நட்சத்திரங்களின் மோதல்
ஸ்பெய்னா? நெதர்லாந்தா?
எனக்கு இவ்விரு அணிகளையுமே பிடிக்கும்..
ஆர்ஜென்டீனா தான் என்னுடைய முதலாவது விருப்பத்துக்குரிய அணி. அதற்குப் பிறகு ஆசிய அணிகள் முன்னேறவேண்டும் என்று ஆசைப்படுவேன்.
ஐரோப்பிய அணிகளில் துரதிர்ஷ்டசாலிகளாக, ஆனால் திறமையுள்ளதாக இருக்கும் அணிகளையும், நேர்த்தியாக விளையாடும் Fair Play அணிகளையும் பிடிக்கும்..
அப்படிப்பட்ட அணிகளான ஸ்பெய்ன்,போர்த்துக்கல்,ஸ்வீடன்,க்ரோஷியா, நெதர்லாந்து,நோர்வே ஆகிய அணிகள் பிடித்தவை.
ஏற்கெனவே போர்த்துக்கல் ஸ்பெய்னினாலேயே வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர், இப்போது நெதர்லாந்து.
இவ்விரண்டு அணிகளில் ஸ்பெய்ன் மீது விருப்பம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தாலும், நெதர்லாந்து தோற்கவேண்டும் என்று அப்படியொன்றும் ஆசையில்லை.
ஆனாலும் இன்று லோஷன் ஸ்பெய்ன் பக்கம் தான். :)
நெதர்லாந்து இன்னொரு முறை பார்த்துக் கொள்ளட்டும்.
இரு அணிகளுக்கும் வென்றால் இது முதல் உலகக் கிண்ணம்.
நெதர்லாந்து இதற்கு முன் இரு தடவை இறுதிப் போட்டிகளுக்கு வந்து முறையே ஜெர்மனி,ஆர்ஜென்டீனா ஆகியவற்றிடம் தோற்றிருந்தது.
ஸ்பெய்ன் இது தான் முதல் தடவை இறுதிப் போட்டிக்கு வருகிறது.
இரு ஐரோப்பிய அணிகள் மோதும் ஏழாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி இது.
இன்று யார் வென்றாலும் ஐரோப்பிய நாடு ஒன்று உலகக் கிண்ணம் வெல்லும் பத்தாவது தடவை.
யார் கால்பந்து ஜாம்பவான்கள் என்ற மோதலில் தென் அமெரிக்காவை முதல் தடவையாக ஐரோப்பா ஜெயிக்கிறது.
பிரேசில்,ஜெர்மனி,ஆர்ஜென்டீனா, இத்தாலி ஆகிய நான் பெரும் கால்பந்து அணிகள் இல்லாமல் நடைபெறவுள்ள முதலாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி இது தான்.
ஸ்பெய்னும் நெதர்லாந்தும் உலகக் கிண்ணப் போட்டியில் ஒன்றையொன்று சந்தித்ததில்லை என்பது ஆச்சரியமான விஷயமே.
ஐரோப்பாவின் இரு பெரும் கால்பந்து அணிகளாக இருந்தும் இவையிரண்டும் இதுவரை 9 சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளிலேயே மோதியுள்ளன.
தலா நான்கு வெற்றிகள்;ஒரு போட்டி சமநிலை.
இவை சந்தித்த ஒரே ஒரு இறுதிப் போட்டி 1920ஆம் ஆண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கப் போட்டி. அதில் ஸ்பெய்ன் வென்றது.
இறுதியாக இவ்விரு அணிகளும் சந்தித்த போது நெதர்லாந்தே வெற்றியீட்டியுள்ளது.
ஸ்பெய்ன் நெதர்லாந்தை வென்று 27 வருடங்கள் ஆகின்றன.
இன்றைய இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் அணி வெற்றியீட்டினால் இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஒரு போட்டியிலும் தோற்காத ஒரே அணியாக நியூ சீலாந்து மட்டுமே இருக்கும்.
