முரளி 800 @ காலி | Murali 800

ARV Loshan
39



காலியில் நேற்று முன்தினம் எப்படியாவது இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.


மிக நீண்ட காலம் கிரிக்கெட்டில் நான் நேசித்த ஒரு வீரர் தனது இறுதி நாள் ஆட்டத்தை விளையாடும் வேளையில் அவரை மைதானத்தில் அந்த வெள்ளை உடையில் இறுதியாக ஒரு தடவை பார்க்க ஆசைப்பட்டேன். 


முரளியின் எண்ணூறாவது விக்கெட் வீழ்த்தப்படும் நாளாகவும் நேற்று முன்தினம் அமைந்தது என்பதில் ஆச்சரியம் கலந்த இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது.
அலுவலகத்தில் விடுப்புக் கேட்பது ஒன்றும் சிரமமான விடயமில்லை;ஒரு smsஇலேயே எடுத்துவிடலாம்.. ;)
காரணம் வானொலிக்கான நேரடித் தகவல்,செய்தி,கள விபரம் சொல்கிற வேலையும் சேர்ந்தே இருக்கிறதே. 


என் வாகனத்திலேயே செல்லப்போகிறேன் என்றவுடன் மனைவி,மகனும் தொற்றிக் கொண்டார்கள்.


அப்பாவையும் அழைத்து செல்ல விரும்பினேன்.காரணம் அவர் தான் முரளிதரன் என்ற ஒரு விளையாட்டுவீரரை ஒரு கல்லூரி கிரிக்கெட்டராக எனக்கு அறிமுகப்படுத்தி முரளியுடன் பேசவைத்தவர்.


என் அப்பாவும் என் வாரிசும் ..

முரளியை தொடர்ந்து அவரது சாதனைகள் பற்றிய பல குறிப்புக்களை முன்பிருந்தே மூலமாக எனக்கு சேகரித்துத் தந்து கிரிக்கேட்டிலும் முரளியிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்திய அப்பாவை முரளியின் இறுதிப் போட்டிக்கு நான் அழைத்துச் செல்வது அவருக்கு நான் செய்யும் பிரதியுபகாரமாக இருக்கும் என்று ஆசைப்பட்டேன்.
காலியில் அப்பா அடைந்த அந்த மகிழ்ச்சி உண்மையில்மிகத் திருப்தி தந்தது.
   
அலுவலக அறிவிப்பாளர் விமலும் கடமை நிமித்தம் வந்தார்.


காலை 6.30க்கு புறப்பட்ட பயணத்தில் என்னுடைய Speed & Steady செலுத்துகையில் அலுவலக,பாடசாலை போக்குவரத்து நெரிசல்களில் பெரிதாக மாட்டிக் கொள்ளாமல் மூன்று மணித்தியாலத்திலேயே அடைந்தோம்.


பாணந்துறையிலிருந்து காலி வரையான 75 km தூரமுள்ள பல இடங்களிலும் முரளியின் கட் அவுட்டுகள்..
பல சுவாரசியமான வாசகங்களுடன்.


Bowling Bradman Murali
Srilankan Super Man Murali
We salute u Murali
Bowling Maestro
Marvellous Murali


கொழும்பு மாநகரம் வெட்கித் தலை குனியவேண்டும்.


காலி மாநகரசபைக்குட்பட்ட இடமெல்லாம் ஆளுயர மற்றும் ராட்சத கட் அவுட்டுகள்.


காலி மைதானத்துக்குள் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு செய்தியில் ஜனாதிபதி இன்றைய நாளில் முரளிதரனைக் கௌரவிக்க மைதானத்துக்கு வர இருப்பதாக சொல்லப்பட்டது.
ஆகா பாதுகாப்புக் கெடுபிடியில் கொல்லப் போறாங்களே.. பேசாமல் கொழும்பிலேயே நின்றிருக்கலாமோ என்று யோசித்தோம்.


ஆனாலும் மைதானத்துக்குள்ளோ ,வெளியிலோ எந்தவொரு கெடுபிடியுமில்லை.


ஆடுகளத்தை சமாந்தரமாகப் பார்க்ககூடிய பெரிய திரை, Electronic score screen தெரியக் கூடிய இருக்கைகளாகப் பார்த்து தெரிவு செய்தோம்.


எவ்வளவு நாளுக்குப் பிறகு நான் மைதானத்துக்கு செல்கிறேன்..
முன்பெல்லாம் ஒரு போட்டி தவறவிடாமல் மைதானத்துக்கு செல்வது வழக்கம்.
அப்பா ஆரம்பத்தில் எனக்குப் பழக்கிவிட்டது,பின்னர் வானொலிப் பணி தொடங்கிய பின்னர் ஓசி ஊடகவியலாளர் அனுமதிப் பத்திரத்தின் அனுசரணையில் சகல வசதிகளுடனும் காலி முதல் கண்டி,தம்புள்ளை,என்று ஒரு மைதானம் தவறவிட்டதில்லை.
எனினும் கடந்த ஒன்றரை வருடங்களாக அலுவலகப் பணி காரணமாக செல்லக் கிடைக்கவில்லை.


