மிக மிகத் தாமதமாக வருகிற வேட்டைக்காரன் பற்றிய பதிவு.. இதை விமர்சனம் என்பதைவிட என் பார்வை என்று சொல்வதே பொருத்தம்.
என் தம்பி வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தநேரம், குடும்பமாக பல இடங்களுக்கு போய்வந்திருந்தாலும், எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படம் பார்க்கப் போகலாம் என்றவுடன் 'வேட்டைக்காரன்' பார்க்கப் போகலாம் என்று நான் முடிவெடுக்க முதல் யோசித்தேன்..வலை விமர்சனங்களை ஓரளவு மேலோட்டமாக வாசித்த பின்னர் (அதுவும் விஜய் ரசிகர்கள் சிலரே நொந்து போன பின்) குடும்பமாகப் பொய் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டுமா எனக் கொஞ்சம் தயங்கினேன்.
எனினும் வேட்டைக்காரன் போயே ஆகவேண்டும் என்று முடிவெடுக்க ஒரே ஒரு முக்கிய காரணம் என் இரண்டு வயது செல்ல மகன்.
சன் டிவியில் எப்போதெல்லாம் வேட்டைக்காரன் விளம்பரம் போகுதோ,(எப்போதுமே அது தானே) அவன் அடையும் உற்சாகமும், வேட்டைக்காரன் பாடல்கள் பார்த்தாலோ, கேட்டாலோ தன் மழலைக் குரலில் குதூகலமாக அவன் 'விஜய்' என்று கூவுவதும் ஆடும் ஆட்டமும்,பார்த்த பிறகு வியந்து போனேன்..விஜய் பாய்வது,ஓடுவது என்றெல்லாம் பார்க்கும்போதெல்லாம் அவன் 'விஜய்,விஜய்' என்று தன் மழலைக் குரலில் கூவுவதைப் பார்த்த பிறகு சரி 'வேட்டைக்காரன்' போகலாம் என்று முடிவெடுத்தோம்.
அவனுக்குப் பிடித்த மிக்கி மவுஸ், டொனால்ட் டக், டோரா, டொம்&ஜெரி,பும்பா வகையறாக்களில் விஜயும் இப்போது உள்ளடக்கம் என்பது புரிந்தது. (முன்பே தொலைக்காட்சியில் கமல்,சூர்யா,ஜெயம் ரவி ஆகிய பெயர்களும் அவன் வாயில் சரளமாக வரும் சில பெயர்கள்.. திரையில் இவர்கள் முகம் தெரியும்போதெல்லாம் டக்கென்று பெயர் சொன்னாலும் விஜய் இப்போது தான் பிக் அப்பாகி அவனுடைய FAVOURITE ஆகிவிட்டார்)
எனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ அவனுக்குப் பிடித்தால் நானும் சேர்ந்து ரசிப்பது போலவாவது நடிக்கவேண்டும் தானே?
இன்னொரு காரணம் வேட்டைக்காரன் எல்லாம் கைக்காசு செலவழித்துப் பார்ப்பதில்லை என்று நினைத்தது போலவே, சினிமாஸ் நிறுவனத்தார் எங்கள் வானொலியோடு கொண்டுள்ள நட்புக் காரணமாக எனக்கு குடும்பத்தோடு வருமாறு விசேட அழைப்புக் கொடுத்திருந்தனர். கப்பிட்டல் திரையரங்கு A/C இல்லாத, ஆசனங்கள்,திரை ஆகியன மோசமான நிலையில் உள்ள ஒரு அரங்கு எனப் பொதுவாகவே நான் அங்கு போவதே இல்லை. (இறுதியாகக் கப்பிட்டலில் பார்த்தது 'யூத்' - அதுவும் விஜய் படம்)
ஆனால் ஓசி என்று வந்த பிறகு தியேட்டார் எப்படி இருந்தாலென்னா.. எவ்வளவு பார்த்திட்டோம்..
திரையரங்குக்குள் நுழைந்தவுடன் இந்தியாவிலிருந்து எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்துள்ள நண்பர் பிரஷாந்த் "இவன் படத்துக்கு இது பரவாயில்லை " என்றார்..
