சிங்கம் - கிர்ர்ர்ர்
June 03, 2010
38
நேற்று தான் சிங்கம் பார்க்கப் போக நேரம் கிடைத்தது.
பார்க்கப் போகு முன்பே காது வழியாகக் கேட்ட விமர்சனங்கள் பொதுவாக நல்லது என்றே சொல்லின.. ஒரு சில சாமி மாதிரி என்று சொல்லின..
நானும் ஹரியின் படம்.. முன்னர் வெளிவந்திருந்த பட போஸ்டர்கள் , அது பற்றி நான் போட்ட பதிவு (ஓடுரா ஓடுரா சிங்கம் வருது.. )என்று எல்லாவற்றுக்கும் தயாராய்த் தான் போயிருந்தேன்.
ஆனால் உண்மையாக முதல் காட்சியிலிருந்து படம், குறிப்பாக வேகமான திரைக் கதை கட்டிப் போட்டு விட்டது.
சுருக்கமாக சொல்லப் போனால்..
வெகு பழக்கமான தமிழ் சினிமாவின் போலீஸ் கதை.
நேர்மையான துணிச்சலான போலீஸ் அதிகாரிக்கும் விடாப்பிடியான அடாவடித்தனம் செய்யும் எந்தவொரு பாதகத்துக்கும் அஞ்சாத பயங்கர வில்லனுக்கும் இடையிலான விறுவிறு மோதல் தான் கதை.
இப்படியான ஒரே விதமான கதைகளும் மீண்டும் மீண்டும் வந்தாலும் சில வெற்றி பெற்றே ஆகின்றன..
காரணம் ஒன்றும் மாய வித்தை அல்ல.. மிக சிம்பிளான அடிப்படை விஷயங்கள்.
Basic formulas..
திரைக்கதையின் வேகம்
பொருத்தமான நாயகன்.. அல்லது பொருந்திப் போகிற நாயகன்..
சுவாரஸ்யமான ஒரு சில காட்சிகளாவது..
பலமான ஒரு வில்லன்..
இவை நான்கும் இந்தப்படத்திலே இருப்பதால் சன் பிக்சர்சுக்கு - Sun Pictures உண்மையிலேயே முதன் முறையாக ஒரு வெற்றிப் படம் கிடைத்துள்ளது.
ரொம்பவே லேட்டாப் பார்த்ததால் சிங்கம் பற்றி விமர்சனம் எழுதத் தேவையில்லை என்றே முதலில் எண்ணியிருந்தேன்.
எனினும் படம் முடிந்து வெளியே வரும்போது யாரோ ஒரு இளைஞர் சொன்ன ஒரு கொமெண்டில் கிடைத்த உற்சாகம் சிங்கத்தில் நான் ரசித்த,பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி எழுதவேண்டும் என்று பதிவுப் பக்கம் கூட்டிவந்துவிட்டது.
"அப்ப நாளைக்கு ப்லொகில் சிங்கம் விமர்சனம் பார்க்கலாம் போல"
- ஆனால் எக்கச்சக்க ஆணி பிடுங்கல்களால் ஒரு நாள் தாமதம்.. ;)
பரவாயில்லையே நாமளும் வலைப்பதிவர் தானா? ;)
சூர்யா கம்பீரமாக சிங்கம் மாதிரியே இருக்கிறார்.
இறுக்கிய கம்பீர உடலும்,முறுக்கிய மீசையும்,மிடுக்கான நடையும்,பார்வையிலேயே தெரிகிற பொறுப்பும் நேர்மையும் அவரது home workஐயும் பாத்திரத்துக்குத் தன்னைப் பொருத்த அவர் எடுத்த கடின உழைப்பையும் காட்டுகிறது.
கண்கள் பேசுகின்றன.. கைகள் ரொம்பவும் அதிகமாகவே சில சமயம் பேசுகின்றன..
ஹரி படம் என்பதால் அதிக முறைப்பு,அதீத பேச்சு..அதிரடி சண்டைகள்,பாய்ச்சல்கள்,ஓட்டங்கள் என்பவற்றைத் தவிர்க்க முடியாது தான்..
சூர்யாவைப் பார்க்கும் போதெல்லாம் அடிக்கடி எழும் ஆதங்கம் அனுஷ்காவுடன் இவரைப் பார்த்த பின் மீண்டும் எழுந்தது..
சே.. இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருக்கக் கூடாது..
பல இடங்களில் உறுத்துகிறது.
