கிரிக்கெட் உலகின் இரு பழம்பெரும் அணிகள் இன்று மிகப் பலம் பொருந்திய அணிகளாக கிரிக்கெட்டின் மிகப் புது வகைப் போட்டியின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
இந்த ட்வென்டி 20 உலகக் கிண்ணத் தொடரின் மிகச் சிறந்த இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது மிகப் பொருத்தமே.
2007 உலகக் கிண்ணத்தை நடத்தும் போது ஏற்பாடுகளை சொதப்பி,சகல பக்கங்களிலும் கேட்ட பெயரை சம்பாதித்துக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் இம்முறை நல்ல பெயரை எடுத்துள்ளது.பெரிதாக அதிருப்திகள் இல்லை.
முத்தாய்ப்பு வைப்பது போல குருட்டு அதிர்ஷ்டத்தினால் வராத இரு அணிகள் தம் திறமைகளினால் இறுதிக்கு வந்திருப்பது சிறப்பு.
ஆஸ்திரேலியா,இங்கிலாந்து இரண்டு அணிகளுக்குமே இந்த இறுதிப் போட்டியும், இந்த வெற்றிக் கிண்ணமும் அதி முக்கியம் வாய்ந்தவை.தேவையானவையும் கூட..
ஆஸ்திரேலிய அணி நடப்பு உலக சாம்பியன், மினி உலக சாம்பியன்..
இன்னும் அவர்கள் கைப்பற்றாத ஒரே கிண்ணம் இந்த ட்வென்டி 20 கிண்ணம் மட்டுமே. ஐந்து வருடங்களுக்கு முன் அறிமுகமான இவ்வகை விளையாட்டை அவர்கள் பெரியளவில் சீரியசாக எடுத்திருக்கவில்லை.இதனால் நேர்த்தி பெறவும் முயற்சிக்கவில்லை.இப்போது சீரியசாக எடுத்து சிரத்தையாக விளையாடுவதோடு, மிக சிறப்பான அணியாகவும் உருவாகியுள்ளது.
கடந்த இரு உலகக் கிண்ணங்களிலும் இறுதிக்கு முன்னரேயே அவமானகரமாக வெளியேறியதால் (2007 - அரையிறுதி, 2008 - முதல் சுற்று)இம்முறை ஆவேசமாக விளையாடி இறுதிக்கு முன்னேறியுள்ளார்கள்.
இங்கிலாந்து..
எப்போதும் மணவறை வரை வந்து தாலி ஏறாமல் போகும் மணப்பெண்கள் என்று கிரிக்கெட்டில் இவர்களை வர்ணிப்பதுண்டு.
பின்னே ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் ஆரம்பித்து 35 ஆண்டுகள் ஆகும் இவ்வேளையில் இதுவரை ஒரு கிண்ணம் தானும் இங்கிலாந்து அணியால் வெல்லப்படவில்லையே.. (ICC oneday tournaments)
மூன்று தடவை உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு வந்து தோற்றது..(79 ,87 ,92)
2004 ஆம் ஆண்டு ICC Champions கிண்ணப் போட்டியின் இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது.
போல் கோல்லிங்க்வூடின் தலைமையில் தாகமும்,வேகமும் கொண்ட இந்த அணி அந்தக் குறைகள்,கடந்த கால அவமானங்களைஎல்லாம் துடைபதெற்கு சங்கற்பம் பூண்டுள்ளது தெரிகிறது.
இதைவிட இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டின் பழங்காலப் பரம வைரிகள் என்பது அனைவரும் அறிந்ததே.. ஒரு மினி ஆஷசாக இன்றைய போட்டி வேகமான,பந்துகள் பயங்கரமாக மேலெழும் தன்மை(Bouncy) கொண்ட பார்படோஸ் ஆடுகளத்தில் இடம்பெறவுள்ளது.
இரண்டு அணிகளிலும் சில ஒற்றுமைகள் தெரிகின்றன.
துடுப்பாட்ட வரிசை நீண்டது;பலமானது;எந்தவொரு சூழ்நிலையையும் மாற்றி அமைக்கக் கூடியது.
களத்தடுப்பு அபாரமாக இருக்கிறது.
பந்து வீச்சில் நெகிழ்வுத் தன்மையும்,ஆடுகளங்களுக்கேற்ப மாறக் கூடிய சமயோசித தன்மையும் கொண்டிருக்கின்றன.