லசித் மாலிங்க முதலாவது ஓவரை ஆரம்பிக்கவும் நாங்கள் அமரவும் சரியாக இருந்தது.


ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரள ஆரம்பித்திருந்தார்கள்.

மாலிங்க தோனியை யோர்க் செய்தவுடன் சந்தோஷ ஆர்ப்பாட்டம்.
இலங்கையின் வெற்றிக்கும் சமநிலைக்கும் இடையிலிருந்த ஒரு முக்கிய தடைக்கல் நீங்கிய மகிழ்ச்சி இது.


எங்கள் பக்கம் இருந்த சிங்கள நண்பர் ஒருவர் சிங்கள மொழியில் சங்காவுக்கு கத்தி அட்வைஸ்  அனுப்பினார்...
"தோனியை அனுப்பிட்டோம்.. இனி முரளிக்கு மட்டும் சான்ஸ் குடுங்க"


சொன்ன மாதிரியே ஹர்பஜனை முரளி ஆட்டமிழக்க செய்ய உற்சாகம் கரைபுரள ஆரம்பித்தது.
ஆகா மூன்று மணிநேரம் பிரயாணம் செய்து வந்ததுக்கு முப்பது நிமிடத்திலேயே போட்டி முடிஞ்சிடும் போலிருக்கே என்று நினைத்துக் கொண்டேன்.

மதியபோசனத்துக்கு முன் போட்டி முடிவடையும் போல இருந்ததால் மனைவி அப்போதே காலி கோட்டை பார்ப்பது பற்றியும் கடற்கரைக்கு போவது பற்றியும் என்னிடம் கேட்டுவைத்துவிட்டார்.


ஆனால் வழமையாகவே ஆடுகளத்துக்கு பாய் தலையணையுடன் வரும் லக்ஸ்மனுடன், போட்டிக்கு மிதுனும் பின் இஷாந்த்,ஒஜாவும் இலங்கை வீரர்களையும் ரசிகர்களையும் சோதித்தார்கள்.


லக்ஸ்மன் இப்படியான ஆட்டங்களுக்கேன்றே பிறந்தவர். ஆனால் இந்தியாவின் Tailenders வழமையாக இவ்வாறு பொறுமையாக நின்றாடுவதைப் பார்ப்பது மிக அபூர்வம்.
அதுக்காக முரளியின் இறுதி நாளிலா?
இந்தியாவின் இறுதி மூன்று துடுப்பாட்ட வீரர்களும் இணைந்து மொத்தமாக 215 பந்துகளை சந்தித்ததுடன் 33 ஓவர்கள் இலங்கை அணியைப் போட்டு வதைத்திருந்தனர்.


சங்காவுக்கு பெரிய தர்மசங்கடம்.முரளியை மிக இலகுவாகத் துடுப்பாட்ட வீரர்கள் கையாள்கிறார்கள்.
அவருக்கு விக்கெட்டும் வேண்டும்,மற்றவர்கள் எடுக்கவும் கூடாது.ஆனால் கருமேகங்கள் சூழ்ந்தும் இருந்தன. போட்டியையும் வெல்லவேண்டும்.நேரமும் கடந்து செல்கிறது.


ஒரு தலைவருக்கு இதைவிட வேறு நெருக்கடிகள் இருக்க முடியுமா?


விக்கெட்டுக்களை எடுக்கக்கூடியவராகத் தெரிந்த லசித் மாலிங்க கால் உபாதைக்குள்ளானது கொஞ்சம் ஆறுதல்.
முரளி தவிர வேறு யார் ஆட்டமிழப்புக்கு நடுவரிடம் முறையிட்டாலும் ரசிகர்கள் திரண்டிருந்து ஒரே குரலில் நடுவரிடம் சிங்களத்தில் எபா(வேண்டாம்) என்று கூக்குரல் எழுப்பியது ஆச்சரியம்.


முரளிக்கான போட்டியாகவே இது அத்தனை ரசிகர்களுக்கும் மனதில் பட்டுள்ளதே தவிர இலங்கை அணியின் வெற்றி இரண்டாம் பட்சமே.


