ஜனாதிபதியின் ஆளும் கட்சி மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியின் பின்னர் இரண்டாவது தொடர்ச்சியான ஆட்சிக்காலத்தின் பின் பதவி ஏற்றதுமே சில,பல நடவடிக்கைகள் நிகழும் என அரசியல் அவதானிகள் மட்டுமல்ல, நம் போன்ற சாதாரண அப்பாவிகளும் எதிர்பார்த்ததே...
ஒரு குடும்பமாக நாடாளுமன்றமும்,கட்சியும் (இரண்டும் ஒன்று தானே..) செயற்படுவதும், ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில் அமைச்சுக்கள் வழங்கப்படுவதும் நடந்திருக்கிறது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான இழுப்பு,உடைப்பு,பிரிப்பு வேலைகள் கன கச்சித்தமாக நடந்தன;நடந்து கொண்டே இருக்கின்றன.
முதலில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி தாங்கள் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பட்டது..
பின்னர் திகாம்பரம் தனித்து செயற்படுவதாக அறிவித்திருந்தார்.. முதலில் தனியே,. பிறகு என்னவென்று எமக்குத் தெரியாதா?
அடுத்து கண்டி மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதரின் பவ்வியமான பாய்ச்சல்&பதுங்கல்..
இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ரகசியப் பேச்சாம்.. இரண்டு மந்திரிப் பதவிகளுடன் இன்னும் சில,பல .. தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க த.தே.கூ இப்படியாக இனி கூட்டை விட்டு வெளியே வந்து கூட்டில் இணையவேண்டும் என்பது காலம் சொல்லும் பாடம் தானே..
இதை விட சரத் பொன்சேகாவை முடக்கியதும் மடக்கியதும்,ஐக்கிய தேசியக் கட்சியை ஒதுக்கியதும் நடந்தது.
இதற்கெல்லாம் மேலே மக்கள்,வாக்களித்தோர் எதிர்பார்த்தவை பெரும்பான்மை பெற்றவுடன் நடக்கும் என எதிர்பார்த்த பல விஷயங்கள் உள்ளன.
முதலில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வாடும் மக்களின் மீளக் குடியமர்த்துகை.. அடுத்து ஜனாதிபதி வாக்களித்த முஸ்லிம் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான மீளக் குடியேற்றல்..
நீண்ட கால நோக்கிலான சமாதானத் தீர்வு...
இப்படி எவ்வளவோ பெரிய விஷயமெல்லாம் இருக்க,
அரசு பதவியேற்று தங்களது அளவில் சிறுத்த (37 இல் இருந்து இப்போது 41) அமைச்சரவை பொறுப்பேற்ற உடனேயே செய்த சில திருக் காரியங்கள் இருக்கே...
முதலில் ஊடகவியலாளர்களின் நண்பரான மேர்வின் சில்வாவை ஊடகவியல் பிரதி அமைச்சராக்கியமை.
இது பல அதிர்ச்சியலைகளை இலங்கையில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் ஏற்படுத்தியது.
எனினும் அப்போதும் ஊடகத்துறைக்கான அமைச்சராக யாரையும் நியமிக்காமல் ஒரு சஸ்பென்ஸ் கொடுத்து வைத்திருந்தார் ஜனாதிபதி.
பாற் சோறு ஊட்டல் வரை பரபரப்பு குறைவில்லாமல் இருக்கும் நேரத்திலே, அடுத்த அதிர்ச்சியாக அதுவரை யாருக்கும் வழங்காமலிருந்த ஊடக அமைச்சை முன்னாள் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான கெஹெலிய ரம்புக்வேல்லவுக்கு வழங்கியதும் விவகாரம் சுவாரஷ்யமாகியது.
ரம்புக்வெல்ல-மேர்வின் சில்வா மோதல் காரணமாக தான் இப்போது ஊடக பிரதி அமைச்சர் இல்லை என்று மேர்வின் சொன்னதாக செய்திகள் வெளிவந்தாலும், இப்போது வரை எது உண்மை என்று யாருக்குமே தெரியாது.