(ஆனால் படம் முடியும் வரை அடிக்கடி அபிராமி,உதயம் தியேட்டர்கள் பற்றிப் பிரசாரமே நடத்திக் கொண்டிருந்தார்.. நானும் அங்கெல்லாம் போயிருக்கிறேன் என்பதாலும் அவையெல்லாம் உண்மை என்பதாலும் அமைதியாகவே இருந்தேன்..)
உள்ளே போய் அமர்ந்தவுடனேயே ஏற்கெனவே நாங்கள் வாகனத்தில் பயணிக்கும் பொது பேசிக் கொண்டுவந்த விஷயங்கள்,வெளியே இருந்த பெரிய கட் அவுட்டுகள்,படங்கள், உள்ளே ஒழித்துக் கொண்டிருந்த வேட்டைக்காரன் பாடல்கள் ஆகியன அளித்த உற்சாகம் நம்ம வாரிசு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.
எனினும் AC இல்லாததாலும், ஒரு இடத்தில் நீண்ட நேரம் இருக்க மாட்டான் என்பதும் படம் முடியும் வரை பொறுமையாக இருப்பானா என்ற பயத்தை எங்களுக்கு தந்திருந்தன.ஆனாலும் மின்விசிறியும் எங்களுக்குக் கிடைத்த ஓரளவு சொகுசான ஆசனங்களும் காப்பாற்றின.
விஜய் தோன்றும் முதல் பாட்டிலிருந்து அவனது குதூகலம் தெரிந்தது.. ஆகா வீட்டுக்குள்ளேயே ஒரு விஜய் ரசிகனா என்று யோசித்துக் கொண்டேன்,..
விஜய் பாயும்போதெல்லாம் "விஜய் டொம்மா " என்று கொஞ்சம் கவலை,ஆச்சரியம், எதிர்பாப்பு கலந்த குரலில் அவன் கூவியது எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்.இப்போது அது வீட்டில் வழக்கமான ஒரு சத்தம்.
(எங்கள் சின்னவன் ஹர்ஷு வீட்டில் விழும் நேரம்,ஆலது விழப் போகிறான் என்று எச்சரிக்க நாம் சொல்லும் 'டொம்மா' தான் இப்போது அவன் விஜய்க்கு பாவிக்கும் டொம்மா)
வேட்டைக்காரன் படம் வெளிவந்தவுடன் மேலோட்டமாக சில விமர்சனங்களை வாசித்தபோது மொக்கை, படுமொக்கை, பரவாயில்லை, Better than குருவி என்ற கருத்துக்கள் தான் காணப்பட்டன. ( படம் பார்க்கும் முன் எந்த விமர்சனமும் முழுமையாகப் படிக்கக்கூடாது என்ற என கொள்கைப் பிரகாரம்)
வேட்டைக்காரன் பாடல்களின் விமர்சனங்கள் எழுதியபோதே சில லொள்ளுகள் பண்ணியதும், எதிர்வினைகளும் அனைவரும் அறிந்ததே. வேட்டைக்காரன் விமர்சனங்களைப் பார்த்ததுமே – 'அப்பவே சொன்னமில்ல' என்று 'சுருக்' பதிவு போடலாமா என்று எனக்குள்ளே உள்ள 'குறும்பன்' சொன்னாலும் எதற்கும் எவ்வளவு 'ரிஸ்க்' எடுத்தாவது 'வேட்டைக்காரன்' பார்த்துவிடுவது என்றே முடிவெடுத்தேன்.
எனினும் வேட்டைக்காரன் திரையிட்ட முதல்நாள் எம் தமிழ் அன்பு உறவுகள் விஜய் ரசிகர்கள் கொழும்பு சவோய் திரையரங்கில் நடந்துகொண்டவிதம், இனிமேலும் கொழும்பில் 'நல்ல' திரையரங்குகளில் தமிழ்ப்படங்களைத் திரையிடவே முடியாத நிலைமை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே எந்தெந்த, யாருடைய படங்கள் பார்க்கப்போகிறேனோ அந்த மனநிலைக்குத் தயாராகுவதால் - எதிர்பார்த்து போய் ஏமாந்து போனது குறைவு.
