எனக்கு முன் சென்றிருந்த நண்பர்கள் சொன்ன விஷயங்கள்,வெளிவரும் செய்திகள்,பதிவுகள் போன்றவற்றில் இருந்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட,ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தாலும்,கொஞ்சம் ஆவலுடனும்,நிறைய பயத்துடனும் தான் எனது யாழ் பயணம் ஆரம்பித்தது.
என்னுடன் மூன்று சக சிங்கள அலுவலக நண்பர்களும்,கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் நண்பரொருவரும் வந்தனர்.
யாழ்ப்பாணம் மீது சிங்களவருக்கு இருக்கும் ஆர்வம் தனியானது.
நாம் பலர் நினைப்பது போல இடம் பிடிப்பது,ஆதிக்கம் காட்டுவதையும் தாண்டிய ஒரு அன்பும்,பிரமிப்பும்,ஆச்சரியமும் அவர்களுக்கு இருப்பதை உணர்கிறேன்.
"உங்களவர்களின் (பாருங்களேன் அவர்களின் வார்த்தைகளின் வலிமையையும் எம் வலியையும்) கட்டுப்பாட்டில் இருந்தநேரம் வர ஆசைப்பட்டேன்.. நிர்வாகமும் நீதியும் சீரா இருந்ததாமே" என்று ஆதங்கப்பட்டார் ஒரு சி.நண்பர்.
வவுனியா தாண்டும் வரை பற்பல விஷயங்கள்,அலுவலகப் புதினங்கள் பேசிக்கொண்டிருந்த நாம், அதற்குப் பின் A 9 வீதி வழியாக இரு பக்கமும் கண்ட காட்சிகளினால் கடந்த காலங்கள்,அழிவுகள்,அனர்த்தங்கள் பற்றிப் பேசினோம்..
சிங்களவர்களின் அடிப்படை எண்ணங்கள் பற்றி அறிந்துகொள்ளக் கூடியதாக (மீண்டும் ஒரு தடவை) இருந்தது.
தமிழர்களின் பிரச்சினை அவர்களுக்குப் புரிகிறது.. ஆனால் ஆரம்பம்,அடிப்படை, போராட்டம் ஆரம்பித்த நோக்கம்,தீர்வுக்கான வழிகள் பற்றி தெளிவாகப் புரியவில்லை.நான் கொஞ்சம் சில விஷயங்களைத் தெளிவாக்கினாலும் எவ்வளவு தூரம் அதனால் பயன் என்று ஆழமாகப் போகவில்லை.
கிளிநொச்சியின் அழிவுகள் தந்த மனத்துயரம் கொஞ்ச நஞ்சமல்ல..
இறுதியாக 2002 ,2003 களில் இந்தப் பக்கம் வந்தபோது பார்த்த அந்த அழகிய பிரதேசம் எங்கே...
வீதியின் இரு பக்கமும் சிதைந்து போய் நிற்கும் கட்டடங்கள் நடந்த கோர,அகோரத் தாக்குதல்களுக்கு சான்றுகள்..
எத்தனை உயிர்கள் என நினைக்கும்போது மனதை ஏதோ பிசைகிறது..
என்னுடன் வந்த சிங்கள நண்பர்களுக்கும் அதே உணர்வு தான் என்பதை அவர்களது ஆழ்ந்த மௌனங்களும்,நீண்ட பெரு மூச்சுக்களும் காட்டி நின்றன.
*(இதற்கும் எல்லா உயிர்கள் இறப்பதும் இறப்புத் தானே.. அங்கே இறக்கவில்லையா..இங்கே கொலைகள் நிகழவில்லையா என்ன என்ன கொடும தனமா பைத்திய்யக்காரக் கேள்விகளை எழுப்பவேண்டாம்.. அந்தந்த இடங்களில் அது பற்றிப் பேசுவோம்)
கொக்கிளாய்,ஆனையிறவு, கொடிகாமம் என்று தாண்டும் போதெல்லாம், சுய அடையாளங்கள்,பழைய சுவடுகள் தொலைவதை,திட்டமிட்டு மாறுவதை மனது உணர்கிற நேரம் வலித்தது.
இதற்கும் எம் யாருக்குமே வழியோன்றிருக்கப் போவதில்லை.
யாழ்ப்பாணம்..
பார்த்தவுடன் கலவை உணர்வுகள்.. ஒரு பரவசம். கொஞ்சம் கவலை.. கொஞ்சம் அதிர்ச்சி..
உத்தியோகப் பணி நிமித்தமே போன காரணத்தால் யாழ் நகரை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல முடியவில்லை.
பெரிதாக இந்த ஏழு,எட்டு ஆண்டுகளில் மாறியிராவிட்டாலும், பெற்றுள்ள மாற்றங்கள் பயம்+கவலை தருகின்றன.
