அய்யோ அம்மா சாமி.. பக்தியும் சாமியார்களும் ஒரு மீள்பார்வை

ARV Loshan
51

கடந்த புதன் கிழமை எனது வெற்றி வானொலியின் (வெற்றி FM) காலை நிகழ்ச்சியான விடியலில் அண்மைக்காலப் பரபரப்பு விடயமான சாமியார்கள்,கடவுளின் அவதாரங்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியை போதுமான முன் அறிவித்தல், ஆனால் அளவுக்கதிகமான விளம்பரம் இல்லாமல் செய்திருதேன்.

நித்தியானந்தா விவகாரம் பரபரப்பாகியிருந்த நேரம் இந்த நிகழ்ச்சியை காலையில் நிகழ்ச்சியில் தலைப்பாக வழங்குமாறு பல நண்பர்கள்,நேயர்கள்,சக அறிவிப்பாளர்கள் கேட்டிருந்தபோதும் அந்தவேளை இத் தலைப்பை வழங்கி இருந்தால் எல்லாக் கருத்துக்களும் ஒரே மையப் பொருளுடன் ஒரு நோக்கு சார்ந்ததாகவே அமைந்திருக்கும் என்பதாலும், அந்நிகழ்ச்சியே சன் நியூஸ் போல மலிவான ஒரு விளம்பர யுக்தியாக அமைந்துவிடும் என்பதாலுமே நித்தியானந்தா விவகாரம் சற்று ஓய்ந்து போன பிறகு இத்தலைப்பை ஒரு ஆராய்ச்சி பூர்வமான விடயமாக நேயர்களிடம் விட்டிருந்தேன்.

அந்நிகழ்ச்சி பற்றிய பதிவொன்றைப் பலரும் கேட்டிருந்தீர்கள்..

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நான் எனது முன்னைய பதிவிலே (
http://loshan-loshan.blogspot.com/2010/03/blog-post_16.html)சொன்னது போல
கடவுளை நம்புகிறீர்களா?கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?

எந்தவொரு சமயத்தையும் தனிப்படத் தாக்காமல் உங்கள் உங்கள் சமய நியாயங்களை,நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்று குறிப்பிட்டு விட்டே நிகழ்ச்சியை ஆரம்பித்தேன்.

இன்னொரு விடயமும் எனக்கொரு சந்தேகமாகவே இருந்தது.நிகழ்ச்சியிலும் பெரிதாக இந்த சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

அதென்ன போலி சாமியார்கள்,கடவுளின் அவதாரங்கள் மற்றும் கடவுளை அடைய வழி காட்டுவோர் அனைவரும் அல்லது அதிகமானோர் இந்து மதத்திலேயே தோன்றுகின்றார்கள்?
நிறையக் கடவுள்கள் இருப்பதாலா?

இன்னொரு விஷயத்தையும் ஆரம்பத்திலேயே என் தனிப்பட்ட கருத்தாக சொல்லி இருந்தேன்..

எந்தவொரு கடவுளையும் பெரிதாக நான் நம்புவதில்லை என்றாலும் இந்து சமயத்தின்படி வளர்க்கப்பட்டவன் என்றபடியாலும், இப்போதும் சமயமாக இந்து சமயத்தையே குறிப்பிடுவதாலும் இந்தப் போலி சாமியார்கள் அகப்படும்போதேல்லாம் இந்து சமயத்தை இவர்கள் கேவலப்படுத்துவதால் சமயத்தின் மீது மேலும் மேலும் வெறுப்பும் நம்பிக்கையீனமும் தோன்றுகிறது.

அதிக கடவுள் நம்பிக்கையுடையவராக இருந்த என் மனைவியும் கூட இப்போது கோவில் போவதில் ஆர்வம் காட்டாத அளவுக்கு இந்த சம்பவங்கள் மாற்றியுள்ளன.

இனி நேயர்கள் சொன்ன கருத்துக்கள்&sms மூலமும் மின்னஞ்சலிலும் அனுப்பிய விஷயங்கள்.