பின்னே, மணிரத்னம், பாலா, சேரன் படங்களில் விஜய், ரஜினி பாணியையோ, பேரரசு, விஜய், K.S.ரவிக்குமார் திரைப்படங்களில் தரமான அம்சங்களையோ எதிர்பார்த்துப்போவது சொ.செ.சூ தானே!
வழமையான விஜய் formula கதை. விஜய் சாகச நாயகனாக அவரைச் சுற்றியே எதிர்பார்க்கப்பட்ட கதை. ரஜனி பாணியில் அண்மைக்காலமாக விஜயின் படக்கதைகள் அமைந்து வருவதைப்போலவே முதல் பாதியில் விஜய் தன் நட்புப் பரிவாரங்களோடு செய்யும் நகைச்சுவைக் கூத்துக்களும்;, பின்னர் இரண்டாம் பாதியில் தரணியின் பாணியில் கதாநாயகன் தனது சாதூர்யம், சாமர்த்தியத்தினால் கட்டம்கட்டி வில்லனை மடக்கி அழிக்கும் திரைக்கதை.
திரைக்கதையும் - பல காட்சிகளும் தரணியின் படமொன்றைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. இது வேட்டைக்காரனைத் தனது முதல் படமாகத் தந்துள்ள பாபுசிவனுக்கு ப்ளஸ்ஸா? மைனஸா?
வேட்டைக்காரனில் பல காட்சிகளை இலகுவாக ஊகிக்க முடிவது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் சில 'பஞ்ச்' வசனங்களும், விஜய் வலிந்து உருவாக்கும் சில சுவாரஸ்யங்களும் கொஞ்சமாவது ரசிக்க வைக்கின்றன.
நான் ரசித்த இன்னொரு விஷயம்.. விஜயின் மகனின் ஆட்டம்.. பையனின் கண்ணில் அப்பாவின் அதே துறு துறு.. தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஸ்டார் ரெடி..
விஜயின் பெருமிதம் அவனின் ஆட்டத்தில் தெரிகிறது.
விஜய் - புத்துணர்ச்சியாக, இன்னும் இளமையாக, வழமைபோல் துடிப்பாக, அவருக்குப் பொருத்தமான வேடத்தில் இயல்பாக இருக்கிறார். தனது வழமையான ஸ்டைல்களை (வசன உச்சரிப்புப் பாணி, கை, கால்களை அசைக்கும் பாணி, நகைச்சுவை உடலசைவுகள்...நவஉ) உடையலங்காரங்களை விடமுடியாமலிருப்பது உறுத்தல்.
விஜயும் ரஜனி போலவே மீள முடியாத வட்டத்துக்குள் சிக்கிவிட்டார் என்று தெரிகிறது. சத்யன், ஸ்ரீநாத் ஆகியோரின் நகைச்சுவைக்;காட்சிகள் எடுபடாததால் விஜய் எங்களுக்கு சிரிப்பை வரவழைக்கவும் கஷ்டப்படுகிறார்.
பலவீனமான கதையொன்றுடன் கடும் உழைப்பினால் தனியே விஜய் வேட்டைக்காரனுக்காகப் போராடுவதைப் பார்க்கையில் பரிதாபமாகவும் உள்ளது.
விஜய்க்கு, அடுத்தபடியாக படத்தைத் தாங்கும் ஒருவர் சலீம் கௌஸ்.
வெற்றிவிழா 'ஜிந்தா'வுக்குப் பிறகு படம் முழுதும் கதாநாயகனுக்கு இணையாக வியாபித்துள்ள 'வேதநாயகமாக' மனிதர் முகத்திலும், உடலசைவிலும், உதட்டசைவிலும் கூடக் காட்டும் உணர்ச்சிகளும் மாறுபட்ட தோற்றப்பாடுகளும் படத்தில் முக்கிய உயிர்நாடி. வசன உச்சரிப்புக்களாலேயே காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறார்ளூ அல்லது முயற்சிக்கிறார்.
குறிப்பாக 'பயம்' என்ற 'முதலீடு' பற்றி விஜய்க்குப் பாடம் எடுக்கும் இடம்ளூ அரசியல் தலைவரிடம் அமைச்சர் பதவிகோரும் இடம் என்பன.
