இந்தியா vs ஆஸ்திரேலியா & சச்சின் vs பொன்டிங்

ARV Loshan
15

கிரிக்கெட் உலகின் ஒருநாள் போட்டிகளின் ஜாம்பவான்களுக்கிடையிலான ஒருநாள் தொடர் இந்திய மண்ணில் ஆரம்பமாகிவிட்டது.ஓய்வில்லாமல் மாறி மாறி கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றுவரும் இந்த காலகட்டத்தில் ஏழு போட்டிகள் கொண்ட தொடர் கொஞ்சம் நீளமாகவே தோன்றுகின்றது.

ஆனாலும் கிரிக்கெட்டை எந்தவொரு வடிவத்திலும் ரசிக்கும் இந்திய ரசிகர்களுக்கு இது ஒன்றும் அலுக்கப்போவதில்லை.அத்துடன் ஐம்பது ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகள் ஒழிக்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில்,ஒரு நாள் போட்டிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தொடராக இது அமையும் என்று சொன்னால் அதில் மிகையில்லை.

அத்துடன் ஒருநாள் தரப்படுத்தல்களில் முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் இவை என்பதனால் தரப்படுத்தல்களை தீர்மானிக்கும் தொடராகவும் இப்போது ஆரம்பமாகி இருக்கும் ஒருநாள் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நேரடி கிரிக்கெட் எதிரிகளாக மாறியிருக்கும் இவ்விரு அணிகளும் விறுவிறுப்பான போட்டிகளை எப்போதுமே வழங்கி இருக்கின்றன.

இந்திய அணி சொந்தமண்ணில் வீழ்த்தப்பட முடியாத பலமான அணி. ஒருநாள் போட்டிகளில் முழுப் பலத்துடன் இருக்கும்போது எந்த அணியையும் நசுக்கித் தள்ளிவிடும்.

அவுஸ்திரேலியா அணியோ முக்கிய வீரர்கள் பலரை அண்மைக் காலத்தில் இழந்திருந்தாலும் மீண்டும் வெற்றிகளை தொடர்ந்து பெற்று வருகிறது.
அண்மையில் தான் சாம்பியன்ஸ் கிண்ணத்தை மீண்டும் சுவீகரித்துள்ளது.
இறுதியாக விளையாடிய போட்டிகளில் 17இல் 14இல் வெற்றி பெற்றுள்ளது.

வந்திறங்கியவுடனேயே முதல் போட்டியில் வென்று இந்திய அணிக்கு எச்சரிக்கை செய்தியும் தந்துள்ளது.

ஏற்கனவே தொடர்ச்சியாக ஓய்வின்றி பல போட்டிகளை விளையாடியதால் காயங்கள், உபாதைகள் காரணமாக முக்கியமான நான்கு வீரர்களை (பிரட் ஹடின், மைக்கல் கிளார்க், நேத்தன் பிராக்கன், கலும் பேர்குசன்) இழந்து இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியாளூ இன்று இடம்பெறவுள்ள போட்டிக்கு முன்னர், இன்றும் இரண்டு முக்கிய வீரர்களைக் காயத்தின் காரணமாக இழந்துள்ளது.

ஜேம்ஸ் ஹோப்ஸ், பிரெட்லீ இருவரும் இல்லாமை எவ்வளவு தூரம் அவுஸ்திரேலியாவை இன்று பலவீனமாக்கும் என்பது இன்றைய நாக்பூர் போட்டியின் பெறுபேறில் தெரியும்.

எனினும் எதிர்காலத்துக்கான இளைய அவுஸ்திரேலிய வீரர்களுக்கான புதிய களமாக இம்முறை இந்திய மண் அமையப் போகிறது.

டிம்பெய்ன், அடம் வோகஸ், டக் பொலிங்கர், ஜோன் ஹொலன்ட், மொய்சஸ் ஹென்ரிக்கேஸ் ஆகியோர் தம்மை வெளிப்படுத்தவும், ஷேன் வொட்சன், கமரொன் வைட், நேதன் ஹொரிட்ஸ் ஆகியோர் அணியில் தங்கள் இடங்களை ஸ்திரப்படுத்தவும் இத்தொடர் அடித்தளமாக அமையும்.

இந்திய அணியெனும் கோட்டைக்குள் போராடி நுழைய முயலும் விராட் கோலி, ரவீந்தர் ஜடேஜா, அமித்மிஷ்ரா, சுதீப் தியாகி போன்றவர்களுக்கும் ஒரு வாய்ப்பு.

