வெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...

ARV Loshan
21
(வெள்ளி) அதிகாலை வெற்றி FM மற்றும் இதர இரு வானொலிகள்,இரு தொலைக்காட்சிகள் அடங்கியுள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீதான காடையர் தாக்குதலின் மேலதிக விபரங்களை,புகைப்படங்கள்,காணொளிகளுடனும் இன்னும் வானொலி செய்திகள் வாயிலாகவும் அறிந்திருப்பீர்கள்.


தமிழ் மிர்ரர் தந்த செய்தி+காணொளி 
http://www.tamilmirror.lk/index.php?option=com_content&view=article&id=4864:2010-07-30-12-12-23&catid=46:2009-08-19-03-41-17&Itemid=110




பாதுகாப்பு உத்தியோகத்தரின் இரத்தத் துளிகள். 


எமது வானொலி ஓரளவுக்கு வழமைக்குத் திரும்பி சேவையை நடத்தி வருகின்ற போதும்,தீக்கிரைக்குள்ளான பகுதியினூடாக ஒலிபரப்பாகி வந்த சில பகுதிகளுக்கான சேவை செயலிழந்து விட்டது.


செய்திகள் அறவே இல்லை. இடையே இரு விசேட செய்தித் தொகுப்புக்களை (இத் தாக்குதல் சம்பந்தமாக)வழங்கி இருந்தோம்.


தொலைக்காட்சிகள் இரண்டுமே முற்றாக செயற்படமுடியாத நிலையிலிருந்து மீண்டு இப்போது வழமையான நிகழ்ச்சிகளுக்குத் திரும்பியிருக்கிறோம்.
தீயணைப்பு இயந்திரம்..


காயமுற்ற மூன்று ஊழியர்களில் உதவி ஆசிரியர் ரஜினிகாந்த் , செய்தியாளர் லெனின் ஆகியோர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியிருக்கிறார்கள்.


தலையில் பலமாகத் தாக்கப்பட்ட வாயில் பாதுகாவலர் இன்னமும் வைத்தியசாலையில்.


இன்று இலங்கையின் எல்லா மொழி நாளேடுகளிலும் நேற்றைய இந்தத் தாக்குதல்+தீக்கிரை சம்பவம் தான் தலைப்பு செய்தி.
ஒவ்வொருவர் ஒவ்வொரு வித ஊகங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
வரவேற்பறை 


ஆனால் நாங்கள் எம் அலுவலகம் சார்பாக இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.
முகாமைத்துவத்தில் உள்ளவன் என்ற அடிப்படையில் இந்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஊடகங்களுக்கு திங்கட்கிழமை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளோம்.


ஆனாலும் நேற்று எமது நேயர்களுக்கு வெற்றி வானொலி மூலமாக நாம் சொன்னது போல..


யார் இவர்கள்? ஏன் செய்தார்கள்?
நாம் பகையை எவ்விதமாகவும் தேடிக் கொண்டதுமில்லை.
பகைவர் யாரும் எமக்கு இல்லை.


இது தான் எங்கள் நிலை.


இது வரை மிரட்டல்கள் வந்ததில்லை.நேரடி நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டதில்லை.
சக ஊடகங்களுடனும் மிக நாகரிகமான அணுகுமுறைகளையே கடைக்கொண்டிருக்கிறோம்.

வெடிக்காமல் விழுந்து கிடந்த தோட்டா 

உயர் பாதுகாப்பு வலயம் என்பதனால் எம் நிறுவனம்,அருகிலுள்ள வங்கி,மொபிடேல் தலைமை அலுவலகம் ஆகியன எப்போதுமே அதிக பாதுகாப்பை நாடியதில்லை.


செய்திகளைக் குறி வைக்க என்ன காரணம்?


ஆரம்பம் முதலில் எம் செய்திகள் உண்மையான நடுநிலையின் பிரகாரம் இருந்தன.
இதற்காக, பொய்களைப் பரப்பக் கூடாது என நாம் சில செய்திகளை எடுக்காமலேயே விட்டிருக்கிறோம்.
மனிதாபிமான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்க நாம் தலைப்பட்டதும் அதனால் தான்.


அண்மையில் பெறப்பட்ட தரப்படுத்தலிலும் கடந்த காலத்தை விட அதிக முன்னேற்றம் நாம் கண்டுள்ளதும் எமது அனுசரணையாளர்களால் இத் தாக்குதலின் பின்னர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.





செய்தி அறைக்குத் தீ வைத்த பின்னர் வந்தோர் எமது வரவேற்பறையின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஆனால் வானொலிக் கலையகங்கள் உள்ள பகுதியின் வாயில் வரை வந்தும் அங்கே சிறு சேதங்களை ஏற்படுத்திய பின்னர் ஏனோ உள்ளே நுழையவில்லை.
தொலைக்காட்சிப் பகுதிக்குள் நுழையும் வழி அவர்களுக்கு தெரியவில்லை என ஊகிக்கிறேன்.


