சச்சின் 200 - சாதனை மேல் சாதனை

ARV Loshan
23


சச்சின் டெண்டுல்கரின் இரட்டை சதம்..

இந்த வாரம் முழுவதும் இது பற்றிப் பேசாதோர் கிடையாது.. பதிவிடாதோர் கிடையாது..
உடல் நிலை மோசமாக இருந்ததாலும், தொண்டை எரிச்சல் பாடாய்ப் படுத்தியதாலும் இன்று வரை சச்சினின் சாதனை பற்றி இன்றுவரை என்னால் பதிவிட முடியாமல் இருந்தது.

பேசவே இயலாத (அழைப்பெடுத்து அலுத்துப் போய்த் திட்டித் தீர்த்துள்ள நண்பர்களே காரணம் என் தொண்டை நோவு தான்) இரண்டாவது நாள் ஓய்வில் இன்று இதைப் பதிவிட முடிந்துள்ளது.

பலர் வாழ்த்தி விட்டார்கள்,இன்னும் பலர் அதன் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு விட்டார்கள்..
இன்னும் சிலர் அரசியலும் பேசிவிட்டார்கள்..
இவ்வரிய சாதனை பற்றி இன்னொரு கோணத்திலே சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்தப்பதிவு.

39 ஆண்டுகளாக (2961 போட்டிகள்)ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் எந்தவொரு வீரராலும் எட்டப்பட முடியாதவொரு சாதனையை சச்சின் டெண்டுல்கர் க்வாலியர் மைதானத்தில் தன வசப்படுத்தினார்.
அத்துடன் இதை எட்டியதன் மூலம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனிநபராக ஒரு வீரர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையையும் சச்சின் தனதாக்கியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்துக்கும் குறைவான காலப்பகுதியில் சச்சின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் எட்ட முடியாத எல்லையாகக் கருதப்பட்ட இரட்டை சதத்தை சச்சின் டெண்டுல்கர் நெருங்கிய மூன்றாவது சந்தர்ப்பம் இது.
(நியூ சீலாந்துக்கு எதிராக கிரைச்ட்சேர்ச்சில் 163 இல் வைத்து உபாதை காரணமாக வெளியேறினார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாத்தில் வைத்து 175 இல் ஆட்டமிழந்தார்)

இப்போது சச்சின் சர்வதேசப் போட்டிகளில் மற்றொரு அரிய சாதனையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.. சர்வதேசப் போட்டிகளில் சதங்களில் சதம்.இதுவரை டெஸ்ட் & ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக 93 சாதனைகளைப் பெற்றுள்ளார்.இந்த வயதிலும் இவற்றுள் கடைசியாகப் பெற்ற 10 சதங்களும் கடந்த ஓராண்டு காலப்பகுதியில் விளையாடிய 34 இன்னிங்க்சில் பெற்றவை.
இந்த சிங்கத்தையா ஓய்வு பெறவேண்டும் என்று பலர் ஓலமிட்டார்கள் என வேடிக்கையாக இருக்கிறது..

2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்குப் பிறகான இந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்துள்ள ஒரே ஒரு வீரராக சச்சின் டெண்டுல்கர் என்று சொன்னால் கூடத் தவறில்லைப் போல் தெரிகிறது..

இவற்றைக் கொஞ்சம் அவதானியுங்கள்..

31 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்களுடன் 2779 ஓட்டங்கள். சராசரி 59.12
57 ஓர்நாள் சர்வதேசப் போட்டிகளில் 2751 ஓட்டங்கள்.சராசரி 51.2.
54 டெஸ்ட் இன்னிங்க்சில் 23 இன்னிங்க்சில் அவர் குறைந்தது 50 ஓட்டங்களாவது பெற்றுள்ளார்.
54 ஓர்நாள் இன்னிங்க்சில் 21 தடவை.

2007 உலகக் கிண்ணத்துக்குப் பிறகு சச்சினை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் பலர் விளையாடி இருந்தாலும் சச்சினை விட அதிக டெஸ்ட் சதங்களை யாரும் பெறவில்லை.
இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன மட்டுமே சச்சினை விட அதிகம் டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றவர்.
இதே காலகட்டத்தில் இந்தியாவின் தோனியும்,யுவராஜ் சிங்கும் மட்டுமே சச்சினை விட அதிக ஒரு நாள் ஓடங்கள் பெற்றவர்கள்.
இத்தனைக்கும் தோனியும் யுவராஜும் முறையே 92 மற்றும் 84 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க, சச்சின் விளையாடியது வெறும் 58 போட்டிகள் மட்டுமே.

கௌதம் கம்பீரும் ரிக்கி பொண்டிங்கும் மாத்திரமே இந்தக் காலகட்டத்தில் சச்சினை விட அதிக ஒரு நாள் சதங்கள் பெற்றவர்கள்.

