FIFA உலகக் கிண்ணத்தில் இன்று அடுத்த இரு காலிறுதிப் போட்டிகள் இடம்பெறுகின்றன.
இன்று விளையாடவுள்ள நான்கு அணிகளில் மூன்றுக்கு இம்முறை உலக சம்பியனாகக் கூடிய சகல தகுதிகளும் வாய்ப்புக்களும் உடையவை.
பராகுவே அணி முதல் தடவையாகக் காலிறுதியில் நுழைந்துள்ளது.
ஜெர்மனி அணி ஒப்பீட்டளவில் குறைந்த அனுபவமும் இளவயது வீரர்களை அதிகளவிலும் கொண்ட அணி.
டீகோ மரடோனாவின் பயிற்றுவிப்பில் உத்வேகமாக வெற்றிகளைக் குவித்து வரும் ஆர்ஜென்டீனாவும், டெல் போஸ்க்கின் சிவப்பு ராணுவம் என்று சொல்லப்படும் ஸ்பெய்ன் அணியும் உலகக் கிண்ணம் வெல்ல மிக அதிக வாய்ப்புடைய மூன்று அணிகளுள் இரண்டு.-Hot Favourites
(மூன்றாவதான பிரேசிலைத் தான் நேற்று நெதர்லாந்து பொட்டலம் கட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டதே)
இந்தக் காலிறுதிப் போட்டிகள் நான்கிலும் ஒரு சுவாரஸ்யமான விடயம் இருந்தது.
நான்கிலுமே ஒவ்வொரு லத்தீன் அமெரிக்க நாடுகள் இருக்கின்றன.
இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அரையிறுதியில் நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் விளையாடக்கூடிய அறிய சந்தர்ப்பம் ஒன்று இருந்தது.
எனினும் தென் அமெரிக்க நாடுகளிலே மட்டுமல்லாமல் உலகிலேயே மிக அதிக கால்பந்து கிண்ணங்களை,உலகக் கிண்ணங்களை வென்றெடுத்த பிரேசில் நேற்று நெதர்லாந்திடம் தோற்று அதிர்ச்சியுடன் வெளியேறியது இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் மாபெரும் திருப்பம்.
நான் இந்த நெதர்லாந்து வெற்றியை நேற்றைய பதிவில் எதிர்வு கூறியிருந்தேன்.
உலகப் பிரபல விமர்சகர்கள் எல்லாம் பிரேசிலைக் கொண்டாடியபோதும் பிரேசிலிடம் இருந்த பலவீனப் புள்ளிகளை நான் அவதானித்தே இருந்தேன்.
காரணம் டுங்காவின் பயிற்சியில் அண்மைக்காலமாக வெற்றிகளைக் குவித்துவந்த பிரேசில் அணியிடம் எதிரணிகளைக் கணக்கெடுக்காத ஒருவித திமிர்த் தன்மையையும் அளவுகடந்த வெற்றி குறித்தான மதர்ப்பையும் நான் கண்டிருந்தேன்.
ரோனால்டீநோவையே அணியை விட்டுத் தூக்கிக் கடாசிவிட்டு தனக்கு மனம் ஒத்த வீரர்களை எடுக்கும் அளவுக்கு தான் தோன்றித்தனமான முடிவுகளை எடுத்தவர் டுங்கா.
ஆரம்பத்தில் ரோபின்ஹோ மூலம் ஒரு அபாரமான கோலை எடுத்து பிரேசில் முன்னிலை பெற்றிருந்தும் இடைவேளையின் பின்னர் நெதர்லாந்தின் முக்கோண வியூகத்தை உடைக்க முடியவில்லை. ரொப்பேன்,ஸ்னைடர்,வான் பேர்சி ஆகியோரின் வேகமும் நெதர்லாந்தின் பின்களத்தின் உறுதியும் பிரேசிலின் வழமையான விளைய்ய்ட்டுக் காட்ட முடியாமல் கட்டிப் போட்டுவிட்டது.
அதன் பின்னர் பிரேசில் வீரர்கள் காட்டியதெல்லாம் வன்முறையும் அசிங்கமுமான Tackle ஆட்டமே.
பயிற்றுவிப்பாளர் டுங்கா சொல்லியிருந்த Beautiful Gameஇற்குப் பதிலாக நாம் பார்த்தது Dirty Gameதான்.
ரோபின்ஹோ என்ற உலகத்தரமான வீரரும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நெதர்லாந்து அணியும் தனது முரட்டு விளையாட்டை நேற்று அவிழ்த்துவிட்டது.அதற்குப் பலனாக அரையிறுதியில் இரு முக்கிய வீரர்களை இழந்துள்ளது.
தன் தலையால் தனது அணிக்கெதிராகவே கொலைப் போட்ட பெலிப்பே முரட்டுத்தனமாக விளையாடி சிவப்பு அட்டையுடன் வெளியேற்றப்பட்டார்.
அதன் பின் ஸ்னைடர் அபார கோல் ஒன்றைப் பெற்று நெதர்லாந்துக்கு சரித்திரபூர்வ வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்.
1998ஆம் ஆண்டில் அரையிறுதியில் தோற்கடிக்கப்பட்டமைக்கு பழிதீர்த்தலாக நேற்றைய வெற்றி அமைந்துள்ளது.
