எங்கள் வானொலியில் சிலவேளை வேடிக்கையாக நம் பேசும்போது சொல்வதுண்டு "நிகழ்ச்சியைப் பற்றிய விளம்பரம், நிகழ்ச்சியை விட நல்லா இருந்தது "என்று..
பையா படமும் எனக்கு அப்படித் தான்.விளம்பரம் பார்த்து கட்டாயமாகப் பார்க்கவேண்டும் என்று நினைத்து மோசம்போன படம் பையா..
நல்ல காலம் சுகவீனத்தால் முதல் நாளே போய்ப் பார்க்கவில்லை.இல்லாவிட்டால் இன்னும் ரொம்ப நொந்திருப்பேன்.
தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட பரபர விளம்பரங்கள்;யுவனின் இசையில் மனதைத் தொட்டு எந்த நேரமும் காதுகளில் ரீங்காரமிட்ட,உதடுகள் முணுமுணுத்த இனிமையான பாடல்கள் இவை மட்டுமல்லாமல் அண்மைக்காலத்தில் தொடர்ந்து அடிவாங்கிய லிங்குசாமி ஏதாவது புதியதாய் செய்திருப்பார் என்ற ஓவரான எதிர்பார்ப்பு, கார்த்தி இதிலாவது கொஞ்சம் வித்தியாசமாக வருவார் என்ற நம்பிக்கை,தமன்னா மீதான அண்மைக்கால ஈர்ப்பு என்று பையா பார்க்க மிக முக்கியமான (!) காரணங்கள்,எதிர்பார்ப்புக்களுடன் போயிருந்தேன்.
வேலையற்ற வெட்டிப்பயல் ஒருத்தனுக்கும், போக்கிடமற்ற அழகான பெண்ணொருத்திக்கும் இடையில் நீண்ட தூரப்பயணத்துக்கிடையில் ஏற்படும் ஈர்ப்பும் காதலும் தான் கதை. எவ்வளவு அழகாக நயத்துடனும்,நகைச்சுவை,விறுவிறுப்பு கலந்து எடுக்கவேண்டிய கதையை தனது வழமையான சொதப்பல் மசாலாக்களைக் கலந்து கொன்றுள்ளார் லிங்கு.
பாடல் காட்சிகளும்,தமன்னாவும் தான் கொஞ்சமே கொஞ்ச ஆறுதல்..
கார்த்தி அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே சொதப்புகிறார் இயக்குனர். நிற்கிற பஸ்ஸில் ஏறமாட்டாராம் ஹீரோ..இதைத் தான் வடிவேலுவே அன்றே காதல் தேசத்தில் செய்துவிட்டாரே..
பாவம் கார்த்தி..
ஒட்டாத நண்பர்களுடனான காட்சிகள். முதல் பார்வையிலே தமன்னாவைப் பார்த்து காதல் வயப்படுவது அவருக்காக அரை லூசாக அலைவது எல்லாம் முன்பே பார்த்தவை..ஏதாவது கொஞ்சமாவது வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கக்கூடாத மிஸ்டர்.லிங்கு?
தமன்னாவுடன் கார் பயணம் ஆரம்பிப்பது சுவாரஸ்யமாக இருந்தாலும் கார் பயணம்,வில்லன்களின் துரத்தல்,இடை நடுவே வருகிற சண்டைகள் என்பவை எதோ இயந்திரத் தனமாக ஊகிக்ககூடியவாறு இருப்பது அயர்வையும் அலுப்பையும் தருகிறது.
கொட்டாவி வந்து தூங்கலாமா என்று யோசிக்கும்போதெல்லாம் மதியின் ஒளிப்பதிவும்,யுவனின் இசையில் வரும் பாடல்களும் தான் காப்பாற்றுகின்றன.
பாடல்காட்சிகள் எந்தக் குறையும் சொல்ல முடியாதவை.மதி கலக்கி இருக்கிறார்.வைக்கப்பட்ட கமெரா கோணங்கள்,தரப்பட்ட ஒளிக் கலவைகள்,கமெரா அசைவது என்று கண்களுக்கு குளிர்ச்சி விருந்து..