ஸ்பெய்ன் அணி முதல் போட்டியில் ச்விட்சர்லாந்திடம் தோற்றிருந்தது.
முதல் போட்டியில் தோற்று பின் உலகக் கிண்ணம் வென்ற ஒரே அணியாகவும் ஸ்பெய்ன் சாதனை படைக்கும்.
நெதர்லாந்து இன்று வென்றால் ஒரு போட்டியிலும் தோற்காமல் உலகக் கிண்ணத்தின் அத்தனை போட்டியிலும் வெற்றியீட்டிய ஐந்தாவது அணி என்ற பெருமை கிடைக்கும். ஒரு போட்டியும் சமநிலை முடிவுகளும் இல்லாமல்.
மற்ற அணிகள் உருகுவே 1930, இத்தாலி 1938, பிரேசில் இரு தடவை 1970,2002.
முன்னதாக தெரிவுப் போட்டிகள் எல்லாவற்றிலும் வென்றதனால் 1970ஆம் ஆண்டு பிரேசில் அணி போல ஒரு போட்டியிலும் தோற்காமல் உலகக் கிண்ண சாம்பியன் ஆன பெருமையும் சேர்ந்தே கிட்டும்.
இதுவரை தான் பங்குபற்றிய இறுதி 25 போட்டிகளிலும் நெதர்லாந்து தோற்கவில்லை.
ஸ்பெய்னும் இவ்வாறு ஒரு அரிய சாதனையோடு வந்திறங்கி (தொடர்ந்து தோல்வியுறாத 48 போட்டிகள்) உலகக் கிண்ணத்தின் தன் முதல் போட்டியிலேயே ச்விட்சர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது.
நட்பு ஐரோப்பிய சாம்பியனாக இருந்து கொண்டே உலகக் கிண்ண அரையிறுதியை எட்டிய இரண்டாவது அணியாகிறது ஸ்பெய்ன். இதற்கு முன் மேற்கு ஜெர்மனி 1982 இல் இந்த சாதனை படைத்தது.
ஆனால் இறுதிப் போட்டியில் ஜெர்மனி இத்தாலியிடம் தோற்றுப் போனது.
இதுவரை உலகக் கிண்ணப் போட்டிகளில் சாம்பியனான அணிகளில் இத்தாலி 1938, இங்கிலாந்து 1966, பிரேசில் 1994 ஆகியவையே மிகக் குறைவான 11 கோல்களோடு கிண்ணம் வென்றிருப்பவை.
ஸ்பெய்ன் இதுவரை இம்முறை பெற்றுள்ள கோல்கள் 7 மட்டுமே. இன்று வெற்றி பெற்றாலும் நான்கு கோல்களையாவது பெறவேண்டும் இந்த எல்லையைத் தாண்ட.
இன்று நெதர்லாந்து வெற்றியீட்டினால் வெஸ்லி ஸ்னைடர் ஒரே ஆண்டில் உலகக் கிண்ணம் ,ஐரோப்பாக் கிண்ணம்(UEFA CUP) வென்ற அணியைச் சேர்ந்த பதினோராவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொள்வார்.
அதுபோல இத்தாலியின் முன்னாள் பயிற்றுவிபபாளர் மார்செலோ லிப்பிக்கு மட்டுமே உள்ள சாதனையை ஸ்பானியப் பயிற்றுவிப்பாளர் விசென்ட் டெல் போஸ்கேயும் அடைவார்.
இதுவரை உலகக் கிண்ணம் வெல்லாத அணிகளில் கூடுதல் உலகக் கிண்ணப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக ஸ்பெய்ன் இருக்கிறது.
அடுத்த இடத்தில் நெதர்லாந்து.
இன்றைய இறுதிப் போட்டியானது இதுவரை உலகக் கிண்ணம் வெல்லாத ஏனைய அணிகளுக்கும் உற்சாகம் தருவதாகவும் நாமும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தைத் தருவதாகவும் அமையும்.
மேலும் சில முக்கிய சுவாரஸ்ய விடயங்கள்...
