நினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்

ARV Loshan
8
நாளை உலகக் கிண்ண இறுதிப் போட்டி..




ஸ்பெய்ன் எதிர் நெதர்லாந்து..






இந்த அணிகளில் எது வென்றாலும் இதுவரை உலகக் கிண்ணம் வெல்லாத அணியொன்றுக்கு கிண்ணம் செல்லப் போகிறது.
மீண்டும் ஒரு ஐரோப்பிய அணி சாம்பியன் ஆகப்போகிறது.
இதுவரை உலகக் கிண்ணம் ஐரோப்பிய,தென் அமெரிக்க நாடுகளை விட வேறெங்கும் சென்றதில்லை.


கடந்த உலகக் கிண்ண வெற்றியாளர்களைத் தெரிந்து கொள்ள...

FIFA World Cup Winners in Pics




அரையிறுதிகளைப் பொறுத்தவரை விக்கிரமாதித்தனுக்கு வெற்றியே.. ;)
எனது எதிர்வு கூறல்கள் என்று சொல்வதைவிட எதிர்பார்த்த விருப்பங்கள் நடந்துள்ளன.


நெதர்லாந்து அணி தனது தொடர் வெற்றிகளை நீட்டித்திருப்பதோடு,கானாவுக்காக உருகுவேயைப் பழி வாங்கியுள்ளது.


உலகக் கிண்ணம் ஆரம்பிக்கு முன்னரே இம்முறை சாம்பியன் என்று அநேகரால் எதிர்வுகூறப்பட்ட ஸ்பெய்ன் அணி அதிரடி வெற்றிகளைப் பெற்றுவந்த ஜெர்மனி அணியை வீழ்த்தி தனது முதலாவது உலகக் கிண்ண இறுதிக்கு தெரிவாகியுள்ளது.




அரையிறுதிப் போட்டிகளை விட அதற்கு முதலே வெளியேறிய பிரேசில்,ஆர்ஜென்டீனா தந்த அதிர்ச்சிகளும், ஸ்பெய்னின் முதலாவது அரையிறுதிப் பிரவேசம் முதலாவது இறுதிப் பிரவேசமாக மாறுமா என்ற கேள்விகளும், ஜெர்மனியும் ஸ்பெய்னும் ஐரோப்பியக் கிண்ணத்தின்இறுதிப் போட்டியின் பின்னர் மீண்டும் சந்திப்பதும் இவை எல்லாவற்றுக்கும் மேலே ஜெர்மனியில் உள்ள ஒக்டோபஸ் சொன்னா கால்பந்து சாத்திரமும் தான் பெரும் பரபரப்பாக இருந்தது..


எனினும் போட்டிகள் இரண்டுமே ஒவ்வொரு விதத்தில் சுவாரஸ்யமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது..
முதலாவது அரையிறுதியில் அதிக கோல்கள் தந்த சுவாரஸ்யம்..
 Netherlands 3 - Uruguay 2 
இரண்டாவது அரையிறுதியில் ஒற்றை கோலாக இருந்தும் அந்த கோலைப் பெற நடந்த இழுபறிகளின் சுவாரஸ்யம்.. 


தங்கப் பாதணி வெற்றியாளர்கள் என்று கருதப்படும் நால்வருமே இந்த நான்கு அணிகளிலும் விளையாடி இருந்தது ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.
அணிகளின் வெற்றிகளில் இவர்கள் பெறும் கோல்களின் பங்களிப்பு நிச்சயம் அதிக பங்களிப்பைத் தரும். இது இன்று நடைபெறும் மூன்றாம் இடத்துக்கான போட்டி,ஞாயிறு இடம்பெறும் இறுதிப் போட்டியிலும் தான்.


ஜேர்மனி - ஸ்பெய்ன் போட்டி ஐரோப்பிய கிண்ணத்தின் இறுதிப் போட்டியை மீள நினைவுபடுத்தியது.
இரு அணிகளிலும் முக்கிய தலைகள் இருவர் இல்லை.
ஸ்பெய்னின் டோர்றேஸ் இவ்வுலகக் கிண்ணத்தின் முன்னைய போட்டிகளில் பிரகாசிக்காததன் காரணமாக அணியை விட்டுத் தூக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக அணிக்குள் வந்திருந்த பெட்ரோ தனது விறு விறு வேக ஆட்டம் மூலமாக போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதைப் பெற்றார் என்பது முக்கியமான விடயம்.


