காட்டாறாக ஓடும் வெள்ளம், பயங்கர இடிகள்,கொட்டும் அடை மழையில் தட்டுத் தடுமாறி பாதி நனைந்து (வாகனத்தில் சென்றும்) திரையரங்கு பினால் 10 .30 என்று சொல்லப்பட்ட காட்சி ஒரு மணிநேரம் தாமதித்தது.
என் குட்டி விஜய் ரசிக மகன் அதற்குள் ஒரு நூறு தடவையாவது சுறா சுறா விஜய் விஜய் என்று சகஸ்ர நாமம் நடத்தி இருப்பான்.
அப்போது மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு காய்ந்து சுறா பார்க்க வந்திருக்கிறேன்.. மொக்கை கொடுமையை அனுபவிக்க வைத்து வாய் நிறைய வசை பாட வைக்கக் கூடாதென்று..
பெயரோட்டமே விஜயின் ஐம்பதாவது படத்துக்கு விசேடமாக அதிக அழுத்தம்,ஈர்ப்புடன் இருக்கிறது.
மழை வெள்ளப் பின்னணி.. நேற்றைய கொழும்பு நகரையும் ஞாபகப்படுத்தி சுறா வித்தியாசமாகத் தான் இருக்கப் போகிறது என்று கொஞ்சம் ஆறுதல் பட, முதல் காட்சி வச்சாங்க பாருங்க..
ஐயோ அம்மா.. எப்போ தான் இப்படி மொக்கை அறிமுகங்களை இவர்கள் கை விடுவார்களோ தெரியாது..
யாழ் நகர் (இது நம்மைக் குறி வைத்தா??) மீனவக் குப்பத்தின் தலைவர்(மாதிரி) சுறா எனப்படும் விஜய்.அங்குள்ள 1400 குடும்பங்களினதும் செல்லப் பிள்ளை.
அங்குள்ள மீனவப் பெரியவர் ஒருவரின் வார்த்தைகளில் (இயக்குனர் ராஜகுமாரின் வசனப்படி) சொல்வதானால்,
சுறா..
பத்து தாய்மாரின் பாசம்,
நூறு யானைகளின் பலம்,
ஆயிரம் புயல்களின் வேகம்,
லட்சம் சாணக்கியர்களின் அறிவு
உடையவனாம்..
விஜயின் அடுத்த கட்டத்துக்கான அத்தனை பில்ட் அப் ஆயத்தங்களும் முதல் காட்சியிலிருந்தே அடுக்கப்படுகின்றன.
ஒரு தலைவராக மக்களுக்கு சேவை செய்ய எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு வீர இளைஞனாக விஜய்.
தங்கள் மீனவ மக்கள் குடியிருக்கும் இடத்தை வளைத்துப் போட எண்ணும் அமைச்சருடன் மோத வேண்டி ஏற்படுகிறது.
"மந்திரி என்றாலும் மோதுவேன்.. மன்னனா இருந்தாலும் பயமில்லை" வசனங்கள் சூடேற்றுகின்றன.
கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட்..
இடையே கொஞ்சம் லூசு போன்ற (நம்ம லோக்கல் பாஷையில் பெக்கோ) அழகான,கொஞ்சம் வசதியான தமன்னாவுடன் காதல்..
வடிவேலுவுடன் லொள்ளு+லூட்டி..
படத்தின் முதல் சில காட்சிகளிலேயே விஜய் தனது அதி முக்கியமான,வெற்றி பெற்றே ஆகவேண்டிய ஐம்பதாவது படத்தை ஏன் பெரிதாக அறியப்படாத,இதுவரை பெரிய,பிரபல ஹீரோக்களை இயக்காத S .P .ராஜகுமாருக்கு கொடுத்தார் என்று..
என் உயிர் நீ தானே, பொன் மனம், எம் புருஷன் குழந்தை மாதிரி, கார்மேகம்,அழகர்மலை என்று சராசரி படங்களைக் கொடுத்தவர் தான் இந்த ராஜகுமார் (அப்பிடித் தான் திரையில் போடுறாங்க. ராஜ்குமார் இல்லையாம்)
விஜய் - அழகாக கம்பீரமாக இளமையாக,துடிப்பாக இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் இவை மேலும் அதிகரிக்குதே.. ரகசியம் என்ன?
கச்சிதமான ஸ்டைலிஷான உடைகள்.
