ஆசிய அணிகள்+ஆஸ்திரேலியா - உலகக் கிண்ண உலா

ARV Loshan
9


                    யார் கைகளை இம்முறை இது அலங்கரிக்கும்?


IPL போட்டிகளில் கழகங்களுக்காக காசுக்காக ஆடிய அத்தனை பெரும் இப்போது தத்தம் தாய் நாடுகளுக்காகவும்,தமது எதிர்காலத்துக்காகவும் ஆடும் நேரம் இது.
திகட்டிப் போய் விடும் என்று ட்வென்டி ட்வென்டி போட்டிகள் மீது அச்சம் ஏற்பட்டாலும், விறு விறுப்பாக, ஒரு அணி சாராமல் போட்டிகள் விளையாடப்பட்டால் இந்த உலகக் கிண்ணமும் ரசிக்கும் என்றே தோன்றுகிறது.


கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளை ஒழுங்குபடுத்துவதில் சொதப்பி,கடுமையான விமர்சனங்களை எல்லாப் பக்கமிருந்தும் சந்தித்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு மறுபடி தம்மைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இம்முறை போக்குவரத்து மற்றும் பராமரிப்புக்களில் பெரிய இடர்ப்பாடுகள் இருக்காது.


இந்த T 20 உலகக் கிண்ணத்தைப் பொறுத்தவரை பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன.


அடுத்த உலகக் கிண்ணத்துக்கான புதிய,இளைய வீரர்களின் இருப்பை ஒவ்வொரு அணிகளும் சரி பார்க்கும் அளவு கோல்.


ஆப்கானிஸ்தான்,அயர்லாந்து ஆகிய அணிகளின் எதிர்காலம்.. இந்த அணிகளுக்கான சர்வதேச அங்கீகாரங்கள்.


கிரிக்கெட்டை நவீனப்படுத்தி இளையவர்கள் ரசிக்கத்தகு மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்ற குரல்களுக்கான பதில் அவசர யுகப் போட்டிகளான இவை ரசிகர்களுக்கு உண்மையான விருந்தாகுமா என்ற கேள்விக்கான பதில்..


IPL போட்டிகளில் பார்த்தளவு அதிரடி துடுப்பாட்டங்களையும்,மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கைகளையும், சிக்சர் மழையையும் இங்கே கரீபியனின் மெதுவான ஆடுகளங்களில் எதிர்பார்க்க முடியாது என்று எதிர்வுகூறிய பெரிய,பிரபல விமர்சகர்களுக்கு சென்ட்.லூசியா ஆடுகளம் கரி பூசிவிட்டது.


பயண அசதி,நேர விரயம் என்பவற்றைக் கருதி மூன்றே மைதானங்களில் தான் இம்முறை இத்தனை போட்டிகளும் நடத்தப் படுகின்றன.
இவற்றுள் கயானா ஆடுகளங்கள் வேகம் குறைவானவை..சுழல் பந்துவீச்சாளருக்கு சாதகமானவை. குறைவான ஓட்டப் பெருதிகளே இங்கே எதிர்பார்க்கலாம்.


சென்ட்.லூசியாவின் ஆடுகளங்கள் நேற்றைப் போல கூடுதல் ஓட்டங்களைத் தரக் கூடியவை.. குஷியாக அமர்ந்து சிக்சர்கள் பறப்பதைப் பார்த்து கை தட்டலாம்.
சுழல் பந்து வீச்சாளர்களின் பலி பீடங்கள்.
இந்திய ஆடுகளங்களை ஒத்தவை.


பார்படோஸ் ஆடுகளங்களின் தன்மை எப்படி என்று ஊகிக்க முன்னர் போட்டிகளைப் பார்ப்பது உத்தமம். 




இலங்கை 


இன்று இலங்கை அணிக்கு ஒரு அக்கினிப் பரீட்சை..
வென்றால் அடுத்த சுற்று,தோற்றால் உடனே வெளியே..
இம்முறை உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் முதல் அணியாக இலங்கை மாறக்கூடிய அபாயம் உள்ளது.




கிண்ணம் வெல்லக் கூடிய பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விற்பன்னர்களால் கருதப்பட்ட இலங்கை அணி முதல் போட்டியில் பந்து வீச்சாளர்களாலும்,மஹேல என்ற தனி மனிதராலும் இறுதி வரை போராடி நியூ சீலாந்திடம் மண் கவ்வினாலும், இலங்கை அணியில் உள்ள ஓட்டைகள் பல தெரிகின்றன.


முக்கியமாக கடந்த முறை எல்லா அணிகளையும் வீழ்த்தி இறுதி வரை பயணிப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்த துடுப்பாட்டம் இம்முறை நொண்டுகிறது.
டில்ஷான் டெல்லி அணியிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு மோசமான form  இல்.
சங்கக்காரவும் பெரிய ஓட்டங்கள் பெறுபவராகத் தெரியவில்லை. சனத் ஜெயசூரிய அவரது ஆரம்ப காலம் போல இடை நிலை,கடை நிலை துடுப்பாட்ட வீரராக மாற்றப்பட்டு விட்டார்.


