அம்மா 26

ARV Loshan
32

விகடனில் ஆரம்பித்து எங்கள் பதிவுலக நண்பர்கள் பலபேரிடமும் தொற்றியுள்ள 25 ட்ரெண்டில் இருந்து நான் எடுத்துக் கொண்ட விஷயம் இது.
அவங்க எல்லோரும் 25.. நான் 26.

இன்று அக்டோபர் 26ஆம் திகதி. எனது அன்புக்குரிய அம்மாவின் (சுமதி பாலஸ்ரீதரன்)பிறந்த நாள்.
எனவே தான் அவருக்குரிய அன்புப் பரிசாக இந்த அம்மா 26

இப்போது அப்பாவுடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா (அவர்களது மூன்றாவது தேனிலவு ஹீ ஹீ.) சென்றுள்ள அம்மாவுக்கு அனுப்பும் பரிசு இது.

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா..

அம்மா, அப்பா என் மகனுடன்

1.திருமணத்துக்கு முன் கிறிஸ்தவராக இருந்த அம்மா இப்போது எந்த ஒரு விரதமும் தவறவிடாத இந்துவாக மாறியதும் அவருக்காக அப்பா தேவாலயம் செல்வதும் தங்கள் காதலை புரிந்துணர்வை எங்களுக்கு நெகிழ்வாக காட்டும் விடயங்கள்.

2.20 வயதில் உழைக்க ஆரம்பித்த அவரின் 37 வருட அலுவலகப் பயணத்தை எத்தனையோ சண்டைகளின் பின்னர் எனது திருமணத்தை காட்டி நிறுத்திவைத்த பெருமை எனக்கே ஆனது. எங்களுக்காக உழைத்துக் களைத்தவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமல்லவா?

3.ஒலிபரப்பு மீதான எனது தீராக் காதல்,பற்று என்பவை அம்மாவின் ஆதரவினாலேயே வெற்றிகரமாக்க முடிந்தது.அவருடன் சிறு வயது முதலே இலங்கை ஒலிபரப்பு கூட்டு தாபனத்துக்குள் சென்று வந்ததே இந்த ஆர்வத்துக்கான முக்கிய காரணங்கள்.

4.திருமணத்தின் பின்னரே சமையல் பழகினாலும் வித விதமாக,புதிய உணவுகள் சமைப்பதிலும், வட,தென் இந்திய உணவுகள். தொலைகாட்சி,பத்திரிகைகளில் பார்த்த சுவையான ரெசிப்பிகளை உணவாக மாற்றி எங்களை மகிழ்ச்சிப் படுத்துவதிலும் நிகர் அம்மா தான்.
(இப்போது என் மனைவிக்கும் அம்மாவுக்கும் ஒரு ஆரோக்கியமான சுவையான போட்டியே நடக்கிறது)

5.மகன்களுக்குப் பிறகு எங்கள் அம்மாவுக்குப் பிடித்தது மரம்,செடி கொடிகள் அடங்கிய அவரது செல்ல வீட்டு தோட்டம்.மினக்கெட்டு அவர் வளர்க்கும் ரோசா செடிகளும் இதர பூச்செடிகளும் கொஞ்சம் வாடினாலும் மிக வருத்தப் படுவார்.அம்மா எங்கேயாவது வெளியே போயிருக்கும் நேரங்களில் மறந்து போய் நாம் அம்மாவுடைய பூங்கன்றுகளுக்கு நீர் விடாமல் அவை வாடி நின்றால் அதனால் எங்களுக்கு திட்டு விழுவதும் உண்டு.

6.அம்மாவுக்கு பிடித்த உணவுகள்.. பிட்டு, இட்லி, மசாலா தோசை.
அவர் சமைப்பதில் எனக்குப் பிடித்தது பால் அப்பம்.

7.நொறுக்கு தீனி உண்பதில் அலாதிப் பிரியம்.
மிக்ஷர், புளிப்பான உணவுகளான மாங்காய், நெல்லிக்காய், அம்பரேல்லா, கொய்யாக்காய் என்பனவற்றை ரசித்து உண்பார்.

