முதலில் எனக்கு கிடைத்த மேல்மாகாண தமிழ் சாகித்திய விருதுக்கு அன்போடு நீங்கள் அனைவரும் வழங்கிய வாழ்த்துக்கள், ஆசிகளுக்கு நன்றிகள்....
அந்த சாகித்திய விழா, என்னுடன் விருது பெற்றோர் பற்றி கொஞ்சம் விரிவாக ஒரு பதிவு வரும்.. உண்மையில் விரைவாக வரும்..
என் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் வந்தியத்தேவன், தம்பிகள் சதீஷ், சந்த்ரு ஆகியோருக்கும் பின்னூட்டங்களில் வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..
என்னுடைய வலைப்பதிவுப் பக்கமும் நண்பர்களின் வலையுலகப் பக்கமும் முழுமையாக வந்து ஒரு சில நாட்களாகின்றன. கொஞ்சம் அலுவலகப் பணிகள் அதிகமாக இருந்தாலும், அது தான் காரணம் என்று சொல்லமாட்டேன்..
எவ்வளவு தான் ஆணி பிடுங்கல் இருந்தாலும் ஆணிகளில் மாட்டி சிக்கி கிழிந்துவிடாமல் பதிவு போடுவது எனக்கு எப்போதுமே வழக்கமானது.
ஆனால் இம்முறை எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதும் என் அலுவலக வேலைகளிலேயே சிக்கல்களையும் எரிச்சலையும் ஏற்படுத்திய ஒரு விடயமாக அமைந்தது எனது அலுவலக கணினி எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..
நன்றாக வேலை செய்துகொண்டிருந்த எனது கணினியை இடம் மாற்றி அழகுபடுத்த அந்த அன்பர் கடந்த ஞாயிறு மேற்கொண்ட அதி தீவிர முயற்சியில் கணினியின் Power supply unit வெடித்து சிதறியுள்ளது.
அதை இதோ செய்கிறேன், இன்றே சரி செய்கிறேன் என்று இழுத்துக் கொண்டே இருக்கும் புண்ணியவானால் அலுவலக நேரத்தில் தனிப்பட்ட வலையுலகப் பயணங்கள் எல்லாம் பாழ்.. அலுவலக,நிகழ்ச்சிப் பணிகளுக்காக மட்டும் எல்லா அறிவிப்பாளருக்குமான பொதுக் கணினியில் கொஞ்ச நேரம் துழாவுவதொடு சரி..
வீட்டுக்கு வந்தால் எனக்கொரு செல்லக் குட்டி வில்லன் இருக்கிறான்.. அவனோடு சில மணிநேரங்கள் கட்டாயம் விளையாடியே ஆகவேண்டும்.
அதன் பின் வந்து கணினிக்கு முன் அமர்ந்தால், எங்கிருந்தாலும் அவனுக்கு செவி முளைத்து வந்துவிடுவான்..
அதற்குப் பிறகு கணினியும் நானும் அவன் சொன்னபடி தான்..
அவனுக்கு என்னென்ன , யார் யார் தேவையோ அத்தனையும் கணினித் திரையில் வந்தாக வேண்டும்..
அது டோரா, மிக்கி மவுஸ், டொம் அன்ட் ஜெர்ரி, பன்டா கரடி தொடக்கம் கமல், சூர்யா, தனது படம் இன்னும் பல விஷயங்கள் வரை போகும்..
அவனுக்கு அலுக்கும் வரை அல்லது தூக்கம் வரும் வரை கணினி என் கைகளுக்கு வராது..
பதிவுகள் பல நாள் போடாததால் பதிவுப் பக்கம் புற்று கட்டிவிடும் என்று சக நண்பர் ஒருவர் வேறு பயமுறுத்தி இருக்கிறார்.
இன்று காலை அலுவலகம் வந்தால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்..
