அண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்

ARV Loshan
36

இந்த வாரம் வெளிவந்துள்ள 'இருக்கிறம்' சஞ்சிகையில் அதன் ஆசிரியர் இளையதம்பி தயானந்தா எழுதியுள்ள ஒருபக்க ஆசிரியர் பகுதியிலிருந்து மனதைத் தொட்ட, உண்மையான வரிகள் சில..


ஒருவார காலதாமதத்தில் இருக்கிறமை அச்சிட வேண்டிய தேவை இப்போது இல்லை. அத்தகைய தேவைகள் கடந்த காலங்களில் இருந்தன. இப்போது அது இல்லையென்றே தெரிகிறது. நவம்பர் மாதக் கடைசி வாரத்தில் மீண்டும் ஒரு தலையங்கம் எழுதப்படுகிறது. இது எழுதப்படுகிறபோது 27ம் திகதி முடியவில்லை. உங்கள் கைகளில் 'இருக்கிறம்' அச்சாகி வருகிறபோது டிசம்பர் தொடங்கிவிடும். கடலலை போல எதையும் பொருட்படுத்தாது காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதை உணர முடிகிறது. சில முடிவுகள் அல்லது தொடக்கங்கள் மிகக் குறுகிய கால இடைவெளியில்கூட நடந்து விடுகிறது. என்னதான் சொன்னாலும் நவம்பரின் இறுதி வாரத்தில் எதையேனும் செய்துவிடும் போக்கு எல்லோரிடமும் தெரிவதை உள்ளூர உணர முடிகிறது.

எங்கட மொழியில் சொன்னா அண்ணன் இப்ப திண்ணையில இல்லை. சும்மா கிடக்கிற அந்தத் திண்ணையில் இப்ப எல்லோரும் கூடிப்பேசுகினம். கூட்டங்கள் போடுகினம். அயலில மாநாடு வச்சு ஒரு பகுதி தன்ர உலகத் தலைமையை உறுதி செய்ய முயலுது. இன்னொரு பக்கத்தில் எல்லாத் தலையளையும் ஒண்டாக்கி யாரோ மிளகாய் அரைக்கினம். என்னத்தைச் சொன்னாலும் உரியவன் இல்லையெண்டால் எல்லாம் ஒரு முழம் கட்டைதான்.

எங்கட பக்கத்தில் இப்ப எல்லோரும் பசியோட இருக்கிறம். யார் குத்தினாலும் அவசரமா எங்களுக்கு அரிசி வேணும். உரல் கொண்டந்தவன் யார்? உலக்கை கொடுத்தவன் யார்? எவன் வீட்டில் நெல்லுக் குத்தப்படுகுது, என்பதான விசயத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. காது, கண்ணெல்லாம் பஞ்சாகி அரிசிக்காக நாங்கள் கைகள் நீட்டுகிற காலத்தில இதையெல்லாம் யோசிக்க முடியாது. யாரும் வடை தந்தா சாப்பிட நாங்கள் தயார். உழுந்தாட்டினவன் யார்? ஓட்டை போட்டவன் யார்? எண்டெல்லாம் இனி யோசிக்க முடியாது.

எழுத்தோட எழுத்தா நவம்பர் கடைசியில இன்னொன்றையும் சொல்ல வேணும்.
கோவணத்தையாவது காப்பாத்த நாங்கள் நினைக்கிறபோது, அயல் வீட்டில பட்டு வேட்டி கட்டிக்கொண்டு சால்வை சாத்த வரச்சொல்லி ஒரு மூத்தவா கூப்பிடுகிறார். அவர் கட்டி இருக்கிறது பட்டு வேட்டி இல்லை என்று தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவருக்கு சால்வை போர்த்த தயாராகிறவர்கள் பற்றி மனவேதனை இருக்கிறது.

செம்மொழி மாநாடு என்ன பாரதப் போரின் பத்தாம் நாளா?