இன்றிய இறுதிப் போட்டிக்கென்று அடிடாஸ்- Adidas நிறுவனம் ஜோபுலானி (Jobulani) என்ற பந்தைத் தயாரித்துள்ளது.
இந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான சர்ச்சைகளை ஏற்படுத்திய ஜபுலாணி பந்துகளையும் அடிடாஸ் நிறுவனமே தயாரித்தது.
அந்தப் பந்துகளை ஒத்த இந்தப் பந்தில் தங்க நிற வரிகள் காணப்படும்.
தங்க சுரங்கங்களுக்குப் பெயர் போன தங்க நகரம் (City of Gold) என்று அழைக்கப்படும் ஜோஹன்னேஸ்பேர்கில் இறுதிப் போட்டி இடம்பெறுவதாலேயே 'JO'BULANI என்று பெயர் சூட்டி அழகு பார்க்கிறார்கள்.
ஸ்பெய்ன் இன்று உலகக் கிண்ணத்தைத் தம் வசப்படுத்தினால் அந்த அணி வீரர்கள் எல்லோருக்கும் தலா ஐந்து லட்சம் ஸ்டேர்லிங் பவுண்டுகள் பரிசாக வழங்கப்படும் என ஸ்பெய்ன் அரசு அறிவித்துள்ளது.
2008 இல் ஐரோப்பியக் கிண்ணம் வென்றபோது தலா மூன்று லட்சம் பவுண்டுகள் பரிசாகக் கிடைத்தன.
ஆனால் மறுபக்கம் நெதர்லாந்து வென்றால் ஸ்பெய்ன் பெரும் தொகையில் பாதியையே டட்ச் அரசு வழங்குமாம். ;)
இப்போதே தென் ஆபிரிக்காவில் மட்டுமல்ல.ஸ்பெய்ன்,நெதர்லாந்து, ஏன் உலகமெங்குமே எதிர்பார்ப்பு,பரபரப்பு,உற்சாகம் என்று கலவை உணர்வுகள் கரை புரண்டு ஓட ஆரம்பித்துள்ளன.
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு திருவிழா....
இன்று நெதர்லாந்து அணியே உள்ளூர் அணியாக(Home team) வரிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் செம்மஞ்சள் சீருடையில் களமிறங்குவர். ஸ்பெய்ன் தங்கள் பிரபல La Rojas - சிவப்பு உடைக்குப் பதிலாக கருநீல சீருடையில் களமிறங்குவர் என எதிர்பார்க்கிறேன்.
தனித்தனியாக வீரர்களை இரு அணிகளிலும் எடுத்து இவர் இன்று இதை இப்படி செய்வார் என்று சொனால் எனக்கு நுரை தள்ளி விடும்..
இரு பக்கமும் வரிசை கட்டி நட்சத்திரங்கள் படையெடுத்து நின்றால் நான் என்ன செய்வேன்...
ஆனால் தொடர்ந்து பிரகாசிக்கும் ஒரு சிலர்..
ஸ்பெய்ன்
கோல் காப்பாளர்+தலைவர் கசியாஸ் - எதிரணிகளின் பந்துகள் துளைக்கமுடியாத இரும்பு அரண்
ரமோஸ்- பந்துகளை லாவகமாக எடுத்து முன் கல வீரர்களுக்கு வழங்குபவர்
புயோல் ௦- காப்பு அரணின் நம்பிக்கை நட்சத்திரம், அரை இறுதியின் நாயகன்
இனியெஸ்டா- சகலதுறை நட்சத்திரம்.மிகச் சிறந்த Play maker
ஷவி-Fre kick, Corner Kick மன்னர்
வியா - கோல் குவிப்பு மெசின்.காற்றாக எதிரணிப் பக்கம் புகுவதில் கில்லாடி.எங்கே கோல் அடிக்கலாம் என தேடிக் கொண்டே இருப்பவர். ஸ்பானிய மரடோனா என்கிறார்கள்.