பழைய அப்பாவித்தனமும்,அன்பும் நிறைந்த மக்கள் இன்னமும் மாறாமல் இருந்தாலும்,பட்ட துன்பங்களும்,இனியும் படுவோம் என்ற பயமும் அவர்களை துரித பணம் உழைக்கும் யுக்திகளைப் பின்பற்ற மாற்றுகிறது என உணர்ந்தேன்.
யாழ்ப்பாணம் இப்போதெல்லாம் தினமும் அதிகம் பேர் வந்துபோகும் சுற்றுலாத் தலமாக மாறியதும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.
எங்கு பார்த்தாலும் தமிழை விட சிங்கள மொழியையே அதிகம் கேட்டேன்.. இது யாழ்ப்பாணம் என்ற உணர்வு இம்முறை பல இடங்களில் மனதில் எழவில்லை.
தென் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் பார்க்கவேண்டும் என்று ஆர்வத்துடன் வந்திருந்த அப்பாவி,வசதி குறைந்த சிங்கள மக்களைப் பார்க்கையில் கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது.
இடிந்து,சிதிலமடைந்து கிடந்த மற்றும் பூட்டிக் கிடந்த,கை விடப்பட்ட வீடுகள்,கடைகள்,கட்டடங்களிலே இலவசமாகத் தங்கி, காணப்படும் அயல் கிணறுகளில் குளித்து,ஆடைகள் தோய்த்து அருகிலேயே சமைத்து யாழ் சுற்றிப் பார்க்கிறார்கள்.
சிலர் கைவிடப்பட்டு பாழடைந்து இருக்கும் முன்னாள் ரெயில் நிலையத்தில் தற்காலிக வசிப்பிடமாக்கி இருக்கிறார்கள்.
இப்போது நல்லூர் கோவிலடியில் கடை போட்டு,இடம் பிடிக்க இருந்தவர்கள் அங்குள்ள இப்போதைய பலம் வாய்ந்தவர்களால் துரத்தப்பட்டிருப்பது பிந்திய தகவல்.
இவர்கள் வருவதோ,ஜாலியாக இளைஞர்கள் ட்ரிப் வருவதோ பரவாயில்லை..ஆனால் எந்த விதத்திலும் அமைதியான யாழ் வாழ்க்கையையும்,கொஞ்சமாவது எஞ்சியுள்ள கலாசாரத்தையும் கெடுத்து விடக் கூடாது என்பதே அங்குள்ள பொதுவான ஆதங்கம் அங்குள்ள பலரிடமும் இருப்பதை பலருடன் (கல்விமான்கள்,மாணவர்கள்,சாமானியர்கள்,தொழில் செய்வோர்,நமது நேயர்கள்) பேசியபோது தெரிந்துகொண்டேன்.
முன்பு புல்லட் எழுதிய யாழ்ப்பாண இளைய தலைமுறையினர் கலாசார சீரழிவுக்கு உட்படுவதைப் பற்றிய பதிவை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்..அவ்வேளையில் அது பற்றிப் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்..
நான் அதற்கு முன்னரே (ஊடகத்தில் இருந்த காரணத்தினால்)அது பற்றி ஓரளவு தெரிந்திருந்தேன்.
ஆனால் நேரில் கண்டு,உணரக் கூடியதாக நான் இருந்த நான்கு நாட்களும் அமைந்தன.
கட்டுக்கள் அறுந்ததன் பின்னர் எல்லாம் திறந்துவிடப்பட்ட நிலை என்பது இது தானோ?
கவலையாகவே இருக்கிறது.
தாராள மது பாவனை,வீதிக்கு வீதி விடலைகளின் கூட்டங்கள்,அதீத செல்,கணினிப் பாவனை என்று தாறு மாறாக மாறியுள்ளது இளைஞரின் வாழ்க்கை முறை.
அதற்காக யாழ்ப்பாண இளைஞர் ஜாலியாக இருக்கக் கூடாதா என்று அபத்தமாக யாராவது கேட்டால் எதற்கும் ஒரு அளவு வேண்டும் தம்பி என்று தான் என்னால் சொல்ல முடியும்..
யாழ்ப்பாணம் இப்போது முழுக்க முழுக்க தன வாழ்க்கைக் கோலத்தைப் பணம் சம்பாதிக்கும் மையமாக மாற்றியுள்ளது.
நகர்ப்புற வீடுகள் இப்போது அநேகமாக தங்குமிடம்,விடுதிகளாக மாறி வருகின்றன.பழைய,உடைந்த கட்டடங்கள் எல்லாம் இப்போது ஹோடேல்களாக மாறுகின்றன.
முன்பெல்லாம் யாழ்ப்பாண மக்களின் முதலீடாக கல்வியே சொல்லப் பட்டது.இப்போது அப்படியில்லை என்றார் நான் சந்தித்த பிரபல யாழ் கல்லூரி ஒன்றின் அதிபர்.சிந்தனை,செயல்கள் எல்லாம் வேறு வேறாகி விட்டன.பழைய கட்டுப்பாடுகள்,கலாசார விழுமியங்கள் இல்லையாம்.
