இன்று முதல் எனது ஒலிபரப்பு/ஊடக வாழ்க்கையில் இன்னொரு புதிய பரிமாணமும் சேர்ந்துகொள்கிறது.இந்த மகிழ்ச்சியை எனது நண்பர்களான உங்களோடும் பகிர்ந்து கொள்வதில் மேலும் சந்தோசம்.
இலங்கையில் உள்ள மிகப் பிரபலமான செல்பேசி சேவையான டயலொக் (Dialog) மூலமாக ஒவ்வொருநாளும் நாளேடுகளின் தலைப்பு செய்திகளை தொகுத்து வழங்கும் ஒரு சுவாரஸ்யமான செய்திப் பணி இது.
டயலொக்(Dialog) இணைப்பு உள்ளவர்கள் யாரும் இந்த சேவையில் தம்மைப் பதிவு செய்து இந்த செய்தித் தலைப்புக்களை எனது குரலில் கேட்கலாம்.
ஒரு தடவை பதிவு செய்தால் மாதம் முழுவதும் இந்த சேவையைப் பெறலாம்.
மாத சந்தா ஐம்பது ரூபாய்.(+வரிகள்)
காலையில் நான் வாசித்துப் பதிவேற்றும் செய்தித் தலைப்புக்களை அந்த இருபத்துநான்கு மணிநேரத்தின் எந்தவேளையிலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்.
இது எனக்கு ஒரு சவாலான சுவாரஸ்ய பணி என்பதோடு புதிய தளம்,களம், மேலதிக வருமானம் என்பதால் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
என்ன ஒரே ஒரு பெரும் கஷ்டம் வாரத்தின் ஏழு நாட்களும் அதிகாலையிலேயே தூக்கத்தை தொலைக்க வேண்டியிருக்கும்; (இப்போதும் வாரத்தின் ஆறு நாட்களில் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறேன்)
வெளியூர்ப் பிரயாணங்களைக் கொஞ்சம் மட்டுப் படுத்தவேண்டியிருக்கும்.
முதலில் எங்கள் நிறுவனம் கொஞ்சம் தயங்கினாலும் பின்னர் எனது இந்த சேவைக்கு டயலொக் கொடுக்கின்ற விளம்பரம் வெற்றிக்கும் விளம்பரமாக அமையும் என்பதனாலும் இது எனக்கு இன்னொரு வாய்ப்பு என்பதாலும் வாழ்த்துக்களோடு அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று சில பத்திரிகை விளம்பரங்களுக்காக புகைப்படங்கள் எடுத்தார்கள்..
ஆகா எத்தனை எத்தனை போஸ்.. நம்ம முகத்தையும் பார்த்து சகிக்கப் போகிறார்களா மக்கள்?
எனது இந்த புதிய பணிக்குப் பிறகு எத்தனை டயலொக் இணைப்புக்கள் வேறு சேவைகளுக்கு மாறுதோ?
எனினும் இனி ஜனாதிபதி தேர்தலும் வர இருப்பதால் சுவாரஸ்யமான,பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமிருக்காது. முடிந்தவரைக்கும் சந்தாதாரர்களை பெருக்கவும் திருப்திப் படுத்தவும் வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும், கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக மிக சிரத்தையோடு செய்ய ஆரம்பித்துள்ளேன்.
டயலொக் இணைப்புள்ள நீங்களும் இந்த சேவையை செவி மடுக்க 556க்கு அழைப்பு எடுத்து அதில் இலக்கம் 1ஐத் தெரிவு செய்யுங்கள்.
ஒரு தடவை கேட்டுப் பிடித்திருந்தால் (பிடிக்கும்) ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துகொள்ளலாம்.
ஒரு அரிய வாய்ப்பை வழங்கி புதிய களத்துக்கு என்னை அழைத்துள்ள டயலொக் நிறுவனத்துக்கு நன்றிகள்.