படத்தில் சூர்யாவை விட முதலில் இருந்து முடிவு வரை அதிக பில்ட் அப் கொடுக்கப்படுபவர் வில்லன் மயில்வாகனம் பிரகாஷ் ராஜ்.
(இந்தப் படத்தில் ஹீரோ வில்லன்களின் பெயரைக் கேட்க சர்வசாதாரணமாக இலங்கையின் பல பாகங்களில் வைக்கப்படும் பெயர்கள் ஞாபகம் வருகிறது. துரைசிங்கம் - மயில்வாகனம்)
மனிதர் மின்னுகிறார். படத்தைத் தூக்கி நிறுத்துவது இவர் தான்.
சவால் விடுவதாகட்டும்,மிரட்டுவதாகட்டும்,ஆவேசம்,கோபம், அவமானம் படுவதாகட்டும் பிரகாஷ் ராஜ் பிரகாசிக்கிறார்.
கடைசிக் காட்சி வரை பி.ரா அதகளம்..
இவ்வளவு நாளும் பார்த்த படங்களிலெல்லாம் பிரகாஷ் ராஜ் வந்தால் கூட நடிக்கும் எந்தக் கொம்பனாக (ஹீரோ) இருந்தாலும் பிரகாஷ் ராஜின் பிரம்மாண்ட விஸ்வரூப நடிப்புக்குள் வீழ்ந்து காணாமல் போனதையே பார்த்திருக்கிறேன்.
வசூல் ராஜா - கமல்,மொழி-பிருதிவிராஜுக்குப் பிறகு முதல் தடவையாக ஒரு ஹீரோ பிரகாஷ்ராஜ் என்ற மலையை விழுங்கி மேவி நிற்கிறார்.
சூர்யா அந்த வகையில் ஜொலித்திருக்கிறார்..
ஒரு வேளை ஹரி அமைத்த பாத்திரப் படைப்பு அவ்வாறு சூர்யாவை அதாவது துரைசிங்கத்தை கர்ஜிக்க வைத்திருக்கலாம்..
அனுஷ்கா - அப்பப்பா.. என்ன கவர்ச்சி.. காட்சிகளில் நல்ல பெண்ணாக வந்து போனாலும் இந்தப் 'புலி' பாடல் காட்சிகளில் உரித்துக் காட்டுகிறது..
உயரம் தான் கொஞ்சம் உறுத்துகிறது.
ஒரு பாடல் காட்சியில் ஓவரோ ஓவர்..
இன்னும் ஒரு சிம்ரனாக இடுப்பை இயன்றவரை காட்டி,அசைத்து ஆடுகிறார்.
விவேக் - மினி வெண்ணிற ஆடை மூர்த்தி.. பத்மஸ்ரீக்கு சரக்கு தீர்ந்து விட்டது.. பச்சையாக கொச்சை பேசுகிறார். சில காட்சிகள் சிரிக்க வைத்தாலும் வடிவேலுவாக மாறுகிறாரோ எனத் தோன்றுகிறது..
ஏனைய நடிகர் பட்டாளம்..
நாசர் - அளவெடுத்த பாத்திரம்
ராதாரவி - பல நாளுக்குப் பிறகு மிடுக்கு..
விஜயகுமார் - (ஹரியின்) மாமாவுக்கு மரியாதை
நிழல்கள் ரவி - கடைசிக் காட்சியில் மிளிர்கிறார்
போஸ் வெங்கட் - நேர்மை,பாவம்,பரிதாபம்
சில காட்சிகள் ரசனை..
கோவில் காட்சி.. சூர்யாவின் கண்ணில் அப்படியொரு காந்தம்.
அனுஷ்காவிடம் தன் சம்மதம் சொல்லும் சூர்யா..
நாசர் நாயகன் பாடலுடன் மூக்குடைபடுவது..
நல்லூரிலும் பின்னர் சென்னையிலும் பி.ரா-சூர்யா சந்திக்கும் அனல் பறக்கும் காட்சிகள்..
யுவராணி வரும் சில காட்சிகள்..
ஆனால் சிங்கம் படம் என்பதால் அடிக்கடி சூர்யா அடிக்கும் போதெல்லாம் சிங்கம் கிராபிக்சில் வருவது கார்ட்டூன் ஞாபகம் வருகிறது
அக்ஷன் காட்சிகள் வழமையான ஹரி மசாலா.. ஆனால் சூர்யா பறந்து பறந்து அடிப்பதைப் பார்க்க பயமாக உள்ளது.. இந்த வெற்றி அவரையும் விஜய்.அஜீத்தோடு போட்டி போட வைத்து விடுமோ என்று..
