நேற்று எனது பதிவுக்குப் பின் வந்த பல பின்னூட்டங்களுக்கு தெளிவாகப் பதில் கொடுக்கவேண்டும் என்று அமர்ந்தபோது பதில்கள் நீண்டு கொண்டே போயின..
குற்றச் சாட்டுக்கள்,கேள்விகள் உடனடியாகப் பதிலளித்து தெளிவுபடுத்தப் படாவிட்டால் அந்தப் பொய்களும் போலிகளுமே உண்மையாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாலே இந்த தெளிவாக்கப் பதிவு..
நான் அடிக்கடி சொல்லும் விஷயம் தான்.. பாராட்டுக்களைப் பொதுமைப் படுத்தலாம்.. குற்றச் சாட்டுக்களை யாரும் பொதுமைப் படுத்தாதீர்.. அப்பாவிகளும் பாவிகளாக்கப்படும் அபாயமும் அவலமும் உள்ளது.
ஜனூஸ் எழுதியதும் இருக்கிறம் பிரசுரித்ததும் பொதுமைப்படுத்தி அனைத்து இலத்திரனியல் ஊடகங்களையும் ஒலிபரப்பாளர்களையும் தாக்கியிருப்பது கண்டனத்துக்குரியதே. ஒருசிலர், சிலர் போன்ற சொற்களைப் பாவிப்பதன் மூலம் யாரும் தப்பிவிடமுடியாது.
ஜனூஸ் என்பவர் தனக்கு நடந்த பாதிப்புக்களோ, நிமலின் நண்பருக்கு நடந்த அனுபவங்களோ எல்லோருக்குமோ, பெரும்பாலானோருக்கோ நடந்திருக்கலாமென்பதில்லையே..
அப்படியே அவர்கள் அதை வெளிக்கொணர்ந்திருந்தாலும் - பொதுவான ஊடகமான இருக்கிறம் அப்படியே அதை வெளியிட முடியுமா?
குறைந்த பட்சம் இவாறான கட்டுரைகள் பிரசுரிக்க முன் குறித்த ஊடகங்கள் சிலவற்றுடன் தொடர்பு கொண்டாவது தகவல்களை உறுதிப் படுத்தியாவது இருக்கலாம்..
என்னுடன் நாளுக்கு ஒரு தடவையாவது கட்டுரை வேண்டும் என்று தொலைபேசியில் அழைக்கும் சஞ்சித் சும்மாவாவது கேட்டிருக்கலாமே..
புல்லட் தெளிவாக ஒரு விடயம் பற்றிப் புரிந்திருக்கிறார்..
எம் வானொலித்துறை ஒரு கனவு தொழிற்சாலை போன்றது. பிரபல்யம்,பணம்,புகழ் ஈட்டப்படுகின்ற இடம் இது. எனினும் கொடுக்கப்படும் விலை கொஞ்சம் கஷ்டமானது.
ஆரம்பத்தில் கடும் உழைப்பும் பொறுமையும் இல்லாவிட்டால் நின்று நிலைப்பது கடினம்.
அந்த ஆரம்பகால கட்டத்தில் சகித்து, தூக்கம் தொலைத்து, பசி,வேறு வேலை மறந்து தொழிலில் தம்மை ஆழ்மனதோடு ஈடுபடுத்திய சிலரே பின்னர் படிப்படியாக உயர்ந்து சொகுசு சம்பளம், புகழோடு இருக்கிறார்கள்.
இடை நடுவே விலகிக் கொண்டு சபிப்போர் பலர் இருக்கலாம். இது ஒன்றும் எட்டு மணிநேர சிம்பிள் வேலை இல்லை.ஒரு தவம் போல.
எல்லாரும் இங்கே வேலை செய்தாலும், ஈடுபாடு, கவனம் சிதறாமை, நேரக் கட்டுப்பாடு, தேடல்,முயற்சி,பயிற்சி, வாசிப்பு, நேர்மை போன்றவை இருந்தால் மட்டுமே முன்னேறலாம்;நிலைத்து நிற்கலாம்.
சில தரவுகளைத் தரவேண்டும்..
எந்த துறையில் உங்களுக்கு பயிற்சிகளோடு சம்பளமும் தரப்படுகிறது?
என் ஆரம்ப சம்பளம் (பத்தாண்டுகளுக்கு முன்னர் 7000 ரூபாய்)..