8.எனது தம்பிமார் இருவரிலும் கூடப் பாசம் உண்டெனினும் மூத்த மகன் என்னிடம் ஒரு தனியான பாசமும் உரிமையும் உண்டு. பாசமும் கோபமும் என் மேல் தான் அதிகம் வெளிப்படும்.

9.அம்மா நகத்துக்கு nail polish போட்டோ, தலைமுடி வெட்டியோ இதுவரை நான் கண்டதேயில்லை. அவர் சுடிதார் போடத் தொடங்கியதே நாம் மூவரும் வலியுறுத்தி ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான்.

10.மூன்று மொழிப் பாண்டித்தியம் உடையவர்.மூன்று மொழிகளிலும் எழுத,வாசிக்க,பேச முடியும். சிங்களம் எனக்கு சொல்லித் தந்ததும் அம்மா தான்.

11.இன்றுவரை எனக்கு அலுவலக சம்பந்தமான, இல்லாவிட்டால் வேறு எந்தத் தேவைக்குமான ஆங்கிலக் கடிதங்களை எழுதித் தருபவர் என் அம்மா.

12.அம்மாவின் தந்தை இலங்கையின் முதலாவது தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராக இருந்ததால் அம்மாவிடமும் இயற்கையாக இருந்த ஆற்றலால் அவர் தொடர்ந்து எழுதிய கிராம சஞ்சிகை (அம்மா நடித்தும் இருந்தார்) உண்டா விருதைப் பெற்றுக் கொடுத்தது.

13.எவ்வித பிரதிபலனும் கருதாமல் பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் படைத்தவர் அம்மா.
பல திருமணங்களையும் பொருத்தியதொடு,அப்பாவோடு சேர்ந்து நடத்தியும் வைத்துள்ளார்.

14.நண்பிகள் என்றால் போதும். அவரது பள்ளிக் காலத்திலிருந்து இன்றுவரை ஏராளமான நண்பிகள். அலுவலக நண்பிகளுடன் தொலைபேசி அரட்டை அம்மாவுக்கு மிகப் பிடித்த ஒன்று.நட்புக்கு உயரிய மரியாதை கொடுப்பார்.

15.நேரத்துக்கு தூங்கும் வழக்கம் அம்மாவுக்கு உண்டு. ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணிக்கெல்லாம் தூங்கப் போய்விடுவார். அனால் எவ்வளவு சீக்கிரம் துயில் எழும்பவேண்டி இருந்தாலும் அலுக்காமல் எழும்பி விடும் குணம் உடையவர்.

16.என் மகன் ஹர்ஷஹாசன் தான் இப்போது எங்கள் குடும்பத்தினதே செல்லம் என்பதால் அவனுடன் பொழுதைக் கழிப்பதிலும் விளையாடுவதிலும் அதீத விருப்பம். அவன் செய்யும் ஒவ்வொரு புதிய செய்கைகளிலும் தன்னை மறந்து லயித்திருப்பார்.

17.அம்மாவுக்கு பிடித்த நடிக,நடிகையர்,பாடக,பாடகியர் யார் என்று அறிவது மிகக் கஷ்டம்.
எமது விருப்பங்களே வீட்டில் முதன்மை பெறுவதால் அம்மாவின் ரசனை எங்களுக்கு தெரியாமலே போனது.
எனினும் சூர்யா,ஸ்ரீக்காந்த்,ஜெயம் ரவி பிடிக்கும் என்று உணர்ந்துள்ளேன்.
அசினின் பிறந்தநாளும் இன்றேன்பதால் எனக்கு அசின் பிடிக்கும் என்று நான் சொல்வதால் அம்மாவுக்கும் அசின் பிடிக்கும் என நினைக்கிறேன்.

