நான் எனது முன்னைய பதிவில் எதிர்வுகூறியது போலவே, அடுத்துவரும் பங்களாதேஷ் முக்கோணத் தொடருக்கான இலங்கை அணியில் அதிரடியான, அவசியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அண்மையக் காலத்தில் பிரகாசிக்கத் தவறிய அத்தனை பெரிய தலைகளுக்கும் ஆப்பு.
இனிப் பொட்டி கட்டவேண்டியது தானா?
அண்மையில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருபது ஆண்டுகளைப் போற்ர்த்தி செய்த சனத் ஜெயசூரிய, கொஞ்சக் காலமாக உலகின் அத்தனை துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்திவந்த பந்துவீச்சாளர்கள் லசித் மாலிங்க, அஜந்த மென்டிஸ் மற்றும் எதிர்காலத் தலைவர் என்று பில்ட் அப் கொடுக்கப்பட்டு வந்த சாமர கப்புகெடற ஆகிய நால்வருமே வெளியேற்றப்பட்ட பெரும் தலைகள்.
ஆனாலும் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட திலான் சமரவீர மத்திய வரிசைத் துடுப்பாட்ட வரிசைக்குப் பலமூட்ட எனத் தப்பித்துள்ளார்.
இலங்கை அணிக்கு மறுபக்கம் இன்னொரு இடி..
முக்கியமான நான்கு வீரர்கள் காயம் காரணமாக பங்களாதேஷ் செல்ல முடியவில்லை.
இந்தியத் தொடரில் விளையாடமுடியாமல் போன முரளிதரன், டில்ஹார பெர்னாண்டோ, அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரோடு கடைசிப் போட்டிக்கு முன்னதாக காயமுற்ற மகேல ஜயவர்தனவும் இலங்கை அணியில் இடம்பெறவில்லை.
இதன் காரணமாக அனுபவமில்லாத ஒரு இளைய அணியாகவே இந்த முக்கோணத் தொடரில் இலங்கை களமிறங்குகிறது.. போகிறபோக்கில் பங்களாதேஷும் இலங்கை அணியைத் துவைத்தெடுக்கும் போலத் தெரிகிறது.
மகேளவும் இல்லாததன் காரணமாகத் தான் சமரவீர தப்பித்துக் கொண்டார்.. ஆனால் தேர்வாளர்கள் கிழட்டு சிங்கம் சனத் மீது தமது இரக்கப் பார்வையை செலுத்தவில்லை.
இதேவளை சுவாரய்சமான விஷயம் என்னவென்றால் கொல்கத்தா இரவு விடுதி சம்பவத்தை அடுத்து தண்டனைக்கு உள்ளாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டில்ஷான் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரகசியமாக அவருக்கு எச்சரிக்கை&தண்டனை வழங்கப்பட்டத்தாக உள்ளகத் தகவல்கள் மூலம் அறிந்தேன்.
அண்மைக்காலமாக உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்துவந்த நால்வருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கப்படக்கூடிய,பாராட்டக் கூடிய விடயம்.
இந்த வருட ட்வென்டி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை அணிக்குத் தெரிவாகியுள்ளார் சாமர சில்வா. இந்தப் பருவ காலத்தில் கழகமட்டத்தில் வீகமாகவும்,தொடர்ச்சியாகவும் ஓட்டங்கள் குவித்துவந்த சில்வா தேசிய அணியில் விட்ட இடத்தை மீண்டும் நிரந்தரமாக்கிக் கொள்வாரா பார்க்கலாம்..
சிறிது காலம் முன்பாக சாமர இலங்கை அணியில் இல்லாத போட்டிகளை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது.
அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்த சுழல் பந்துவீச்சாளர் மாலிங்க பண்டார உள்ளூர்ப் போட்டிகளில் ஏராளமாக விக்கெட்டுக்களை வாரியெடுத்து மீண்டும் வருகிறார். ஆனால் தற்போது இலங்கை அணியின் முதல் சுழல் தெரிவு சுராஜ் ரன்டிவ் தான்.
காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் திலான் துஷார அணிக்கு வருவது இலங்கை அணிக்கு நிச்சயம் உற்சாகத்தை வழங்கும்.
நான்காமவர் வருவதில் எனக்கு மிகவும் திருப்தி..
20 வயதே ஆன இளம் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே.
ராகம கிரிக்கெட் கழகத்தின் வீரரான லஹிரு, இந்தப் பருவகாலத்தில் ஓட்டங்களை மலையாகக் குவித்துவந்துள்ள ஒருவர்.
எட்டு போட்டிகளில் இரு சதங்கள், ஐந்து அரைச் சதங்கள்.
இறுதியாக இடம்பெற்ற போட்டியில் கூட அவர் பெற்ற ஓட்டங்கள் 144 &74 .
இப்படிப்பட்ட ஒரு ரன் மெஷினை இனியும் எடுக்காமலிருந்தால் அது தவறு இல்லையா?
லஹிரு திரிமன்னே
லஹிரு திரிமன்னே பற்றி கடந்த சனிக்கிழமை 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் நான் எதிர்வுகூறியது - " இன்றும் சதமடித்துள்ள திரிமன்னே என்ற இந்த வீரரின் பெயரைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. வெகுவிரைவில் இலங்கை அணியில் இடம் பிடிப்பார்"
எப்பூடி?
பெயர்களைப் பார்க்கையில் இந்த இலங்கை அணி மிக அனுபவமற்ற அணியாகவும் பலத்தில் குறைந்ததாகவும் தெரிந்தாலும் கூட, ஆச்சரியங்கள் அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய திறமை உடையது என்று எண்ணுகிறேன்.
ஆனாலும் இது சங்கக்காரவுக்கு ஒரு சவால்..
ஆனாலும் சங்கக்கார மகிழ்ச்சியா இருக்கிறார்.. காரணம் இங்கிலாந்தின் லங்காஷயர் பிராந்தியத்துக்கு அடுத்த பருவகாலத்தில் விளையாடவுள்ளார்.
இந்தப் பிராந்தியத்துக்காக விளையாடும் மூன்றாவது இலங்கையர் சங்கா.. (முரளி,சனத்துக்கு அடுத்தபடியாக)
இந்தியா முழுப்பலத்தோடும் உத்வேகத்தோடும் ஆனால் சச்சின் இல்லாமலும் வருகிறது..
மறுபக்கம் ஊதிய,ஒப்பந்தப் பிரச்சினை காரணமாக பங்களாதேஷ் இன்னொரு மேற்கிந்தியத்தீவுகளாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது..
ஜனவரி நான்காம் திகதி இந்த முக்கோணத் தொடர் ஆரம்பிக்கிறது.
வெளிநாடுகளில் இன்று இரு கிரிக்கெட் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன..
ஆஸ்திரேலியா பாகிஸ்தானை வதம் செய்தது எதிர்பார்த்ததே..
இன்றைய வெற்றியுடன் பொன்டிங் மேலும் இரு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற தலைவர் (42 டெஸ்ட் போட்டிகள்) .. தனது முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோவை முந்தினார்.
தான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக வெற்றி பெற்றவர். (93 டெஸ்ட் போட்டிகள்)
அடுத்த பத்துக்கும் மேற்பட்டவர்களும் ஆஸ்திரேலியர்களே..
ஸ்டீவ் வோ, ஷேன் வோர்ன், க்லென் மக்க்ரா, அடம் கில்க்ரிஸ்ட்.....
ஆனால் தென் ஆபிரிக்காவின் சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை இன்னிங்சினால் மண் கவ்வ செய்தது யாருமே எதிர்பாராதது.
இதன் விளைவாக இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் இன்னும் நீடித்த காலம் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.