இரு பக்கத் தலைவர்களும் தங்கள் அணியை உற்சாகமூட்டி,அணி வீரர்களிடமிருந்து உச்ச பலனைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர்கள்.(ஆனால் கிளார்க்கின் துடுப்பாட்ட form பெரிதாக மகிழ்ச்சி கொள்ளும்படி இல்லை)
இவ்விரு அணிகளும் இதுவரை நான்கு ட்வென்டி 20 சர்வதேசப் போட்டிகளில் சந்தித்துள்ளன.
முதலாவது போட்டியில் இங்கிலாந்து 100 ஓட்டங்களால் அபாரமான வெற்றி ஈட்டியது. ஒன்று மழை காரணமாக கைவிடப்பட்டாலும்,பின் வந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய ஆதிக்கம்.
கடந்த T 20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பினர் இன்று வரை ஆஸ்திரேலியா தான் விளையாடிய 10 ட்வென்டி 20 போட்டிகளில் ஒன்றே ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது. அதுவும் சூப்பர் ஓவர் தோல்வி..
மறுபக்கம் இங்கிலாந்துக்கு இம்முறை உலகக் கிண்ணம் தான் உச்ச பட்சம்.
இன்றைய பார்படோஸ் ஆடுகளம் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் இவ்விரு அணிகளுக்குமே சாதகமாக இருந்துள்ளது.
சம பலம் பொருந்திய அணிகளாக இரு அணிகளும் தெரிந்தாலும்..
ஆஸ்திரேலிய அணியின் அதிவேகப் பந்துவீச்சுக்கு முன்னாள் இங்கிலாந்தின் வேகம் மிக சாதாரணமே.. நன்னேஸ்,டெய்ட்,ஜோன்சன் ஆகிய மூவருமே 150 km/h ஐ நெருங்கக் கூடியவர்கள்.வோட்சனும் 140 km/h வேகத்தில் பந்து வீசக் கூடியவர்.
இவர்களின் வேகமான பவுன்சர்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு கிலியைத் தந்து ஒரு கணம் இரத்தம் உறையச் செய்து தடுமாற வைப்பவை.
மறுபக்கம் இங்கிலாந்தின் ப்ரெஸ்நன், சைட்பொட்டம்,ப்ரோட் மூவருமே வேகத்தில் சாதாரணம் தான்;ஆனால் ஆடுகள ஸ்விங் தன்மைகளை உபயோகித்து எதிரணிகளைத் திணறடித்து உள்ளார்கள்.அத்துடன் இவர்களது slow bouncers தான் முக்கிய ஆயுதங்கள்.
எனினும் பார்படோசின் வேக ஆடுகளங்கள் இவர்களுக்கு கை கொடுக்குமா என்பது சந்தேகமே.
இவர்களின் நான்காவது மித வேகப் பந்து வீச்சாளரான லூக் ரைட் ஷேன் வொட்சன் போலவே பந்து வீசக் கூடியவர்.
மறுபுறம் சுழல் பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை இங்கிலாந்தின் பலம் அதிகம்.
கிரேம் ஸ்வான் கலக்குகிறார்;மிரட்டுகிறார்.
புதியவரான யார்டி ஓட்டங்களைக் கொடுப்பதில் மிகக் கஞ்சன்.துல்லியமாக இருவரும் வீசி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் ஸ்மித்,டேவிட் ஹசி,மைக்கேல் கிளார்க் மூவரும் பெரிய அச்சுறுத்தலாக தெரியவில்லை.
ஆனால் பார்படோஸ் ஆடுகளத்தில் இவர்களின் பங்கு பெரிதாக இருக்குமா என்பதே கேள்வி.
துடுப்பாட்ட வரிசையைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியாவின் மிரட்டும் ஆரம்ப ஜோடியான வோர்னர்-வொட்சனுக்கு இணையாக அதிரடிக்கிறது இங்கிலாந்தின் புதிய ஜோடி லம்ப்-கீஸ்வேட்டர்.
கொஞ்சமும் பயமில்லாமல் அடித்து நொறுக்கி எதிரணிகளிடம் மதிப்பு பெற்ற வோர்னர் போலவே கீஸ்வேட்டரும் தனக்கென்று ஒரு பெயர் உருவாக்கி விட்டார்.(ஆனால் அன்று ஆட்டமிழந்து செல்லும்போது லசித் மாலிங்கவிடம் நடந்து கொண்டது அப்பட்ட அநாகரிகம்)
இங்கிலாந்தின் பீட்டர்சனுக்கு சற்றும் குறையாத அதிரடியை ஆஸ்திரேலியாவின் கமேரோன் வைட் தருகிறார்.இருவரும் கணக்கிட்டு கன கச்சிதமாக ஓட்டங்கள் குவிக்கிறார்கள்.
