ஒரு நாளில் நூற்றுக்கணக்கான பாடல்களைக் கேட்கக்கூடிய, கேட்கவேண்டிய தொழிலில் நான் இருப்பது ஒருவகைப் பாக்கியம்தான். எத்தனை பாடல்கள் கேட்டு, ஒலிபரப்பினாலும் மகிழ்ச்சியைத் தந்தாலும் ஒரு சில பாடல்கள் தான் மனதின் மெல்லிய பகுதிகளில் சலனங்களை ஏற்படுத்தி – சிலிர்ப்பைத் தருவன.
அப்படியான அண்மைக்காலப்பாடல்கள் சில
ஹோசானா : விண்ணைத்தாண்டி வருவாயா
தாய் தின்ற மண்ணே :ஆயிரத்தில் ஒருவன்
உசுரே போகுதே : ராவணன்
நான் போகிறேன் : நாணயம்
துளித்துளி மழையாய் : பையா
கொஞ்சம் வெயிலாக : மார்கழி 16
உன் பேரை : அங்காடித்தெரு
காரணம் முதல்தரம் கேட்டபோது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை; பிடிக்கவில்லை என்பதைவிட ஆரம்பவரிகளின் அர்த்தம் அசிங்கமாகத் தோன்றியது.
கதறக் கதறக் கற்பழிப்பது அறிந்திருக்கிறோம்- ஆனால் கதறக் கதறக் காதலிப்பது பற்றிக் கேள்விப்படுவது இதுவே முதல்தடவை!
காதல் என்ற மென்மையான உணர்வை ஒருவன் கதறக் கதற அனுபவித்து – ஒரு பெண்ணுக்கும் வழங்குவானா என்ற ஒருவகை சங்கடம் இந்தப்பாடலை ஒலிபரப்பவிடாமல் செய்தது.
எனினும் மற்றவர்களின் நிகழ்ச்சிகளில் இந்தப்பாடலைக் கேட்க கேட்க மெட்டும் பாடலின் ஏனைய வரிகளும் இசையும் பாடிய பாடகரின் உருக்கமான குரலும் பாடல் மேல் ஈர்ப்பு வர வைத்துவிட்டது.
இப்போதெல்லாம் எனது ரிங்டோனில் இதும் ஒன்று. அடிக்கடி என் நிகழ்ச்சிகளில் ஒலிக்கின்ற பாடலும் இது.
படம் : குரு சிஷ்யன் 2010
பாடலாசிரியர் : கவிஞர் கபிலன்
பாடியவர் : பெல்லிராஜ், ரிட்டா, தீனா
இசை : தீனா
சுந்தர்.C & சத்யராஜ் ஒரு கவர்ச்சி மாமியுடன் நடித்துள்ள இந்த படத்தில் பாடல் காட்சியாக எவ்வாறு வந்துள்ளதோ எனச் சந்தேகமாயுள்ளது. இன்னும் படமும் பார்க்கவில்லை.
பார்த்த பிறகு படத்துடன் பாடல் எங்கே பிடிக்காமல் போகுமோ தெரியாது.
அதற்கு முதல் ரசித்துவிடலாமே… இதோ பாடல்…
கதற கதற காதலிப்பேன்
சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன்
உன்னை கதற கதற காதலிப்பேன்
சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன்...
கதற கதற காதலிப்பேன்
சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன்
உன்னை கதற கதற காதலிப்பேன்
சிறுகச் சிறுகச் சிறை பிடிப்பேன்...
யானை காதில் எறும்பைப் போல
காதல் மெல்ல நுழைந்திடுமே
காதல் வந்தால் பட்டாம்பூச்சி வானவில்லை விழுங்கிடுமே
துறு துறு பார்வையில் தூண்டிலிட்டாய்
நான் துடிக்கும் மீனாய் மாட்டிக்கொண்டேன்...
