நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.
இன்றைய தினம் நடைபெற்ற இரு காலிறுதிப்போட்டிகளுமே எதிர்பார்த்ததற்கு மாறான முடிவுகளைத் தந்துள்ளன.
கிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளாகக் கருதப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை மண்கவ்வியுள்ளன.
இன்று பகலில் வீட்டில் இருந்ததால் இந்திய – பாகிஸ்தான் காலிறுதியைப் பார்க்கக்கிடைத்தது. காலநிலை சீர்கேட்டினால் தலா 23 ஓவர்களாக மாற்றப்பட்ட இந்தப்போட்டியில் தான் எத்தனை விறுவிறுப்பு.
இறுதி ஓவர் வரை விறுவிறுப்பைத் தந்த இந்தப்போட்டி எதிர்கால வீரர்களான அந்த இளைஞர்களின் திறமை, அனுபவம், ஆற்றல் என்று அனைத்தையும் சோதிப்பதாக அமைந்திருந்தது.
இன்றைய போட்டியில் பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் ராசாவும்,இந்தியாவின் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மாவும் என்னைக் கவர்ந்திருந்தார்கள்.
பாகிஸ்தான் 2 விக்கெட்டுக்களால் வென்ற இந்தப்போட்டியில் வழமையான இந்திய – பாகிஸ்தானிய விறுவிறுப்பு, பரபரப்புக்கும் குறைவில்லை. இரண்டு அணிகளில் சீனியர் அணிகளிடம் உள்ள அதே சிறப்பம்சங்களும் அதேவேளை குறைபாடுகளும் காணப்படுகின்றன.
அதிரடி,ஆற்றல்,நுட்பம்,improvisation எனப்படும் சிறப்பாற்றல் போன்ற பல நல்ல விஷயங்கள் காணப்பட்டாலும், தேவையற்ற அவசரம்,சில தடுமாற்றங்கள்,மோசமான களத்தடுப்பு போன்ற குணாம்சங்களும் காணப்படுகின்றன.
இளையவர்கள் தானே போகப் போக சரியாகிவிடும் என நம்புவோம்.
ஆனால் இப்போதே வளைக்கவேண்டும்.. பின்னர் வளையாது. தற்போதைய பாகிஸ்தான் களத்தடுப்பு போல..
இன்றைய காலிறுதித் தோல்வியுடன் 2008இல் விராட் கோளி தலைமையில் இந்தியா கைப்பற்றிய 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை மீளப்பெறும்வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.
முதல் சுற்றின் கடைசிப்போட்டியில் இங்கிலாந்திடமும், இன்று பாகிஸ்தானிடமும் அடுத்தடுத்து தோற்றது இந்திய இளையவர்களின் கடைசிநேரப் பதற்றத்தினாலா? ஆனால் இறுதிவரை போராடியது பாராட்டப்படவேண்டிய விஷயம்.
மறுபுறம் பாகிஸ்தானுக்கு இது பெரியதொரு ஊட்டச்சத்து. பங்களாதேஷிடம் மிகவும் தடுமாறி கடைசி ஓவரில் வென்று காலிறுதிக்குள் வந்து இன்றும் தடுமாற்றத்துடன் ஒரு வெற்றி. சீனியர் அணியின் இயல்புகள் அப்படியே இருக்கின்றன.
முதற்சுற்றில் கலக்கிய இங்கிலாந்து இன்று பரிதாபமாக மேற்கிந்தியத்தீவுகளிடம் தோற்றுப்போனது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு முன்னர் இருந்த Big Bird ஜோஎல் கார்னர் போலவே இன்னொரு உயரமான வேகப் பந்துவீச்சாளராக ஜேசன் ஹோல்டர் கிடைத்துள்ளார்.சிறப்பாக வருவார் என நினைக்கிறேன்.
இந்தியாவுக்கெதிராக அதிரடியாக அடித்து நொறுக்கியும், பின் பந்துவீச்சில் அசத்தியும் பிரகாசித்த ஸ்டோக்ஸ் எதிர்கால இங்கிலாந்து அணியில் வருவார் என நம்புகிறேன்.
நாளை இலங்கை – தென்னாபிரிக்காவை சந்திக்கிறது.
முதல் சுற்றில் பிரகாசித்தாலும் நியூசிலாந்திடம் இலங்கை தோற்றிருந்தது. எனினும் சகலதுறைவீரர் பானுக ராஜபக்ச (ஜனாதிபதியின் உறவினரல்ல) போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
தென்னாபிரிக்காவிலும் அசத்தும் நட்சத்திரங்கள் உள்ளனர்.
அடுத்த காலிறுதியில் விளையாடவுள்ள இரு அணிகளில் ஒன்றுதான் கிண்ணத்தை சுவீகரிக்கும் எனக்கருதுகிறேன்.
நியூசிலாந்து & அவுஸ்திரேலியா
முதற்சுற்றில் பிரகாசித்த நியூசிலாந்தின் இளையவர்களுக்கு பழக்கமான ஆடுகளங்களும் கைகொடுக்கின்றன.
ஆஸ்திரேலிய அணியின் இளைய வீரர்கள் தங்கள் சீனியர்கள் போலவே அசத்துகிறார்கள். ஒருவர் விட்டால் இன்னொருவர் போட்டியைக் கொண்டுசெல்லும் திறனை இவ்விரு அணிகள் விளையாடிய போட்டிகளைப் பார்த்தபோதெல்லாம் கண்டு மகிழ்ச்சிப்பட்டேன்.
