கிடைத்த இடைவெளியில் நேற்று முன்தினம் பார்த்த படம் மதராசபட்டினம்.
எக்கச்சக்க விமர்சனங்கள் வந்திருந்தபோதும் படம் பார்த்த பின்னர் நேற்று வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
நிறையப் பேர் நல்லது என்று சொல்லும் திரைப்படங்களை பார்க்க செல்லும்போது மனசு குறை பிடிக்கவே அலையும்..
கட்டையில் போகிற நண்பன் ஒருத்தன் படம் பார்க்க நான் செல்ல முதல் இந்தப் படம் பற்றி sms அனுப்பியிருந்தான் "மச்சான் இது தமிழ் Titanicடா" என்று.
பாழாய்ப்போன என் மனசும் அந்த ஒற்றுமைகளைப் படத்தில் தேடிக் கொண்டே இருந்தது.
மதராசபட்டினம் பார்க்க ஆரம்பித்தபோதும் அவ்வாறே.
ஆனால் படம் முடிந்து வெளியே வரும்போது உண்மையிலேயே மனம் கனத்திருந்தது.
நேற்றிலிருந்து வயதானவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களின் இளமைக்காலக் காதல்களில் எத்தனை எப்படி முடிந்து போனது, எப்படி முறிந்து போனது என்றெல்லாம் கேட்கவேண்டும் போல இருக்கிறது.
காலையில் அலுவலகம் வரும்போது வீதியோரத்தில் தள்ளுவண்டியோன்றோடு சென்ற எழுபது வயது முதியவர் ஒருவரைப் பார்த்த போது வாகன வேகத்தைக் குறைத்து முகத்தில் தெரிந்த வெறுமையை கனத்த மனத்துடன் உள்வாங்கிக்கொண்டேன்.
இயக்குனர் விஜய் கிரீடத்துக்குப் பிறகு மீண்டும் மனதை நெகிழச் செய்திருக்கிறார்.
நான் பொய் சொல்லப் போறோம் பார்க்கவில்லை.
மதராசபட்டினம் பெயர்கள் திரையில் விரிந்தபோதே ஈர்ப்பை ஏற்படுத்தியது.
லண்டன் ஆரம்ப காட்சிகள் மாறி சென்னையின் நவீன காலத்திலும் சுதந்திரத்துக்கு முன்னைய காலத்திலும் மாறி மாறிப் பயணிப்பது அழகு.
கலை இயக்குனர் மிகப் பிரயத்தனப்பட்டிருக்கிறார்.ஒவ்வொரு frameஇலும் கலை இயக்குனர் செல்வக்குமார் +ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா+இயக்குனர் விஜயின் உழைப்பு தெரிகிறது.
எப்படி இவ்வளவையும் செட் போட்டு எடுத்திருப்பார்கள்?
ஏதாவது Graphics+Animation வேலையும் இருக்குமோ?
இரண்டும் சேர்த்தால் தான் இப்படி தத்ரூபம்+அருமையாகத் தரமுடியும் எனத் தோன்றுகிறது.
இந்தப் படம் கதாநாயகி+காலம் முக்கிய இடம்பெறும் படம்.
ஆர்யா கட்டுமஸ்தான உடலோடு கம்பீரமாகப் படத்திலே வந்தாலும் அவருக்கு மூன்றாவது முக்கியத்துவம் தான்.
ஆர்யா இந்தப்படத்திலும் அப்படியே வருகிறார்.பெரிதாக மாறாத முகபாவங்கள்.முரட்டுத் தனத்துக்குப் பொருத்தமான உடலமைப்பும்,சிரிக்க வைக்கும் இடங்களில் அழகான புன்னைகையும் ரசிக்க வைக்கிறது.
கதாநாயகி அமி ஜக்சன் அருமையான தெரிவு.வழமையாக தமிழ்ப் படங்களில் நடிக்கும் வெள்ளைக்காரப் பெண்கள் ஒருவித ஸ்டீரியோ தனமாக இருப்பார்கள்.அவித்த இறால் போல் தோல்,உணர்ச்சியில்லாத வெளிறிய முகம்,சோபை நோய் பீடித்தது போல் உடல் என்று...
உதாரணம் - நாடோடித் தென்றல்..
ஆனால் இந்த அமி உயிர்ப்புள்ள ஒரு அழகான நாயகி.
கண்கள்,உதடுகள் இரண்டிலும் ஆயிரம் உணர்வுகள்.கதையை உள்வாங்கி வெளிப்படுத்தி நடித்திருக்கும் அவரை விட்டு கண்கள் நகர மறுக்கின்றன.