தலைவர்கள் இருவரும் இன்னும் பெரிதாக ஓட்டங்கள் குவிக்கவில்லை.இன்று தான் முக்கியமான,நல்ல நாளுக்காகக் காத்துள்ளார்களோ??
ஹடின்,டேவிட் ஹசி மட்டுமன்றி ஸ்டீவன் ஸ்மித்,மிட்செல் ஜோன்சனும் அடித்து நொறுக்கக் கூடியவர்கள்...
இங்கிலாந்திலும் ஒயின் மோர்கன்,லூக் ரைட்,ப்ரெஸ்நன்,யார்டி என்று துடுப்பாடக் கூடிய வரிசை நீளம் தான்..
ஆனாலும் ஆஸ்திரேலியப் பக்கம் வெற்றி வாய்ப்பை அதிகமாக்கும் ஒரு மந்திரம் உளது..
சாத்தியப்படாத வெற்றிகளையும் வெற்றியாக்கக் கூடிய, தோல்விகளையும் வெற்றியாக மாற்றக் கூடிய அந்த அதிசய மந்திரத்தின் பெயர் திருவாளர் கிரிக்கெட்.. Mr.Cricket ஆமாம் மைக் ஹசி..
இதனாலும் இன்னும் இறுதிப் போட்டிகளில் அடிக்கடி பங்குபற்றிய அனுபவம்.. நெருக்கடியான சூழ்நிலைகளை அதிகளவில் கையாண்ட பக்கும் இவற்றின் அடிப்படையிலும் ஆஸ்திரேலியாவுக்கே இன்றைய கிண்ணம் என்று உறுதியாகக் கூறுகிறேன்..
பிட்சா,பேர்கர் ஏன் மசால் தோசை,புரியாணி என்று எதில் வேண்டுமானாலும் என்னுடன் பந்தயத்துக்கு வருவோர் ட்விட்டலாம் அல்லது பின்னூட்டமிட்டு பகிரங்க சவாலுக்கு வரலாம்..
(எத்தனையோ தாங்கிட்டோம்.. நம்ம ஆஸ்திரேலிய அணியை நம்ம்பி இதில் இறங்க மாட்டோமா?)
எனக்குள் ஒரு சின்னக் கேள்வி.. யாருக்கு போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருது?
மகேலவின் மொத்த ஓட்டப் பெறுதிகளை யாரும் முந்தும் சாத்தியம் இல்லாவிடினும்,கடைசி மூன்று போட்டிகளில் அவர் சோபிக்கத் தவறியதனால் அவர் வாய்ப்பிழக்கிறார்.
கெவின் பீட்டர்சன்,டேர்க் நன்னேஸ்,கமேரோன் வைட் அல்லது மைக் ஹசிக்கு வாய்ப்பிருக்கலாம்..
இவர்களில் இன்று பிரகாசிப்பவர் விருதைப் பெறுவார்.. என்ன சொல்றீங்க?
இந்த இறுதிக்குப் பிறகு மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியும் இடம் பெறவுள்ளது.
ஆண்கள் போட்டி மினி ஆஷஸ் என்றால் இது மினி ட்ரான்ஸ் டாஸ்மன் - Trans Tasman போட்டி..
அக்காக்களும் தங்கைகளும் மோதவுள்ளார்கள்..
ஆமாம்.. ஆஸ்திரேலியா எதிர் நியூ சீலாந்து..
இதிலும் ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு அதிகம்..
ஒரே இரவிலேயே இரு உலகக் கிண்ணங்கள் வெல்லும் வாய்ப்பு ஒரே நாட்டுக்குக் கிடைப்பதென்பது எவ்வளவு பெரிய சாதனை..
இன்னொரு முக்கிய விஷயம் மக்கள்ஸ்..
நாங்கள் வெற்றி FM வானொலியில் கடந்த IPL இறுதிப் போட்டியில் வழங்கியது போலவே இன்றும் இரவு பந்துக்குப் பந்து நேரடி நேர்முக வர்ணனை வழங்குவதாக உள்ளோம்..
நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கும் இதில் இணைந்து கொள்வது ஒரு வித த்ரில்..
(IPL இறுதியன்று நான் மன்னாரில் ஒரு இசை நிகழ்ச்சியில் இருந்தேன்)
தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே வானொலியில் தனித் தமிழில் நேர்முக வர்ணனை கேட்க வெற்றியோடு இணைந்துகொள்ளுங்கள்..
www.vettri.lk