ஒரு தமிழனுக்காக (இப்படி சொன்னால் நிறையப் பேருக்கு எரிகிறதே.. ஆனால் இது தான் உண்மை) ஸ்ரீ லங்காவை மறந்திருந்தார்கள் அந்த 25000 பேரும்.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த முரளி ரசிகர் 

 எம் அருகே அதிகமாக சிங்களவர்கள்.. அவர்களில் ஒருவர் முரளி பந்துவீசும் ஒவ்வொரு பந்துக்கும் ஓவராக உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருந்தார்.
நாம் தமிழிலே பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு கொழும்பிலிருந்து வந்தீர்களா? எனக் கேட்டார்.ஆமாம் என்றேன் .தான் காலியில் இருப்பவரென்றும் முரளிக்கு மரியாதை செலுத்த வந்திருப்பதாகவும் சொன்னார்.


அலுவலக நாளிலேயே மைதானம் முழுக்க நிறைந்திருந்தது.
ஒன்பதாவது வீக்கெட் வீழ்ந்ததும் மைதானம் அனைவருக்கும் இலவசமாகத் திறந்துவிடப்பட்டது.


அதற்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முரளியின் இறுதி டெஸ்ட் போட்டியில் அவரை கௌரவிக்க மதியபோசனத்துக்கு முன்னர் வந்திருந்தார்.(நம்மை மாதிரியே யாரோ விரைவிலேயே போட்டி முடிந்துவிடும் என்று தப்புக் கணக்குப் போட்டு ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியிருப்பாங்க போலும்)
ஆனால் முரளி விக்கெட்டை எடுக்கிற மாதிரி இல்லை என்றவுடன் மதியபோசன இடைவேளையின் போதே தன கௌரவத்தை வழங்கிவிட்டு நடையைக் கட்டிவிட்டார்.

இறுதிநாளில் வீசப்பட்ட 56 ஓவர்களில் முரளிக்கு வழங்கப்பட்ட ஓவர்கள் மட்டும் 27 .முரளியின் தீவிரமான ரசிகனான நானே எண்ணூறாவது  விக்கெட் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை இலங்கை வென்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தாலும் கூட சங்கா பொறுமை இழக்காமல் முரளியை மீண்டும் மீண்டும் பந்துவீச அழைத்துக் கொண்டிருந்தார்.


வேறு யாராவது ஒருவருக்கென்றால்கடைசி விக்கெட் டென்ஷன் அதுவும் கடைசிப் போட்டியில் கொஞ்சம்வாது முகம் காட்டும்.ஆனால் முரளி always cool.லக்ஸ்மன் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தாலும் அதே டென்ஷன் இல்லாத சிரிப்பு.



கடைசி நேரத்தில் முரளி களத்தடுப்பில் ஈடுபட நாம் இருந்த இடத்துக்கு கொஞ்சம் அருகே வர திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் 'முரளி' என்று கோஷம் எழுப்பினர்.அதே நாணத்துடன் கூடிய சிறு புன்னகையும் கை அசைப்பும் மட்டுமே அவரிடமிருந்து.
முரளி எப்போதுமே மாறப்போவதில்லை.
சிங்களத்திலே யாரோ ஒருவர் 'என்ன முரளி கடைசி விக்கெட் தானே.. சீக்கிரம் எடுங்களேன்' என்று கேட்க, தோளைக் குலுக்கி சிரித்து விட்டு மற்றப் பக்கம் திரும்பிக் கொண்டார்.
தன்னையே தான் பார்க்கும் முரளி..

ஓஜாவின் விக்கெட் முரளியின் எண்ணூறாவது விக்கெட்டாக அமைந்தவிதம் ஒரு சுவாரஸ்யம்.
முரளியின் பந்துவீச்சில் மஹேல ஜெயவர்த்தன எடுத்த 77 வது பிடி.
இவ்விருவரது இணைப்புத் தான் அதிக ஆட்டமிழப்புக்களை உலகில் செய்துள்ளது.


மைதானமே ஆர்ப்பரித்து அலறியது.எங்கே பார்த்தாலும் கரகோஷம். முரளி முரளி என்ற சந்தோஷ ஆர்ப்பரிப்புக்கள்..
வெடிச் சத்தங்கள்..
நமது மண்ணின் மைந்தர் சாதித்துக் காட்டிவிட்டார்.
எல்லோரும் ஒரு நாள்,பின்னர் மூன்று மணிநேரம் காத்திருந்த அரிய சாதனை நிகழ்த்தப்பட்டு விட்டது.


அதன் பின்னர் 95 என்ற இலக்கை இலங்கை அடையும் என்பது அனைவரும் எதிர்பார்த்த இலகுவான வழக்கமான விடயம் தானே?


ஆனால் டில்ஷான் விரைவாக அடித்துமுடிக்கவேண்டும் என்று அனைவரும் விரும்பியது முரளிக்கான கௌரவம்+விடைகொடுத்தளுக்கான சரித்திரபூர்வ சாட்சியாக அனைவரும் பங்குபெறவேண்டும் என்பதற்கே.