பதிவர் கங்கோன் மின்னஞ்சலிய விஷயம் -

அண்ணா....
முதலில் இந்த அருமையான நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்...

கடவுளை நம்புகிறீர்களா?
இதுவரை நம்பியதுமில்லை, நம்பாமல் விட்டதுமில்லை.
எமம்மைத்தாண்டிய நிகழ்வுகள் நடப்பதால் கடவுள் இல்லை என்று சொல்ல முடியாத நிலை, ஆனால் இதற்கு முன்பைய காலத்தில் எம்மைத் தாண்டிய அமானுசிய விடயங்கள் என்று கருதியவை தற்போது விஞ்ஞான ரீதியாக வேறு விதத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் நம்புவதிலும் யோசிக்க வேண்டிய நிலை.
கடவுளுக்கே இந்த நிலை என்பதால் சமயம் பற்றி சிந்திக்க முடிவதில்லை. :)
(உ+ம் புளியமரத்தில் பேய் இருப்பதாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் நம்பியிருந்தோம், ஆனால் விஞ்ஞானம் அதில் உண்மை என்ன என்பதை விளக்கமாகச் சொல்லியிருக்கிறதல்லவா)

கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?
கடவுளையே நம்புவதில் கஷ்ரம் இருக்கும் போது தூதுவர்களை எல்லாம் நம்புவது எம்மாத்திரம்?
இவர்கள் மக்களின் நம்பிக்கைகளை முதலீடாக வைத்து பணம் உழைக்கும் வியாபாரிகள்.
ஆனால் ஆன்மிக வாதிகளையும் இந்தத் தூதுவர்களையும் வேறுபடுத்திப் பார்க்கிறேன்.
தூதுவர்கள் பணம் உழைக்கக் கிளம்பியவர்கள், ஆன்மிகவாதிகள் தாங்கள் உறுதியாக நம்பும் ஒன்றை மற்றவர்கள் அறிய வேண்டும் என நினைப்பவர்கள்.
இதுவரை கடவுளின் தூதுவர்கள், வழிகாட்டுபவர்கள் என்று புறப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சட்டரீதியற்று அல்லது சமயத்தின் மார்க்கத்திற்கப்பாற்பட்டு செயற்பட்டது வரலாறு என்பதால் இவர்களை எதிர்க்கிறேன்.

நீண்டுவிட்டதோ?
கேள்வி அப்படி... 140 அல்லது 160 எழுத்துக்களில் விடையளிப்பது கடினம்... :)

மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா...

ஹனுமான் பூஜையை மல்லிகா ஷெராவத் மூலமாக ஆரம்பித்து வைத்த வாடா இந்திய (ஆ)சாமியார்

பிரேமகுமார்
கடவுளை நம்புகிறீர்களா?
கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?
கடவுளை நம்புகிறீர்களா? ஆம்
இந்துக் கடவுளர்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களுள் விஷ்ணுவும் ஒருவர். சிவனும், பிரம்மாவும் ஏனைய இரு கடவுள்கள். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்றது. விஷ்ணு சங்க காலத்திலிருந்தே தமிழில் திருமால் என்றும் அழைக்கப்படுகிறார். இந்துசமயத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தினர் விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

விவிக்தன் மின்னஞ்சல் மூலமாக
பாபாவோ- பகவானோ எல்லோரும் மனிதர்களே எனும் தெளிவு மக்களுக்கு வரவேண்டும். இயற்கையை மீறிய சக்தியென்று எவருக்கும் எக்காலத்திலும் இருந்ததில்லை. அப்படி ஒருவர் கூறுவாராக இருந்தால் அவர் ஒன்று ஏமாற்றுப் பேர்வழியாக அல்லது புத்தி பேதலித்தவராகத்தான் இருப்பார் எனும் உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு சட்டமும், ஊடகங்களும் துணை நிற்க வேண்டும்!
-----
அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பவனை உடனடியாக கைது செய்வதற்கு சட்டம் இருப்பதுபோல் எவனாவது நானே கடவுள் என்றோ அல்லது கடவுளின் அவதாரம் என்றோ கூறித்திரிந்தால் அவர்களையும் கைது செய்ய சட்டம் இருக்கவேண்டும். இப்படிப்பட்டவர்களின் கடந்தகாலங்களை ஆராய்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்த ஊடகங்களும் போட்டி போட்டு செயற்பட வேண்டும்!