இப்படியான மசாலாப்படங்களை – மொக்கைளிலிருந்து சுமாராகவோ ஹிட்டாகவோ வேறுபடுத்துவது கதாநாயகர்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய இப்படியான வில்லன்கள் தான். சலீம் கௌஸ் போன்றவர்களை சரியான முறையில் தமிழ் இயக்குனர்கள் இனியாவது பயன்படுத்துவார்களா?
இன்னும் குறிப்பிடக்கூடிய முக்கிய பாத்திரங்களாக – சாயாஜி ஷின்டே, சன் டிவி விளம்பரங்களில் 'வாடி' என்று அழைத்தே வதைக்கும் அந்த வில்லன் செல்லாவாக ரவிச்சந்திரன் (ஒரு தடவை தான் ஒரு பெண்ணை அனுபவிப்பாராம்.. பிறகு தொடவே தொடாத நல்லவனாம் ), விஜயின் கல்லூரி நண்பியாக வரும் சஞ்சனா படுகோன், அவர் தந்தையாக வரும் மாணிக்க விநாயகம், அனுஷ்காவின் அப்பாவிப்பாட்டி சுகுமாரி (இதெல்லாம் வாழ்க்கையில் நடக்குமா? என்ன கொடுமை பாட்டி இது), வில்லனின் அடியாளாக வரும் பல்லில் கறை படிந்த, முடியில் கலர் அடித்த அடியாள் (இவரைத் தான் விஜய் சாக்கடை என்று பஞ்சில் தாக்குகிறார்)..
விஜயின் தந்தையாக டெல்லி கணேஷ் ஆரம்பக் காட்சிகளில் மட்டும் வந்து மறைந்து விடுகிறார்.
கம்பீரமான பொலிஸ் அதிகாரியாக விஜய்க்கு பொலிஸில் சேரவேண்டும் என ஆர்வமூட்டுகின்ற அதிகாரியாக வரும் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியின் பாத்திரம் முன்பே இயக்குனரின் குருநாதர் தில்லில் காட்டியது. ஸ்ரீஹரி திரையில் வரும் போதெல்லாம் வேறு மொழிப்படம் பார்க்கும் உணர்வு எனக்கு ஏற்படுவதை ஏனோ தவிர்க்கமுடியவில்லை.ஆனால் ஸ்ரீஹரியின் கம்பீரம் அசத்தல்.குரல் தெலுங்கு டப்பிங் உணர்வு தருகிறது.
சாயாஜி ஷின்டே சமயத்தில் வில்லனா, நகைச்சுவை நடிகரா என்ற குழப்பம் இயக்குனருக்கே இருந்திருக்கிறது போலும். ஆனால் படம்பார்ப்போர் கதாநாயகன் கோணத்தில் இருப்பதனால் எரிச்சலூட்டுகிறார்.
எங்கே அனுஷ்காவைப் பற்றி எதுவுமே சொல்லலை என்று கேட்கும் வாலிப, வயோதிக அன்பர்களே...
அனுஷ்கா அழகாயிருக்கிறார்? – சில நேரங்களில்...
அளவோடு (தான்) நடிக்கிறார்.
விஜயை (படத்தில்) அலைய வைக்கிறார் – பின் விஜய் பின் அலைகிறார்.
சின்னத்தாமரையில் நளினம், உச்ச மண்டையில் கவர்ச்சியோ கவர்ச்சி... எனினும் 'ரெண்டு – மொபைலாவில்;' நான் கிறங்கிய அழகோ, கவர்ச்சியோ, அருந்ததியில் வியந்த அழகோ, கம்பீரமோ – வேட்டைக்காரனில் இல்லை.
துருத்திய மூக்கும், நெடிய கழுத்தும், சில சமயம் குழிந்த கண்ணும் என அனுஷ்கா – நான் முன்பு ரசித்த அனுஷ்காவாக இல்லைளூ அவரைக்காய் ஆவக்காய் போலிருக்கிறார். (அதிகம் வேலையோ)
பல சமயம் புடலங்காய் போல இருக்கும் இவர் உயரம் விஜய்க்கு சரிநிகராக இருப்பதால் விஜய் கம்பீரமில்லாத கூன் விழுந்தவராகத் தெரிகிறார்.