போரின் பின்னதான தாக்கங்கள் என்று இதை சொல்லலாமா?
யாழ்ப்பாணம் சிற்சில அபிவிருத்திகளைக் கண்டுள்ளது தான்.ஆனால் இன்னும் பல ஆண்டுகள் செல்லும் அந்தப் 'பழைய' யாழ்ப்பாணத்தை நாம் காண.
அதற்கிடையில் இன்னும் எத்தனை எத்தனை வேண்டத்தகா மாற்றங்கள் நாம் அனுபவிக்கப் போகிறோமோ?
நான் 1983 முதல் 1990 வரை யாழ்ப்பாணத்தில் இருந்த களத்தில் எனக்கு ஞாபகமிருந்த அமுத சுரபி இருந்த இடம்,அப்பா வேலை செய்த ஆஸ்பத்திரி வீதி-இலங்கை வங்கிக் கிளை, சீமாட்டி ஆடையகம்,விமாகி Vimaki இருந்த இடம், யாழ் கோட்டைக்குப் போகும் வழியில் இருந்த இடங்கள்,பஸ் நிலையம் என்ற பல ஞாபகமிருந்த அடையாளங்கள் பெரிதாக மாறவில்லை.
ஆனாலும் இது முன்னேற்றத்தின் தேக்கம் என்பதும் புரிகிறது.
ஆனாலும் ஏழு வருடங்களில் இடம்பெற்றுள்ள அந்த அப்பாவித் தனம் மாறி கொழும்பு போன்ற நகரங்களுக்கே உரிய ஒரு செயற்கைத்தனம் பலருக்கு தொற்றி இருப்பது ரசிக்க முடியவில்லை.
யாழ் நூலகம், கோட்டை (சரித்திரப் பொக்கிஷம் உள்ளே சிதிலமடைந்து கிடக்கிறது), பண்ணைப் பாலம், நல்லூர் ஆலய முன்றல், ஈராண்டு கல்வி கற்ற யாழ் இந்துக் கல்லூரி என்று சில முக்கிய இடங்களை அவசர அவசரமாகப் பார்த்தேன்.
கிடைத்த அவகாசத்தில் பண்ணைப் பலம் வழியாக ஊர்காவற்றுறை பார்க்கப் போனோம்.இரு பக்கமும் கடல் வழியாகப் பாதையில் பயணிக்கையிலும் மாற்றங்கள் தெரியவில்லை.வெறிச்சோடிப் போயிருக்கும் ஊராகேவ் கானப்பட்ட்டது. கடற்கரையில் சில நிமிடங்களும் இருக்கவில்லை. ஆளுக்கொரு ஒரு வாழைப்பழமும் குளிர்பானமும் அருந்தி விட்டுக் கிளம்பி விட்டோம்.
யாழ்ப்பாணத்தின் புதிய அடையாளங்களாக ரியோ(Rio) ஐஸ்க்ரீமும் கைதடி மிக்சரும் மாறி இருக்கிறது.
பெயர்ப் பலகைகளில் 'புதிய' யாழ்ப்பாணம் தெரிகிறது.
வந்தேறு குடிகள் வருவார்கள் என்ற அறிகுறி தெளிவாகத் தெரிகிறது.
மக்களை சுற்றுப் பிரயாணம் அனுப்ப ஆவன செய்யும் அரசு,இங்கிருந்து வெளியேறி அகதி வாழ்வை இரு தசாப்தமாக வாழும் அப்பாவி முஸ்லிம்கள் பற்றியும் கொஞ்சம் அக்கறைப் படலாமே என மனம் அங்கலாய்க்கிறது.
உடலை எரித்த வெயிலையும் தாண்டியதாய் சுய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாய்த் தொலைத்து வரும் யாழ்ப்பாணமும்,அப்பாவித் தனத்தை இழந்து வரும் யாழ் நகர மக்களும் மாறி வருவது மீண்டும் பயணித்துக் கொழும்பு வருகையில் மனதை சுட்டது.
இது நான்கு நாட்களில் நான் சந்தித்த மக்கள்,இடங்கள் தந்த உணர்வுகளாக இருக்கலாம்.உண்மையும் இது தானா??? மீண்டும் ஒரு தடவை அடுத்த மாதம் அங்கே செல்லும்போதும்,என் ஊர் இணுவில் செல்லும்போதும் மேலும் அறியலாம் என்று நம்புகிறேன்.
யாழ் பயணம் பற்றிய ஒரு புகைப்படப் பதிவையும் அடுத்து இடுகிறேன்.. எழுத்துக்கள் சொல்லாததையும் படங்கள் சொல்லும்.