தில்லாலங்கடி

ARV Loshan
19
வாழ்க்கையில் சும்மா வாழ்ந்தோம் போனோம் என்றில்லாமல் வாழும் நாட்களை முழு மனத்திருப்தியோடு வாழவேண்டும் என்கின்ற விடயத்தை சொல்வது தான் தில்லாலங்கடி.
அது தான் கிக்கு(kick) என வாழும் ஹீரோ ஜெயம் ரவி.
தெலுங்கில் வெளிவந்த 'கிக்' படத்தின் தமிழாக்கமாம்.
(நான் தெலுங்குப் படங்கள் பார்ப்பதில்லை - நல்ல காலம்)


வழமை போல ரவியின் அண்ணன் ராஜா அப்படியே தெலுங்குப் படத்தைத் தமிழுக்குப் பொருத்தமாக மாற்றி கலகலப்பாக விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார்.


ஆனால் ராஜாவின் முந்தைய நான்கு படங்கள் போலல்லாமல் (ஜெயம்,M.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்) தில்லாலங்கடியில் அக்ஷன்+கவர்ச்சி கொஞ்சம் அதிகம்.
எவ்வளவு நாளைக்குத் தான் அப்படியே இருப்பது என்று இவரும் யோசிச்சிட்டாரோ?
இல்லாவிட்டால் அடுத்து தான் இயக்கப்போகும் விஜயின் வேலாயுதத்துக்கான ஒத்திகையோ?
(கலைஞர் டிவியில் வேலாயுதம் தொடக்கவிழா பார்த்தேன். ராஜாவின் புண்ணியத்தால் விஜய்க்கு மிக நீண்டகாலத்தின் பின்னர் உண்மையான வெற்றிப்படம் ஒன்று கிடைக்கப்போகிறது போல)


லொஜிக் பார்க்காமல் ஜாலியாக மூன்று மணி நேரம் எம்மை மறந்து சிரிப்பதற்கு நம்பகமாக செல்லக் கூடியது தில்லாலங்கடி.
இதுவும் மசாலா தான்.. ஆனால் ராஜாவின் பாணியில் அளவாக எல்லாம் சேர்க்கப்பட்டிருப்பதால் மொக்கை மசாலா அல்ல.
சந்தோஷங்கள்,ஜாலி அம்சங்கள்,கொஞ்சம் செண்டிமெண்ட் என்று கலந்து கட்டிக் கவரும் இயக்குனர் K.S.ரவிக்குமாரை எனக்கு ஒவ்வொரு படத்திலும் ராஜா ஞாபகப்படுத்துகிறார்.

வாழ்க்கையில் shockகான கிக்குகளை விரும்புவதற்காக எந்தவொரு ரிஸ்கையும் எடுக்க விரும்பும் துடி துடிப்பான இளைஞன் ரவி எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
அவரை வெறுத்து வெறுத்தே விரும்ப ஆரம்பிக்கிறார் தமன்னா.
இடையே ஈகோ,புரிந்துணர்வின்மை, ரவியின் கிக்குகள் என்பவற்றால் காதல் ஒரு ஐ லவ் யூவுடனேயே உடைகிறது..
(அது என்ன ஐ லவ் யூவுடன் உடைவது என்று படம் பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்)


அடுத்த பாதியில் ஹீரோ ஒரு திருடனாக மாறிவிடுகிறார்.(ஆரம்பத்திலேயே லொஜிக் எல்லாம் பார்க்ககூடாது என்று சொல்லிட்டேன்)
அவரைத் துரத்தும் போலீஸ்காரராக ஷாம். (கம்பீரமாக,உடன் கும்மென்றிருக்கிறார்-இன்னும் சில வாய்ப்புகள் நிச்சயம்)
இவர்களது திருடன்-போலீஸ் விளையாட்டு எனக்கு Tom Hanks + Leonardo De Caprio நடித்த Catch me if you canஐ ஞாபகப்படுத்தியது. 