அண்ணன் தயானந்தா எம் பலபேரின் மதிப்பிற்குரிய அற்புதமான ஒரு ஊடகவியலாளர்;மனிதர்..
அவர் எழுதும் இந்த ஒருபக்கம் எம்மில் பலர் எழுதும் பல நூறு பக்கங்களுக்கு மேலான வலிமையையும்,அடர்த்தியான பொருளும் அடங்கியது. இந்த ஒருபக்கத்துக்காகவே இருக்கிறம் வாசிக்கும் பலரை நான் அறிவேன்.

இதே இதழில் ஒவ்வொரு வாரமும் விளையாட்டு கட்டுரைகளை நான் எழுதிவருகிறேன்..

இவ்வார இதழை நான் நேற்று வாசித்தபோது எனக்கு கடும் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்திய விடயம்..
ஊடக மாயம் என்றவொரு கட்டுரை..

இந்தக் கால இலத்திரனியல் ஊடகங்கள் பற்றி எல்லாருமே வரிந்து கட்டிக்கொண்டு விமர்சனங்கள் தொடுத்துவரும் நிலையில் (என்ன செய்வது.. ஒரு சிலர் விடும் தவறுகளால் ஒட்டுமொத்த ஊடகவியலாளரும் விமர்சிக்கப்படுவது எமது சாபமாகிப் போனது) எஸ்.ஜனூஸ் என்பவர் கண்மூடித் தனமாக இந்தக் கால ஊடகவியலாளர் வெட்டுக் கொத்துக்களே பிழைப்பாகக் கொண்டுள்ளது போலவும், வாழ வருமானம் இல்லாமல் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலையில் அல்லலுறுவது போலவும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

இதில் அது தொடரும் எனப் போட்டிருப்பது மற்றுமொரு வேடிக்கை..

யாரடா இந்த ஜனூஸ்.. இப்படியொரு ஒலிபரப்பாளரை இதுவரை கேள்விப்பட்டதில்லையே என விசாரித்துப் பார்த்தால் ஒரு சில மாதங்கள் இன்னொரு தனியார் வானொலியில் பணி செய்துகொண்டிருந்து பின் ஒழுங்கான உச்சரிப்பு இல்லாததாலும் சில ஒழுக்காற்றுப் பிரச்சினைகளாலும் விலக்கப்பட்டவராம் எனத் தெரியவந்தது.
இப்படிப்பட்ட ஒருவர் பல ஆண்டுகளாக நிலைத்துள்ள ஊடகங்களையும் எம்மையும் தரக்குறைவாகப் பேசுவதா?
இப்படிப்பட்ட ஒருவர் தான் இவ்வளவு தூரம் விமர்சிக்கிறாராம்..

அவரின் அக்கட்டுரையில் ஒரு சில வசனங்கள்...


வளரும் பயிரை முளையிலே கிள்ளி எறிகின்ற உத்தமர்கள் நிறைந்த இடம்தான் இந்த ஊடகங்கள்.


எனது பார்வையில், இந்த வரலாற்றுத் தவறை அதிகம் புரிந்து கொண்டிருப்பது இலத்திரனியல் ஊடகங்களே. சம்பாத்தியம் அதிகம் இல்லாவிட்டாலும், அற்ப சொற்ப சம்பாத்தியங்களுக்காக வேண்டாத வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக இன்றைய ஒளி, ஒலி ஊடகங்களில் அரங்கேறும் அசிங்கங்களை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. இப்போதெல்லாம் மழை பெய்யாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அத்தனை அசிங்கங்கள். அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர்கள் புரியும் மாயலீலைகள், தந்திரங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்கும் இந்தத் தொழில் தேவைதானா? இந்தக் கேள்வியை முக்கியத்துவமாகப் பார்க்கவேண்டும்.