காலை வணக்கம் அண்ணா.

இந்த மோசடிகள் ஏமாற்றுக்கள் எல்லாம் எமது சமயத்திலேயே உள்ளன ஏனைய மதங்களில் அவ்வளவு கோப்பறேற் சாமிகளையோ அல்லது ஆசாமிகளையோ அதிகம் காணமுடியாது. எது எவ்வாறாயினும் எனது கருத்து இவ்வளவுதான் "மனிதன் மனிதன்தான் - கடவுள் கடவுள்தான்" இப்போது நடப்பவற்றை பார்த்தால் எனக்கு விவேக்கின் ஒரு நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது. இப்பபடிப்பட்ட சாமியார்களிடம் போய் தம்மைச் சீரளிக்கும் இவர்களுக்கு 100 அல்ல 1000 பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது.

நன்றி
நிசா - மலேசியா


பல நேயர்கள் சாமியில் நம்பிக்கை உள்ளதென்றும் சாமியார்களில் நம்பிக்கை கிடையாதென்றும் சொல்லி இருந்தாகள்.
ஒரு சிலர் முன்னர் இறை தூதர்கள்,நாயன்மார்கள் ஆகியோர் உண்மையாக இறைவனின் வடிவமாக அருள் பெற்றே வந்திருந்தார்கள் என்றும் ஆனால் இப்போது அவ்வாறு சொல்வோர் மோசடி செய்து பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்களென்றும் கூறினர்.
--
ஒரு சிலரின் கருத்துக்களில் ஏமாற்றப்பட்ட கோபமும்,கொதிப்பும் தெரிந்தது..
சில மதங்களில் இருப்பது போன்ற பகிரங்க,பயங்கரத் தண்டனைகள் இந்து சமயத்தில் வேண்டும் என்று தெரிவித்தார்கள்.சுட வேண்டும்,தூக்கில் இட வேண்டும். (இவற்றுள் சிலவற்றை நான் வானொலியில் வாசிக்கவில்லை)

இன்னும் சிலரின் கருத்துக்கள்

கடவுளுக்கு இடைத் தூதர்,இடைத் தரகர் தேவையில்லை.
கடவுளுக்கு வழிகாட்ட காசு ஏன் வாங்குகிறார்கள்?
கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும் யாரையும் அரசாங்கங்கள் தடை செய்ய வேண்டும்.
சாமியார்களும் தொழிலாகவே இதை நடத்துவதால் வியாபார சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்து பிசிநெசாக செய்யலாம்.
(இந்த ஐடியா நல்லா இருக்கே.. நாமும் கூட பார்ட் டைமா செய்யலாம் போலிருக்கேன்னு யோசித்தேன்)

மதுவுக்கு அடிமையாவது போல இந்த மடத்தனத்துக்கு அடிமையாகிறார்கள்.இதற்கான விழிப்புணர்ச்சியை அனைத்து ஊடகங்களும் ஏற்படுத்தவேண்டும்.
வானொலிகள்,தொலைக்காட்சிகள் இந்தப் போலி ஆசாமிகளின் விளம்பரங்களைத் தவிர்ப்பது போலப் பத்திரிகைகள்,சஞ்சிகைகளும் உறுதியாக செய்ரபடவேண்டும்.
சாமியார்களை நான் ஏன் வணங்க வேண்டும்? அவர்களுக்கு என்னை விட சிறப்பாக வித்தியாசமாக உடலில் எதுவும் இல்லையே..
இதுவரைகாலமும் வருமான வரித்துறையினர் சாமியார்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டுல்லார்களா?
சமயம் உண்மை,.அது இல்லாவிட்டால் நாட்டில் மேலும் குற்றங்கள் அதிகரிக்கும். ஆனால் சமயத்தின் பெயரால் மூட நம்பிக்கைகள் வளர்ப்பதையும்,பணம் சம்பாதிப்பதையும்,மோசடிகள் செய்வதையும் தடுக்க வேண்டும்.