படம் முழுக்க சுவாரஸ்யமாகவும், கல கல என்றும் இருப்பதால் தொய்வு என்பது இல்லை.
ஆனால் முடிவு இப்படித் தான் இருக்கப் போகிறது என்று தெரிவதால் க்ளைமாக்ஸ் கொஞ்சம் சுவைக்காமல் போய்விடுகிறது.


திரைப்படத்தில் மிக முக்கியமான பாத்திரங்களாக ஒரு நான்கைந்து பேர் தான்.. ஆனால் நட்சத்திரங்கள் ஒவ்வொரு காட்சியிலும் வருவது வழமையான ரவி+ராஜா படங்களின் கலர்புல் தன்மையைத் தருகிறது.
ரவி,தமன்னா,வடிவேலு,ஷாம்,பிரபு,தமன்னாவின் தங்கை(யாரப்பா அது?காட்டிக் கொண்டே இருக்கிறார்.. அடுத்த படங்களுக்கு இயக்குனர்கள் இப்போதே புக் பண்ணி இருப்பாங்களே),சுகாசினி(நல்ல ரோல் என்று கூப்பிட்டாங்களா?),ராதாரவி ஆகியோர் தான் முக்கிய பாத்திரங்களில்.


ஆனாலும் சந்தானம்,கஞ்சா கருப்பு,காதல் தண்டபாணி,சத்யன்,நளினி,தியாகு,பசங்க புகழ் ஜெயப்ரகாஷ்,மன்சூர் அலி கான்,லிவிங்க்ஸ்டன்,மனோபாலா ஆகியோரும் காட்சிகளை நிரப்புவதால் ஒரு வெயிட் கிடைக்கிறது.


தில்லாலங்கடி பார்த்த பிறகு நம்மக்கும் சில சொற்கள் அடிக்கடி தாராளமாக வாயில் வந்துபோகக் கூடும்.. 
கிக்கு,Now the game starts,ஜில் ஜில் ஜிகா ஜிகா,Memory Loss, I love you.


வசனமும் இயக்குனரே.பல இடங்கள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன.
சில வசனங்கள் நெஞ்சைத் தொடவும் செய்கின்றன.
வாழ்க்கை பற்றி,தேடல்,காதல் பற்றி சொல்லும் இடங்கள்..


ரவி கலக்கி இருக்கிறார்.உறுதியான உடலோடு ஆஜானுபாகுவாக கம்பீரமாகத் தெரிகிறார்.
நகைச்சுவையில் முதல் தடவையாக வெளுத்துவாங்குகிறார்.அலட்டலில்லாமல் நடனத்திலும் ஜொலிக்கிறார்.
தமன்னாவுடனான காட்சிகளில் தமன்னாவின் கவர்ச்சியை விட ரவி ஈர்க்கிறார்.
முகபாவங்களும் அருமை.


அக்ஷன் காட்சிகளில் அதிரடியும் காட்டுகிறார்.
ஸ்டைலிஷாக இருக்கிறார்.தமன்னாவைக் கலைக்கும் காட்சிகளிலும் ஷாமுடன் போட்டிபோடும் இடங்களிலும் ரசிக்கலாம்.
வடிவேலுவை மாட்டிவிடும் இடங்களில் அசத்துகிறார்.
ஒவ்வொரு படத்திலும் காட்டும் வித்தியாசத்தில் ஜெயம் ரவி ஜெயிக்கிறார்.


சில இடங்களில் ஜெயம் ரவி எல்லார் இதயங்களையும் ஜெயிக்கிறார்..


குறிப்பாக - தமன்னாவையும் தங்கையையும் கலாய்க்கும் இடம்.
விஜய் மில்டன் + மயில்சாமி குழுவினருடனான காட்சி 
ஷாமை ஏய்க்கும் சில காட்சிகள்.
மெமரி லாஸ் பாடல்..
தமன்னா சீரியசாகக் காதல் பற்றிப் பேசும் நேரத்திலும் தனது கிக் பற்றியே ஜாலியாகக் கதைக்கும் இடம்.. 
கடைசி சோகக் காட்சிகளில் நடிக்க முயன்றிருக்கிறார்.




