகர்கள்,சக வீரர்கள் எங்களை MISS பண்ணும் வகையிலேயே அந்த ஓய்வு அமைவதே சாதனையாளர்களுக்கு அழகு.

முரளி ஒரு உண்மையான அணி வீரர்.. உண்மையான சாதனையாளர்..

முரளிதரன் இப்போது அனேக பந்துவீச்சு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

டெஸ்டிலும் ஒருநாள் போட்டிகளிலும் அவர் கைப்பற்றிய விக்கெட்டுக்களை இன்னொருவர் முந்துவது எப்போதுமே நடக்காமல் போகலாம்..

தானாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத ஒரு நல்ல மனிதர்.

800 விக்கெட்டுக்களை அடைய இன்னும் எட்டு விக்கெட்டுகள் தேவைப்படும் நேரத்தில் தான் இந்திய அணியுடன் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

அந்தப் போட்டியில் முரளி தேவையான எட்டு விக்கெட்டுக்களை எடுத்து சாதனை நாயகனாக விடைபெறுவாரா என்பதே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வி.
Murali has taken 792 wickets in 132 Tests and 515 wickets in 337 ODIs. 


ஆனால் உலகக் கிண்ணப் போட்டிகளில் முரளி விளையாடுவார் என்பதே பிந்திய தகவல். இது ஒரு ஆறுதல்..

முரளி தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்பட்ட தகவல்களின் படி ஓய்வின் பின்னர் இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கோண கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டார் என்றும் அதன் பின் உலகக் கிண்ணம் வரை விரும்பிய போட்டிகளில் விளையாட தேர்வாளர்கள் இடமளித்துள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.

விளம்பரங்கள்,கோடிக் கணக்கில் குவியும் பணம் என்பவற்றுக்காக அணியில் இளையவரின் இடத்தைத் தாமே எடுத்து துண்டு விரித்து அடம் பிடித்து இருந்து நாட்டாமை பண்ணும் பல முதிய முன்னாள் சாதனையாளர்களை விட முரளி பல்லாயிரம் மடங்கு மேலே..

அணித் தலைவர் சங்கக்காரவும் தேர்வாளர் குழுவின் தலைவர் அரவிந்தவும் முழுத் தொடரும் விளையாடிய பின் ஓய்வு பெறுமாறு கேட்டபோதும் தன்னால் நூறு சதவீத பலத்துடன் தொடர் முழுவதும் பந்துவீச முடியுமோ என்று சந்தேகிப்பதாகக் குறிப்பிட்டு முதல் டெஸ்ட் போட்டியின் இறுதியில் விடைபெறுவதாக சொல்லியுள்ள முரளியின் ரசிகன் என்பது பெருமையாக உள்ளது.

அவர் எப்போதும் ஒரு கனவானாகவே இருந்துள்ளார்.

முன்பு தான் சுயநலவாதியாக தனது இடத்தை அணியில் நீண்ட காலம் வைத்திருக்கப் போவதில்லை என்று சொன்னது போல "எப்போது போகப் போகிறாய்' என்று யாரும் கேட்க முதலே விலகுவதாக அறிவித்துள்ளார்..

முரளியை டெஸ்டில் நான் ரசிப்பது போல வேறெந்த வகையிலும் அதிகமாக ரசிப்பதில்லை..

We will miss you Murali..
Specially I will miss you a lot..
மீண்டும் இப்படி இளமை திரும்பாதா? எனக்கும் முரளிக்கும்.. 

இன்று இந்த செய்தியால் Mood போச்சு..
உலகக் கிண்ண எதிர்வு கூறல் பதிவு Cancelled..

நெதர்லாந்து வெல்லும்.. வெல்லவேண்டும்,..

கானாவைக் கைகளால் தோற்கடித்து அரையிறுதி வந்த உருகுவே மண் கவ்வ வேண்டும்..



Post a Comment

22Comments

Please Select Embedded Mode To show the Comment System.*