18.சிங்கள மொழியறிவும் நாடக ஆற்றலும் அம்மாவுக்கு முன்பிருந்து பல சிங்கள திரைப்பட வாய்ப்புக்களை வழங்கினாலும் மறுத்துவந்த அம்மா, பிள்ளைகள் எண்களும் அப்பாவினதும் வற்புறுத்தலுக்குப் பின் ஒன்றிரண்டு நல்ல,தெரிவு செய்யப்பட்ட சிங்கள திரைப்படங்களில் தமிழ் பாத்திரத்தில் நடித்தார்.(பிரதிகளைப் பரிசீலித்து,கேலி செய்யப்படாத தமிழ் பாத்திரங்கள் அவை)

19.பூந்தோட்டம் தவிர புத்தகம்,பத்திரிகைகள் வாசிப்பது,இணையத்தில் உலாவுவது அம்மாவின் அடுத்த பொழுது போக்குகள்.

20.அப்பாவுடன் மாலைவேளைகளில் வெளியே செல்வது அம்மா விருப்பத்துடன் கடமையாக ஏற்றுக் கொண்ட இன்னொரு வழக்கம்.இடையிடையே வாக்குவாதப்பட்டாலும் அப்பா,அம்மாவுக்கிடையிலான அன்பு மிக அற்புதமானது.

21.சேமிப்பதில் மிக அக்கறையானவர் அம்மா. தேவையற்ற செலவுகள் அம்மாவுக்கு எப்போதுமே பிடிக்காது.இதனாலேயே எங்கள் கடைக்குட்டி மயூரன் மீது அம்மாவுக்கு ஏகப்பட்ட பரிவு.

22.எந்தக் காரியமாக இருந்தாலும் தன்னிடம் சொல்லி ஆலோசனை பெறவேண்டும் என்று ஆசைப்படுவார்.நானும் தம்பிமாரும் சிறுவயது முதலே எதுவாக இருந்தாலும் அம்மாவுடன் பகிர்ந்துகொள்வதால் இப்போதும் அப்படித் தான்.
தற்செயலாக ஏதாவது சொல்லாமல் செய்தால் மிக மனம் நொந்துபோவார். very sensitive.

23.தனக்கு அக்கா தவிர (பெரியம்மா) வேறு பெண் சகோதரமோ,பெண் குழந்தைகளோ இல்லை என்ற குறை எப்போதுமே அம்மாவுக்கு உண்டு.

24.அம்மாவுக்கு முன்னர் கிரிக்கெட் என்றாலே பிடிக்காது. எனினும் அப்பா,நாங்கள் எல்லோரும் கிரிக்கெட் வெறியர்கள் என்பதால் வேறு வழியில்லாமல் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து இப்போது வீரர்களின் பெயர்கள் எல்லாம் அத்துப்படி.
அனேகமாக நான் சப்போர்ட் செய்யும் அணிப்பக்கமே அம்மாவும் இருப்பார்.

25.அம்மாவின் சுறுசுறுப்பு,நேரம் தவறாமை,துணிச்சல்,அன்பு ஆகியன நான் வியக்கும் குணங்கள்.
நான் கைது செய்யப்பட்டு உள்ளே இருந்த ஒருவாரமும் என் சிறு மகனோடு மனைவி வெளியே சென்று ஏதும் செய்யமுடியாத நிலையில், அம்மா தம்பி செந்தூரனோடு தனித்து துணிந்து செயற்பட்டதும், ஓடித் திரிந்து முயற்சிகள் எடுத்ததும் நான் எப்போதும் மறக்க முடியாதவை.

26.எனது மனைவி வீட்டுக்கு முதல் மருமகள் என்பதால் மிக எதிர்பார்த்தார். இதனால் அவரிடமே தெரிவு செய்யும் பொறுப்பையும் கொடுத்தேன். எனக்கும் பிடித்ததால் அம்மாவுக்கும் மகிழ்ச்சி.
என் மனைவி பல விதங்களில் அம்மா போலவே என்று பலரும் சொல்வது மற்றுமொரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்.



Post a Comment

32Comments

Please Select Embedded Mode To show the Comment System.*