இலங்கை அணி செல்லும் பாதை தீர்மானிக்க முடியாமல் தடுமாறுவது தெரிகிறது.


சிறப்பாகப் பந்துவீசிவந்த குலசேகரவுக்கு முதல் போட்டியில் அணியில் இடமில்லை.


இப்போது முரளி வேறு உபாதையால் தொடர்ந்து விளையாட முடியாமல் ஆகியுள்ளார்.
முரளீதரனின் இழப்பு இலங்கை அணியை இவ்வகையான ஆடுகளங்களில் பெரிதும் சோதிக்கும் என நம்பலாம்.. ஆனால் ஓரளவு துடுப்பெடுத்தாடவும் கூடிய சுராஜ் ரண்டீவ் அணிக்குள் வருவது இன்னொரு பக்கம் இலங்கைக்கு வரப்பிரசாதமே.
எனினும் அனுபவத்தின் விலை பெரிதன்றோ? 
என்ன செய்யப் போகிறார்கள்?


இன்று தப்பித்தால் பிறகு சமாளித்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.
ஆனால் சிம்பாப்வேயுடன் விளையாடுவதென்பது பொறி கிடங்கில் கால் வைத்துக் கொண்டு கெரில்லா யுத்தம் செய்வது போல..
இன்றும் நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள் என்ற அவர்களது வழமையான வியூகத்துடன் களம் இறங்கப் போகிறார்கள்.


பாகிஸ்தான் 


நடப்பு சாம்பியன்கள் 
இந்த அணி ஹீரோவா,வில்லனா,காமெடியனா என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு குழப்பக் கலவை.. 
தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்ளும் குணம் இன்னமுமே மாறவில்லை.
களத்தடுப்பு மோசம் என்பதே பல இடங்களில் பாகிஸ்தானை கவிழ்க்கும் முக்கிய விடயமாக மாறியுள்ளது.
அதுபோல அப்ரிடியின் தலைமையில் இளமையும் வேகமும் பொருந்திய அணி யாரையும் வீழ்த்தக் கூடியது தான்.
ஆனால் என்னவோ இவர்களை நம்ப முடியாமல் உள்ளது.


அப்பிடி நேற்றுக் கூட பல தப்பும் தவறுமான முடிவுகளை எடுத்திருந்தார்.
அப்துல் ரசாக்கிற்கு பந்து வீச ஒரு ஓவர் கூட வழங்கவில்லை. சுழல் பந்து வீச்சாளர்களை நாளா பக்கமும் அடித்து நொறுக்கும் இலகுவான ஆடுகளத்தில் 12 ஓவர்கள் சுழல் பந்து வீச்சாளருக்கு..  


தொடர்ந்து அடி விழுந்தும் மொகம்மது ஹபீசுக்கு நான்கு ஓவர்கள்.
களத்தடுப்பு ஏற்பாடுகள் படு மோசம்..
இப்படியே போனால் பாகிஸ்தானின் பழைய பேய்களை விரட்டி மீண்டும் சம்பியனாவது கஷ்டமே.இல்லாவிடில் தலைவர் அப்ரிடி(பந்தைக் கடிக்காமல்) அவதாரம் எடுக்க வேண்டியிருக்கும்.


ஆஸ்திரேலியா எப்படியாவது பங்களாதேஷை வென்றுவிடும் என்பதனால் பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு செல்வதென்பது உறுதியாகி உள்ளது.
எனவே இப்போதே அடுத்த தயார்ப்படுத்தல்களை நடப்பு சாம்பியன்கள் செய்ய வேண்டி இருக்கும்.




இந்தியா




இம்முறை ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுக்ககூடிய, என் ஆஸ்திரேலியாவை விடப் பலமான ஒரே அணியாக சொல்லக்கூடிய அணி தோனியும் சகபாடிகளும் தான்.
தொடர் ஆரம்பிக்கு முன்பே சேவாகை இழந்தாலும் கூட,இன்னும் முழுப் பலத்தோடு தான் இருக்கிர்டது.
IPL தந்த பயிற்சியில் உரமான வீரர்கள் எந்த அணியையும் பிரித்து மேயக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
நேற்று தென் ஆபிரிக்காவுக்கெதிரான போட்டியில் கம்பீர் விளையாடமலும் கூட,இரு மாற்று ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களைக் கொண்டும், மாறுபட்ட ஹீரோக்கள் மூலமாகவும் வெற்றியை அபாரமாக சுவைத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியிடம் உள்ள ஒரு இயல்பை இவர்களிடம் காணக்கூடியதாக உள்ளது. ஒருவரை மட்டும் நம்பியிராமல் ஒருவர் விட்டால் இன்னொருவர் அணியைத் தாங்கி செல்லும் திறன்..
தோனியும் தேவையில்லை;சேவாகும் தேவையில்லை.
திறமைசாலிகள்,புது இரத்தம் பாய்ச்சி அடுத்த தலைமுறை அணியாக மாறியுள்ளது.
முதலாவது உலகக் கிண்ணத்தை வென்றெடுத்தது போல இன்னொரு உலகக் கிண்ணத்தை இந்திய அணி எடுக்கும் எனுமளவுக்கு வேகமும்,திறமையும் கொண்ட அணியாக இருக்கிறது.




