இன்று ஆடிப் பிறப்பாம்..
காலையிலிருந்து வீட்டில் மனைவி கொடுத்த ரோதனை பெரிய கொடுமை.
நேரத்துக்கு குளிக்கணுமாம்..மாமிசம் சாப்பிடக் கூடாதாம்.. கூழ் படைச்சிட்டு தான் அலுவலகம் போகணுமாம்..
ஐயோ சாமி.. தாங்க முடியல.
இறந்தவர்களுக்குப் படைப்பதும் இன்றைய நாளின் முக்கியமான ஒரு சடங்காம்.
ஆனால் நாங்கல்லாம் யாரு..
காலையிலேயே ஒரு Half boiled egg சாப்பிட்டிட்டு தான் அடுத்தவேலை.
கணினியில் பத்தரை வரை இருந்திட்டுத் தான் குளிக்கவே போனேன்.
எனக்கென்றால் ஆடிப் பிறப்பென்றால் கூழ் மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் மனைவியின் மனசை ஏன் நோகடிப்பான் என்று குளிச்சிட்டு அலுவலகம் வரமுதல் படைத்திட்டு வரலாம் என்று சொன்னேன்.
நமது மாமனார்(மனைவியின் தந்தையார்) முன்பே காலமானவர் என்பதால் அவருக்கும் சேர்த்தே படைக்கவேண்டும் என்று அவரது படத்தையும் பூஜையறையில் வைத்தே படையலிட்டோம்.
அதற்குள் இப்போது தனது மழலையில் நிறையவே பேசுகிற என் புத்திர சிகாமணி ஒரு நீயா நானாவே நடத்தி முடித்தான்..
அந்த உரையாடல்...
"அப்பா தாத்தா எங்கே?"
"அவர் இறந்திட்டாரடா"
"ஆஹ். என்னப்பா?"
"தாத்தா அப்புச்சாமிட்ட போயிட்டார்"
"எங்கேப்பா? கோயில்?"
"ம்ம்" - வேறென்ன சொல்வது?
"புறா கோயில்?" - அவன் தன் மழலையில் புறாக் கோயில் என்று சொல்வது பம்பலப்பிட்டியில் உள்ள வஜிராப் பிள்ளையார் கோயில்.அங்கே புறாக்கள் அதிகமாக இருப்பதால் எப்போதாவது கோயில் போகும் வேளையில் மனைவிக்காக கும்பிட்டுவிட்டு நாங்கள் மகனோடு சேர்ந்து புறாக்களுக்கு பொரி,அரிசி,சோளம் போடுவது வழக்கம்.
நல்லகாலம் மனைவி படையலுக்காக கூழோடு வந்ததால் அந்த பேட்டி முடிந்தது.
பொதுவாக வீட்டில் மகன் தன் இரண்டரை வயது மழலையில் எது கேட்டாலும் நாங்கள் முடியுமானவரை பதில் சொல்லி விளங்கப்படுத்துவது வழக்கம். சின்ன வயதிலேயே அவனைக் கேள்வி கேட்கவிடாமல் மடக்கி,அடக்கினால் அதுவே பிற்காலத்தில் அவர்களை அறிவு வளர்ச்சி குறைந்தவர்களாக மாற்றிவிடும்.
களைப்போடு வருகையில் தொல்லையாக இருந்தாலும் கூட இந்த ஒரு விடயத்தில் நான் மிகக் கவனம்.
இந்தப் படம் சும்மா கரண்டிக்காக .. இதை விட நல்லாவே சமைப்பா என் இல்லாள் ;)
கூழ் ஒரு பாத்திரத்தில் விட்டு அதற்குள் ஒரு கரண்டி வேறு.
"சாமி எடுத்துக் குடிப்பாரா?" என்று கேட்டேன்.
"ம்ம்.. அப்பாவும் தான்" என்றார் மனைவி.
"விவேக் ஒரு படத்தில் சொல்வார்.. ஞாபகம் இருக்கா? " என்றேன் குறும்பாக..
ஆடிக் கூழைப் பற்றி விவேக் என்ன சொன்னார் என்று யோசித்துக் கொண்டே மனைவி விளக்கேற்றினார்.என்னை ஊதுபத்தியைப் பற்றவைக்குமாறு கூறினார்.நெருப்பை ஏற்றி ஊதி அணைத்து ஊதுபத்தி ஸ்டாண்டில் வைக்க செல்கிற நேரம்,
"அந்த வாழைப்பழத்தில் குத்துங்கப்பா" என்றார்.
"அடி பாவி.. இதைப் பற்றியும் சொல்லியிருக்காரே விவேக்" என்று சொல்லிக் கொண்டே வாழைப்பழத்தில் குத்தினேன்.
அடுத்ததாக சாமிகளுக்கு தனியாக ஒரு கிண்ணத்தில் நீர்.மாமனாரின் படத்துக்கு முன்னால் தனியான ஒரு குவளையில் நீர். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.
வணங்கி முடித்து அறைக்கு வெளியே வந்தவுடன் அவசரமாகக் கதவை மூடினார் மனைவி.
ஏன் என்று பார்வையால் பார்க்க, படைத்த பின் அவர்கள் சாப்பிட இப்படித்தான் கதவை மூடிவிட வேண்டுமாம் என்று தங்கள் வீட்டில் முன்பு சொல்வார்களாம் என்றார்.
அதற்கு மேல் தாங்க முடியவில்லை.
பயங்கரமாக சிரித்துக் கொண்டே,அந்த விவேக் டயலொக்கை அவிழ்த்து விட்டேன் "ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது"
ஆனால் ஒன்று நண்பர்ஸ்..
கூழ் குடிக்கக் கிடைத்தது.(நாங்க எவ்வளவு தான் நக்கல் பண்ணாலும் நம்ம வயிற்றுக்கு வஞ்சனை செய்ய மாட்டா என் பதிவிரதை)
அலுவலகத்துக்கும் கொஞ்சம் கொண்டுவந்தேன்.
இரவு வீட்டுக்குப் போனவுடன் பூஜையறைக்குப் போய்ப் பார்க்கவேண்டும் சாமியும் மாமாவும் எவ்வளவு கூழ் குடிச்சு முடிச்சிருக்காங்கன்னு.. ;)
இந்தப் பதிவுடன் நேரடியாக சம்பந்தமில்லாமல் ஒரு கார்ட்டூன்..
நன்றி துக்ளக்..