தமிழ் நாயகிகள் கிட்ட நெருங்க முடியாது.
காதல் வயப்படும் இடம்,கவலைப்பட்டு இடங்களில் கண்கள் கவிதைகள் பல பேசுகின்றன.
இந்த வெள்ளைக்காரி அப்படியே மனதைக் கொள்ளையடித்து விட்டாள்.
இவ்வளவு இருந்தும் இந்த அமி ஒரு மொடல்,உள்ளாடைகளுக்கான விளம்பர மொடலாக இருந்தும் எந்தவொரு காட்சியிலும் மனதை அசைக்காத,கண்களை உறுத்தாத ஆடைகளுடன் தோன்றியிருப்பது நம்ம இயக்குனர்களுக்கும்,ஸ்ரேயா,த்ரிஷா,அனுஷ்கா மற்றும் தமன்னா வகையறாக்களுக்கும் கொஞ்சமாவது கண்ணைத் திறக்குமா?
அமியின் லண்டன் சுயரூபம் இதோ...
Amy Jackson
எப்பூடி?
இவர் தான் காதலில் உருகி எம் தமிழ்ப் பண்பாட்டோடு (!!) தமிழ்ப்படத்தில் நடித்தார் என்பது பாராட்டப்பட வேண்டிய விடயம் தானே?
அமி ரசிகர்களுக்காக அவரது உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் வலைத்தளம் ஆகியவை இந்த இடுகையின் கீழே..
அவசரப்படாம இதை முழுக்க வாசித்த பின் அங்கே போங்க நண்பர்ஸ்..
நாசர்,பாஸ்கர்,பாலாசிங் ஆகியோர் ஆர்யாவின் குடியிருப்பான வண்ணான் குடியிருப்பில் வாழும் முக்கிய பாத்திரங்கள்.
நாசரின் நடிப்பு பற்றி சொலவேண்டுமா?
பாஸ்கர்,பாலாசிங்கும் கூட தமக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை நிறைவு படுத்தியுள்ளார்கள்.
ஆனால் அந்தக் குடியிருப்பு,மேகமே-மழைப் பாடல்,பின் வருகிற மல்யுத்தக் காட்சிகள் கொஞ்சம் லகான் திரைப்படத்தையும் மனதுள் கொண்டுவருகின்றன.
எவ்வளவோ அருமையாக ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கி பழமை தெரிகிற மாதிரியும் காட்சிகளின் இயல்பு கெடாத மாதிரியும் மினக்கெட்டு இயக்கியுள்ள இயக்குனர் இது மாதிரி விட்ட சில தவிர்க்கமுடியாத காட்சிகள் நொட்டை,நொள்ளை பிடிக்கும் விமர்சகர்களால் தூக்கிப்பிடிக்கப்படும்.
அமி கதாநாயகி என்றால் காட்சிகள் தான் ஹீரோ.
அந்தக்கால அழகைக் கண் முன் கொண்டுவருவதும்,சிறு சிறு விஷயங்களிலும் சிரத்தை எடுத்திருப்பதும் அருமை.
தயாரிப்பாளர் பாராட்டுதற்குரியவர்.இந்தக் காலத்தில் வரும் மசாலா மொக்கைப் பிரம்மாண்டங்களுக்கிடையில் இப்படி எடுக்கப் பணம் கொட்டத் துணிபவர் யார்?
நிகழ்காலத்துக்கும் அறுபது ஆண்டுகளுக்கும் முற்பட்ட காட்சியமைப்பை வர்ணக்கலவைகளில் வித்தியாசப்படுத்தி வெற்றிகண்டுள்ளார்கள்.
ஈர்த்து படத்தோடு கூடவே எம்மைப் பயணிக்க வைக்கும் இன்னொரு விடயம் இசை.
ஆனாலும் பிரகாஷ் முதிர்ச்சி பெற்றுவருகிறார் என்று சொல்லமுடியாது.
அனேக பாடல்களிலும் பின்னணி இசைக் கோர்ப்பிலும் மாமனாரின் தாக்கமும் தழுவலும் தாராளமாக உள்ளது.
மேகமே - லகான் பாடல், ஆருயிரே - இரண்டு மூன்று ரஹ்மானின் பாடல்களின் கலவை, காற்றிலேயும் அவ்வாறே.. பின்னணி இசையிலும் பல இடங்களில் அப்படியே.