துறு துறு பார்வையில் தூண்டிலிட்டாய்
நான் துடிக்கும் மீனாய் மாட்டிக்கொண்டேன்... (கதற கதற காதலிப்பேன்)
முதன் முதல் உன்னை தொட்டவுடன்
ஒரு பறவையைப் போல நான் பறந்துவிட்டேன்
இதயத்தை காதல் வருடியதும்
என் இடம் பொருள் ஏவல் மறந்துவிட்டேன்
என் மீசை உன் மூக்குக்கு திருகாணி
என் மார்பினில் உன் முகம் மருதாணி
இதுவரை என்னை தொலைத்துவிட்டேன்
உன் இருவிழியாலே கிடைத்துவிட்டேன்
விதையென நெஞ்சில் விழுந்துவிட்டேன்
காதல் செடியாய் கொழுந்துவிட்டேன்
உலகம் முழுவதும் பழசு
இனி நம் காதல் தானடி புதுசு (கதற கதற காதலிப்பேன்)
கடைக்கண்ணாலே பார்த்தவுடன்
தலை கலங்கரை விளக்காய் சுழலுதடி
பதினெட்டு வயதை தீண்டியதும்
என் நரம்பினில் மின்னல் பாயுதடி
உன் கன்னம் அழகிய நெடுஞ்சாலை
உன் முகப்பரு அதற்கொரு வேகத்தடை
முத்தம் என்னும் நாடகத்தில்
முகத்தை முகத்தால் மூடலாம்
இரத்தம் எல்லாம் தீப்பிடிக்க
ஆனந்த தாண்டவம் ஆடலாம்
இதுவரை சொன்னது உனக்கு
இனிமேல் சொல்லடி நீ எனக்கு (கதற கதற காதலிப்பேன்)
காதுகளைக் காயப்படுத்தாத இசையிலே எங்கேயோ கேட்ட மெட்டிலே (இதே மெட்டில் வந்த அந்தப் பாடல் ஞாபகம் வந்தால் யாராவது சொல்லுங்களேன்- சிற் சில இடங்களில் ரெட் திரைப்படப்பாடல் ஒல்லிக் குச்சி உடம்புக்காரியை நினைவு படுத்துகிறது) கபிலனின் வரிகளில் காதல் வழிகிறது..
இந்த அற்புதமான கவிஞனா விஜயின் படங்களின் ஆரம்பப் பாடல்களுக்கு குத்து,மொக்கை, கொலை வெறி வரிகள் எழுதி தன் கவிதையை நீர்மையாக்கி வீணடிக்கிறார்?
நான் அடிச்சா தாங்கமாட்டே, டண்டானா டர்ணா, வங்கக் கடல் எல்லை எல்லாம் இவர் எழுதிய மரண பயப் பாடல்கள் தான்..
தமிழ் சினிமாவின் தலை விதி..
எளிதில் புரிகிற வரிகள் சந்தத்தோடு விழுவது அழகு..
என் மீசை உன் மூக்குக்கு திருகாணி
என் மார்பினில் உன் முகம் மருதாணி
என்னமாய் அனுபவித்து எழுதுகிறார் மனுஷன்..
மீசை செய்யும் குறும்புகளும்,மார்பில் இழைந்து அணைப்பதும் உவமானத்தோடு சேர்கின்றன..
வா எம் காதலால் உலகைப் புதியதாக்குவோம் என்று அழைத்த ஓமர் கய்யாமை ஞாபகப்படுத்துகிறார்
"உலகம் முழுவதும் பழசு
இனி நம் காதல் தானடி புதுசு" வரிகளால்.
கடைக்கண்ணாலே பார்த்தவுடன்
தலை கலங்கரை விளக்காய் சுழலுதடி
ரசித்த அழகான உவமை.. சுழலும் போதும் ஒளியோடு சுழல்வானாம் நாயகன்..
நான் அதிகம் ரசித்த இன்னும் இரு வரிகள்..
உன் கன்னம் அழகிய நெடுஞ்சாலை
உன் முகப்பரு அதற்கொரு வேகத்தடை
அடுத்த வரியிலேயே என் வேகத் தடை என்று கபிலன் சொல்கிறார்..
முத்தம் என்னும் நாடகத்தில்
முகத்தை முகத்தால் மூடலாம்
குறும்பு தான்...
இறுதி வரிகளில் காதல் வேண்டி இறைஞ்சுகிறார்..ஒவ்வொரு காதலனுக்கும் தன் காதலியும் இவ்வாறு தன்னைப் பற்றி உருக மாட்டாளா என ஏக்கம் இருக்கும் தானே.. அவை தான் இவ் வரிகளில் தொனிக்கின்றது..
இதுவரை சொன்னது உனக்கு
இனிமேல் சொல்லடி நீ எனக்கு
இதோ நான் ரசித்த பாடலை நீங்களும் ரசிக்க ...
(பார்க்க எப்படி இருக்குமோ தெரியாது என்பதால் பாடல் காட்சியுடனான வீடியோ லிங்க் எங்கும் நான் தேடவில்லை.. ஒரு முன்னெச்சரிக்கை தான்.. பார்த்த பிறகு அது பற்றிப் பார்க்கலாம்)
*பிற்சேர்க்கை - பாடலும் படமும் வெளிவந்த பிறகு இணைத்தது