ஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் போட்டி

ARV Loshan
4
இன்று உலகக் கிண்ணக் கால்பந்தின் இறுதிப் போட்டி..

உலகின் மிக முக்கியமான கிண்ணமொன்றை வென்றெடுக்கும் மிக முக்கியமான போட்டி..
உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான ரசிகர்கள் இன்று தொலைக்காட்சிகளை மொய்க்கப் போகிறார்கள்.

நெதெர்லாந்தா? ஸ்பெய்னா ?

இதுவே இப்போது எல்லோருடைய கேள்வியும்...

இதுவரை நடந்து முடிந்திருக்கும் 18 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் சம்பியனாகாத இரு அணிகள் இம்முறை இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.
எனவே புத்தம்புது உலகக் கிண்ண சாம்பியன் இன்றிரவு தெரிவுசெய்யப்பட இருக்கிறது.

இன்றைய இறுதிப் போட்டி, மோதவுள்ள இரு அணிகள் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை இன்றைய பதிவில் பின்னர் பகிர்ந்து கொள்ளலாம்..

அதற்கு முதல் நேற்று இரவு மூன்றாம் இடத்துக்காக நடந்த விறு விறு போட்டியைப் பற்றி சில சுருக் சுருக் விஷயங்கள்..

3rd place Play off

எந்தவொரு அணியும் விளையாட விரும்பாத, அந்தந்த அணிகளின் ரசிகர்கள் பார்க்க விரும்பாத போட்டியாக இருந்தாலும் போர்ட் எலிசபெத் மைதானம் நிறைந்த ரசிகர்கள்.

உற்சாகம் கொஞ்சமும் வடியாமல் தமது அணிகளை அவர்கள் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தது விளையாட்டின் வியக்கத்தகு நெகிழ்வான விஷயங்களில் ஒன்று.

இறுதிவரை நான் நுனி நாற்காலியில் இருந்து டென்சனுடன் ரசித்த போட்டியாக அமைந்தது.

முன்னணி வீரர்கள் இல்லாமலேயே களமிறங்கிய ஜெர்மனி தனது நான்காவது மூன்றாமிடத்தை வசப்படுத்தியது.
அடுத்தடுத்து இரு உலகக் கிண்ணங்களில் மூன்றாமிடத்தைப் பெற்ற ஒரே அணி ஜெர்மனி.

நேற்று மிரோஸ்லாவ் க்லோசே விளையாடாததால் உலகக் கிண்ண சாதனையொன்றை சமப்படுத்த அல்லது முறியடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
தொடர்ந்தும் பிரேசிலின் ரோனால்டோவே உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்கள் பெற்றவராக இருக்கப் போகிறார்.

லாம் விளையாடாததால் தலைமை தாங்கி இருந்தார் பஸ்டியன் ஷ்வைன்ச்டைகர்.
அவரின் முயற்சியில் முல்லர் முதலாவது கோலைப் பெற்றார்.
தோமஸ் முல்லர் பெற்ற இந்த கோலின் மூலம் இவ்வுலகக் கிண்ணத்தொடரில் அதிக கோல்கள் பெற்றிருந்த வியா, ஸ்னைடர் ஆகியோரின் எண்ணிக்கையை முல்லர் சமப்படுத்தியுள்ளார்.
பின்னர் உருகுவேயின் டீகோ போர்லனும் தனது அனாயாச கோல் ஒன்றின் மூலம் இவர்கள் மூவரோடும் இணைந்துள்ளார்.

எனினும் இன்று வியா,ஸ்னைடர் ஆகியோர் கோல்கள் எதுவும் பெறாவிடில் அதிக கோல்களைப் பெற்றவருக்கு வழங்கப்படும் தங்கப் பாதணி முல்லருக்கு வழங்கப்படும். காரணம் தனது அணி அதிக கோல்கள் பெறுவதற்கு இவர் வழங்கிய உதவிகள்(assists).

சளைக்காமல் போராடியிருந்த உருகுவே ஒரு கட்டத்தில் கவனி, போர்லன் ஆகியோரின் கோல்கள் மூலமாக முன்னிலை பெற்றிருந்தது.
எனினும் ஐந்து நிமிடங்களில் ஜென்சென் மூலமாக சமப்படுத்திக் கொண்டது ஜெர்மனி.

பினர் சாமி கேதிரா மூலமாக மூன்றாவது கொலைப் பெற்று வெற்றியை உறுதிப்படுத்தியது.

ஆனாலும் நெதெர்லாந்துக்கேதிராக இறுதிவரை போராடியது போலவே இந்தப் போட்டியிலும் கடைசி வினாடிவரை உருகுவே விட்டுக் கொடுக்காமல் விளையாடியது.
இறுதி அடியிலும் ஒரு போர்லன் அடித்த Free kick.அந்தப் பந்து Goal postஐத் தொட்டு வெளியேறியது.
அது கோலுக்குள் சென்றிருந்தால் மேலதிக நேரம், பெனால்டி என்று போட்டி நீடித்திருக்கும்.
உருகுவேக்கு அடுத்தடுத்த இரு போட்டிகளில் மனதை உடைக்கும் 3-2 என்ற தோல்வி.


ரசிகர்கள் சிலர் ஒக்டோபஸ் ஆரூடானந்தா போலையும் கலாய்த்திருந்தார்கள்.
படத்தைப் பார்க்க..


உருகுவேயின் பொற்காலம் என்று இந்தக் காலகட்டத்தை சொல்லலாம்.பயிற்றுவிப்பாளர் டபரேஸ் கொலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

அதேபோல ஜெர்மனியப் பயிற்றுவிப்பாளர் ஜோக்கிம் லோவேக்கும் இந்த மூன்றாமிடம் ஒரு உற்சாகத்தை நிச்சயம் தரும்.
இந்த இளைய அணிக்கு இன்னும் காலம் இருக்கிறது. இல் பிரேசிலில் உலகக் கிண்ணம் இடம்பெறும் வேளையில் இந்த ஜெர்மனி மிகப் பலம் பொருந்தியதாக மாறி இருக்கும்.

கடைசியாக உலகக் கிண்ணப் போட்டிகளில் நடந்த ஏழு மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் Play off போட்டிகளிலும் ஐரோப்பிய அணிகளே வெற்றியீட்டி இருக்கின்றன.

உருகுவே மூன்றாவது தடவையாக மூன்றாமிடத்துக்கான Play off போட்டிகளில் தோற்றுள்ளது.
இறுதி இரு தடவையும் ஜெர்மனியிடம்.

நேற்றைய போட்டி ஜெர்மனியின் 99வது உலகக் கிண்ணப் போட்டி. இதுவும் ஒரு சாதனை இதற்கு அடுத்தபடியாக கூடுதல் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள அணி பிரேசில்.

இறுதிப் போட்டியில் பங்குபற்ற முடியாமல் போன சோகம் மனதிலே இருந்தாலும் அதை மறந்து ஜேர்மனிய வீரர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடிய மகிழ்ச்சி எமது மனதுகளையும் நிறைத்தது.
இந்த இளைய,வேகம் கொண்ட அணிக்கு இன்னும் காலம் இருக்கிறது....


இன்றைய விறு விறு இறுதிப் போட்டி பற்றிய பதிவு அடுத்து வரும்..

Post a Comment

4Comments

Please Select Embedded Mode To show the Comment System.*