பாடகர்களைத் தெரிவு செய்வதிலும் கவனமாக இருந்திருக்கலாம்.
அனேக வட இந்திய ஆண் குரல்கள் பாடல்களின் வரிகளையும் இனிமையையும் நேட்டிவிட்டியையும் தின்றுவிடுகின்றன.
மிக முக்கியமாக உடித்தின் குரலில் வாம்மா துரையம்மா.. யாராவது கார்த்திக்கோ,திப்புவோ சங்கரோ பாடியிருந்தால் இன்னும் பாடல் மக்களை சென்றடைந்திருக்கும்.
ரூப்குமார் ரதோட் பரவாயில்லை..பூக்கள் பூக்கும் பாடலில் உணர்ச்சியாவது இருக்கிறது.
சோனு நிகாமின் குரலில் ஆருயிரே கொடுமை.
ஹரிஹரனுக்கு காற்றிலே பாடல் கொடுத்துப் புண்ணியத்தைத் தேடியுள்ளார் GVP.
உணர்ச்சிகளைக் கொட்டியுள்ளார் ஹரி.அருமையான அக்கினி வரிகள் -முத்துக்குமார்.
ஆனாலும் காட்சிகளோடு ஒன்றிணைந்து போவதால் இசை உறுத்தவில்லை.
மொழிபெயர்ப்பாளராக அமரர் V.M.C.ஹனிபா, எநேரமும் தூங்கும் ஒருவன், குண்டு போடா விமானம் வருகிறது என்று கூவும் ஒருவன் என்று சில இயல்பான நகைச்சுவைப் பாத்திரங்களும் ஆங்காங்கே.
கதையோடு ஓட்டிச் செல்வதாகவே நகைச்சுவைகளும் செல்வது இயல்பு.
நிகழ்காலக் காட்சியில் வழிகாட்டியாக வந்து எமாற்றமுயற்சிக்கும் அந்த இளைஞரும் அவரது காரோட்டியும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.
வயதுமுதிர்ந்த மூதாட்டியின் பேத்தியாக வருபவர் கொஞ்சம் சுருதி கமல் போல இருக்கிறார்.
ஆளுநராக வருபவர் அமைதியான கம்பீரம்.
அனால் வெள்ளைக்கார வில்லன் Alexx O'Nell அசத்தல்.கலக்குகிறார் மனிதர்.ஓவரான அலட்டலோ இல்லாவிட்டால் நடிக்கத் தெரியாமல் தடுமாறவோ இல்லாமல் மின்னுகிறார்.
வாமா துரையம்மா,பூக்கள் பூக்கும் தருணம் பாடல்கள் படத்திலே மிக ரசிக்க வைக்கின்றன.
ஆனால் பூக்கள் பூக்கும் தருணம் - லகான் பாடலின் காட்சியமைப்பை ஞாபகப்படுத்தித் தொலைக்கிறது.
இப்படியான விஷயங்களில் விஜய் இன்னும் கொஞ்சம் நேர்த்தி காட்டியிருக்கலாம்.
முத்துக்குமார் ஜொலிக்கிறார்.அத்தனை பாடல்களிலும் வரிகள் வலிமையாக இருக்கின்றன.
பூக்கள் பூக்கும் தருணத்தில் காதல் பொங்கி வழிகிறது.
ஆருயிரே பாடல் (படத்தின் இயல்புத்தன்மையைக் கெடுத்து விடுகிறது. இப்படியொரு Dream sequence தேவையா?)வரிகளின் இனிமையை பாடகரின் குரல் கெடுத்து விடுகிறது.
ஒவ்வொரு பாடலையும் இழைந்து இழைந்து எழுதி மனசைத் தொடுகிறார்.வைரமுத்துவுக்குப் பிறகு தமிழில் காட்சிகளுக்குப் பொருத்தமாகவும் கதையோடு ஒன்றியும் தேவையற்ற அலட்டல் இல்லாமலும் பாடல்கள் தரும் ஒரு பாடலாசிரியர் கிடைத்துள்ளார்.
இன்னும் உயரம் தொடுவார்.
பரிதி-அமி காதல் மலரும் தருணங்கள்,பேச மொழி தடையாக இருக்கையில் கண்களால் பேசுவது,மௌனமே அர்த்தங்கள் சொல்வது என்று ரம்மியமாக இருக்கின்றன.