எமக்கு ஏன் வம்புன்னு தெய்வங்கள் இரண்டையுமே தொழுது வருகிறது ஊடகத்துறை.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வென்று கொடுக்க திட்டங்களின் சூத்திரதாரியாக இருந்த தம்பியார் கோதாபயவுக்கு மீண்டும் பாதுகாப்பு செயலர் பதவி வழங்கப்பட்டது யாரும் எதிர்பார்த்த ஒரு விஷயமே.
ஆனாலும் பாதுகாப்பு அமைச்சருக்கு நிகரான ஒரு பதவியாக இந்தப் பதவிக்கான அதிகாரங்கள் அமைந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருப்பதோடு கொஞ்சம் பயப்படவும் வைத்துள்ளது.
மிக முக்கியமாக ஏனைய எல்லா அமைச்சுக்களையும் கட்டுப்படுத்தும் பிரதான புள்ளியாக பாதுகாப்பு செயலர் இப்போது இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
இதிலே பல அமைச்சர்களுக்கும் அதிருப்தி நிலவுவதும் பரவலான கிசுகிசுப்பு.
நகர அபிவிருத்தி அதிகாரசபையும் இதன் கீழ் வருவதால் ஏற்கெனவே தமிழ் வர்த்தகர்கள், அடுக்கு மாடிகள் கட்டுவோர் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அதிரடியாக அடுத்தடுத்து இரு நடவடிக்கைகள்..
புறக்கோட்டை நடை பாதைக் கடைகள் அகற்றப்பட்டமை...
கொம்பனித் தெருவில் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டமை..
நடைபாதைக் கடையாவது பிறருக்கு இடையூறு,நகர அழகு கெடுகிறது என்று காரணங்கள் சொல்லலாம்.
ஆனால் கொம்பனித் தெரு குடியிருப்பு மக்கள் விவகாரம்?
அவர்கள் நீண்ட காலம் குடியிருந்த இடம் இது.. கொடுக்கப்பட்ட அவகாசமும் போதாது.தகுந்த முன்னறிவித்தல் அவர்களுக்கு மட்டுமல்ல கொழும்பு மாநகர சபைக்கும் கொடுக்கப்படவில்லையாம்.
அந்த அப்பாவிகளின் வீடுகளை இடித்து அவர்களை அடித்து துரத்திய விதம்..
கொடுமை..
எத்தனையோ கொடுமைகள் அரங்கேறிய இலங்கையில் இதெல்லாம் சர்வ சாதாரணம் தான்.ஆனால் ஒவ்வொரு முறை இப்படி யாருக்கு நடந்தாலும் மனசாட்சி உள்ள எமக்கு மனிதாபிமானம் துடிக்குதே.. என்ன செய்யலாம்..
தகுந்த இருப்பிடங்கள் கட்டிக் கொடுத்துவிட்டு இவர்களை அகற்றி இருக்கலாம்..
ஏற்கெனவே இலங்கையில் சார்க் மாநாடு நடந்த போது இவர்களைக் குறிவைத்து அகற்றப்பட்டனர்.
(அந்த வேளையில் தான் பிச்சைக்காரர்களைக் கடத்தி தனியிடத்தில் வைத்ததும், நாய்களை கொழும்பில் இருந்து அகற்றியதும் அப்போது தான் நடந்தது)
மீண்டும் அவர்களுக்கே.. பாவம்..
அதிலும் தங்கள் இருப்பிடங்களை இடிப்பதை அவர்கள் தடுக்க,அவர்களை காவல்துறையினர் அடித்து துரத்திய காட்சி இருக்கிறதே.. கொடுமையிலும் கொடுமை..
(காட்சிகளை இணையத்தில் தேடிப்பார்த்தேன்.. அழிக்கப்பட்டிருக்கு)
இது நடந்த அடுத்த நாளும் இன்னும் சில வீடுகள்,கடைகள் அதே பகுதியில் இடித்து அகற்றப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் பகுதி இது என்பது இங்கே நோக்கத் தக்கது.
அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் மட்டுமே கண்டித்து வழக்குப் போட்டதுடன் சரி.. யாருக்கு எதிராக வழக்கு?
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக.
இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் சிங்களவராக இருந்திருந்தால் இவ்வளவு வேகமாகக் காரியங்கள் நடந்திரா.. பிக்குகள் உடனே ஆர்ப்பாட்டம் செய்து தடுத்து நிறுத்தியிருப்பார்கள்.
ஆனால் இங்கே வாழும் அநேகர் முஸ்லிம்கள், அதற்கு அடுத்தபடியாக தமிழர்.
ஆனால் ஊடகங்கள் தவிர வேறு யாரும் மூச்சு விடவில்லை.
Slave Island என்று இப்பகுதிக்கு ஆங்கிலப் பெயர் இருப்பதாலோ?
அவை சட்ட விரோதக் கட்டடங்களாகவே இருக்கட்டும்.. ஆனால் நீண்ட காலத் தீர்வு ஒன்று இல்லாமல் இப்படி விரட்டி அடிப்பது என்ன நியாயம்?
அதுவும் வீதியில் அநாதரவாய் அழுதுகொண்டிருந்த அப்பாவி சிறுவர்களையும்,அழுது அரற்றும் பெண்களையும் பார்க்கும்போது யாருக்குத் தான் மனசு கனக்காது?
இந்தக் கொழும்பை அழகு பார்க்கும் வேலையெல்லாம் ஜூன் மாதம் நடக்கவுள்ள IIFA சினிமா திருவிழாவுக்காக தானாம்..
சுற்றுலா அமைச்சர் பசில் ராஜபக்ச என்பது நீங்கள் அனைவரும் அறிந்த தகவலே.. :)
இவை பற்றிப் பிறிதொரு பதிவிலே தருகிறேன்.
இதற்குள்ளே இன்னொரு பழைய நடைமுறை மீண்டும் வருகிறது.
வாகனங்களின் முன் பக்கவாட்டுக் கண்ணாடிகள் கறுப்பு நிறப்படுத்தல் (Tinting) தடை செய்யப்படுகிறது.
முன்பு போராட்டம் இருந்தது, யுத்தம் நடந்தது, பாதாள உலகக் குழுக்கள் இருந்தன என்றெல்லாம் காரணங்கள் இருந்தன..
இப்போது தான் எதுவுமே இல்லையே.. பின் ஏன்?
அதிலும் அமைச்சர்கள்,அரசியல் புள்ளிகள், பெரும் பணக்காரர்கள் இந்த விதிமுறையைப் பின் பற்றப் போவதில்லை..
இதிலும் கடும் வெப்பத்தில் தங்கள் வாகனக் குளிரூட்டிகளின் (A /C )வெப்பம் வெளியேறுவதைத் தடுக்க tint செய்த சாதாரண அப்பாவிகளுக்கு தான் மீண்டும் வதை.
அதே போல் இப்போது புதிதாக வரும் வாகனங்களுக்கு கண்ணாடியே tint ஸ்டிக்கர் ஒட்டாமல் tinted ஆக வரும்போது உரிமையாளர்கள் என்ன செய்வார்கள்?
இதென்ன சின்னப் பிள்ளைத் தனமான நியதிகள்,நீதிகள்..
இருக்கிற முக்கியமான வேலைகளைப் பாருங்கப்பு..
இதுக்குள்ளே கடத்தல்கள் வேறு பதற வைக்கின்றன..
யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,களனி,கொழும்பு என்று இட பேதமில்லாமல் எல்லா இடமும்..
சிறு குழந்தை முதல்,சிறுவர்,இளம் பெண்கள், நடுத்தர வயது மனிதர்கள் என்று பணம் உழைக்கும்/பறிக்கும் இலகு வழியாக மாறியிருப்பது கொடுமை..
பாதுகாப்பின்மையை மக்கள் உணர ஆரம்பித்துள்ளார்கள்.. மீண்டும்..
பெரும்பான்மையைக் கூட்டி ஆட்சிக்காலத்தையும், கேட்பார் யாருமில்லை என்று விலைகளையும் கூட்டுவதையும்,வீணான விதிகளை வைத்து விசர் ஏற்றுவதையும் விட்டு விட்டு இதைக் கொஞ்சம் பார்ப்பார்களா?
Post a Comment
20Comments
3/related/default