விஜயக்குப் பொருத்தம் த்ரிஷா தான் என்பது மீண்டுமொரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.
என்னால் பெரிதாக லயிக்க முடியாமல் போன வேட்டைக்காரன் பாடல்கள் படத்தில் பரவாயில்லை எனுமளவுக்கு இருக்கின்றன..
ஆனால் என் உச்சி மண்டை பாடல் வந்த இடம் படத்தினை ஜவ்வாக்குகின்றது.. ஆனாலும் அனுஷ்காவின் பரந்த,திறந்த மனசு பார்ப்போருக்கு அது தானே விருந்து.
படம் முழுவது விஜய் சொல்லும் தன் போர்முலா பாடங்களில் 'சின்னத்தாமரை' பாடல் முக்கியமானது..
அதில் விஜய் வரும் கெட் அப் 'என்ன கொடும விஜய்' ரகம்.. அந்தக் குடுமியும், கலரிங் தலையும்..
ஏன் தான் கெட் அப் மாற்றி நடிப்பதில்லை என்பதை ரசிகர்களுக்குப் புரிய வைக்கிறார்.
வலிந்து புகுத்தப்படும் விவேக்,வடிவேலு காமெடிகள் தன் படத்துக்கு ஏன் தேவையில்லை என்பதை தனது ரசிக்கத் தக்க சில இடங்களில் நல்லதாகவும், எரிச்சலூட்டும் தன் வழமையான அங்க அசைவுகள், சத்யன்,ஸ்ரீநாத் ஆகியோரின் கடுப்பேத்தும் காட்சிகளில் மோசமாகவும் காட்டுகிறார்.
ஆனால் மதுரைக்கார வில்லன் அனுஷ்காவைப் பணயம் வைத்து விஜயைத் தன் இடத்துக்கு வரவழைக்கும் காட்சியில் விஜய் கேட்கும் "எதுக்கோ வர சொன்னியே.. எதுக்கு வர சொன்னே?" திரையரங்கில் கை தட்டல்கள் கிளப்பும் இடம்..அசராமல் அலட்டிக் கொள்ளாமல் செய்கிறார் விஜய்.
ஸ்கூட்டர் காட்சிகள்,அனுஷ்கா வீட்டில் ஒரு சில இடங்களும் வழமையான விஜய் 'சிரிகள்'..ரசிக்கலாம்..
அக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது.. அந்த உழைப்பில் விஜயின் முயற்சியும், சண்டைப் பயிற்சியாளரின் திறனும் தெரிகிறது..
விறுவிறுப்பாகக் காட்சியை நகர்த்துவதில் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இயக்குனர் பாபு சிவனுக்கு நிறையவே உதவி இருக்கிறார்.
ஆனால் கோபிநாத் 'புலி உறுமுது' தவிர மற்றைய பாடல் காட்சிகளில் ஏனோ தானோவென்று இருந்துள்ளார். ஏனோ?
எடிட்டிங் விஜயன்.. அவர் கைகள் கனகச்சிதமாக வேலையை முடித்துள்ளன. நகரும் வேகமும், சண்டைக் காட்சிகளும் இவர் பெயரை சொல்லும்.
விஜயின் வில்லனுக்கேதிரான எகத்தாளமும் அலட்டிக் கொள்ளாத அதிரடிகளும் ரசிக்கவே வைக்கின்றன.
ஆனால் சாதுரியமாக வேதநாயகத்தின் ஒவ்வொரு அடித்தளமாக வேட்டைக்காரன் வேட்டையாடும்போது எங்கேயோ பார்த்த உணர்வும் சலிப்பும் ஏற்படுவது தவிர்க்கமுடியவில்லை. அவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் வைத்துள்ள தாதாவை தூத்துக்குடிப் பையன் ஒருவன் சில பசங்களோடு சேர்ந்து சரிப்பதும் நம்பமுடியவில்லை.
விஜய் கதை கேட்டு நடிக்காமல் பாத்திரம்,இமேஜ் பற்றி அக்கறைப்படுவது எல்லாம் சரி.. இனிமேலும் திரைக்கதையையும் முன்னதாகவே கேட்டுக் கொள்வதும் நல்லது.(இல்லாவிட்டால் கதைக்களம் மட்டுமல்ல.. ஏனைய எல்லாமே முன்பு பார்த்த சலிப்பை விஜய் ரசிகர்களுக்கும் தரும்)
குருவி, வில்லு பாணிப் பாய்ச்சல்கள் இதிலும் உண்டு..