எனினும் இந்த ஏழு போட்டித்தொடர் இவையெல்லாவற்றையும் விட முக்கியத்துவமும், சுவாரஸ்யமும் பெற இன்னொரு காரணம் -

சச்சின் டெண்டுல்கர் vs ரிக்கி பொன்டிங்.

சச்சினுக்கு வயது36; பொன்டிங்குக்கு வயது 34.

கிரிக்கெட் உலகின் துடுப்பாட்ட சாதனைகளில் அநேகமானவற்றுக்காக இவ்விருவருமே போட்டி போடுகின்றனர்.

எங்கள் காலகட்டத்தின் தலைசிறந்த இரு துடுப்பாட்ட வீரர்கள்.

இருவருமே குறிப்பிட்ட காலம் தங்கள் துடுப்பாட்டத்தில் ஜொலிக்காமல் தடுமாறி, விமர்சனங்களுக்குள்ளாகி, தங்களது அபாரமான துடுப்பாட்டம் மூலமாக பதில் சொல்லி மீண்டும் உச்சம் தொட்டிருப்பவர்கள்.

இருவரையுமே டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுமாறு பல விமர்சகர்கள் குரல் கொடுத்துள்ளார்கள்.

சச்சின் தானாக டுவென்டி 20 போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டார்; ரிக்கி பொன்டிங் தனிப்பட்ட மற்றும் அணிச் சறுக்கல்களுக்குப் பிறகு ஓய்வை அறிவித்தார்.

எனினும் இன்றைய இளம் வீரர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கும் விதத்தில் தன்னம்பிக்கையும் முயற்சியுமுடைய இவ்விரு சிகரங்களும் இத்தொடரை நிர்ணயிக்கும் இருவராக அமைவார்களா என்பதே எனது கேள்வி!

முதலாவது ஒருநாள் போட்டியில் பொன்டிங் அநாயசமாக ஆடி அரைச்சதம் பெற்று சாதித்தார். எனினும் சச்சின் தடுமாறினார்...

அண்மைக்காலத்தில் சச்சினையும் மீறி பிரமாண்டமாக சேவாக், யுவராஜ் சிங், தோனி, கம்பீர், ரெய்னா என்று பலர் இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் வெளிக்கிளம்பினாலும் சச்சின் முழு formஇல் பந்துகளை விளாசுகையில் அவர்தான் MASTER.

மறுபக்கம் பொன்டிங் - அவுஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக இவர் பெறுபேறுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டாலும், தலைவராக அவர் உலகக்கிண்ணங்கள் இரண்டு, சாம்பியன்ஸ் கிண்ணங்கள் இரண்டை வென்றும் கூட இரு ஆஷஸ் தொடர்களைத் தோற்றதன் மூலம் பூரணமடையாத ஒருவராகவே கணிக்கப்படுகிறார்.

அதை மறக்கடிக்க இவரது துடுப்பாட்டமே மூலமந்திரம்.
ஹசி தவிர்ந்த அனுபவமற்ற ஒரு துடுப்பாட்ட வரிசையின் பிரதானமான முதுகெலும்பாக பொன்டிங்கின் பொறுப்பு இத்தொடரில் மிக இன்றியமையாததாகிறது.

இந்திய மண்ணில் சறுக்குபவர் என்ற அவப்பெயரை நீக்கவும் இத்தொடர் பொன்டிங்குக்கு மிகச் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

இனி?

சச்சின், பொன்டிங் இருவருமே 2011 உலகக்கிண்ணம் வரை விளையாடவேண்டுமெனக் கருதியுள்ளனர். ரசிகர்களுக்கும் அதுவே விருப்பம்.

அதற்கான மனரீதியான திடத்தையும், ஓட்டங்கள் குவிக்கும் அடித்தளத்தையும் இந்த ஒருநாள் தொடர் வழங்கும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

இன்னொருசரித்திரபூர்வ முக்கியத்துவம் இந்தத் தொடருக்கு இருக்கிறது..

சச்சின் டெண்டுல்கர் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகள் ஆட ஆரம்பித்து இந்த நவம்பர் 14ஆம் திகதியுடன் இருபது வருடங்கள் ஆகின்றன.

இருபது வருடங்களாக கிரிக்கெட்டையும் உலகளாவிய ரசிகர்களையும் மகிழ்ச்சிப் படுத்தி பரவசமூட்டியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Post a Comment

15Comments

Please Select Embedded Mode To show the Comment System.*