ஆஸ்திரேலிய வழிப்பறி - பரிதாப பாகிஸ்தான்

ARV Loshan
13
நூறு மீட்டர் ஓட்டப் போட்டியொன்றில் தொண்ணூறு மீட்டர் வரை தங்கப்பதக்கம் உங்களுக்கே தான் என்று முன்னிலையில் இருந்துவிட்டு, கடைசி ஐந்து மீட்டர்களில் பின்னல் வந்த ஒருவனிடம் உங்கள் முதலிடத்தைப் பறிகொடுத்த அனுபவம் இருக்கிறதா?


அது தான் நேற்றைய பாகிஸ்தான் நிலையும்..


191 ஓட்டங்களை எடுத்து விட்டு.. (இந்த உலகக் கிண்ணத் தொடரில் இரணடாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இது),ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான விக்கெட்டுக்களையும் சரித்துவிட்டு, கடைசி இரு ஓவர்களில் 38 ஓட்டங்களைக் கொடுத்து போட்டியில் அதுவும் அரை இறுதியில் தோற்பதென்பது எவ்வளவு அதிர்ச்சியானது,அவலமானது என்பதை நேற்று பாகிஸ்தான் உணர்ந்திருக்கும். 


ட்வென்டி 20 போட்டிகளின் சரித்திரத்தில் மிகச் சிறந்த போட்டியாகவும், மிகச் சிறந்த விரட்டியடிப்பாகவும் நேற்றைய போட்டியை நாம் குறிப்பிடலாம்,(3rd best Chasing)
முதலாவது அரை இறுதி எப்படி சப்பென்று முடிந்ததோ,இந்தப் போட்டி அதையும் ஈடுகட்டுவது போல இறுதிவரை விறுவிறுப்பாக அமைந்திருந்தது.


சிக்சர்கள் மழையாகப் பொழிந்தன.பாகிஸ்தானுக்கு அக்மல் சகோதரர்கள்.. ஆஸ்திரேலியாவுக்கு ஹசியும்,வைட்டும்..
ஒரு பந்து மீதமிருக்க ஆஸ்திரேலியாவுக்கு அபாரமான,ஆச்சரியமான வெற்றி.


எனினும் மீண்டும் வெற்றி பெற வேண்டிய அணி வென்றதாகவே நான் உணர்கிறேன்..காரணம் தொடரில் ஒரு போட்டியிலும் தோற்காத அணி ஆஸ்திரேலியா. மாறாக பாகிஸ்தான் நேற்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், தொடராய் ப் பொறுத்தவரை இடை நடுவே தளம்பி,தடுமாறி பின் வென்று வந்த அணி.. 


ஆனால் அழுத்தங்கள் அதிகமான நேரங்களில் தான் பாகிஸ்தான் போராட்டத்தை வெளிப்படுத்தும் என்பது தொடர்ச்சியாக இல்லாவிடினும் இது போன்ற தருணங்களில் நிரூபிக்கப்பட்டே வருகிறது.


ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இந்தத் தொடரிலே பெறப்பட்ட மிக சிறப்பான ஓட்ட எண்ணிக்கை இதுவே..ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்களை இப்படி எந்த அணியாவது இப்படி துரத்தி,துவைத்து அடித்ததா என்றால் இல்லையே..
நன்னேஸ்,டெய்ட்,ஜோன்சன்,வொட்சன் என்று எல்லோருமே அக்மல்களின் அடியில் கலங்கிப் போனார்கள்.




கம்ரன் அக்மல் வழமையான சாத்து என்றால், உமர் அக்மல் யூத்து.. இளமை இரத்தம் ஆஸ்திரேலிய பிரபல,பயமுறுத்தும் பந்துவீச்சாளர்களை எல்லாம் எல்லைகள் தாண்டி ஓடச் செய்திருந்தார்.


ஆனால் 2009 செப்டம்பரில் இருந்து ஆஸ்திரேலிய அணியிடமிருந்து சர்வதேசப் போட்டிகள் எல்லாவற்றிலும் கிடைத்து வரும் தொடர்ச்சியான தோல்விகளின் தாக்கம் ஒரு மந்திர சுழலாக இருந்துவருகிறது. இது 14 வது தோல்வி.. 
ஆஸ்திரேலியா என்ற பெயரைக் கேட்டதுமே பில்லி,சூனியத்தில் அகப்பட்டவர்கள் போல ஆகிவிடுகிறார்களோ??


கிட்டத்தட்ட ஒரு ஓவருக்கு பத்து ஓட்டங்கள் என்ற இலக்கு, ஆரம்பத்திலேயே அதிரடி வோர்னரை இழந்துவிட்ட தாக்கம்.. இவை இரண்டும் ஏனைய அணிகளை நிலை குலைய வைத்துவிடும்.. 
ஆனால் இது ஆஸ்திரேலியா அன்றோ..


வொட்சன்,ஹடின் ஆகியோர் சிறிய அதிரடிகளை நிகழ்த்திவிட்டுப் போக, ஐந்து விக்கெட்டுக்கள் 105 ஓட்டங்களுக்கு இழக்கப்பட்ட பின்னர் இணைந்துகொண்டனர் வைட்டும், மைக்கேல் ஹசியும்..பங்கலாதேஷுக்கேதிராகவும்,இலங்கைக்கேதிராகவும் விளையாடிய வேளையில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை தம் அதிரடிகள் மூலம் காப்பாற்றிக் கரை சேர்த்த ஜோடி..


ஆனால் மற்றப் போட்டிகளை விட இந்தப் போட்டியில் சூழ்நிலை முற்று முழுதாக மாறுபட்டது.