காதலையே பிரதானப்படுத்தி காலவோட்டத்தைக் காட்டியிருப்பதால் சுதந்திரம், அதற்கான போராட்டங்கள் வெள்ளையரின் அடக்குமுறைகள் பின்னணியில் போய்விடுகின்றன.காட்சி மாற்றத்தின் யுக்திகளாக இவை காட்டப்படுகின்றன.
நான் அதையும் ரசித்தேன்.
ஆனால் சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் பார்வையாளர்கள் இந்திய சுதந்திரத்தின் மகிழ்வைக் கொண்டாடுவதை விட, அந்த மூவர்ணக் கொடியை பூரிப்போடு பார்ப்பதை விட காதல் ஜோடி சேருமா என்று ஏங்குவது திரைப்படத்தின் வெற்றி,இயக்குனரின் வெற்றி.. ஆனால் இந்தியராக நான் இல்லாதவிடத்தும் எனக்கு உறுத்தியது இந்தியர்களுக்கு எப்படியோ?
சுதந்திரத்துக்கு முந்திய இந்தியர்களின் அப்பாவித்தனம்+பரிதாபத்தையும் இப்போதைய காசே குறியாகக் கொண்டு ஏமாற்றும் இடங்களையும் கோடு காட்டியுள்ளார் விஜய்.
அப்படியும் லண்டன் மூதாட்டி(Carole Trungmar) மீது பரிதாபம் கொண்டு மனம் இறங்கி உதவுகின்ற இடங்களில் இந்தியர்களின் ஈர இதயங்கள் காட்டுகிறார்.
ஒரு சாதாரண காதல் கதை, வெள்ளைக்காரப் பெண்ணொருத்திக்கும் அடிமையாக இருந்த இந்திய வாலிபருக்குமிடையில் மலர்வதும் காலகட்டமும் தான் வித்தியாசமாக்குகிறது.
ஆனால் சுவாரஸ்யமாக,சாதுரியமாக இயக்குனர் அந்தந்தக் காலகட்டத்தை அழகாக காட்டுவதும், மன உணர்வுகளை உருக்கமாக பாத்திரங்கள் மூலமாக எமக்குள் செலுத்துவதும் தான் மதராசபட்டினத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது.
நான் ரசித்த சில இடங்கள்...
அமி ஜாக்சன் தான் ஆர்யா(பரிதி) மீது காதல் வயப்பட்டதை வெளிபடுத்தும் இடம்.
அழகான அந்தக்கால கூவம் நதியில் படகு சவாரியில் காதலும் கிழவன் பார்க்கும் விநோதப் பார்வையும்
அதே படகிலிருந்து ஆர்யாவைக் காப்பாற்ற ஆற்றிலே தள்ளிவிடும் காட்சி.. அவரது விரல்கள் விடாமல் படகைப் பிடித்துக்கொள்ள காயம் வரும்வரை அடித்து கண்ணீரோடு முத்தமிட்டு தள்ளிவிடும் அந்தக் காட்சி.
மூதாட்டியின் கண்கள் வெளிப்படுத்தும் காதலும் சோகமும்
துரையம்மாள் ட்ரஸ்ட் என்ற அந்தப் பெயரைப் பார்த்து தங்கள் காதலை நினைக்கும் பெருமிதம்.
கடைசிக் காட்சிகளில் மெலிதாய்த் தூறும் மழையோடு இசையும் அந்த மூதாட்டியின் அமைதியான முக பாவங்களும்..
இவை அனைத்திலுமே எனக்கு மனிதனின் வாழ்க்கையின் மாறும் கோலங்களும், இயக்குனரின் புத்திசாதுரியமும் தெரிந்தன.
இயக்குனருக்கு டைட்டானிக்,லகான் போன்ற படங்கள் ஐடியா கொடுத்திருந்தாலும் மனதைத் தொடுகிற விதத்தில் உறுத்தல்கள் இல்லாமல் படம் தந்துள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள்.
ஆனால் படத்தின் இறுதிக் காட்சியில் அவரைக் கொலை செய்யவேண்டும் போல ஒரு கோபம் வந்தது..
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகாவது அமியைப் பரிதியோடு சேர்த்திருக்கக் கூடாதா?
இன்னும் மனதை நிரப்பி இருக்கிறது முதிய மனதுக்குள் ஈரமாக இருக்கின்ற அவர்களது காதல்.
மதராசபட்டினம் - மனதை நிரப்பியுள்ளது.
அமி ரசிகர்களுக்காக....
Get to know Amy better - read her BLOG!
Amy Jackson Official Site - http://www.amylouisejackson.com