டுங்கா உடனடியாகப் பதவி விலகி இருக்கிறார்.
விஜய் கில்லியில் சொன்ன பஞ்ச் டயலொக் தான் ஞாபகம் வந்தது..."கதகளி ஆடலாம்.. ப்ரேக் ஆடலாம்..டிஸ்கோ ஆடலாம்.. கபடி ஆடலாம்.. கால்பந்து கூட ஆடலாம்.. ஆனா ஆணவத்துல மட்டும் ஆடவே கூடாது"
கால்பந்தாட்டத்தில் நல்லா ஆடத்தான் வேண்டும்.. ஆனால் நல்லா ஆடுறோம்னு ஆணவத்தில் ஆடக் கூடாது..
நாலு வருஷம் இன்னும் காத்திருங்க மக்கா..
நள்ளிரவு இடம்பெற்ற அடுத்த போட்டி ஏராளமான கால்பந்து ரசிகர்களுக்கு மனவேதனையைத் தந்த போட்டியாக அமைந்தது.
ஆபிரிக்கக் கண்டமே தன் நம்பிக்கையைக் கொட்டிவைத்திருந்த கானா அணி அளவுகடந்த அந்த அழுத்தத்தால் மயிரிழையில் தன் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தது.
இடைவேளையின் முன்னர் கானா வசமிருந்த போட்டியைத் தன் வேக விளையாட்டின் மூலம் வசப்படுத்திய உருகுவே வழமையான போட்டிநேரம் கடந்து மேலதிக நேரத்துக்கு சென்றது.
இரு அணிகளுமே கோல்கள் பெறும் வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும் அரையிறுதி செல்வதற்கான கோல் கிடைக்கவேயில்லை.
இறுதி நிமிடமான 120வது நிமிடத்தில் தான் அந்த அசிங்கம் நடந்தது.
கானா வீரர்களால் உருகுவேயின் கோல் வலைக்குள் செலுத்தப்பட்ட பந்தை உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் தன் கைகளால் தட்டி விட்டார்.
நடுவரிடம் கானா வீரர்கள் முறையிட விதிகளின் பிரகாரம் சிவப்பு அட்டை காட்டப்பட்டு சுவாரெஸ் வெளியேற்றப்பட்டார்.
கானாவுக்கு பெனால்டி உதை வழங்கப்பட்டது.
அந்த பெனால்டியை சரியாக அடித்து அரையிறுதி செல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டார் அசமோவா கியான்.இந்த உலகக் கிண்ணத்தில் முன்னர் இரு பெனால்டிகளை கோலாக மாற்றியவர் மிக முக்கியமான நேரத்தில் சொதப்பிவிட்டார்.
அதன் பின்னர் நடந்த Penalty shoot outஇல் உருகுவே கவனம் சிதறவிடாமல் நான்கு கோல்களை அடித்து வெற்றிபெற இப்படியான பெரிய போட்டி அனுபவம் இல்லாத கானா இரு பெனால்டி உதைகளைத் தவறவிட்டு கனத்த மனதுகளுடனும்,கோடிக்கணக்கான ஆபிரிக்க மட்டுமல்லாத எம் போன்றவர்களின் கண்களிலும் கண்ணீருடனும் வெளியேறியுள்ளது.
எனது மனதிலே இன்னும் கோபத்துடன் உள்ள ஒரு கேள்வி..
சுவாரெஸ் கைகளால் தடுத்திராவிட்டால் அது கோல் தானே?
நிச்சயமான கோல் ஒன்றை அவ்வாறு தடுத்தால் தனியே சிவப்பு அட்டையும் பெனால்டி உதையும் கொடுத்தால் சரியாகி விடுமா?
அந்த உதையைத் தவற விட்டதனால் கானாவின் அரை இறுதிக் கனவுகள் சிதறிப் போயினவே.
நேற்றுடன் சுவாரெசின் விளையாட்டின் காரணமாக அவர் மீது வைத்திருந்த அபிமானம் எல்லாம் வெறுப்பாக மாறிவிட்டது.
இதற்குள் வேறு சுவாரெசை ஒரு ஹீரோ போல கொண்டாடுகிறார் உருகுவே பயிற்றுவிப்பாளர்.
இதெல்லாம் ஒரு வெற்றியா?
சரி சரி இதற்கெல்லாம் அரையிறுதியில் நெதர்லாந்திடம் வாங்கிக்கட்டும்போது தர்மம் கிட்டும்.
ஆனால் கானாவின் கோல் காப்பாளர் கிங்க்சனும்,உருகுவேயின் போர்லனும் காட்டிய திறமைகள் அபாரம்.
இன்று இடம்பெறும் இரு காலிறுதிப் போட்டிகள் பற்றிய பார்வையைத் தர நேரத்துடன் போட்டி போட்டும் முடியாமல் போய்விட்டது.
கிடைக்கும் இடைவெளியில் தொகுப்பைத் தருகிறேன்..
அதற்குள் ஜெர்மனி ஒரு கோலைப் பெற்றுள்ளது... என் அபிமான ஆர்ஜென்டீனா எங்கே போனது உங்கள் ஆவேசம்?
ஆரம்பியுங்கள் உங்கள் ஆட்டத்தை..