இவர்களோடு மற்றும் இரு புயல் வேக முன்கள வீரர்கள் இருக்கிறார்கள் டொரெஸ் மற்றும் பாப்ரேகாஸ். ஆனால் இத்தனை நட்சத்திரங்கள் இருக்கையில் இவர்கள் இருவரும் வெளியே இருந்து வேடிக்கை பார்த்து இடைவேளையின் பின்னரே இறங்கி வருவர்.
இன்று இவர்களுக்கான நாளோ?
நெதர்லாந்து
வான் ப்ரோன்கொர்ச்ட் - அணியின் தலைவர்.உறுதியான மத்திய,பின் வரிசைத் தூண்
வான் போம்மேல் - முரட்டுத் தனமான இடை வரிசை வீரர்.அணிக்காக மோதலிலும் எடுபடும் ஒரு தியாகி !!
வான் பேர்சி- இந்த அணியின் மிகச் சிறந்த சகலதுறை வீரர்.
ரோப்பேன் - வயது ஏற ஏற இந்த சிங்கம் சிலிர்க்கிறது.வேகத்துடன் விவேகமும் இணைந்த அற்புத வீரர்.என் இல் ஒருவர்.
ஸ்னைடர் - இப்போதைய டட்ச் ஹீரோ.ஒவ்வொரு போட்டியியும் வென்று கொடுக்கும் கோல் குவிப்பாளர்.
வியாவுக்கும் இவருக்குமிடையிலான இன்றைய போட்டி தான் இறுதியைத் தீர்மானிக்கும்.
ஆனால் ஸ்பெய்னின் வாய்ப்புக்கான காரணம் என நான் நினைப்பது அவர்கள் எதிரணியின் வேகத்தை முடக்குவதற்கு வகுக்கும் வியூகமும், பின் கள,கோல் காப்பாளரின் உறுதியான காப்பும்.
நெதர்லாந்து ஜெர்மனியைப் போலவே ஏன் சிலவேளைகளில் ஜெர்மனியை விட வேகமானது. ப்ரேசிலுக்கேதிரான போட்டியில் இதை நாம் கண்டோம். பின் களக் காப்பும் பலமானது.
ஆனால் கோல் காப்பாளர்? கசியாஸ் அளவு நம்பகமானவராக நான் நினைக்கவில்லை.
இரு அணிகளின் பயிற்றுவிப்பாளர்கள் பற்றியும் நிச்சயம் குறிப்பிட வேண்டும்..
ஸ்பெய்னின் Vicente Del Bosque
நெதர்லாந்தின் Bert van Marwijk.
இவர்களின் வியூக வகுப்புக்கள் எதிரணிகள் எல்லாவற்றையும் தினறடித்திருக்கின்றன.வெகு அமைதியான இந்த சாணக்கியர்கள் வீரர்களைப் புகழ்பெற்ற வைத்துவிட்டு தாம் ஒதுங்கி மறைந்திருப்பதும் தனி அழகு தான்.
பார்க்கலாம்..
நட்சத்திரங்களின் மோதலில் ஜெயிப்பது யாரென்று?
இத்தனை நட்சத்திரங்கள் மோதும் போது நாலுகால்,எட்டுக் கால், ஐந்தறிவு விலங்குகளை வைத்து ஆரூடம் கேட்டு முடிவுகளை முடிவு பண்ணும் நம் அரைகுறைகளை ஜந்துக்களை என்ன செய்யலாம்?
இன்றும் வழமைபோல போட்டியை இறுதிவரை ரசிக்கப்போகிறேன்..
விறு விறுப்புக்கும் வேகத்துக்கும் கொஞ்சமும் குறைவில்லாமல் போட்டி நடக்கும் என்ற நம்பிக்கையில் இரு தரப்பு வீரர்கள்,ரசிகர்களுக்கும் All the best !!!
ஆனால் நம்ம சிவப்பு ரத்த ஸ்பெயினுக்கு கொஞ்சம் கூடுதலாக.. ;)
(அண்மைக்காலத்தில் விக்கிரமாதித்தன் வென்று வரும் தெம்பு தான்)