முதல் காட்சியில் யோகா செய்வது முதல் ஆரம்பிக்கிறது தமன்னாவின் கவர்ச்சி ராஜாங்கம்.
சுறாவில் காட்டியதெல்லாம் தூசாகப் போகும் அளவுக்கு தில்லாலங்கடி பண்ணுகிறார்.


வாயைத்திறந்து போடாங் எல்லாம் சொல்கிறார்.
ஆனால் நடிக்கவும் நிறையவே வாய்ப்பு..
சமாளிக்கிறார்.
கொஞ்சம் ஆனந்ததாண்டவம் தமன்னாவும்,கொஞ்சம் சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனீலியாவும் அடிக்கடி இந்த நிஷாவுக்குள் எட்டிப் பார்க்கிறார்கள்.


வடிவேலுவைக் காதலிப்பதாக ரவியைக் காண்டாக்கும் இடத்திலும்,ரவி தன்னிடம் நெருங்க மாட்டாரா என்று தவிக்கும் இடங்களிலும் அழகு.


வடிவேலு - வெடிவேலு.. வாய் விட்டு சிரிக்க வைக்கிறார் after long time.
ஜாக்சன் என்ற பெயரோடு செய்கின்ற அட்டகாசங்கள் அவருக்கே ஆப்பாவது சிரிப்பு வெடிகள்.
தமன்னாவிடம் காதல்வயப்படும் இடங்களில் நான்கு வயலின் வாசிப்போர் வருமிடம் ரசனையான சிரிப்பு.
அதில் ஒருவர் பாலாஜி.. அட..


பாத்திரங்கள் இவ்வாறு வைத்தால் வடிவேலு பிளந்துகட்டுவார்.


சந்தானம் கொஞ்சம் சிரிக்கவைத்தாலும் வடிவேலுக்கு முன்னால் சோபை இழந்துவிடுகிறார். 
ஆனால் வடிவேலு,ரவி,சந்தானம் இணைகிற சில இடங்கள் வெடி சிரிப்பு தருபவை.
போர்வை+படுக்கை காட்சி கொஞ்சம் A தரமாக இருந்தாலும் சிரிப்போ சிரிப்பு.


பிரபுவுக்கு கலக்கல் பாத்திரம்.சிரிக்கவும் செண்டிமெண்ட் ஆக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது.
உனக்கும் எனக்கும் திரைப்படம் மூலம் பிரபுவுக்கு கம்பீரமான மறு சுற்றிக் கொடுத்தவர் ராஜா என்பது முக்கியமானது.
கந்தசாமி போலவே போலீஸ் வேடத்தில் மன்சூர் அலி கான் கொஞ்ச நேரமே வந்தாலும் அவர் திரையில் தோன்றும் நேரமெல்லாம் கலகல.
குறிப்பாக போலீஸ் நிலையத்தில் பிரபுவும்,ரவியும் இவரைப் படுத்தும் பாடு..


ராதாரவி முதலமைச்சர்.
இவரும் அமைச்சரவையுடன் ஜில் ஜில் ஜிகா ஜிகா சாமியாருடன் செய்யும் கலாட்ட செம நக்கல். 


சுவாரஸ்யமான திருப்பங்களோடு வேகமாக பயணிக்கும் படம் கொஞ்சம் நிதானிப்பது இரண்டாம் பாதியில்.இந்தப் பாதி தான் நீளத்தை எங்களுக்கு உணரச் செய்கிறது.
ஜெயம் ரவி+சந்தானத்தின் ஞாபக மறதி குளறுபடியும் ஷாமின் தேடுதல் வேட்டையும்,குழந்தையின் சத்திரசிகிச்சையும் கொஞ்சம் இழுத்துவிடுகிறது.
முடிவும் இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம்.

இது தான் முடிவு என்று அனைவரும் ஊகித்தபிறகு அதை சட்டென்று முடித்திருக்கலாம்.




