சர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த மினி உலகக் கிண்ணம் என்றும் அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகள் - ICC CHAMPIONS TROPHY நேற்றைய தினம் தென்னாபிரிக்காவிலே ஆரம்பமாகியுள்ளன.
நேற்று மாலை 6மணிக்கு முதலாவது போட்டி (இலங்கை எதிர் தென் ஆபிரிக்கா) ஆரம்பமாகுமுன் இந்தப் பதிவை ஏற்றவேண்டும் என்று முயன்ற போதும், அலுவலக வேலைகள், ஆணி பிடுங்கல்களினால் - முதலாவது போட்டியைப் பார்த்துக்கொண்டே பதிவிட ஆரம்பித்து, இரண்டாவது போட்டி ஆரம்பிப்பதற்கு முதல் பதிவேற்றுகிறேன்.
இந்தியக் கிரிக்கெட் சபையின் தலைகளில் ஒருவரான ஜக்மோகன் டால்மியா, ICC தலைவராக ஆரம்பித்த ஒரு எண்ணக்கருத்துத் தான் இந்த சாம்பியன்ஸ் கிண்ணம். வளர்ந்து வரும் நாடுகளில் கிரிக்கெட்டைப் பரப்பவும், உலகக்கிண்ணங்களிடையே ICCக்கு நிதி திரட்டவுமென முதலில் 98ல் பங்களாதேஷிலும், 2001இல் கென்யாவிலும் மினி உலகக்கிண்ணம் என்றும் நடத்தப்பட்ட இந்தத் தொடர் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறியது கண்டு பெரிய நாடுகளில் இதை நடாத்தப் பெரும் போட்டியே நடந்தது.
படிப்படியாக இலங்கை(2002), இங்கிலாந்து (2004), இந்தியா (2006) என்று இப்போது தென் ஆபிரிக்காவிற்கு வந்துள்ளது.
முதல் தடவையாக மினி உலகக்கிண்ணம் நடந்தபோது வெற்றியை விடப் பங்குபற்றுவது மட்டுமே பிரதானமாக இருந்தது. உதாரணமாக தென்னாபிரிக்கா வென்ற அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் எந்தவொரு தென்னாபிரிக்க ஊடகவியலாளரும் பிரசன்னமாகியிருக்கவில்லை. எல்லா அணிகளுமே ஹொங்கொங் சிக்சர்ஸைப் போல ஒரு கேளிக்கைத் தொடராகவே இந்த Knock out போட்டிகளைக் கருதினர்.
இப்போது இது மற்றுமொரு உலகக்கிண்ணமாக கருதப்படும் அந்தஸ்து மிக்கதாய் மாறியுள்ளது.
அநேகமான நாடுகள் இந்த சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றுள்ள நிலையில் இன்னும் ஒரு தடவையேனும் வெல்லாத நாடுகள் - இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் மட்டுமே.
இம்முறை ஆறாவது தடவையாக அரங்கேறும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலே ஒருநாள் தரப்படுத்தலில் முதல் 8 இடம் பிடித்த நாடுகள் இருபிரிவுகளாக விளையாடுகின்றன.
இப்போது மேற்கிந்தியத்தீவுகள் இருக்கும் நிலையில் பங்களாதேஷ் அணி எவ்வளவோ மேல்!
பிரிவு Aயில் - அவுஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்), இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள்.
பிரிவு Bயில் - தென் ஆபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவுக்குப் போட்டியாக தென்னாபிரிக்காவும் மாபெரும் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தும் ஒரு தேசமாக வெற்றிகரமாகத் தன்னை நிரூபித்திருக்கிறது.
2003 உலகக்கிண்ணம், 2007 T 20 உலகக்கிண்ணம், 2009 IPL... இப்போது சாம்பியன்ஸ் கிண்ணம்.
2010ம் ஆண்டு கால்பந்து உலகக்கிண்ணம் என்றும் பிரமாண்டமான கோலாகலத்துக்கும் தம்மைத் தயார்படுத்தி வருகிறது தென்னாபிரிக்கா.