2007 உலகக் கிண்ணப்போட்டிகளுக்கு முன்பதாக தன கிரிக்கெட் வாழ்க்கையில் சிறு சரிவைக் கண்டிருந்த, டெனிஸ் எல்போ பிரச்சினையால் கிரிக்கெட் வாழ்கையே முடிந்துவிடுமோ என்ற நிலையிலிருந்த சச்சின் மீண்டும் எடுத்த விஸ்வரூபம் தான் என்னைப் பொறுத்தவரை சச்சினின் மிக சிறந்த கிரிக்கெட் காலகட்டம்.
எனவே அதிகூடிய சதங்களைப் பெற்ற ஒருவரையே அதிகூடிய ஓட்டப் பெறுபேற்று சாதனை சென்று சேர்ந்திருப்பது மிகப் பொருத்தமானதே.. வேறு யாராவது சயீத் அன்வரின், சார்ல்ஸ் கோவேன்றியின் சாதனையை முரியடித்திருந்தால் அது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றியிராது.

அன்வரும் இதையே ஒத்துக் கொண்டுள்ளார். எனக்கும் சிறுவயதிலிருந்து அப்போது ரிச்சர்ட்சுக்கு சொந்தமான சாதனையை சச்சின்,சனத் ஜெயசூரிய அல்லது ஹெய்டன்,லாரா உடைப்பதே தகும் எனத் தோன்றி வந்துள்ளது.குருட்டு அதிர்ஷ்டத்தில் ஒரு நாள் கிடைக்கும் வாய்ப்பில் யாரும் ஒரு சாதனையைப் படைப்பதை கிரிக்கெட்டை ஆழ்ந்து நேசிக்கும் மனம் ஏற்றுக் கொள்வதில்லை.

அன்றைய இரட்டை சத ஆட்டம், ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு அற்புதமான விரிவுரை&விருந்து..

பொறுமை,ஆளுமை,அதிரடி,அசத்தல்,அடக்கி ஆளல்,அடங்கிப் போதல் என்று அனைத்தையும் 37 வயதான அந்த கிரிக்கெட் சிங்கத்திடம் பார்த்தேன்..
இருபது வருடங்களாக ஓயாமல் கிரிக்கெட் விளையாடி வந்தாலும் சலிக்காத,கலைக்காத கிரிக்கெட் தாகம் தான் சச்சினை இன்னும் சாதனை மேல் சாதனை படைக்க வைத்துக் கொண்டுள்ளது.

உலகின் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் டேல் ஸ்டேய்னை அடித்து நொறுக்கி ஒன்றுமில்லாமல் செய்ததாகட்டும், கார்த்திக்,பதான்,டோனி அதிரடியாட்டம் ஆடும் வேளையில் புன்முறுவலோடு அவர்களை ஆதிக்கம் செலுத்தவிட்டு தான் அடங்கிப் போனதிலாகட்டும்,
சின்னப் பையன் போல் பந்தை நோக்கித் துள்ளிவந்து ஆறு ஓட்டங்கலாகப் படையல் போட்டதாகட்டும், நின்று கொண்டே நிதானமாக கவர் டிரைவ், ஸ்குயார் டிரைவ், ஒன் டிரைவ் என்று கிரிக்கெட் பாடங்கள் நடத்தியதாக இருக்கட்டும்..
சச்சின் மீண்டும் காட்டிய விஷயம் - சச்சின் - கிரிக்கெட்டின் கடவுள்.

சச்சின் டெண்டுல்கரை உங்களுக்குப் பிடிக்குதோ,பிடிக்கவில்லையோ அனைவரும் இதை ஏற்றே ஆகவேண்டும்.

இவ்வாறான நீண்ட இன்னிங்ஸ்களை ஆடுவோர், குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் களைப்படைந்து தசைப்பிடிப்பு போன்ற உபாதைகளுக்கு இலக்காகி தமக்காக இன்னொருவரை வைத்து ஓடியே ஓட்டங்கள் எடுப்பதைப் பார்த்த எமக்கு 37 வயதிலும் சளைக்காமல் ஐம்பது ஓவர்களும் ஓடி ஓடியே ஓட்டங்கள் பெற்ற சச்சின் ஆச்சரியத்தின் சின்னம் தான்.

சனத் நெதர்லாந்து அணிக்கெதிராக அடித்து நொறுக்கியிருந்த 24 நான்கு ஓட்டங்கள் என்ற சாதனையும் சச்சினினால் இந்த க்வாலியர் போட்டியில் சச்சினினால் முந்தப்பட்டது.
இதன் மூலம் ஒருநாள் போட்டியொன்றில் பவுண்டரிகளில் சதமடித்தவர் சச்சின் மட்டுமே ஆகிறார்.

சச்சின் கடைசி பத்து ஓட்டங்களையும் பெறுவதற்கு பத்து பந்துகளை எடுத்துக் கொண்டார்.
அதுபோல இந்தியாவுக்கு மேலதிகமாக,வேகமாக ஓட்டங்கள் தேவைப்பட்டதால் தோனியும் கடைசி நேரத்தில் அதிக பந்துகளைத் தானே எடுத்து அதிரடி நிகழ்த்தி இருந்தார்.

