பாசமிகு தமிழினத் தலைவா
உங்களுக்கு இம்மடலை வரையவேண்டுமென்ற எண்ணம் பற்பல நாட்களுக்கு முன்னரே எனக்குத்தோன்றினாலும் பலவேறு காரணங்களினால் தள்ளிப்போட்டுக்கொண்டே போய்விட்டது.
என்னுடைய சுகவீனம், நித்தியானந்தா பரபரப்பு,IPL என்று உங்களை நான் தொடர்புகொள்ளத்தான் எத்தனை விதமான தடைகள்.
பவளவிழாக் கண்டும் பதவியிலிருக்கும் இளைஞரே, சக்கர நாற்காலியிலிருந்தாலும் சளைக்காமல் உலாவரும் சாதனை மன்னரே.. அல்ல சக்கரவர்த்தியே... (இந்த வாலி, வைரமுத்து கலந்துகொள்ளும் உங்கள் விழாக்கள், கவியரங்குகள் பார்த்த தோஷம், பிடித்த தோஷம்)
உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?
அரசியலில் நீங்கள் ஒரு சாணக்கியர்... அதில் மாற்றுக்கருத்தில்லை. மூன்று பிள்ளைகளையும் பிரச்சினையில்லாமல் (குடும்ப 10 கட்சி) மூன்று முக்கிய இடங்களில் அமர்த்திவிட்டீர்கள்.
உங்களுக்குப் பின் மகன் வர இனித்தடையில்லை.
எதிர்க்கட்சிகள் எழ இனி உடனடி வாய்ப்பில்லை.
குரல் கொடுக்கக்கூடியவர்கள், முனைந்தவர்கள் என்று பலராலும் கருதப்பட்ட, உசுப்பேற்றப்பட்டு வந்த பல திரை ஸ்டார்களும் அடக்கப்பட்டு உள்ளார்கள் - இல்லை பல் பிடுங்கப்பட்டுவிட்டார்கள்.
விஜயகாந் அடங்கிவிட்டார்: சரத்குமார் நுரைதள்ள மீண்டும் உங்களிடமே சரண்: விஜய் ஒரு அடி வைக்க முதலே கட்டம் கட்டப்பட்டுவிட்டார்: அஜித்?
பாருங்க ஐயா என்று முறையிட்டதற்கே முறிச்சு எடுத்தீட்டீங்களே... என்ன ஒரு ராஜதந்திரம்!
ஈழத்தமிழர் பிரச்சினைகளில் நீங்கள் நடந்துகொண்டவிதம் எதிர்கால அரசியல்வாதிகளுக்கு ஒரு முழுமையான பாடத்திட்டம்.
மன்மோகன், சோனியா, மகிந்தர் - இவர்கள் மூவரையும் சமாளித்து, தமிழ் அனுதாபிகளையும் போராட்டம் நடத்தியவர்கள், விமர்சித்தவர்களையும் அடக்கிய விதம் இருக்கிறதே – யாருக்கு வரும்?
உங்கள் வழிமுறைகளை அப்படியே நம்ம நாட்டுகேற்ப மாற்றி இங்கேயும் நம் ஜனாதிபதி மன்னராக மாறி தொடர் வெற்றியீட்டி வருகிறார். (சில விஷயங்களை உங்களையும் விஞ்சி காய் நகர்த்துகிறார்)உங்கள் வழிமுறைகள்,அரசியல் ஞானத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லாமல் வேறு என்ன?
அப்படியே அடிக்கடி உங்களை சந்தித்து ஆலோசனைகள்,ஆசிகள் பெறும் நம் தமிழ்த் தலைமைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுத் தரக்கூடாதா?
ஆனால் இதுக்கெல்லாம் மனதுக்குள்ளே உங்களைப்பற்றி வியந்தேனே தவிர கடிதம் எழுதிப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றியதில்லை..
ஆனால் 'பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா' உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்ததில் இருந்து எப்படியாவது உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும் எனத் தோன்றியது.
மீண்டும் அதே கேள்வி.. எப்படி ஐயா தங்களால் மட்டும் முடிகிறது?
இதற்கு முதலும் நீங்கள் கலந்து கொண்ட திரையுலகம் உங்களுக்கு நடத்திய பாராட்டு விழாக்களைப் பார்த்துள்ளேன்..
நான்கைந்து மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக வாளி,வாளியாக ஒவ்வொருவரும் உங்களைப் புகழ்ந்து தள்ளும்போது எவ்வாறு பொறுமையாக,கூச்சத்தால் நெளியாமல் உங்களால் இருக்க முடிகிறது?
பழகிவிட்டீர்களா?பழக்கி விட்டார்களா?
அதுவம் சும்மாவா.. இந்திரனே,சந்திரனே என்று அவர்கள் புகழ்வதும், போற்றிப் பாடி ஆடுவதும் பார்க்கும்போது ஏதோ மன்னர் காலத்துக்கு நாம் வந்துவிட்டோமோ என்று ஒரு பிரமை..
திரையில் எம்மைப் போன்ற சாதாரண ரசிகர்கள் காண ஏங்கித் தவிக்கும் மிகப் பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும் உங்கள் முன்னாள் சர்வசாதாரணமாக வந்து குத்துப் பாட்டுக்கும், உங்களைப் போற்றிப் பாடும் பாட்டுக்கும் 'பய'பக்தியுடன் ஆடுவது எமக்கெல்லாம் பரவசம்.