அதிலும் அடடா மழைடா,துளி துளியாய் பாடல்கள் மீண்டும் மீண்டும் பார்க்கலாம்..
அடடா மழைடாவில் தமன்னாவை உரித்து எடுத்தது கொஞ்சம் ஓவர் தான்.மழையில் நனைந்த ஈரத்துடன் தம்மன்னா ஆடுவது கவர்ச்சியின் உச்சம்.
சுத்துதே பாடல் அசத்தல்.அது செட் போட்டு எடுக்கப்பட்டது என்று பக்கத்திலிருந்த விமல் சொன்னார். கொஞ்சமே அது புலப்பட்டாலும் அண்மைக்காலத்தில் இப்படியொரு கவித்துவமான காட்சியமைப்பு படங்களில் வரவில்லை என்றே சொல்லலாம்.இருட்டின் பின்னணியில் நிலவும்,நீரோடையும் பாடலின் அழகான வரிகளும் .. சொல்ல வார்த்தைகளில்லை..அனுபவித்து ரசியுங்கள் நீங்களும்.
பாடல்களுக்கு முத்துக்குமாரின் வரிகள் உயிரையும் உணர்வையும் கொடுத்திருக்கின்றன.ஒவ்வொன்றுமே கேட்டு ரசிப்பதோடு,பார்த்து ரசிக்கும் விதத்தில் படமாக்கித் தந்துள்ள இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளர் மதிக்கும் நன்றிகள்.
கார்த்தி பாவம்.. பருத்திவீரன் எடுத்துக் கொடுத்த எதிர்பார்ப்பெல்லாம் படிப்படியாகக் கரைந்து போகிறது.புதிதாக பிரெஷ் ஆன ஒரு கதாநாயகனை எதிர்பார்த்த எமக்கு இன்னொரு விஜய்,விஷால் தேவையா?
சண்டைக் காட்சிகளிலெல்லாம் முப்பது அடியாட்களை அதுவும் மாமிச மலைகளை எல்லாம் தனியாளாக துவம்சம் செய்கிறார்.பார்க்கும் எமக்கு பயமாக இருக்கிறது.
இரும்புத் தடிகளால் அத்தனை அடி வாங்கியும் சீறி எழுந்து தமன்னாவை காப்பாற்றுகிறார்.
விஜய் எல்லாம் தோற்றுவிடுவார்.
ஆள் கொஞ்சம் கம்பீரமாகவும் ஆண்மை நிறைந்த தோற்றத்தோடு காட்டப்பட்டாலும் (அண்ணன் சூர்யாவை விட கம்பீரம்,உயரம்,மீசையுடன் அழகு)ஒரே ஆள் இத்தனை பேரை மாறி மாறி அடிப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்..
கார்த்தியை குறை கூறிப் பயனில்லை.பெரிய இயக்குனர் என்று நம்பி இறங்கியிருப்பார்..
ஆனால் லிங்கு கார்த்திக்கும் சேர்த்து ஊதிவிட்டார் சங்கு..
வில்லன்களும் மிக ஏமாளிகளாகவும் கார்த்தி என்ற ஒற்றை மனிதரிடம் துரத்தி துரத்தி ஓடிப் போய் அடி வாங்கி வீழ்பவர்களாகவுமே வரும்போது ஐயா சாமி விட்ட்ருங்கன்னு கத்தத் தோணுகிறது.அதுவும் அந்த கம்பீரமான மிலிந்த் சோமனையும் அப்படியே காட்டி இருப்பது மொக்கையின் உச்சக்கட்டம்.
தமன்னா அழகு..நளினம்.பசியை மறைத்து நடித்து பின் அவசர அவசரமாக சாப்பிடும் அந்தக் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.
இப்படிப்பட்ட ஒருவருடன் எவ்வளவு தூரமும் பயணிக்கலாம் என்பது நிஜம் தான்.ஆனால் அதுக்காக யாரோ ஒருவனின் கார்,நண்பர்களின் பணம் இதெல்லாம் கொஞ்சம் கூடித் தான் போச்சு.