எனது மேசையில் எனது அலுவலகக் கணினி பாவனைக்கு தயார் நிலையில் திருத்தப்பட்டு இருக்கிறது..(கொடுத்த வசையும், அனுப்பிய மிகத் தீவிரமான மெமோவும் இவ்வளவு துரிதமாக வேலை செய்துள்ளதா?)
வாழ்க எம் பொறியியலாளர்...
======
பதிவிடப் பல விஷயங்கள் இருக்கின்றன..
கிரிக்கெட் பக்கம் போய்ப் பதிவிடலாம் என்று பார்த்தால் நடக்கும் போட்டிகள் முடியட்டுமே எனத் தோன்றுகிறது..
குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒருமாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..
இலங்கை அணி அடிப்படியில் மீண்டும் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பம் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.
மறுபக்கம் பாகிஸ்தானின் புதிய நம்பிக்கை உமர் அக்மல் கன்னி சதம் பெற்றுள்ளார்..
உண்மையில் கிரிக்கெட் கூடிப் போச்சுத்தான்..
======
இலங்கைப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்பாடுகள் மிக மும்முரமாக இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சி..
நல்ல ஒரு குழு சேர்ந்துள்ளார்கள்.. அவர்களின் நிகழ்ச்சி நிரல், ஏற்பாடு விபரங்கள், இடம், நேரம் இதர விஷயங்களை அறிந்துகொள்ள..
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலும்
பலபேரும் இதுபற்றி அறிவித்தல் பதிவுகள் போட்டுள்ளார்கள்.. சுபாங்கன் தான் முதலில் பதிவு போட்டவர் என்ற அடிப்படையிலும், ஏற்பாட்டுக் குழுவில் ஒருவர் என்ற அடிப்படையிலும் அவரது சுட்டியைத் தந்துள்ளேன்.
எல்லாரும் இது பற்றி அறிவித்தல் பதிவுகள் போடுவது கூறியது கூறலாக அமையும் என்பதால், நான் இப்போதைக்கு இது பற்றி விளம்பரத் தட்டியை என் தளத்தின் மேலே போட்டிருப்பதோடு இப்போதைக்கு விடுகிறேன்.
முதலாவது சந்திப்புக்கு பின்னர் புதிய பதிவர்கள் பல்கிப் பெருகியதுபோல, இரண்டாவது பதிவர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் புதிய பதிவர்கள் பெருகுவார்கள் என நினைக்கிறேன்.
=========
இன்றைய நாள்,நாளைய நாள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் பலர் இருக்கிறார்கள் என்று புரிகிறது..
ஜெனரல் சரத் பொன்சேகாவின் அறிவித்தல் பற்றி மட்டுமல்ல என்று உங்களுக்கும் தெரியும்..
எனினும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்டுமே வழக்கமாகிப் போன எமது வாழ்க்கையிலே எனக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை.. அதனால் ஏமாற்றங்களோ, எதிர்பார்ப்புக்களோ இருக்கப்போவதுமில்லை.
=========
தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை என யோசிப்போருக்கு, இன்று எனது காலை நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய பல இனிமையான பாடல்களில் இன்னும் மனதில் நிற்கும் பூமழை பொழியுது திரைப்படப் பாடல் தான் அது..
வரிகள், SPB +சித்ராவின் குரல் இனிமை என்பவற்றையும் விட, R.D.பர்மனின் மெட்டும், பாடலின் வரிகளோடு இணைந்து ஒலிக்கும் மிருதங்க,தபேலா தாளக்கட்டுக்களும் மனத்தைக் கொள்ளை கொண்டன.. எனவே தான்..
நதியா நதியா நைல் நதியா...
இதுமட்டுமல்லாமல் நீண்ட தேடலுக்குப் பின்னர் இன்று பாய்மரக்கப்பல் திரைப்படப் பாடலான 'ஈரத் தாமரைப்பூவே' பாடலையும் தேடி என் ஒலிபரப்புக்கு உதவிய தம்பி திஷோவுக்கும் நன்றிகள்..