
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் ரிக்கி பொன்டிங் கடந்த தசாப்தத்தின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
38 முன்னாள்,இந்நாள் கிரிக்கெட் வீரர்கள்,பயிற்றுவிப்பாளர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் அடங்கிய ஜூரிகள் குழு வாக்களித்து இந்தத் தெரிவை மேற்கொண்டுள்ளார்கள்.
இரண்டாம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்க சகலதுறை வீரர் ஜக்ஸ் கலிசை மிகத் தெளிவான ஒரு வித்தியாசத்தில் முந்தி பொன்டிங் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மூன்றாம் இடம் ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் காப்பாளர் அடம் கில்க்ரிச்டுக்கும், நான்காம் இடம் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும், ஐந்தாம் இடம் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் க்ளென் மக்க்ராவுக்கும் கிடைத்தன.
முதல் பத்து இடங்களிலுள்ள ஏனையோர் சச்சின் டெண்டுல்கர், ஷேன் வோர்ன், பிரையன் லாரா, ராகுல் டிராவிட்,ஷிவ்னரைன் சந்தர்போல்.
தெரிவுகளை மேற்கொண்டிருந்த 38 நடுவர்களும் அளித்த தமது முதல்,இரண்டாவது,மூன்றாவது தெரிவு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே இத் தெரிவுகள்.
நவீன கால கிரிக்கெட்டின் இரு பெரும் புள்ளிகளான பிரையன் லாரா,சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பெரிதாகப் புள்ளிகளைப் பெறவில்லை. ஷேன் வோர்னும் அவ்வாறே..
புள்ளிவிபரங்கள்,தரவுகளை வைத்துப் பார்த்தால் பொண்டிங்குக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகப்பொருத்தம் என்பது தெளிவாகிறது.
இந்த தசாப்த காலப்பகுதியில் (2000 முதல் 2009 வரை) டெஸ்ட் போட்டிகளிலும்,ஒரு நாள் போட்டிகளிலும் 9000 ஓட்டங்களைக் கடந்த ஒரே ஒரு துடுப்பாட்ட வீரர் பொன்டிங் மட்டுமே.அத்துடன் 32 சதங்களையும் குவித்துள்ளார்.
கலிசின் சகலதுறைப் பெறுபேறுகள் சிறப்பாகத் தோன்றினாலும், சிக்கலான காலகட்டங்களில் சிறப்பாக விளையாடியதும், பதிலடி கொடுத்த அவரது ஆட்டத்திறனும், தலைமைப் பண்புகளுமே அவரைப் பலரா தெரிவுசெய்யக் காரணம் என நினைக்கிறேன். ஏனைய எல்லா வீரர்களையும் விட ரிக்கி பொன்டிங் தான் தனது அணிக்காக அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இவருக்குப் பிறகு வேண்டுமானால் ஷேன் வோர்ன், மக்க்ரா,முரளி போன்றோரை சொல்லலாம்..
நடுவர்களில் ஒருவரான நியூ சீலாந்து அணித் தலைவரும் இதே கருத்தை ஆமோதிக்கிறார்."எல்லாப் பந்துவீச்சாளர்களையும் அடக்கியாளும் திறமை பொண்டிங்கிடம் இருக்கிறது"
பொன்டிங்கின் தலைமைத்துவ சாதனைகள் வேறு யாரோடும் ஒப்பிட முடியாதவை.. இந்த தசாப்த காலத்தில் 40
டெஸ்ட்கள், 145 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.. இவற்றுள் இரு உலகக் கிண்ணங்கள்,இரு மினி உலகக் கிண்ணங்களும் அடங்குகின்றன..
இலங்கையின் குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன, ஆஸ்திரேலியாவின் மத்தியூ ஹெய்டன், பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக்,மொகமட் யூசுப், தென் ஆபிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித் ஆகியோருக்கு ஒரு வாக்குக் கூடக் கிடைக்கவில்லை என்பதும் இங்கே ஆச்சரியமான விஷயம்.
இந்த விருது நேற்று அறிவிக்கப்பட்டது பொண்டிங்கில்ஏற்படுத்திய மாற்றம் நேற்றும் இன்றும் ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் தெரிந்தது..
பின்னே, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலே தடுமாறிவந்த பொன்டிங், தன் சொந்த ஊர் மைதானத்தில் வைத்து தனது மனைவி, பிள்ளை, பெற்றோர், உறவினர்,நண்பர்கள்,அயலவர் ஆகியோர் முன்னிலையில் அபாரமான இரட்டை சதத்தை அடித்ததை என்னவென்பது?
தனது உப தலைவர் கிளார்க்கோடு 352 ஓட்ட இணைப்பாட்டத்தையும் அற்புதமாக வழங்கியிருந்தார்.
அண்மைக்கால குறைந்த பெறுபேறுகளை அடுத்து விமர்சனங்கள் கிளம்பு முன் தானாகவே தனது வழக்கமான மூன்றாம் இலக்கத்திலிருந்து எதிர்காலத்தில் கீழிறங்கப்போவதாக தெரிவித்திருந்த பொன்டிங் இன்று தனது ஐந்தாவது இரட்டை சதத்தைப் பெற்றார்.
இந்த மைதானத்தில் பெறப்பட்ட முதலாவது இரட்டை சதமும் இதுவேயாகும்.
போராடும் குணம் கொண்ட பொன்டிங் தனது அடுத்த கட்டத்தை ஆரம்பித்துவிட்டார். சச்சினின் உலகசாதனை நோக்கிய அவர் பயணத்தில் இனி லாராவை முந்த 184 ஓட்டங்களும், சச்சினை முந்தி உலக சாதனையை வசப்படுத்த 1200 ஓட்டங்களும் இருக்கின்றன.
இவ்வருடம் இந்தியாவுக்கு ஒப்பிட்டளவில் குறைந்த போட்டிகளே இருப்பதால், சச்சினை முந்தப் பொன்டிங்குக்கான வாய்ப்புக்கள் அதிகம்.. ஆனால் 2011 இலேயே இது நிகழும் என எதிர்பார்க்கலாம்..
எனினும் இன்று மாலை பாகிஸ்தானின் மொகமட் அமீருக்கு ஹோபார்ட்டிலுள்ள பொன்டிங்கின் வீட்டில் ஸ்பெஷல் விருந்தாம்.. (பொன்டிங் ஓட்டம் எதுவும் எடுக்காமல் இருந்தபோது இலகுவான பிடியொன்றைத் தவற விட்டவர்)
தகவல்கள் - Cricinfo