இன்று ஆரம்ப அடிப்படை சம்பளம் சுமார் 8000 ரூபாய் முதல் 12000 ரூபாய் வரை வழங்குவது உறுதி.(நீங்கள் வெற்றி,சக்தி,சூரியன் என்று எங்கும் கேட்கலாம்)
எல்லா நிறுவனங்களும் நிதி நிலைமை நொடிக்கும்போதும் சளைக்காமல் சலுகை வழங்குவது எம் துறையில் தானே?
ஆரம்ப பயிற்சி காலத்தில் மட்டுமே சம்பளம் கொடுக்கப்படுவதில்லை (ஒன்று முதல் நான்கு மாத காலம்) அதிலும் எங்கள் வெற்றியில் நாட்டின் சிக்கலான பொருளாதாரம் கருதி போக்குவரத்து கட்டணமாக மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறோம்..
பகுதி நேரமாக உழைப்போரே ஒரு மணி நேரத்துக்கு நூறு ரூபாய்க்கு மேல் உழைக்கிறார்கள்.
வெளி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்தால் மேலும் பணம் (சில நிறுவனங்கள் இதை அனுமதிப்பதில்லை)
இப்படி இருக்கையில் //இலங்கையிலே மிகவும் குறைவாக சம்பளம் பெறுவோரின் பட்டியலில் இவர்களின் பெயர்தான் முதன்மை வகிக்கும். அதிலும் எவ்.எம் வானொலிகளில் பணியாற்றும் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை மென்று விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜீவிதத்தின் பிடிமானம் குறைந்து எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளோடு அலைகிறார்கள். 'கொழும்பு காசு இல்லாவிட்டால் எலும்பு' என்ற நிலை வரும் போது ஊடகத்தில் மகனுக்கோ, மகளுக்கோ ஊரிலிருந்து A.T.Mபணம் அனுப்பும் அப்பாவிப் பெற்றோர்கள் எத்தனையோ பேர். 'இதைவிட இவன் என்னோடையே இருந்து ஆடு, மாடாவது மேய்ச்சிருக்கலாம்'//
என்று அவர் எழுத நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவேண்டுமா? செய்தொழில் தெய்வம் என்பது சும்மாவா?
அடுத்து லீலைகள் மாயாஜாலங்கள் பற்றி சொல்கிறார். எல்லாத் துறைகளிலும் இது போன்ற அபத்தங்கள் இருக்கின்றன.
சினிமா,ஊடகம்,அரசியல் போன்றவை வெளியே தெரிகிற கண்ணாடித் துறைகள் என்கின்ற காரணத்தால் இங்கே சிறு சம்பவங்கள் நடந்தால் கூட கண்,காது,மூக்கு முளைத்து வெளியே வந்துவிடுகின்றன.
அப்படி முறை,வழி தவறியவர்கள் வானொலி வரலாற்றில் இருந்து எவ்வாறு காணாமலே போயுள்ளார்கள் என்பது கண்கூடு தெரியும்..
வெளியே இருந்து பார்க்கின்ற இளைய தலைமுறையினருக்கு தவறான பக்கங்களைக் காட்டக்கூடாது என்பதேலேயே இந்தப் பதிவுகள்.
நம்மோடு பணிபுரியும் (செய்திப் பிரிவு) ரஜனிகாந்தும் இது பற்றி சொல்லி இருப்பது தான் ரொம்பவே ஆச்சரியம்..
// ரஜனிகாந்த் said...
“உண்மையை உண்மையாக சொல்வதுதான் மென்மை - அதுவே மனிதத் தன்மை” அதில் என்ன தப்பு இருக்கிறது. ஊடகங்களின் ஆரம்ப காலத்தினை பாருங்கள், அங்கு திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டதாக அறிகிறேன் - ஆனால் இப்ப திறமையுடன் (திறமை இல்லாவிட்டாலும்) சதைக்கு முன்னுரிமை உண்டாம். ‘சதைகள் வதைகள் ஆவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை – ஆனால் திறமைசாலிகள் வீனடிக்கப்படுகிறார்கள் என்ற ஆதங்கம் மட்டுமே எனக்கு!