பலவீனமான அணிகள் என்று கருதப்படும் அயர்லாந்து, பங்களாதேஷ் அணிகளிலும் திறமையான பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மற்றைய அணிகளின் வீரர்களைவிட வெகுவிரைவிலேயே தங்கள் தேசிய அணியில் இடம் கிடைத்துவிடும்.
இந்தத் தொடரில் நான் வியந்து ரசித்த, சிறப்பான பெறுபேறுகள் தந்துள்ள சில வீரர்கள்..
எதிர்கால சர்வதேசக் கிரிக்கெட்டில் இவர்களை எதிர்பார்த்திருங்கள்..மிக விரைவில்.. சில வேளைகளில் 2011 உலகக் கிண்ணப் போட்டிகளிலேயே..
துடுப்பாட்டவீரர்களில்..
ஆஸ்திரேலியாவின் ஆர்ம்ஸ்ட்ரோங், கீத், இங்கிலாந்தின் வின்ஸ்,ஸ்டோக்ஸ், தென் ஆபிரிக்காவின் ஹென்ரிக்ஸ், மேற்கிந்தியத்தீவுகளின் ப்ராத்வேயிட், பாகிஸ்தானின் பாபர் அசாம், நியூ சீலாந்தின் போம்,இலங்கையின் ராஜபக்ச,இந்தியாவின் மன்தீப் சிங்..
பந்துவீச்சாளர்களில்..
இலங்கையின் சத்துர பீரிஸ், இந்தியாவின் சந்தீப் ஷர்மா, பாகிஸ்தானின் பாயாஸ் பட்,மேற்கிந்தியத் தீவுகளின் ஹோல்டர், இங்கிலாந்தின் பெய்ன், பக் ஆகியோரைக் குறிப்பிடுவேன்.
தொடர்ந்துவரும் போட்டிகளை மேலும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன்.
மேலும் சில சுவாரஸ்ய கிரிக்கெட் குறிப்புக்கள்...
#
IPL 3இல் பாகிஸ்தானிய வீரர்களை ஒதுக்கிய/வாங்காது விட்ட செயல் அரசியலா, அல்லது பண சிக்கனமா என்பது எல்லோரைப் போலவே எனக்கும் சந்தேகம் தான்..
அப்ரிடி,ஆமீர்,குல்,உமர் அக்மல் போன்ற ட்வென்டி 20 களையும் யாரும் வாங்காதுவிட்டதையும், காயமுற்றுக் கொண்டிருக்கும் பொன்ட் , அதிகம் அறியப்படாத ரோச்சுக்கு அள்ளிக் கொடுத்ததையும் பார்க்கும்போது இது அரசியலே என்று தோன்றுகிறது.
ஏதோ நடத்துங்கப்பா..
#
ஆஸ்திரேலியாவின் கமெரோன் வைட் தன மீது ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் வைத்த நம்பிக்கையை மீண்டும் காப்பாற்றினார். பாகிஸ்தானுக்கெதிராக நேற்று என்ன ஒரு அபார சதம்.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டிகளை அவதானித்துவந்த நேரத்தில் இவரின் அதிரடிகளும் தலைமைத்துவ நுட்பமும் எப்போதும் என்னைக் கவர்ந்தவை.
என்னைப் பொறுத்தவரை கிளார்க்கை விட ஆஸ்திரேலியாவின் தலைமைப்பதவிக்கு அடுத்ததாக இவரே பொருத்தமானவர் என்று சொல்வேன். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் முதலில் வைட் தொடர்ந்து விளையாடவேண்டும்.
#
பங்களாதேஷுக்கேதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியைவிட அதிகமாகப் பேசப்பட்டது சேவாகின் வாய்ப் போர்முரசு தான்.ஆனால் நாளைய போட்டிக்கு மீண்டும் தோனி காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் வந்துள்ளார்.
லக்ஸ்மனின் காயம் தமிழக வீரர் முரளி விஜய்க்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஆனால் விஜய் விளையாடிய முதல் இரு போட்டிகளைப் போலல்லாமல் நாளை ஆரம்பிக்கும் டெஸ்ட் போட்டியில் மத்தியவரிசை வீரராகவே களமிறங்கப் போகிறார். பிரகாசிப்பாரா பார்க்கலாம்.சொதப்பினால் இடத்தைக் கொத்திக்கொள்ளப் பெரிய வரிசையே பார்த்துக் கொண்டிருக்கிறது.
#
இலங்கையில் சத்தமில்லாமல் இரு வெளிநாட்டு அணிகள் மூன்று நாட்களாக கிரிக்கெட் போட்டியில் விளையாடிவருகின்றன.
ICC நடாத்தும் INTERCONTINENTAL போட்டிகளுக்காக தம்புள்ளை மைதானத்தில் அயர்லாந்து-அப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நாளை போட்டியின் இறுதி நாள்.
#
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் ட்வென்டி 20 சாம்பியன் போட்டித் தொடரான KFC BIG BASHஇல் விக்டோரியா சாம்பியனாகியுள்ளது. அவர்களின் வழமையான அணித் தலைவரான கமெரோன் வைட் இல்லாமலேயே இறுதிப் போட்டியில் தென் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்துள்ளது.
தென் ஆஸ்திரேலியாவின் மேற்கிந்திய இறக்குமதியான கீரன் பொல்லார்ட் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடியும் பயனில்லை.
விசேட குறிப்பு - இலங்கை ஜனாதிபதி தேர்தல்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று நிறைவு பெறுகின்றன.ஆனால் விளையாட்டுக்கள் இன்னும் குறையவில்லை..