கடவுளையே நம்பலை.இதுக்குள்ளே இந்தக் கேவலமான ஜென்மங்கள் கடவுளுக்கு வழி காட்டுறாங்களா?
அடுத்து யார்?
இந்த நவீன காலத்தில் இணையம்,வீடியோ,கமெரா எல்லாம் வந்த பிறகே இவங்க இப்படிக் கூத்தாடினால் அந்தக் காலத்தில் இருந்த சாமியார்கள்,அவதாரங்கள் என்னென்ன திருவிளையாடல்கள் நடத்தினாங்களோ?

கதவைத் திறந்து காற்று வரச் செய்த அண்மைக்கால கதாநாயகர்

ஒரே ஒருவர் மட்டும், கொஞ்சம் வித்தியாசமாக சாமியார்களில் பிழையில்லை என்றும், அவர்கள் பல நல்ல விஷயங்களை சொல்லித் தந்துள்ளார்கள் என்றும், அவர்களின் தவறான பக்கங்களை நீக்கி நல்ல விஷயங்களை மட்டும் வாழ்க்கைக்கு எடுப்பது நல்லது;அப்படியில்லாதவர்கள் முட்டாள்கள் என்றும் சொல்லியிருந்தார்.
இப்போது சர்ச்சையில் மாட்டி இருக்கும் நித்தியானதாவும் கூட யோகா,தியானம் பற்றி பல நல்ல விஷயங்களை சொல்லியுள்ளார் என்பது அவரது கருத்து.

(எல்லாம் நல்லா தான் சொன்னாரு.. ஆனா அவரு மட்டும் ரொம்ப நல்லாவே செய்திட்டாரே..)

ஆனால் எனக்குப் பெரும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்த ஒரு விடயம், யாரோருவரும் என்னுடன் இத்தலைப்பை வழங்கியது தொடர்பாகவும்,சாமியார்கள்,பகவான்கள் பற்றி ஆதரித்தும் என்னுடன் சண்டைக்கோ,வாக்குவாதத்துக்கோ வராதது தான்.. ;)

இவ்வளவுக்கும் அவ்வேளையில் பிரபலமாக இருந்த சாமியார் ஜோக்சை இடையிடையே கடித்துக் கொண்டிருந்தேன்.
அடியவர்களே ரொம்பவே ஏமாத்திட்டீங்க..

எமது மக்கள் ரொம்பவே விழிப்பாக இருப்பதைப் பார்த்தால் இனி வருங்காலம் இந்தப் போலிகள்,பகவான்கள்,அவதாரங்கள் ஓடி ஒழிவார்கள் போலவே தெரியுது..


இவற்றோடு இன்றைய,நேற்றைய சில பரபரப்புக்களையும் பாருங்கள்..

கல்கி சாமியார் (அம்மா பகவான்) கூத்து...
அதான் நிறையப் பேர் வீடியோவே போட்டிட்டாங்களே.. நான் வேற ஏன் வலைப்பதிவை அசிங்கப் படுத்தணுமா?

பிரபல ஆங்கிலப் பாடகர் ஏகொன்(Akon) புத்த உருவத்தை அசிங்கப்படுத்தி விட்டதாக அவர் மீது எழுந்த குற்றச் சாட்டும், இலங்கை அரசு அவரது வீசாவை மறுத்தது.


சிந்தியுங்கள்.தெளிவாகுங்கள்.
முடிந்தால் குழம்பியிருக்கும் உங்கள் அன்புக்குரியவர்களையும் தெளிவாக்குங்கள்.


மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.

Post a Comment

51Comments

Please Select Embedded Mode To show the Comment System.*