வந்துட்டாரைய்யா..
ஜனாதிபதித் தேர்தலில் இட்ட மை நகத்திலிருந்து முற்றாக அகலும் முன் அடுத்த தேர்தலாக நாடாளுமன்றத் தேர்தல் இதோ எட்டிப்பார்க்கப் போகிறது.
வேட்பாளர் தெரிவுகளும், கூட்டணி வியூகங்களும் இன்றும் இழுபறி – அரைகுறை நிலைகளிலேயே உள்ளன.
தாங்கள் தாங்களே மக்களுக்கு தம்மை நினைவூட்டிக் கொள்ள போஸ்டர்களில் சிரிக்கும் பலரைக் கண்டு சிரிப்புத் தான் வருகிறது.
விருப்பத்தெரிவு வாக்குகளுக்காக இப்போதே சண்டைகள் சொந்தக்கட்சிக்குள்ளேயே குத்துவெட்டுக்கள், கயிறிழுப்புக்கள் தொடங்கிவிட்டன.
ஆளுந்தரப்பிலே முன்பு ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து அரசுப்பக்கம் தாவிய முக்கியஸ்தர்கள் அனைவருக்குமே (அமைச்சர்.கலாநிதி சரத் அமுனுகம தவிர) ஆப்பு வைக்கப்பட்டுவிட்டது.
பெருமளவு வாக்குகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய மாவட்ட அமைப்பாளர் பதவி இந்தக் கட்சி மாறியவர்கள் யாருக்குமே வழங்கப்படவில்லை. தேர்தலில் இவர்கள் வென்றாலும் கூட அடுத்த அமைச்சரவையில் பலபேர் கழற்றிவிடப்படுவார்கள் என்றே தோன்றுகிறது.
இந்த ஒதுக்கப்பட்டவர்களில் அரசின் பிரசார பீரங்கிகள் கெஹெலிய ரம்புக்வெல்ல, ராஜித சேனாரத்ன போன்றோரும் அடங்குவது அதிசயம்.
ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் போட்டியிடுவதன் மூலம் மற்றுமொரு அரசியல் வம்சம் உருவாகிறது.
எனினும் ஒருகுடும்பத்தில் தேர்தலில் போட்டியிட ஒருவருக்கே வாய்ப்பு என – ஆளுங்கட்சி முடிவெடுத்திருப்பதால், பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க உட்பட பலரின் வாரிசு அரசியல் திட்டங்களுக்கு ஆப்பு.
அப்படியானால் ஜனாதிபதியின் சகோதரர்கள் பற்றி? அவர்களது குடும்பங்கள் பற்றி?
பலரும் எதிர்பார்த்திருந்த விஷயம் உறுதியாகியுள்ளது.
அதிரடி வீரர் சனத் ஜெயசூரிய தனது அடுத்த இனிங்சை இப்போது அரசியலில் ஆரம்பிக்கிறார்.
கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் ஆட்டங்காண ஆரம்பிக்கவே – சனத் தனது அடுத்த கட்ட நகர்வை இரகசியமாக ஆரம்பித்திருந்தார்.
முன்பொரு தடவை அணியிலிருந்து நீக்கப்பட்ட நேரம் ஜனாதிபதியின் தலையீட்டினால் அசந்த டீமெல் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதற்கு நன்றிக்கடனாகவும், அடுத்த கட்ட வாழ்வின் இருப்புக்காகவும் சனத் ஜெயசூரிய கால் காப்பு, கை கிளவுஸ் கழற்றிவிட்டு, கை கூப்பிக்கொண்டு களமிறங்கப் போகிறார்.
அவர் எடுத்த முடிவு என்னைப்பொறுத்தவரை சரிதான்!
இலங்கை அணியில் அவரது இடம் காலி!
T 20 அணியில் மட்டுமே எஞ்சியிருக்கிறார்.
அதுவும் உறுதியில்லை. IPL ஆட்டமும் இந்த வருடத்துடன் சரி என்று நினைக்கிறேன்.
எதிர்க்கட்சியில் இறங்கி உள்ளே – வெளியே விளையாட முடியாது – வேறு வழி?
All the best Sanath!
ஆளுங்கட்சி என்பதால் பெரிதாக பவுன்சர்கள், யோர்க்கர்கள் வராது – ஆனால் play with straight bat(நேர்மையாக விளையாடுங்கள்)
ஆனால் கிரிக்கெட்டையும் அரசியலையும் சமனாகக் கொண்டு செல்வதாக மாத்தறை மன்னன் பேட்டியளித்துள்ளார். எப்படியென்று தான் புரியவில்லை..
ஏற்கனவே களம்கண்டு – காயமும் கண்ட அர்ஜீன ரணதுங்க, ஹஷான் திலகரட்ண ஆகியோரும் இம்முறை தேர்தலில் நிற்பர் என நினைக்கிறேன்.
எனினும் சனத்தின் தோழரான மற்றொருவர் முரளீதரன் கண்டியில் தேர்தலில் களமிறங்குவார் எனக்கிளம்பிய ஊகங்கள் பொய்த்துவிட்டன.
இப்ப வேணாமே.. ப்ளீஸ்
ஒரு ஆங்கில இணையத் தளத்தில் முரளி நுவர எலியவில் களம் காண்கிறார் என்று செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் அது சும்மா ஊகமாம்.
அவர் குடும்பத்திலிருந்து கிடைத்த உறுதியான தகவல் இது.
இறுதி நேர அழுத்தங்கள் கூட அவர் முடிவை மாற்றாது என்பது நிச்சயம்.
அவர் தனது தந்தையைப் போல ஒரு ஐடியல் / ஐடியா Businessman. அவசரப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகமாட்டார்.
இன்னும் இளமையும், திறமையும் மிச்சமிருக்கே...
2011 உலகக்கிண்ணத்துக்குப் பின்னர் ஒரு தேர்தல் வந்தால் முரளீதரன் ஆளுந்தரப்பின் வேட்பாளராக கண்டி மாவட்டத்தில் களத்தில் குதிப்பார்/குதிக்கலாம்..
இந்தப் பதிவுக்கு நேரடி சம்பந்தம் இல்லாவிட்டாலும் இதையும் சும்மா வாசித்துப் பாருங்களேன்..
தமிழ்க்கூட்டமைப்பு, எதிர்த்தரப்புக் கூத்துக்கள், கூட்டுக்கள், குழப்பங்கள் பற்றி பிறகு பார்ப்போம்.