இலங்கையிலே மிகவும் குறைவாக சம்பளம் பெறுவோரின் பட்டியலில் இவர்களின் பெயர்தான் முதன்மை வகிக்கும். அதிலும் எவ்.எம் வானொலிகளில் பணியாற்றும் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை மென்று விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜீவிதத்தின் பிடிமானம் குறைந்து எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளோடு அலைகிறார்கள். 'கொழும்பு காசு இல்லாவிட்டால் எலும்பு' என்ற நிலை வரும் போது ஊடகத்தில் மகனுக்கோ, மகளுக்கோ ஊரிலிருந்து A.T.M பணம் அனுப்பும் அப்பாவிப் பெற்றோர்கள் எத்தனையோ பேர். 'இதைவிட இவன் என்னோடையே இருந்து ஆடு, மாடாவது மேய்ச்சிருக்கலாம்' என்று ஒரு அப்பா சலிக்கிற நேரமா பார்த்து 'ஹலோ யாரு பேசுறீங்க, உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும்' என்று ஏதோ ஒரு அலைவரிசையில் பேசிக்கொண்டிருப்பான் மகன். அந்த வரட்டு சந்தோஷத்தில் தன்னை சமாதானப்படுத்திக் கொள்ளும் தாய்மார்களும், தந்தைமார்களும் எத்தனை பேர்?


திறமையை வெளிப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுக்கும் களங்களில் வாழ்க்கை வளம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்படுத்தித் தரவேண்டும். அதைவிடுத்து, அனுபவிப்பவர்கள் அனுபவிக்க, வாழ்க்கையில் போலி அரிதாரம் பூசி நடிப்பவர்கள் அறிவிப்பாளர்களா?

ஒரு ஒலிபரப்பாளனாக நான் கௌரவமாகவும், என் சக ஒலிபரப்பாளர்கள் மரியாதையாகவும் நடத்தப்படுவதையே நான் விரும்புகிறேன்.

இவர் தான் பட்ட கசப்பான அனுபவங்களை பொதுமைப்படுத்துவது சரியல்ல. தனது நடத்தையால் தானே தேடிக் கொண்டவை அவை.. இது போன்ற ஆக்கங்களை வெளியிடுவது வளர்ந்துவரும் இருக்கிறம் சஞ்சிகைக்கும் அழகல்ல.

அதுவும் தயானந்தா அவர்கள் ஆசிரியராக இருக்கும் ஒரு சஞ்சிகையிலா?
(அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் தம்பிமார் எதை வேண்டுமானாலும் பிரசுரித்து அண்ணனுக்கு களங்கம் தேடித் தரப் போகிறார்களா?)
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாமா?
இருக்கிறம் காரர் எதை பிரசுரிப்பது எதை தணிக்கை செய்வது என சிந்திக்காமலா அச்சிடுகிறார்கள்?

உடனடியாகவே இருக்கிறமின் இலங்கையில் உள்ள துணை ஆசிரியர் சஞ்சீத்துக்கு ஒரு கண்டனக் கடிதம் அனுப்பியுள்ளேன்..
ஒரு பொறுப்பான ஊடகத்தின் முதன்மைப் பதவியில் இருக்கும் என்னால் நான் இருக்கும் துறையையே விமர்சித்து இப்படிப்பட்ட குப்பைத் தனமான ஆக்கங்கள் வரும் சஞ்சிகைக்கு தொடர்ந்து எழுத முடியாதென்று..
இருக்கிறம் சஞ்சிகைக்கு நான் தொடர்ச்சியாக எழுதிவர ஒரே காரணம் தயானந்தா அண்ணா மட்டுமே.. (தரப்படும் சன்மானம் பற்றி பேசவேண்டாமே.. ;))

விமர்சனங்கள் என்றால் வேறு.. இது சேறு பூசும் செயல் அல்லவா?

ஏற்கெனவே அச்சுவாலை சந்திப்பினால் பதிவர்கள் பலரோடு முரண்பட்டுள்ள இருக்கிறம், இவ்வாறு ஆதாரமில்லாத கட்டுரைகளினால் வானொலிகளையும் பகைத்துக்கொள்ளப் போகிறதா?

நண்பர் ஹிஷாமின் நியாயமான கோபப் பதிவு இது..

Post a Comment

36Comments

Please Select Embedded Mode To show the Comment System.*