ஜெர்மனியின் இளம் வீரர் முல்லர் - இவர் தான் இம்முறை ஜெர்மனி அதிக கோள்களைப் பெற முக்கிய காரணியாக விளங்கியவர்- அடுத்தடுத்த போட்டிகளில் இரு மஞ்சள் அட்டைகள் வாங்கியதனால் இந்தப் போட்டியில் விளையாட முடியவில்லை.
இது ஜேர்மனிய அணியின் மந்தமான விளையாட்டுக்கும், கோல் அடிக்க முடியாமல் போகவும் காரணமாக அமைந்தது.


இந்தப் போட்டியில் முக்கியமாக அமைந்தவை வேகமும்,பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நுட்பமும் நிதானமும் தான்.


ஆஸ்திரேலியா,இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் ஆர்ஜென்டீனா என்ற அசைக்க முடியாத அசகாய அணிக்கெதிராகவும் அனாயசமாக நான்கு கோள்களை அடித்த ஜெர்மனி ஸ்பெய்னிடம் ஒரு கோலுக்கு தடுமாறியது விந்தை என்று நீங்கள் யோசித்தால் இம்முறை உலகக்கிண்ணத்தை தொடர்ந்து அவதானிக்கவில்லை என்று அர்த்தம்.


ஜெர்மனி அணி எவ்வாறு வேகத்தையும் முன் கள,மத்திய வரிசை வீரர்களை நம்பி இருந்ததோ (இதனால் தான் அதிக கோல்கள் குவிக்க முடிந்தது) ஸ்பெய்ன் தனது காப்பு யுக்தியையும், எதிரணியிடம் பந்தைக் கொடுக்காமல் தன வீரர்களின் கால்களுக்குள்ளேயே எந்நேரமும் பந்து இருப்பதைப் போல பந்தை அவதானமாகப் பரிமாறும் யுக்தியைக் கடைப்பிடித்து விளையாடி வந்துள்ளது.


இந்த அதிக அவதானத்தினாலேயே கோல் குவிப்பை விட வெற்றிகளை குறிவைத்தது ஸ்பெய்ன். கவனித்துப் பார்த்தால் இவ் உலகக் கிண்ணத்தில் முதலாவது தோல்வி, சிலியிடம் பெற்ற வெற்றி தவிர ஏனைய எல்லா வெற்றிகளையும் ஒற்றை கோல் போட்டிகளிலேயே (1-0)ஸ்பெய்ன் பெற்றுள்ளது.


 காலிறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டீன அணி ஜேர்மனிய அணியிடம் மரண அடி வாங்கிய பின்னர் லியோனல் மெஸ்ஸி மிக விரக்தியுடன் சொன்ன ஒரு விடயம் "ஜெர்மனியை வீழ்த்த ஒரு வியூகம் வைத்திருந்தோம் ஆனால் அவர்களின் வேகம் எங்களை எதுவும் செய்ய விடவில்லை"


ஆனால் ஸ்பெய்ன் தனது மிக உறுதியான தலைவர்+கோல் காப்பாளரான கசியாசின் நம்பிக்கையாலும் புயோல் என்ற உறுதியான பின் கள வீரராலும் துணிச்சலாக ஜெர்மானிய வீரர்களை முடக்கி வியா,பெட்ரோ போன்றோர் தமது attack ஆட்டத்தை ஆரம்பம் முதலே வெளிப்படுத்தி இருந்தனர்.


முதல் 25 நிமிடங்கள் ஆட்டம் ஸ்பெய்னின் வசம்.. 
இன்னொரு சுவாரஸ்யம் கிட்டத்தட்ட இடைவேளை வரை இரு தரப்பின் Play makersஆன இனியெஸ்டாவும் ச்ச்வைன்ச்டைகரும் அமைதி காத்தனர்.


இடைவேளைக்குப் பிறகு தான் இவர்களின் திரு விளையாடல் ஆரம்பமானது..

வியா ஒரு பக்கமும், ஜெர்மனியின் க்லோசே ஒரு பக்கமுமாக முயன்றாலும் கூட கோல்கள் தவறிக் கொண்டே இருந்தன..