சிக்சரோடு டில்ஷான் போட்டியை இலங்கைக்கு வெற்றியாக மாற்ற மைதானம் மீண்டும் விழாக்கோலம் பூண்டது.


காலி நகரம் முழுவதும் மைதானத்துக்குள்.


மீண்டும் முரளி முரளி என்ற கோஷங்கள்.


மைதானத்துள் முரளியைத் தங்கள் தோளில் காவியபடி இலங்கைவீரர்கள் மைதானத்தை வலம் வர ரசிகர்கள் தங்கள் சாதனை நாயகனை அருகிலே பார்த்து ஆரவாரிக்க ஆரம்பித்தனர்.


இத்தனை ஆண்டுகள்- இரு தசாப்தங்கள் தன் தோளில் இலங்கை அணியைத் தாங்கிய ஒரு வீரனைத் தூக்க இலங்கை அணி வீரர்களுக்குள் போட்டி..தலைவர் சங்கா முக்கியமாக முரளியைக் காவி வந்தார்.


ஒரு வீரன் விடைபெறும் மகத்தான கட்டம் இது.
உச்சத்தில் இருக்கும்போதே யாரும் போ என்று சொல்லமுன்னர் போகாதே என அனைவரும் இறைஞ்சும் நேரம் அணியின் வெற்றியுடன் விடைபெறுவதானது எத்துணை சாதனை மிக்க செயல்?


இந்த மகத்துவம்,முரளியின் மேலும் பல முக்கியத்துவங்கள் பற்றி முழுமையான விரிவான பதிவோன்றைக் கொஞ்சம் நேரம் எடுத்துத் தருகிறேன்.


 இத்தனை பரபரப்பான நிலையில் முரளியுடன் நேரடியாகப் பேசவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அது அன்று சாத்தியபடாது என்று தெரிந்தது.அவரது செல்பேசியில் வாழ்த்துத் தகவல் ஒன்றை smsஆக அனுப்பிவைத்தேன். எனினும் முரளியின் முதலாவது டெஸ்ட் போட்டியையும் இறுதிப் போட்டியையும் மைதானத்தில் நேரடியாகப் பார்த்த பரவசம் எனக்குள்.


பல விருதுகள்,பல பாராட்டுக்கள்,பல பரிசுகள்..
தொலைக்காட்சியில் முரளியின் தாயையும் தந்தையையும் பார்த்த போது எத்தனை பரவசமும் பெருமையும் அவர்கள் முகங்களிலே.மனைவி மகிழ்ச்சி முகத்திலே பிரவாகிக்கிறது. இனிப் பக்கத்திலேயே இருப்பார் என்றோ?


மாறி மாறி நினைவுச் சின்னங்களைப் பெற்றுக் கொண்டபோதும் டோனி கிரெய்க் கேள்விகள் தொடுத்தபோதும் மாறாத அதே எளிமையான வெட்கம் கலந்த சிரிப்பு.


காலியிலிருந்து மகிழ்ச்சி,பெருமை கொஞ்சம் பிரிவுத் துயர் கலந்த உணர்வுகளோடு மீண்டும் வாகனத்தை எடுக்கும் வேளையில் முரளி சொன்ன சில வார்த்தைகள் மனதிலே அவரை இன்னும் உயரத்துக்கு ஏற்றியது..


"I told my captain [Kumar Sangakkara] to somehow get the wickets. We knew the situation in Galle and had the match ended in a draw it would have been very sad. I badly wanted to win in my final Test. We all play for a win. At that moment we would have taken even a run out.


"I chose to finish my career at the end of the first Test because I know my knees are not going to last to bowl 50-60 overs. If I am there it will be four spinners and only two can play. I will be blocking the place of another young spinner."


Murali is a true Sportsman and Real Gentleman.


முரளி போல ஒருவரை நாம் நினைத்தாலும் கிரிக்கெட்டில் பார்க்கமுடியாது..
  
பி.கு 1 - இந்தப் பதிவில் ஒரு சில படங்கள் தவிர அனைத்துமே என்னால் எடுக்கப்பட்டவை.ஏனையவை வழமை போல cricinfo வில் சுடப்பட்டவை.


பி.கு 2 -முரளிதரன் பற்றிப் பல பதிவுகள் தொடர்ச்சியாக வந்துள்ள நிலையில் நான் கொஞ்சம் இடைவெளி விட்டு ஒரு பகிர்வைத் தரப்போகிறேன்,..
அதில் பல விஷயங்கள் வரும்.. :)



Post a Comment

39Comments

Please Select Embedded Mode To show the Comment System.*