நீங்கள் வேண்டாமென்றாலும் உங்கள் அன்புக்குரிய 'அடி'யவர்கள் அவர்களையெல்லாம் காட்டுவது காட்டி அழைக்கிறார்கலாமே ஐயா.. ;) (இது அஜித் சொன்னது மாதிரி எல்லாம் இல்லீங்கோ)
பாசத்தலைவன் உங்களுக்கான விழாவில்,இந்திய சினிமாவின் உயர நடிகர் அமிதாப் மேடையில் பேசப்படும் விஷயம் புரியாமல் முழி பிதுங்கிக் கொண்டு அருகில் உள்ள கமலின் மொழிபெயர்ப்பை கேட்டு நெளிவதும், தமிழின் இரு சிகரங்கள் ரஜினியும் கமழும் என்ன விழா நடந்தாலும் உங்களுடனேயே அருகில் பயபக்தியுடன் இருப்பதுமாக உங்களுக்கான மரியாதை என்பதைவிட நிர்பந்தமாகவே தெரிகிறது.
அதுக்காக அஜித் சொனது சரியென்று நான் சொல்வேனா? அமிதாப்,கமல்,ரஜினி,இசைஞானி இவர்கள் எல்லாம் கம்முனு இருக்கும்போது இவருக்கு என்ன வந்துது?
உங்க பாசக் குழந்தைகள் பொங்கியதில் தப்பே இல்லை ஐயா..
ஈழத்து நாட்டவன் உனக்கென்ன வந்துது என்று உங்கள் பராசக்தி பாணியில் என்னிடம் கேட்டால், இதோ காரணங்களை அடுக்குகிறேன்..
பல விஷயங்களில் உங்களைப் பின்பற்றும் எங்கள் நாட்டில் கடந்த தேர்தலில் அடிக்கடி விருந்துகள் நடந்தது உங்களுக்குத் தெரியுமோ எனவோ, இன்னும் இந்தப் பாராட்டு விழாக் கலாசாரங்கள் தொடங்கவில்லை.
இந்த விஷயங்களைஎல்லாம் நம்ம நாட்டுப் பக்கம் கற்றுத் தந்துவிட வேண்டாம் என்று அன்பாக வேண்டிக்கொள்ளவே இந்தப் பாசமான மடல்.
அதுசரி அதிகமான பாராட்டுவிழாக்கள் கண்ட தலைவர் நீங்கள் தான் என்று அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த உங்கள் அன்புக்குரிய உடன் பிறப்புக்களும், உங்கள் பாசத்துக்குரிய கலைக் குடும்பத்தினரும் தயாராகின்றனராமே.. உண்மையா?
இப்போதே கண்ணைக் கட்டுதே.. அதுவும் கலைஞர் தொலைக்காட்சியில் வருமா?
இப்படியே போனால் செம்மொழி மாநாட்டைக் கூட உங்கள் புகழ் பாடும் மாநாடாக நடத்தி விடுவீர்கள்.. மன்னிக்க விடுவார்கள் என்று பயமாக இருக்கிறதைய்யா..
மீண்டும் ஒரு வெற்றி கிடைத்தால் உங்கள் பாணியை இங்கேயும் பின்பற்றி விடுவார்கள் என மன சொல்லுதைய்யா.. அது தான் கண்ணைக்கட்டுகிறது.
அண்ணன் தம்பிமாரோடு இப்போது அடுத்த தலைமுறையும் களமிறங்கி இருப்பதால் தமிழக வடிவம் இங்கே மேலும் ஸ்திரத்தோடு தொடங்கிவிடும் போலிருக்கு.
எதற்கும் இன்னும் ஒரு மாத காலத்துக்காவது மேலும் ஒரு பாராட்டு விழா வேண்டாமே..
(அஜித் பொங்கியதற்குப் பிறகு நீங்களே அந்த முடிவில் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.. எதுக்கும் ஒரு தடவை உங்கள் திருச் செவியில் போட்டு வைக்கலாமே என்று தான்)
ஐய்யா இன்னும் இரண்டு ஐயங்கள்..
ஒண்ணுமில்லாத வெத்து வேட்டுக்கள் நாங்களே வலைப்பதிவுகள் ஆரம்பித்து உங்களைப் போல பெரிய,மகா பெரியவர்களை கலாய்க்கும் போது எல்லாத் துறைகளிலும் கரைகண்ட நீங்களும் ஒன்றை ஆரம்பித்தால் என்ன?
பின்னூட்டங்களும்,கும்மிகளும் களை கட்டும்..
வாக்கு மழையாய்ப் பொழியும்.
உடன் பிறப்புக்கள் உங்கள் பதிவுகளுக்காகவும் உயிரையும் கொடுப்பார்கள்.
இன்னும் கொஞ்சம் தேர்தல் வாக்குகளை அள்ளலாம்.. 'அம்மா'வையும் ஒரு வழி பண்ணலாம்..
நித்தியானந்த பற்றி நண்டு,சுண்டு எல்லாம் பலப்பல சொன்ன பிறகும் பகுத்தறிவு சிங்கம் தாங்கள் இன்னும் அது பற்றி கவிதையோ ,கடிதமோ எழுதலையே ஏன்? (ஒரு அறிக்கையோடு முடிந்ததா?)
உங்கள் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவிலாவது நேரில் வந்து கலந்துகொண்டு உங்களுக்காக அஜித் மகள்,விஜய் மகன், சூர்யா மகள்,தனுஷ் மகன் ஆடும் நடனங்களை(அப்போதாவது சித்தப்பா நடிகர்மார் ஓய்வு பெறுவார்கள் என நம்புவோமாக), அப்போதும் கமல்,ரஜினி வழங்கும் வாழ்த்துக்களைப் பார்த்து ரசிக்கக் காத்திருக்கும்
எளிமையான ஈழத்து மைந்தன்.