ஆஸ்திரேலியா


டெஸ்ட்,ஒரு நாள் ஜாம்பவான்களாக இருந்தபோதிலும்,ட்வென்டி ட்வென்டி போட்டிகள் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு இத்தனை நாளாக ஒத்துவரவில்லை.அதிலும் உலகக் கிண்ணம் என்பது எப்போதுமே ஏமாற்றமும்,அதிர்ச்சியும் அளிப்பதுமாகவே இருந்துவந்துள்ளது.
பொன்டிங்கின் தலைமைத்துவம் எவ்வளவு தூரம் மற்ற எல்லா வடிவங்களில் புகழப்பட்டாலும், ட்வென்டி ட்வென்டி என்ற இந்த வகை அவரது கிரிக்கெட்டுக்கே ஆப்பு வைக்கப் பார்த்ததையும் யாரும் மறந்து விட முடியாது. 




இப்போது மைக்கேல் கிளார்க்கின் தலைமையில் இளைய அணி..ஒருவரை ஒருவர் விழுங்கக்கூடிய அளவுக்கு அதிரடி வீரர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.
தலைவர் கிளார்க் தவிர ஏனைய ஐந்து பிரதான துடுப்பாட்ட வீரர்களுமே தத்தம் IPL அணிகளின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களாக இருந்தவர்கள்.
உலகின் மிகச் சிறந்த அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு வரிசையும் உடையது ஆஸ்திரேலியா.
களத்தடுப்பு பற்றி சொல்லவே வேண்டாம்..


பார்க்கப் போனால் இந்திய - ஆஸ்திரேலிய இறுதிப் போட்டி ஒன்று வரும் போலவே நம்பத் தோன்றுகிறது..
இது இப்போதைய நிலவரம் மாத்திரமே..


சாதாரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே முடிவுகள் தலை கீழாகி விடுவதுண்டு.. அதிலும் இந்த விரைவு கிரிக்கெட்டில் ஓரிரு ஓவர்களிலேயே முடிவுகள் தாறுமாறாக மாறிவிடும்..


பார்க்கலாம்.. 


மஹேலவின் அசத்தல் form தொடர்கிறது.. இன்றும் அதிரடி.. அபார சதம் ஒன்றை நிறைவு செய்துள்ளார். இவ்வளவு காலமும் எங்கே வைத்திருந்தார்?
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கினால் போதும் அள்ளி விரித்து அடித்து நொறுக்குகிறார், ட்வென்டி ட்வென்டி போட்டிகளின் வரலாற்றில் நான்காவது சதம் இது.. 


நேற்று ரெய்னா இன்று மஹேல..
இலங்கையின் அடுத்த சுற்றுப் பிரவேசம் இப்போது உறுதி என நம்புகிறேன்..


அய்யோ பாவம் இலங்கை.. மழையின் வடிவில் ஒரு புதிய வில்லன்.. வருண பகவானே இன்று உன் நாளா?


ஆனால் உலகின் அத்தனை முன்னணிப் பந்து வீச்சாளர்கள் அத்தனை பேரையும் பயந்து நடுங்கச் செய்த சனத் இன்று எட்டாம் இலக்கத்தில் வந்தது பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
காலம் செய்த கோலம்???


என்னை கவர்ந்த இம்முறை சாதனைகளில் முக்கியமான ஒன்று பற்றி முன்னைய பதிவில் சொல்லாமல் விட்டு விட்டேன்..
நேற்று ஆஸ்திரேலிய அணியின் இறுதி ஓவர்..
ஓட்டம் எதுவும் இல்லாமல் ஐந்து விக்கெட்டுக்கள்..
என்ன ஒரு அபாரமான பந்து வீச்சு..
மொஹம்மத் ஆமீர்.. 18 வயதில் என்ன ஒரு பக்குவம்.. 
மூன்று விக்கெட்டுக்களே அவர் எடுத்திருந்தாலும், அடுத்த இரு ரன் அவுட்டுகள் கூட அவரின் கட்டுப்பாடான பந்துவீச்சில் ஓட்டங்கள் பெற முடியாமையினாலேயே வீழ்ந்தன.
சரியாக இவரைப் பராமரித்தால் அடுத்த வசீம் அக்ரம் உருவாகுவார்.




முதல் பதிவுக்கு மட்டும் வாக்குப் போட்டுக் காணுமா?
இதோ இந்த இரண்டாம் பதிவுக்கும் வாக்குப் போடுங்க மக்கள்ஸ்.. ;)


மறை வாக்குப் போடுவோர், நான் போட்டால் மட்டும் தான் போடுவேன் என்போர்(என்ன கொடுமையான நியாயம் இது.. ;)), அனானியா வராமல் பெயருடன் நேரே வாங்க.. :)
லொக் இன் ஆகி இருக்கும் நேரம் படிக்கும்,பிடிக்கும் பதிவுகளுக்கு போடாமல் போயிருக்கிறேனா/ சரியாப் பாருங்கப்பா.. 

Post a Comment

9Comments

Please Select Embedded Mode To show the Comment System.*