விஜயின் ஐம்பதாவது படம் என்பதால் படம் முழுவதும் அவரே..
ஆடுகிறார்,சவால் விடுகிறார்,பின்னால் கை கட்டிக் கொண்டு நடக்கிறார்,அரசியல்வாதிகளுக்கு (சக நடிகர்களுக்கு அல்ல) சவால் விடுகிறார்,காதலிக்கிறார்,அறிவுரை சொல்கிறார், ஜோக்கடிக்கிறார்.. இன்னும் ஒரு நாயகனுக்கு என்னென்ன முடியுமோ எல்லாம் செய்கிறார்..
இத்தனையும் செய்தவர் நல்ல கதையையும் கேட்டு தெரிந்திருக்கலாமே என்பது தான் எம் ஆதங்கம்.
சண்டைக் காட்சிகளில் அனல் பறக்க விடுகிறார்.(கனல் கண்ணன் உபயம்)
நாடங்களில் இன்றைய இளம் கதாநாயகர்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடும் அளவுக்கு துடிப்பு.கண் வெட்டாமல் பார்க்க வைத்துள்ளார்.
பொம்மாயி, நான் நடந்தா அதிரடி இரண்டு பாடல்களும் புயல் வேக நடன அசைவுகள்..
ராஜு சுந்தரம்,ராபர்ட் பாராட்டுக்குரியவர்கள்.
பல இடங்களில் வசன உச்சரிப்பிலும், கண்,முக அசைவிலும் விஜய் ஜொலிக்கிறார்.
ஆரம்பத்தில் சாதாரண மீனவனாகவும், பின் ஒரு அதிரடி ஹீரோவாகவும் வரும்போதும் வெவ்வேறு விதமாக அதிரடிக்கிறார்.
தமன்னா - அழகோ அழகு.. அதிலும் கொஞ்சம் கவர்ச்சியைத் தூக்கி அசத்துகிறார். அந்த இடையும் கண்களும்,உதடும் கலக்கல்.
ஆனால் தமிழ்ப் படங்களில் அழகான,பணக்கார,அரை லூசான கதாநாயகிகளைக் காட்டுவதை எப்போ தான் நிறுத்தப் போகிறார்களோ?
தமன்னா ஒரு அழகுப் பொம்மையாக,கடற்கரையோரம் நடமாட,பின் பாடல்களில் நடனமாட பயன்படுகிறார்.வேட்டைக்காரன் அனுஷ்கா அளவு கூட வேலையில்லை.
தன நாய்க்குட்டிக்காக தற்கொலை செய்ய வந்து தன்னைக் காப்பாற்றிய விஜயின் நல்ல குணங்கள் பார்த்து மயங்கிக் காதலில் விழுகிறார்.
பாடல் காட்சி ஒன்றில் தொள தொள கால்சட்டையை பிருஷ்டப் பகுதியில் விஜய் பிடித்து ஆட்ட ஆடுகிறார். என்ன டான்ஸ் மூவ்மெண்டோ?
போக்கிரிக்குப் பிறகு மீண்டும் வடிவேலு விஜயுடன்..
இருவரும் சேரும்போதெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு கலக்குகிறார்கள்.
வில்லன் தேவ் கில்.. கம்பீரமாக இருக்கிறார்.வழமையான கடத்தல் காரர்+ஊழல் அரசியல்வாதிப் பாத்திரம்.
வேறொன்றும் விசேடமாக சொல்ல இல்லை. இந்த வில்லன் பாத்திரம் இன்னும் கொஞ்சம் புதுசாக,பிரம்மாண்டமாக படைக்கப்பட்டிருந்தால் சுறா இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்குமோ என்னவோ?
வில்லனின் உதவியாட்களாக ஸ்ரீமன்(இப்போதெல்லாம் ஹீரோவின் நண்பனாக நடிப்பதில்லையே.. ஏன்? வயசாகிட்டோ?),இளவரசு,.. இன்னும் நட்புக்காக ஒரே காட்சியில் ராதாரவி, மதன்பாப்,ரியாஸ்கான் ஆகியோரும் இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஏகாம்பரம்.. பெரிதாக மினக்கெடவில்லை எனத் தோன்றுகிறது.பாடல் காட்சிகளிலும் கமெராவைக் குலுக்கி அசைத்ததில் சரி.