ஆஸ்திரேலிய அரையிறுதியில்,ஒரு மிக சவாலான ஓட்ட எண்ணிக்கையை துரத்திக் கொண்டிருந்தது.சவாலான பந்து வீச்சு.. அழுத்தம் மிக அதிகம்...


ஆனால் கமேரோன் வைட்...
சும்மா லாவகமாக துடுப்பை சுழற்றி அடித்த ஐந்து சிக்சர்களும் அழகும்,அரக்கத்தனமும் கலந்தவை.


அதற்குப் பிறகு தான் மைக்கேல் ஹசியின் போட்டி ஆரம்பமானது..
அவ்வளவு நேரமும் தட்டியாடி, வைட்டுக்கு கொடுத்துக் கொண்டிருந்தவர் தானே முழுப் பொறுப்பையும் எடுத்து புயலாக மாறினார்..


24 பந்துகளில் 60 ஓட்டங்கள்.. 6 சிக்சர்கள்.. களத்தடுப்பாளர்களுக்கு எந்த வேலையுமில்லை. வானத்தில் கூவி செல்லும் ஹசியின் சிக்சர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


அப்துர் ரெஹ்மான் மட்டும் தான் ஓரளவு தப்பித்தவர்.. தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசி நேற்று ஹசி சூறாவளியாகும் வரை சிறப்பாகவே வீசியிருந்த ஆமீர்,அஜ்மல் ஆகியோரும் தப்பவில்லை.ஹசி காய்ச்சி எடுத்தார்..


கடைசி ஓவரில் பதினெட்டு ஓட்டங்கள் தேவை.ஜோன்சன் முதல் பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து ஹசிக்கு வாய்ப்பைக் கொடுக்க அதற்குப் பிறகு நடந்தது வரலாறு.. 
பாவம் அஜ்மலும்,அவரை நம்பி பந்தைக் கொடுத்த அப்ரிடியும்.. பாகிஸ்தானிய வெற்றியை ஒன்றரை மணி நேரமாக எதிர்பார்த்திருந்த அத்தனை ரசிகர்களும்.. 


6,6,4,6... 




இது தான் ஆஸ்திரேலியா.. இதனால் தான் இத்தனை உலகக் கிண்ணங்கள்,தொடர்களை அவர்கள் வென்றுள்ளார்கள்..
இறுதிப் பந்து வீசப்படும் வரை,தமது இறுதி விக்கெட் வீழ்த்தப்படும் வரை போராட்டத்தைக் கை விடுவதில்லை.
பிரபல கிரிக்கெட் எழுத்தாளர் பிரட்மன் காலத்தில் இதைத்தான் சொன்னார் 'Australianism' என்று.. 


உண்மை தான்.. வீழ்ந்து கிடக்கும் நேரங்களில் யாராவது ஒருவர் கை தூக்கிக்கொண்டு முன் வந்து அணியை முன்னகர்த்தி செல்லும் அந்த குணம் குற்றப்பரம்பரையான (ஆஸ்திரேலிய குடியேற்ற வரலாறு நீங்கள் அறிந்ததே) ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.
இது இருக்கும் வரை இன்னும் கிண்ணங்களை அவர்களிடமிருந்து கைப்பற்றுவது பற்றி எல்லா அணிகளுமே யோசிக்கவேண்டி இருக்கும்.


ஆனால் இந்த அரக்கத்தனமான (உறுதியினால்) அணியை இறுதி வரை போராட வைத்த அப்ரிடியின் சகாக்களுக்கு பாராட்டுக்கள். எல்லா அணிகளாலும் முடியாது.. இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களை இலகுவாக எடுத்தும் பின்னர் தடுமாறி சரணடைந்தது.
கோளிங்க்வூடின் இங்கிலாந்து சில வேளை ஆஸ்திரேலியாவுக்கு வித்தை காட்டலாம்.
ஆனால் பாகிஸ்தான் இந்த ஒற்றுமை,முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.


மக்கள்ஸ்.. 
நான் அடிக்கடி என் கிரிக்கெட் பதிவுகளில் கமேரோன் வைட் பற்றி வாயார புகழ்ந்ததுக்கான் காரணங்களை அவரது துடுப்பு கரீபியன் தீவுகள் முழுக்க காட்டி விட்டது.. இன்னும் அவர் நீண்ட தூரம் பயணிக்க இருக்கிறார்.






அடுத்தவர் மைக் ஹசி.. 
ஏழாவது மனிதன்.. ஆஸ்திரேலிய அணி வரிசையில்..
முதல் மனிதன் - ஆஸ்திரேலிய அணியின் தேவை,சூழ் நிலைக்கேற்ப ஆடுவதில்.. Mr.Cricket என்று சும்மாவா பெயர் வைத்தார்கள்.நேற்று இவர் ஆடியது நான் இதுவரை பார்த்த தலை சிறந்த ஆட்டங்களில் ஒன்று..


 இதை விட அதிகமாக என்னால் இவர்கள் இருவரையும் பற்றி சொல்ல முடியாது.. :)


இந்த இருவரையும் மற்ற ஒன்பது பேரையும் ஒரு வழி பண்ணாமல் இங்கிலாந்து தங்களது முதலாவது கிண்ணம் பற்றி சிந்திக்க முடியாது.. :)
அதாவது ஆஸ்திரேலியாவுக்கே கிண்ணம் என்பது திண்ணம்..


மினி ஆஷசாக மாறியுள்ள இறுதிப் போட்டி பற்றி பதிவிடும் எண்ணம் இருக்கு.. நாளைக்கு நேரம் இருப்பதைப் பொறுத்துப் பார்க்கலாம்..  

Post a Comment

13Comments

Please Select Embedded Mode To show the Comment System.*