குதிரையில்ருந்து பாய்ந்து ஜீப்பில் ஏறும் இடம், அனுஷ்காவோடு கட்டடத்திலிருந்து கீழே பாய்வது எல்லாம் என் மகன் "விஜய் டொம்மா" சொன்ன இடங்கள்..
எல்லாவற்றிலும் மகா பாய்ச்சல் அருவிப் பாய்ச்சல்.. அம்மாடியோவ்.. பாய்ச்சலோ பாய்ச்சல்.. அரசியல்வாதி ஆக விஜய் மாறினால் இந்த அனுபவம் நல்லாவே உதவும்.
விஜய் பாடல் காட்சிகளில் உடுத்திவரும் ஆடைகள் - குறிப்பாக கரிகாலன், என் உச்சி மண்டை ராமராஜனை ஞாபகப்படுத்தினாலும், படத்தில் அவர் வேட்டைக்காரனாக மாறிய பின்னர் அவரது கொஸ்டியூம் செம ஸ்டைல்.. பொருத்தமாகவும் இருக்கிறது..
ஆனால் தமிழ் திரையுலகம் எப்போது இந்த பாட்ஷா,அருணாச்சலம் பாணி அடியாட்கள் புடை சூழ நடக்கும் ஹீரோயிசத்தை விடப்போகிறது?
என்னைப் பொறுத்தவரை மசாலா ரகப் படம், விஜயின் படம் என்று வகைப்படுத்தப்பட்ட வேட்டைக்காரன் அப்படியொன்றும் என்னைக் குத்திக் குதறவில்லை..உண்மையில் பல இடங்களில் ரசித்தேன் என்றே சொல்வேன்..
ஆதி,குருவி ஆகிய விஜய் படங்களோடு பார்த்தால் வேட்டைக்காரன் பல மடங்கு முன்னேற்றம்.
ஜனா,ஆழ்வார்,பாபா,அண்மைக்கால பிரஷாந்த்,சுந்தர்.சியின் படங்கள் எல்லாம் பார்த்து சூனியம் வாங்கிக் கொண்ட எமக்கு வேட்டைக்காரனை ஒரு தடவை ரசிப்பதொன்றும் கொடுமையில்லை..
விஜய் படம் தானே.. இது இப்படித் தான் இருக்கும், விஜய் ரசிகர்களுக்குப் பிடித்திருப்பதில் ஆச்சரியமே இல்லை.
இன்னும் சன் டிவியில் வெற்றிப் படமாக விளம்பரப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் (அவதாரை வசூலில் முந்தியது என்று சொல்றாங்களே.. தமிழ் டப்பிங் அவதாரையா அல்லது நாசர் முன்பு எடுத்த அவதாரத்தையா?) வேட்டைக்காரன் விளம்பரம் போகும்போதெல்லாம், என் மகன் "விஜய் டொம்மா" சொல்கிறான்..
அவனைப் பொறுத்தவரை வேட்டைக்காரன் ஒரு மைல்கல்..
பின்னே சலிக்காமல் ஓரிடத்தில் இருந்து இரண்டரை மணிநேரம் ஒருபடத்தை ரசிக்க முடிந்துள்ளதே..
வளர்ந்து அவன் வலைப்பதிவு எழுதினால் 'என் அப்பா காட்டிய வேட்டைக்காரன்' என்று இடுகை இடுவானோ என்னவோ? ;)
பி. சே -
இதைப் பதிவேற்றலாம் என்று இருக்கும் இந்த நொடியில் சன் டிவி விளம்பரம் - வேட்டைக்காரன் பாடல்கள் நாளை இரவு முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்களாம்.. அதற்கும் "விஜய் விஜய்" ஓடு "விஜய் டொம்மா" போடுகிறான் என் குட்டிக் கள்ளன்.
நாளை இரவிலிருந்து அடிக்கடி இனி என் வீட்டில் "விஜய் டொம்மா" கேட்கலாம்..