இரண்டாவது இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்புக்கான காலம் நெருங்கிவிட்டது. கடந்த முறை அறிமுகம் மட்டுமே. இம்முறை மேலும் நேர்த்தியாக, விரிவாக, பரந்துபட்டதாக அமையும் என நம்புகிறேன்.
நீண்டகாலத் திட்டங்கள், கட்டமைப்பான ஒழுங்குகள் என்பவற்றோடு நல்லதொரு குழுவும், பல்வேறு கோணங்களிலும் ஆக்கபூர்வமாக சிந்திக்கக்கூடியதாக இணைந்திருப்பது எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு.மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13, 2009) கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.
முதலாவது பதிவர் சந்திப்பின் வெற்றியும் - அதைத் தொடர்ந்து 'இருக்கிறம்' அச்சுவாலைச் சந்திப்பு தந்த அதிருப்திகளும், விமர்சனங்களும் இம்முறை சந்திப்பைப் பற்றிய திட்டங்களையும். எண்ணங்களையும் கூர்மையடைய வைத்துள்ளன.
நான் 'இருக்கிறம்' சந்திப்புக்குப் பின்னர் எழுதிய பதிவில் சொன்னது போல இம்முறை சந்திப்பின் ஏற்பாட்டாளர்கள் நுண்ணிய முதல் வன்மையான விமர்சனங்கள் வரை அத்தனைகளையும் எதிர்கொள்ளும் விதத்தில் நேர்த்தியான ஏற்பாடுகளை இதுவரைக்கும் திட்டமிட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்.
கடந்த சந்திப்பை விட இம்முறை பதிவர்கள் அதிகரித்திருப்பதும், கூகிள் குழுமத்தின் மூலம் நட்பு, நெருக்கம், தொடர்பாடல் அதிகரித்திருப்பதும், பங்குபற்றுவோரின் எண்ணிக்கையும் முன்பை விட இரு மடங்காவது அதிகரிக்கும் என நினைக்கிறேன்.
நான் எதிர்பார்த்த பல விடயங்கள் இம்முறை நிகழ்ச்சி நிரலில் இருப்பதும் மகிழ்ச்சி.
கூகிள் குழுமத்தின் முழுப்பயனையும் இம்முறைப் பதிவர் சந்திப்பின் வெற்றியில் நாம் உணரலாம் என நினைக்கிறேன்.
ஆரம்பமே அமர்க்களமானதால் இம்முறை அதிகமானோரின் கண்கள் எம் சந்திப்பின் மீது..
எனினும் இந்த சந்திப்பு(ம்) பல்வேறு குழு சண்டை, அனானி தாக்குதல்கள், பிரிவு, பிளவு என்று எதையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே ஒரே சிந்தனையாக உள்ளது.
அது எங்கள் ஒவ்வொருவர் கையிலும்,மனதிலும் உள்ள விடயம்.
நல்லபடியாக நடக்க அனைவரும் வரவும் வேண்டும்;ஒத்துழைக்கவும் வேண்டும்.
நிகழ்வு தொடர்பான முழுமையான விபரங்கள்:
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு
காலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி
நிகழ்ச்சி நிரல்
அறிமுகவுரை
புதிய பதிவர்கள் அறிமுகம்
கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
பதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன.
கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன
சிற்றுண்டியும் சில பாடல்களும்
கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்
பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்.
உங்களுக்குள் உரையாடுங்கள்
கடந்த தடவை போன்று இச்சந்திப்பும் http://livestream.com/srilankatamilbloggers எனும் சுட்டியில் நிகழ்வு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.
'இதுவரை தங்கள் வருகையை உறுதிப்படுத்தாதவர்கள் http://srilankantamilbloggers. blogspot.com/2009/12/blog- post.html என்ற தளத்திற்குச் சென்று தங்கள் வருகையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'
இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து பயன்பெற்று மகிழ்வுறுவோம்.
இணையமூடாக இணைந்து பங்கேற்கப் போகும் அன்பு உறவுகளுக்கும் இப்போதே ஒரு வணக்கம்..
வாருங்கள் எல்லாரும்.. பழகலாம்;பயனுள்ளவை பேசலாம்..