பாடல்கள் படம்பிடிக்கப்பட்ட விதம் குளுமை+செழுமை.
ஷோபியே எல்லாப் பாடல்களுக்கும் நடனம் அமைத்துள்ளார்.
நவீனம்,நளினம் பாடல்களைத் திரையில் கண்களை அகற்றாமல் ரசிக்க வைக்கின்றன.


டிங் டிங் பாடல் எனக்கு நன்றாகப் பிடித்துவிட்டது. இது விவேகாவின் வரிகளாலும் ஜெயம் ரவியின் ரசிக்கவைக்கும் அசைவுகளாலும் மனத்தைக் கொள்ளையடிக்கிறது.(இந்தப் பாடல் பற்றி தனிப் பதிவே போடும் எண்ணமிருக்கிறது)
பட்டு பட்டு பாடல் திரையில் பார்க்கும்போது ஒரு Club feeling.சிம்பு பாடியிருப்பதும்,முத்துக்குமாரின் குறும்பு வரிகளும் ஸ்பெஷல்.
தோத்துப்போனேன் செம குத்து ரகம். தத்துவங்களைக் கொட்டித் தருகிறது பாடல்.இதுவும் விவேகா.


முத்துக்குமாரின் வரிகளால் வனப்புப் பெற்றுள்ள சொல் பேச்சுக் கேட்காத சுந்தரி நடனத்தாலும் ஐந்தாறு ரவி,ஐந்தாறு தமன்னாவினாலும் அழகாகப் பிரமிக்க வைக்கிறது.மிக நுணுக்கமாக தொழினுட்பத்தால் விளையாடியுள்ளார்கள்.


பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா மினக்கேட்டிருப்பதை விட தமன் பின்னணி இசையில் பயங்கர நுணுக்கமாக இருந்திருக்கிறார்.சேஸிங் +சண்டைக் காட்சிகளில் ரஹ்மான் தான் இசையமைத்தாரோ எனும் எண்ணம் வருகிற அளவுக்கு பிரமாதம்.
காதல் காட்சிகளில் காதல் வழிகிறது. 


ஒளிப்பதிவு - ராஜசேகர்.முதல் படமாம்.. அருமை.தேவையற்ற பரீட்சார்த்த முயற்சிகளைத் தவிர்த்து தெளிவாகவும் பிரகாசமாகவும் தந்திருக்கிறார்.
மிலனின் கலையும் கலக்கல்.வீட்டு அமைப்புக்களும் பாடல் காட்சிகளின் செட்களும் பிரமிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.


ஆரம்பத்தில் ஒரு கார்டூன் மூலமாக தரப்படும் டெக்னிக் அற்புதம்.சலிக்காமலும் அதே நேரம் ரசிக்கக்கூடியதாகவும் இருந்தது. 
இன்னும் எத்தனை காட்சிகளைத்தான் தனித்தனியாக நல்லா இருக்கு நல்லா இருக்கு என்றே சொல்வது.. ஒரு தடவை போய்ப் பாருங்களேன்.. ரசிப்பதும் சிரிப்பதும் உறுதி.
ஒரு சில குறைகளைத் தவிர மீண்டும் ராஜாவுக்கு ஒரு வெற்றிப்படம் எங்களுக்கும் ரசிக்க ஜாலியான படமாக வந்திருக்கிறது.


ராஜா - தில்லாலங்கடியுடன் ஐந்து தொடர்ச்சியான வெற்றிகள்.. அசத்தல் தான்..
ஆனாலும் ஐந்தும் ரீ மேக் என்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.
அதனாலென்ன எதை செய்தாலும் சரியாக செய்கிறாரே அது தான் முக்கியம்.
(எத்தனை பேர் ரீ மேக் படங்களை எடுத்து எங்களையும் வதைத்து படத்தையும் சொதப்பி இருப்பார்கள்)


தில்லாலங்கடி - ஜெயம் ரவி சொல்வது போலவே .. கிக்கோ கிக்கு.. 

Post a Comment

19Comments

Please Select Embedded Mode To show the Comment System.*