நேற்று கொழும்பு அமெரிக்க நிலையத்தில் இடம்பெற்ற ஓவியக்கண்காட்சி ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பரொருவரின் ஓவியக்கண்காட்சி அது. சிரேஷ்ட முகாமைத்துவத்திலுள்ளவன் என்பதனால் வந்திருந்த அதிதிகளுடன் என்னையும் விளக்கேற்றவும் புகைப்படம் பிடிக்கவும் அழைத்தார்கள்.
பிரதம அதிதியாக வந்திருந்தார் ஒரு அமைச்சர். எனக்கும் கைலாகு கொடுத்து சிரித்துப் பேசிவிட்டுப் போன பிறகுதான் அவர் யாரென்றே ஞாபகம் வந்தது.....
கடந்த வருடம் இதே நவம்பரில் கிட்டத்தட்ட இதே நாட்களில் (சரியாக நவம்பர் 18ம் திகதி) ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் என்னைத் தற்கொலை போராளியுடன் சம்பந்தமுடையவன் என்று அறிவித்த அதே ஊடகத்துறை அமைச்சரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன.
அன்று குற்றவாளி - இன்று அமைச்சருடனேயே சேர்த்து ஒரு அதிதி!
காலம் எப்படியெல்லாம் மாறுகிறது.
......................
மறக்க முடியாத நவம்பர் மாதத்தின் ஒருவார வடுக்கள் கொஞ்சம் மறைந்துபோய், நான் முன்பு போல் சகஜமானாலும், சந்தோஷமாகவே இருந்தாலும் இப்போதும் அந்த நாட்களை நினைக்கும்போது உள்ளேயுள்ள அப்பாவிகள் பலரின் முகங்கள், அவர்களில் சிலரின் அவலக்கதைகள் நிழலாடுகின்றன.
எனக்கான குரல்கள் ஒலித்தன! அவர்களுக்கு யார் உள்ளார்கள்?
பாவம் அந்தக் காலத்தின் கைதிகள் என்று பரிதாபப்படுவதைத்தவிர வேறு வழியில்லை!