ஒளிப்பதிவாளர் பிரியன் தன்னுடைய உச்சபட்ச உழைப்பை ஹரிக்கு கொடுத்திருக்கிறார்.
பாடல் காட்சிகளில் அதிகமாக ஜொலிக்கிறார்.
பாடல்கள் படத்தில் நல்லாவே வந்திருக்கின்றன.
முதல் பாடல் மட்டும் ரொம்ப்பவே ஓவர் பில்ட் அப்..
கால்பந்துப் போட்டியில் ஒரு கோல் சூர்யா அடிப்பாராம்.. உடனே அணி வெல்லுமாம்.. கிழவங்க எல்லாம் 'சுறா' விஜய் கணக்குல இவரைத் தூக்குவாங்களாம்.
என்ன கொடும இது சூர்யா.. சாரி ஹரி..
எவ்வளவு தான் புதுசாப் படத்தைக் காட்டினாலும், சில ஊகிக்கக் கூடிய திருப்பங்களும், ஹரியின் 'சாமி' ஞாபகங்களும், அரிவாள், ஏலே,தூத்துக்குடி,கிராமிய மற்றும் குடும்ப செண்டிமென்ட்களும் கொஞ்சம் பழைய வாசனை தருகிறது.
அதுபோலவே சூர்யா-பிரகாஷ்ராஜ் மோதலில் நம்ப முடியாத சில லாஜிக் மீறல்களும் .. (மயில்வாகனத்தின் உறுத்துகின்ற பொய் மீசை போலவே)
ஆனாலும் வேகம் அதிவேக திரைக்கதை இவை எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளி வைக்கிறது.
அது சரி இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..
அடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..
பின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது??
விஜயை நினைச்சா பரிதாபமா இருக்கு..
எத்தனை வெற்றி பெற்ற படங்களை நிராகரித்து டப்பாக் கதைகளை எடுத்து தானும் டப்பா ஆகிக் கொண்டிருக்கிறார்.
(உண்மையை சொன்னால் நிறையப் பேருக்கு கோவம் வரும் தான்.. ஆனால் இது உண்மையிலேயே நக்கல் அல்ல.. மனசில் உள்ள ஆதங்கம்)
நேற்று இலங்கையில் ஐந்தாவது நாள்.. அப்படியும் Houseful.
பார்த்த எல்லோரது முகத்திலும் ஒரு திருப்தி..
எனக்கு முன் இருக்கையில் இருந்த ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க அங்கிளின் கமெண்ட் "மசாலா எண்டா ஹரி தான்".
இது தான் ஹரியின் Success formula..
எனக்கு சிங்கத்தைப் பொறுத்தவரையில் செம திருப்தி..
போரடிக்கவில்லை..
எதிர்பார்த்துப் போயிருந்த ஹரியின் பாணிப் படம்..
சூர்யா சிங்கமாக கர்ஜித்திருக்கிறார்..
போஸ்டரில் பார்த்தது போல பயமுறுத்தவில்லை.;)
அவரது கண்ணும்,மீசையும்,நெஞ்சு நிமிர்த்திய கம்பீரமும் இன்னும் கண் முன்னமனசில் நிழலாடுகிறது..
பிரகாஷ்ராஜின் விஷமத்தனமான வீம்புகளும் தான்..
சிங்கம் - ரியல் சிங்கம் தான்..
சிங்கம் -கிர்ர்ர்
(கர்ஜிக்கிறதை சொன்னேங்க.. ஹீ ஹீ)
பி.கு - இலங்கையில் சிங்கத்துக்கு நம் வெற்றி FM வானொலி உத்தியோகபூர்வ வானொலி என்று அதுக்கும் இதுக்கும் லிங்க் குடுக்காதீங்க மக்கள்ஸ்..
அசல்,ஆதவன்,வி.தா.வ,சுறா.. என் ரெட்டை சுழி,கனகவேல் காக்க ஆகிய டப்பிகளுக்கும் நாம் தான்..
ஸோ அது வேற.. இது வேற..
ஸ்பெஷல் வாழ்த்துக்கள்..
இன்று பிறந்தநாள் காணும் இசைராஜா இளையாராஜா அவர்களுக்கும், அவர் ரசிகர்களுக்கும்..
நாளை பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் தம் ரசிகர்கள் (இவருக்கும் இருப்பாங்க தானே.. ;)) மற்றும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்..