சண்டைக் காட்சிகள்,விஜயின் சவால் காட்சிகள்,நடனங்கள் போன்றவற்றில் படத் தொகுப்பாளர் டொன் மக்ஸ் தன கைவண்ணம் காட்டி உள்ளேன் ஐய்யா சொல்கிறார்.
பாடல்களில் சராசரியாகத் தெரிந்த மணிஷர்மா பின்னணி இசையில் அதைவிட சரிந்து போயுள்ளார்.
எல்லாம் எங்கேயோ கேட்ட பீலிங்க்ஸ்.. பகவதி,வேட்டைக்காரன்,போக்கிரி ஞாபகமெல்லாத்தையும் காட்சிகள் கொஞ்சம் நினைவூட்டினால்,இசை முழுக்க ஞாபகப்படுத்துகிறது.
சண்டைக் காட்சிகளின் நீளம் எங்களைத் தான் சோர்வாக்குகிறது என்று பார்த்தால் இசையமைப்பாளரையுமல்லவா?
ஒரே மாதிரி டெம்ப்ளேட் இசை.
விஜய் எந்த உடையிலும் அழகாகத் தெரிகிறார்.
ஆனால் சாதாரண குப்பத்து மீனவன் அவருக்கென்றே உரிய ஒரே pattern சேர்ட் அணிவதும்,பின்னர் வில்லனிடம் இருந்து லபக்கிய நூறு கோடி ரூபாவில் தன குப்பத்து மக்களுக்கு கல் வீடு கட்டிக் கொடுக்கும் இலட்சியத்துக்கு முன்னதாகவே,தான் மட்டும் விலையுயர்ந்த ஒபேல் காரில், கொட்டும் சூட்டும் கறுப்புக் கண்ணாடியுமாகத் திரிவதும் படம் முழுக்க இருக்கும் பல அபத்தங்களில் சில.
விஜய் மட்டும் இல்லாவிட்டால் இது முதல் வாரத்திலேயே டப்பாவாகக் கூடிய கதை..
ஐம்பதாவது திரைப்படமாக இந்தக் கதையைத் தெரிவு செய்யுமளவுக்கு விஜய் அவ்வளவு சினிமா அறிவு அற்றவரா?
இப்படிப்பட்ட படங்கள் விஜயின் காலத்துக்கு முந்திய கதாநாயகர்களின் காலத்தில் நூறு நாள் வெற்றித் திரைப்படத்துக்கான போர்முலா தான்.. ஆனால் இப்போது விஷால்,நகுல்,பரத் கூட இப்படிப்பட்ட கதைகளைத் தேர்ந்தேடுப்பார்களோ தெரியவில்லை.
எல்லாம் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று விஜயின் தந்தையாரை கெட்ட தூசண வார்த்தைகளால் வைத்து தீர்த்தார் திரையரங்குக்கு வெளியே கடுப்புடன் வந்த மப்பிலிருந்த தீவிர விஜய் ரசிகர் ஒருவர்.
அடை மழை,நேர விரயம்,தூக்க நேரம் குறைந்தது, மீண்டும் விஜய் தந்த ஏமாற்றம் எல்லாம் எனக்கு இன்று இரண்டாவது நாளாகவும் தலைவலி,எரிச்சலைத் தந்து கொண்டிருக்கிறது.
இப்படியே காவல்காரனும் அமைந்தால் விரைவில் விஜயகாந்த் போலவே ஆகிவிடலாம்.. முழுநேர அரசியல்வாதியாவதைப் பற்றி சொன்னேன்..
சில விஜய் படங்கள் யாருக்குப் பிடிக்காவிட்டாலும்,அவர் ரசிகர்களுக்கு மட்டுமாவது பிடிக்கும்..ஆனால் சுறா என்றவுடன் அவரின் தீவிர ரசிகர்களுக்கும் சுர்ரென்று கோபம் வந்து "அடுத்து காவல்காரன் வரும். அப்போ பார்க்கலாம் " என்று சொல்வதிலிருந்து என்ன தெரிகிறது மக்களே.. ;)
படப் பெயரை விட்டுக் கொடுத்ததில் இப்போது அஜித் நிம்மதியாக இருப்பார் போலிருக்கே.
சுறா - சூ..
சூனியம் வைத்துக் கொண்டார் விஜய் என்று சொல்ல வந்தேனுங்க
இன்று சர்வதேசத் தொழிலாளர் தினம்- உழைத்து உழைத்து உலகை உயர்த்தும் உன்னதப் பிறவிகளான என் நண்பர்கள் அத்தனை பேருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.