ஆனால் எனக்கு மிக வேடிக்கையாக இருந்த ஒரு விடயம், இரு அணியினரும் ஆக்ரோஷமாக- அல்லது கால்பந்துப் பாஷையில் முரட்டுத் தனமாக விளையாடவில்லை.


எந்த ஒரு அட்டையும் இல்லை. No yellow cards.. No red cards..
ஆனாலும் விறு விறுப்புக்கு குறைவிருக்கவில்லை. 


இரண்டாம் பாதியிலும் ஸ்பெய்ன் தனது வியூகத்தை மாற்றாமலே வியா மூலமாக கோல் அடிக்க முயன்று கொண்டிருந்தது. ரமோஸ்,இனியெஸ்டா ஆகியோர் பந்தை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.


ஜெர்மனியின் வியூகம் வேகம் எடுக்கவில்லை. வழமையான பொடோல்ஸ்கி,ச்ச்வைன்ச்டைகர் ஆகியோரை காணவில்லை.எதிரணிகளை தடுமாறவைக்கும் ஜேர்மனிய அணியின் புகுந்து விளையாடும் திறன் சோர்ந்து போயிருந்தது.
க்லோசே மட்டும் தனியாளாக முயன்று கொண்டிருந்தார்.


தொடர் முயற்சிகளின் பலனாக ஸ்பெய்ன் இனியெஸ்டாவின் அபார பந்துப் பகிர்வொன்றின் மூலமாக புயோலின் தலையால் அடிக்கப்பட்ட பந்து(Header) 73வது நிமிடத்தில் அபாரமான கோல் ஒன்றைத் தந்தது.


ஜெர்மனி இந்த உலகக் கிண்ணத்திலேயே இரண்டாம் பாதியில் இதற்கு முன் எந்தவொரு கொலையும் கொடுத்ததில்லை. ஸ்பெய்ன் தான் இந்த சாதனையைக் கெடுத்தது. 


அதன் பின்னர் வழமையான ஸ்பெய்னின் கிடுக்குப்பிடி இறுகியது.
வழமையாகவே ஸ்பெய்ன் செய்வது போல, முதலில் தடுப்பாட்டம் மூலமாக இறுக்குவது- பின்னர் Attack- அதன் பின்னர் இறுக்குவது என்று தங்களது சம பல அணி மூலமாக திட்டமிட்டு இதுவரை வென்றுள்ளார்கள்.

அனால் ஒரு முக்கிய விஷயம்.. சில அணிகள் தமக்குத் தேவையான ஒரு கோலை சில நிமிடங்கள் மீதியாக இருக்கும்போது பெற்றால் நேரத்தை வீணாக்கும் முயற்சிகளில் இறங்கும்..ஆனால் ஸ்பெய்ன் ஒன்றைப் பெற்ற பிறகு அடுத்த கோலையும் பெற முயல்கிறது.
இது விளையாட்டில் ஒரு நேர்மை.


இவ்விரு அணிகளில் நன் ரசித்த ஒரு விடயம். இரண்டு அணிகளுமே தத்தம் எதிரணிகளுக்குரிய கௌரவத்தை வழங்கத் தவறவில்லை.
தாம் வென்றாலும் தலைசிறந்த அணியொன்றை வெல்கிறோம்.. தோற்றாலும் தரமான அணியோன்றிடமே தோற்கப்போகிறோம் என்பதை உணர்ந்தே விளையாடி இருந்தார்கள்.


அவர்கள் போட்டிக்கு முன் வழங்கிய பேட்டியிலும் இது தொனித்தது.
இரு அணிகளின் பயிற்றுவிப்பாளர்களும் போட்டி முடிந்த பின்னர் கை லாகு கொடுத்து கட்டி அணைத்துக் கொண்டது Sportsmanship & நாகரிகத்தின் வெளிப்பாடு.  