December 11, 2009 7:34 AM
//
அவரது பிரிவில் தான் பெண்களே இல்லையே.. ஒருவேளை அவர் முன்பு பணிபுரிந்த ஊடகத்தை(அது ஒரு பத்திரிகை) அல்லது வேறு ஏதாவது பற்றி சொல்கிறாரோ தெரியவில்லை.
இப்படி சொல்வோருக்கு ஒரு சின்னக் கேள்வி.. சதைக்கும் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது உண்மையானால் அநேகமான ஊடகங்களில் பெண்கள் தானே பெரிய பதவிகளில் இருக்க வேண்டும்?
இப்படிப் பேசி பேசியே ஊடகங்களில் இருக்கும் பெண்களை கேவலப்படுத்துவது வழக்கமாகிப் போச்சு.. வெட்கமில்லையா உங்களுக்கு?
இதற்குள் இவர்களே தான் வெளியே நின்று பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என்று கோஷமிடுபவர்கள்..
பாரதியின் பிறந்தநாளான இன்று "நெஞ்சில் உரமும் இன்றி.. " ஞாபகம் வருகிறது.
உங்களில் சிலர் சொன்னது போல முட்டி பிடித்து, வாளி பிடித்து முதுகெலும்பு வளைத்து தற்காலிகமாக முன்னேறி பதவி பிடித்த சிலரும் என்னவானார்கள் என்பது காலம் தந்த பாடம். உண்மைத் திறமையும், தொழில் நேர்மையும் எப்போதும் முன்னேற்றங்களை தடுக்காது.
இதெல்லாம் ஊடகங்களுக்குள் வரமுயன்று தோற்றுப் போனவர்களும், நேரடியாக அறியாமல் நண்பர்கள் மூலமாக அறிந்தவர்களும் காலாகாலமாக சொல்கின்ற விஷயங்கள்.
நின்று பிடிக்கக்கூடிய திறமை, தன்னம்பிக்கை இல்லாமல் தோற்றோடிப் போய் சீசீ இந்தப் பழம் புளிக்கிறது என்று சொல்வோரை என்னவென்பது?
திருவாளர்கள் அப்துல் ஹமீது,கே.எஸ்.ராஜா, நடராஜசிவம்,எழில்வேந்தன்,தயானந்தா முதலானோர் காணாத வெட்டுக்களா? அவர்கள் நின்று பிடிக்கவில்லையா?
வெட்டுக்கள் வந்தாலும் தாண்டி நிற்க உறுதியான முதுகெலும்பும், திறமையும் இருந்தால் போதும் என நினைப்பவன் நான்.
பல பேர் எதிர்ப்பார்ப்போடு உள்ளே நுழைய முற்பட்டாலும் எத்தனை பேரால் எத்தனை ஊடகங்களில் உள்வாங்கப்பட முடியும்? இதனால் தான் பலருக்கு ஏமாற்றங்கள்.ஆனால் தகுதியும்,திறமையும் உள்ளவர்கள் என்றாவது உள்ளே வரத்தான் போகிறார்கள். (ஊடகப் பயிற்சி நெறிகள்,நிறுவனங்கள் பற்றி இன்னொருநாள் பார்க்கலாம்)
இன்றெல்லாம் ஊடகங்கள் பற்றி என்றவுடன் எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு குதிப்பது வழக்கமாகி விட்டது. சினிமா,அரசியல் போல.. விமர்சனங்கள் என்பது பிழையில்லை.ஆனால் உள்ளே நடப்பது எல்லாமே தெரியும் என்பது போல எழுதுவது தான் தவறு என்கிறேன்.
நானும் ஒரு நீண்ட பதிவு ஊடகங்கள் பற்றி எம்மைப் பற்றி எழும் சில விமர்சனங்களின் உண்மை,போய் பற்றி எழுதவேண்டும் என்று எண்ணிவந்தாலும் இன்னும் சந்தர்ப்பம் வாய்ப்பதாகவில்லை.
அதில் ஒரு சில விஷயங்களை எழுதக் காரணமான அந்தக் கட்டுரைக்கும், உங்கள் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.
இறுதியாக ஒன்று.. மடியிலே கனமும் மனதிலே பயமும் இல்லாததனால் தான் பொய்,புரட்டுகள்,போலிக் குற்றச்சாட்டுக்கள் கண்டால் கோபமும் வருகிறது..
ரௌத்திரம் பழகு..
இன்று பிறந்த பாரதி சொன்னது போல -
"பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்திக் கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"