சில தரவுகள்
தென் ஆபிரிக்க ஆடுகளங்கள் வேகமானவை. பந்து மேலெழும் தன்மையுடையவை(Bouncy) தம்மை நிலை நிறுத்தித் துடுப்பெடுத்தாடும் நிதானமான துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானவை.
எனினும் இம்முறை இடம்பெறவுள்ள 15 போட்டிகளுமே இரண்டே மைதானங்களிலேயே (Johannesburg & Centurion) விளையாடப்படவுள்ளன.
இவையிரண்டுமே ஒப்பீட்டளவில் சிறியவையாகவும், ஓரளவு வேகமாக ஓட்டங்கள் குவிக்கக்கூடிய மைதானங்களாகவும் காணப்படுகின்றன.
தென்னாபிரிக்க ஆடுகளங்களில் தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளைத் தவிர வேறு எந்த அணியும் தோல்விகளை விட வெற்றிகளை அதிகமாகப் பெறவில்லை.
தென் ஆபிரிக்கா 58 வெற்றி 21 தோல்வி
அவுஸ்திரேலியா 17 வெற்றி 09 தோல்வி
இந்தியா 5 வெற்றி 09 தோல்வி
இங்கிலாந்து 03 வெற்றி 09 தோல்வி
இலங்கை 04 வெற்றி 12 தோல்வி
நியூசிலாந்து 03 வெற்றி 14 தோல்வி
மேற்கிந்தியத் தீவுகள் 02வெற்றி 10 தோல்வி
பாகிஸ்தான் 02 வெற்றி 10 தோல்வி
துடுப்பாட்ட வீரர்களைப் பொறுத்தவரையில் சராசரியின் அடிப்படையில் உலகின் தரமான துடுப்பாட்ட வீரர்களே முன்னணியிலுள்ளார்கள்.
டிராவிட்
17 போட்டிகள் 737 ஓட்டங்கள்
சராசரி 56.69 9 - 50கள்
பொன்டிங்
22 போட்டிகள் 1031 ஓட்டங்கள்
சராசரி 54.26 4சதம், 4 50கள்
கலிஸ்
113 போட்டிகள் 4080 ஓட்டங்கள்
சராசரி 46.89 6சதம், 28 50கள்
சனத் ஜெயசூரிய, சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார, மொஹமட் யூசும் போன்றோரெல்லாம் 31, 32 என்ற சராசரியே...
மஹேல நேற்றைய அதிரடிக்கு முன்னர் முன்னணி அணிகளுக்கெதிராக விளையாடிய போட்டிகளில் பெற்ற ஓட்டங்கள் 9,3,1,9,1,0,0,5..
நேற்று மகேல தனது முன்னேற்றத்தையும் விஸ்வரூபத்தையும் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சாளருக்கேதிராகவே காட்டியது சிறப்பு..
பிரென்டன் மக்கலம், யுவராஜ் சிங், அஃப்ரிடி போன்ற அதிரடி வீரர்களின் சராசரிகள், பெறுபேறுகளும் குறிப்பிடத்தக்களவாக இல்லை.
தென்னாபிரிக்க மண்ணில் முதல் 8 அணிகளுக்கெதிராகப் பந்துவீச்சில் அதிகமாக சாதித்திருப்பது வேகப்பந்துவீச்சாளர்களே... முரளிதரன் தவிர...
அவுஸ்திரேலியாவின் பிரெட் லீ 19 போட்டிகளில் 41 விக்கெட்டுக்கள்.
இவரைத் தொடர்ந்து நியூசிலாந்தின் ஷேன் பொன்ட், தென்னாபிரிக்காவின் மகாயா ந்டினி. முரளிதரன் ஆகியோர் விக்கெட்டுக்கள் எடுத்துள்ளனர்.
இத்தரவுகளின் அடிப்படையில் அனுபவங்களும் சில அடிப்படைகளும் இன்றி இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணத்தை எந்த அணியாலும் வெல்ல முடியாது என்பது தெளிவு.
அணிகளின் நிலைகள்,எதிர்பார்ப்புக்கள்,வாய்ப்புக்கள்,வீரர்களின் மீதான எதிர்பார்ப்புக்கள் பற்றி அடுத்த பகுதி இன்னும் சில மணிநேரங்களில் வருகிறது..