நன் ரசிக்கிற ஒரு பயிற்றுவிப்பாளர் ஸ்பெய்னின் விசென்ட் டெல் பொஸ்கே(Vicente Del Bosque ).
மற்ற பயிற்றுவிப்பாளர்கள் போல அதிக உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் அமைதியாக அவதானிக்கும் மனிதர்.
நுட்பங்களை விரல் நுனியில் வைத்து எதிரணிகளை வியப்பில் ஆழ்த்தக் கூடிய ஒருவர்.சர்ச்சைகளில் அகப்பட்டவரில்லை.
முன்பு ஸ்பெய்ன் அணிக்கு விளையாடியபோதும் இப்போது நட்சத்திரங்கள் பலரை ஒன்றாக்கி ஒரு வெற்றிகர அணியாக வழிநடத்தும்போதும் இயல்பு மாறாத,கட்டுப்பாடான ஒருவராக அதே நேரம் அமைதியான ஒருவராக இருக்கும் இவரை மிக மதிக்கிறேன்.


ஜெர்மன் பயிற்றுவிப்பாளர் லோவே இவர் இருக்கும் வரை ஸ்பெய்ன் அணியை அசைப்பதென்பது சிரமமே என்று சொன்ன ஒரே வசனம் போதும்.


சில சுவையான அம்சங்கள் - அதிகமான பந்துப் பரிமாற்றங்களை(passes) தமக்குள்ளே ஒரு உலகக் கிணத்திலே செய்த அணிகளுள் ஒன்றாக பிரேசில் (1994), நெதர்லாந்து(1998) ஆகிய அணிகளைத் தொடர்ந்து ஸ்பெய்ன் சாதனை படைத்துள்ளது. 
நூற்றுக் கணக்கில் அல்ல.. 3000. 
இது தான் ஸ்பெய்ன் இறுதி நோக்கிய பயணத்தின் முக்கிய வெற்றி.


இதுவரை உலகக் கிண்ண வரலாற்றிலே தாம் விளையாடிய முதல் போட்டியில் தோற்று இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஒரே அணி இத்தாலி - அமெரிக்காவில் இடம்பெற்ற உலகக் கிண்ணம்.
ஆனால் இறுதியில் பிரேசிலிடம் தோற்றது.


 இம்முறை ஸ்பெய்ன் தனது முதல் போட்டியில் ச்விட்சர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி கண்டபிறகு இறுதிவரை வந்துள்ளது. 
வெல்லுமா?
ஒக்டோபஸ் சாத்திரம் பலிக்குமா?




ஒக்டோபஸ் ஸ்பெய்ன் வெல்லும் எனக் கூறியது பொய்க்கும் என நம்பி ஏமாந்த ஜெர்மனி ரசிகர்கள்...

இந்த ஒக்டோபஸ் சாத்திரத்துக்கு தாங்கள் முடிவு கட்டுவதாக உருகுவேயின் பயிற்றுவிப்பாளர் டபரேஸ் கூறுகிறார்.
ஜேர்மனிய அணி மிகப் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் இறுதி வரை போராடவுள்ளதாக சொல்கிறார்.
கை புகழ் சுவாரெஸ் அணிக்குள் வருவது மேலும் பலம்.




ஆனால் பாவம் ஜெர்மனி தோல்விகளும் துரதிர்ஷ்டமும் துரத்துகின்றன.
இன்றைய போட்டிக்கு முன்னர் அவர்களது பயிற்றுவிப்பாளர் லோவே உட்பட பொடோல்ஸ்கி,அணித் தலைவர் லாம், இன்னும் சில வீரர்கள் வைரஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்களாம் என்று சற்று முந்திய தகவல் ஒன்று சொல்கிறது..


இவர்கள் இன்று மைதானத்துக்கு வருவதே சிரமமாம்.


பதிவதென்றால் இன்னும் பல விஷயம் இருக்கு.. பதிவின் நீளம் கூடிட்டே போகுதே,. 


ஆனால் நாளை ஸ்பெய்ன் வெல்லவேண்டும் என்று எப்படி நான் நினைக்கிறேனோ, அதே போல ஜெர்மனி இன்று வெல்லவேண்டும் என்று விரும்புகிறேன்.
அரையிறுதி வரை அவர்கள் ஆட்டத்தில் காட்டிய நேர்த்திக்கும் அபார வேகத்துக்கும் இந்த மூன்றாமிடமாவது பரிசாகட்டும்.




இன்றைய,நாளைய போட்டிகள் பற்றி சுருக்கமாக இன்னும் சில விஷயங்களை அடுத்த பதிவில் தருகிறேன்..

  

Post a Comment

8Comments

Please Select Embedded Mode To show the Comment System.*