இல்லாவிட்டால் அவர் சந்தித்த 147 பந்துகளில் பெற்ற 200 ஓட்டங்களை விட இன்னும் அதிகப்படியான ஓட்டங்கள் பெற்று இந்த மைல்கல்லை இன்னும் கொஞ்சம் அப்பால் நகர்த்தி இருப்பார்.

தோனி அதிகம் பந்துகளை இறுதி நேரத்தில் சச்சினுக்கு வாய்ப்பளிக்காமல் இருந்தது குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனக்கும் கூடப் பார்த்துக் கொண்டிருந்தபோது தோனி கையில் கிடைத்தால் சாத்தவேண்டும் போல அவ்வளவு கோபம் வந்தது.எனினும் தலைவராகவும் சக வீரராகவும் தோனி செய்தது சரியே எனத் தோன்றுகிறது.

காரணம் தென் ஆபிரிக்கா மிக ஆபத்தான அணி.எந்தவொரு இலக்கையும் அனாயசமாக துரத்தியடிக்கக்கூடிய வல்லமையுள்ளது. அதற்கெதிராக எத்தனை ஓட்டங்கள் பெறமுடியுமோ அத்தனை ஓட்டங்கள் பெற்றாக வேண்டும்.
அடுத்து, சச்சின் களைத்துப் போயிருந்தார்.அவரை அதிகமாக அதிரடியாட்டத்துக்கு தூண்டி அழுத்தத்துக்கு உட்படுத்த முடியாது.
எத்தனையோ வீரர்கள் முயன்று முடியாமலே இருந்த முடிவிலி சாதனையொன்று சச்சினினால் எட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த சாதனையை இவரை விட சிறந்தவீரர் ஒருவர் எட்ட முடியும் என நான் நினைக்கவில்லை.அதுவும் சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் இதை எட்டியிருப்பதும் பல விமர்சகர்களை வாய்மூட வைத்திருக்கும்.இன்னும் சக வீரர்களுக்கும்,பல இளைய வீரர்களுக்கும் உற்சாகத்தை வழங்கி இருக்கும்.

கவாஸ்கர் சொன்னது போல சச்சின் இன்னொரு சாதனையைத் தான் ஓய்வு பெற முதல் குறிவைக்க வேண்டும்.. இதுவரை சச்சின் பெறாத டெஸ்ட் முச்சதம்.

கிரிக்கெட் ரசிகர்களாக நாமெல்லாரும் பெருமையடையக் கூடிய காலகட்டம் இதுவென நினைக்கிறேன்.

இனிவரும் எந்தவொரு காலகட்டத்திலும் எந்தவொரு வீரரும் எட்ட முடியாத (என்னைப் பொறுத்தவரை முடியவே முடியாத) சாதனைகளைப் படைத்த இருவர் (சச்சின் டெண்டுல்கர்& முத்தையா முரளிதரன்) விளையாடும் காலத்தில் நாம் இருக்கிறோம்.

முரளியின் டெஸ்ட் சாதனைகளையும், சச்சினின் ஒரு நாள் சாதனைகளையும் இன்னொருவர் எதிர்காலத்தில் முறியடிப்பது இயலாதென்றே நான் உறுதியாக நினைக்கிறேன்.
இறுதியாக, லாராவின் இறுதி வருடங்கள் எவ்வாறு லாராவுக்கு ஓட்டங்கள் மழையாகப் பொழிந்ததோ அவ்வாறே சச்சினுக்கும் இந்த நான்கு வருடங்கள் அமைந்திருக்கின்றன. ஆனாலும் சச்சின் டெண்டுல்கர் இன்னும் இரு வருடங்களாவது விளையாடுவார் என்றே தோன்றுகிறது.

இன்னுமொரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும்...
அந்த இரட்டை சத சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பித்தது சாதரணமான விடயம் என்று சொல்லலாம்..ஆனால் இந்திய அணியின் சமீப கால தொடர்ச்சியான வெற்றிகளுக்குக்குக் காரணகர்த்தா என பயிற்சியாளர் கரி கேர்ஷ்டனுக்கு அதை சமர்ப்பித்தது பெருந்தன்மை.. கேர்ச்டனும் இந்த ஒரு நாள் இரட்டை சத வாய்ப்பை சொற்பத்தில் தவறவிட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.(UAE அணிக்கெதிராக 96 உலகக் கிண்ணத்தில்)

அடுத்தநாள் நாளேடுகளில் சச்சின் 200௦௦


படங்கள் - cricinfo

சச்சின் சிங்கமே, இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட்டில் சாதனை வயல்களில் அறுவடை நடத்து.. உன் இளமை தானே தெரிகிறதே.. இனியும் யாராவது ஓய்வு பெற சொல்லி சொல்வார்கள்?

சச்சினின் அரிய புகைப்படத் தொகுப்புகள்




சச்சின் பற்றிய எனது முன்னைய பதிவுகள்








Post a Comment

23Comments

Please Select Embedded Mode To show the Comment System.*