இந்த முகமூடி ஆயுததாரிகளுக்கு சில கட்டளைகள் இறுக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன்.
காரணம் அவர்கள் மூர்க்கத்தனமாகக் காயப்படுத்தினார்களே தவிர கொலை செய்ய எத்தனிக்கவில்லை.(செய்துபோட்டாலும் தடுத்திருக்க முடியாது)


கண்ணாடிகள் எல்லாவற்றையும் அடித்து தூளாக்கியவர்கள்,வரவேற்பறையிலிருந்த மீன் தொட்டியில் கை வைக்கவில்லை.


இந்த சேதங்கள் மிகப் பாரியவை..பொருளாதார அடிப்படையிலும் செய்தி சேகரிப்பிலும்.
பொருட்கள் காப்புறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.
செய்தி+தகவல் மூலங்களின் Back upsஉம் அங்கேயே தான் இருந்தது.


யார் எதிர்பார்த்தார் எமக்கு இப்படி நேரும் என்று?


எனக்கும் இன்னும் எம்மில் சிலருக்கும் இப்படியான அனுபவங்கள் அடிக்கடி நிகழ்ந்து பழகிப் போய்விட்டது.
ஆனால் அண்மையில் எமது வெற்றி குழுவில் இணைந்துகொண்ட புதிய அறிவிப்பாளர் சீலன் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
வந்தவர்கள் செய்த கோரங்களைக் கண்டதும்,பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்கப்பட்டதும் அவரை பயங்கரமாகப் பாதித்துள்ளன .
வேலையை விடும் அளவுக்குப் பயந்துள்ள அவரை நான் கொஞ்சம் தேற்றி 
"இதற்கு எல்லாம் பயந்தால் உலகில் எங்குமே ஊடகவியலாளனாகக் கடமையாற்ற முடியாது" என்று சொன்ன பின் இப்போது பையன் கொஞ்சம் அமைதியாக உள்ளார்.
பாவம்.


இப்படி எத்தனை பேர் இந்தத் துறைகளை விட்டு ஓடியுள்ளார்கள்.


ஆனால் ஒன்று நேற்று சம்பவம் நடந்து ஒரு மணிநேரத்துக்குள் நாம் அலுவலகம் அடைந்தபோது நானே எதிர்பாராமல் பெண்களும் உட்பட அதிகளவான எங்கள் ஊழியர்கள் கவலையுடனும்,அதிர்ச்சியுடனும் அங்கே நின்றிருந்தார்கள்.


சம்பவம் நடக்கும் நேரத்தில் அழைத்தும் தமிழ் சினிமா போலீசார் மாதிரியே நம் காவல்துறையினரும்,தீயணைப்புப் படைவீரரும் வந்து சேர்ந்தார்கள் என்பதும் முக்கியமான விஷயம்.


அதற்குள் இங்கேயிருந்த காயமடைந்த மூவரும் இன்னும் மூவரும் சளைக்காமல் தீயணைக்கப் போராடி இருந்தார்கள். அந்தக் கடமையுணர்ச்சிக்குப் பாராட்டுக்கள்.  


இன்று அலுவலகம் வரும்போது எரிந்த எச்ச சொச்சங்களை வெளியே எடுத்து அகற்றிக் கொண்டிருந்தார்கள்..
அழிப்பது இலகு.. ஆனால் மீண்டும் ஆக்குவது?

இப்போது வரை தங்கள் ஆறுதல் தகவல்களாலும்,அன்பாலும்,தாங்களும் இருக்கிறோம் என்று அன்பை வெளிக்காட்டுவதாலும் துணை வருகின்ற அத்தனை நண்பர்கள்,நேயர்கள்,சகல ஊடகவியலாளருக்கும் நன்றிகள்.

நாங்கள் மீண்டும் வருவோம்.
வழி மாறாது,வாக்கு மாறாது இதே நேர் நடுநிலை வழியில் தொடர்வோம்.


மேலேயுள்ள புகைப்படங்கள் யாவும் எனது செல்பேசியினால் எடுக்கப்பட்டவை.
இவற்றுள் பல உலகெங்கும் உள்ள இணையத்தளங்கள்,பத்திரிகைகளில் இன்றும் நேற்றும் வெளியாகியுள்ளன.


நம்ம உதவி முகாமையாளரும்,சம்பவ இடத்துக்கு எனக்கு முன்னதாக விரைந்தவருமான ஹிஷாம் தனது அனுபவத்தைப் படங்களுடன் தந்துள்ளார்.
ஹிஷாமின் பதிவு..

எரிந்தது வெற்றி FM இன் செய்திப்பிரிவு




மேலும் சில முக்கிய விஷயங்கள் -
இது ஒரு முக்கிய பலமுள்ள ஒருவருடைய நிறுவனம் என்றார்கள் ஆரம்பத்தில்.பின்னர் அவருக்கும் பங்குகள் உள்ளது என்றார்கள்.


என்னைக் கைது செய்தபோது முதலில் மூக்குடைந்தது அவர்களுக்கு.
நேற்றுடன் மீண்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
புரிந்துகொள்ளுங்கள்.


இந்த நிலை இனியும் எந்தவொரு ஊடகத்துக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.
வெற்றிக்கு நடந்ததே இறுதியாகட்டும்.

Post a Comment

21Comments

Please Select Embedded Mode To show the Comment System.*