தமன்னா கார் ஓட்டும் இடம்,ஜெகன் வரும் சில காட்சிகள் ரசிக்கக்கூடிய சில இடங்கள்.
சில இயற்கைக் காட்சிகள்,கார் பயணிக்கும் சில பாதைகளும் ஈர்க்கின்றன.. ஒளிப்பதிவுக்கு எக்ஸ்ட்ரா நன்றிகள்..
ஆனால் பாதைகள் சில மீண்டும் மீண்டும் வருகின்றதே..இலங்கையில் உள்ள எமக்கே தெரியும்போது இயக்குனரும் எடிட்டர் அண்டனியும் தூங்கிவிட்டார்களா?
மிலிந்த் சோமன் - என்ன ஒரு கம்பீரம்.. லேசாக தாடியில் எட்டப் பார்க்கும் நரை கூட கம்பீரம் தான்.யாராவது நல்ல ஒரு வில்லன் பாத்திரத்தில் இவரைத் தமிழில் பயன்படுத்துங்கப்பா..
அண்டனியின் எடிட்டிங்கும் இல்லாவிட்டால் படம் சுத்த சொதப்பலாகத் தான் இருந்திருக்கும்.தன்னால் முடிந்தவரை கார் ஓடுவதையும் துரத்தலையும் விறுவிறுப்பாக்கியிருக்கிறார்.
லிங்குசாமி இன்னும் ரன்,சண்டைக்கோழி பாதிப்புக்களில் இருந்து விடுபடுவதாக இல்லை.பீமா வாங்கிக் கட்டிய பிறகும் கூடத் திருந்துவதாக இல்லை.நல்ல காலம் பழசை மறக்கக்கூடாது என்பதற்காக ஆனந்தத்தை ஞாபகப்படுத்தவில்லை..
சில சில இடங்களில் குறிப்பாக தமன்னாவினுடனான கார் பயணத்தின் சில காட்சிகளில் ரசிக்க வைத்துள்ள இயக்குனர் கொடுத்த விளம்பரங்களுக்காவது ஏனைய காட்சிகளில் கொஞ்சம் சிரத்தை காட்டி இருக்கலாம்.
தமிழ்ப்படம் வந்து லிங்குசாமி குழுவினர் திருந்தாதது வியப்பே..
அதிலும் மச்சம் வைத்து ஆள் மாறாட்டம் செய்வது போல குடையை வைத்து மறைத்து ஹீரோ தப்புமிடம் கொடுமை சாமி. நகைச்சுவைப் பஞ்சம் என்று இதை வைத்தார்களோ?
விஜய்,விஷால்,சில அஜித் படங்கள் என்றால் லொஜிக்கை ஒரு பக்கம் தூக்கி வைத்துவிட்டுப் பார்க்கலாம்..இதிலே தூக்கி வைப்பதென்றால் எதை எங்கே?
பையா படம் பார்த்தபின் நான் கற்ற சில விஷயங்கள்..
விளம்பரத்தையும் பாடல்களையும் மட்டுமே நம்பி படம் பார்க்க துணியப்படாது..
லிங்குசாமி படம் என்றால் இனி விமர்சனங்களும் வாசித்தபிறகே படம் பார்க்க செல்வது..
வாகனம் ஓட்டும் போது இனிமேலும் பெல்ட் அணியப் போகிறேன்..
(அதிலும் பின்னால் ஒரு அழகிய பெண் இருந்தால்.. கட்டாயமாக..மனைவி இருப்பது எபோதும் பக்கத்து சீட்டிலே.. ஹீஹீ)
எவ்வளவு தான் வேகமாகக் கார் ஓடினாலும் கொஞ்சம் கூடப் படம் வேகமாக இல்லையே.. ரசிக்க முடியலையே..
யுவன்+முத்துக்குமாரின் பாடல்கள், கார்த்தி போலவே பாவம்..
மொத்தத்தில் பையா - அடப்போய்யா.. விட்டாக் காணும் ஐய்யா..