காணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழகு

ARV Loshan
18

காணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழகு.

மற்றுமொரு தொடர்பதிவு

சில நண்பர்களின் பதிவுகளைப் பார்த்தவுடனேயே எழுத ஆசைப்பட்டேன் - யாரும் அழைக்காமலேயே தொடர்பதிவில் குதிக்கலாம் என்று நினைத்தவேளை தம்பி அஷோக்பரன் அழைத்திருக்கிறார்.


அவரது அழைப்புக்கு நன்றி.

இதேவேளை நேற்றிரவு நண்பர் பிரபாவின் (விழியும் செவியும்) பின்னூட்டமும்,மின்னஞ்சலும் கிடைத்தது..அவரும் என்னை இதே தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார்.
அவருக்கும் நன்றிகள்..

நான்கு விடயம் பற்றியும் மனம் திறக்கிறேன்.


கடவுள்

சிறுவயதில் பழகி இன்றும் தொடரும் பழக்கங்களான பிள்ளையார் சுழி போடுதல், வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது விபூதி அணிதல் போன்ற விடயங்களில் தொடர்ந்தாலும் கடவுள் மீதான நம்பிக்கை குறைந்தோ – அற்றோ போயிருக்கிறது.

முன்பு அம்மாவுக்காகவும், பின்னர் மனைவிக்காகவும் அவர்களுடன் கோயில் போனாலும், ஒன்றுமே இயலாத பட்சத்தில் 'கடவுளே' என்று சொல்வதும் இப்போது குறைந்துவிட்டது.

தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த எந்தவொரு சம்பவமும் இந்தக் கடவுள் மறுப்புக்குக் காரணம் இல்லை.

நாட்டிலே எம் மக்கள் பட்ட துன்பங்கள் பார்த்தும், உலகம் முழுவதும் இத்தனை இலட்சம் மக்கள் அழியும் - அல்லலுறும் நேரம் காக்காத – அருள் புரியாத – ரட்சிக்காத கடவுள் எதற்கு வேண்டும்?

அலங்காரத்துக்கும், ஆராதனைக்கும் மட்டும் கடவுளா?

சடங்குகள், சம்பிரதாயங்கள், சமயங்களுக்காக கடவுள் தேவையில்லை.

பார்க்க என் முன்னைய பதிவு.


யாருக்கும் தீங்கு நினையா மனதும், நேர்மையும், தன்னம்பிக்கையுமிருந்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு மேலே..



காதல்

வாழ்க்கை, கவிதை, இலக்கியம், சினிமா பாடல்களில் என்று அனைத்தையுமே இயக்குகின்ற ஒரு கம்பசூத்திரம்!

எனக்கு 'காதல்' என்பது ஒரு கலவையுணர்வு!

சிலநேரத்தில் மனதை இன்பமாக நோகச்செய்யும் ஒரு புனிதவலி.
சிலநேரம் காமயாத்திரைக்கான தேடல் வழி!

கடற்கரைகள், திரையரங்குகளில் - பார்க்க அருவருப்பான அரையிருட்டுப் பொழுதுபோக்கு – பார்க்கும் வேறுசில இடங்களில் வேடிக்கை, டைம்பாசிங், வீண் வேலை, பணவிரயம், விடலை விளையாட்டு

மிக இளம் பராயத்தில் காதல்(கள்) எனக்குள்ளும் வந்து கடந்து போனதுண்டு!

அது காதலா – Crush/infatuationஆ என பகுத்துணர விருப்பமில்லை. அதில் விடயமுமில்லை.

ஒரு வாழ்ககை – ஒரு காதல் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

காதலை ரசிக்கிறேன்...

திரையிலும், கதைகளிலும், கவிதையிலும், பாடலிலும் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் அரிதான சில நிஜக் காதல்களை-
மனைவியைக் காதலித்தபடி – காதலைக் கலவையாக காதலிக்கிறேன்.


பணம்

உலகையே ஆட்டிவைப்பது – அனைத்துமே இதனை மையப்படுத்தியே இயங்குவதாக எண்ணம் எனக்குண்டு.

எல்லாபாதையும் பணம் நோக்கியே...

தனிமனித வாழ்க்கையில் 19 வயதளவில் ஆரம்பிக்கும் பணம் ஈட்டும் ஓட்டம் - களைத்து, தளர்ந்து, அடங்கிப் போகும் வரை பல்வேறு பாதைகளிலும் ஓடப்பட்ட வண்ணமேயுள்ளது.

பணத்தைவிட மனம், குணமே பெரிது என்று பொய்யாக உரைத்து 'நல்லவன்' என்று பெயரெடுக்க விருப்பமில்லை.

அன்பு, நட்பு என்று உணர்வுகளை மிகப் பெரிதாக மதித்தாலும் பணம் என்பதன் மகத்துவம், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளேன்.

வேலைசெய்ய ஆரம்பித்த இளமையின் முதற்கட்டத்தில் பணம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. வரவு ஸ்ரீ செலவு என்பதே என் கணக்கு.

5, 6 வருடங்களில், 20களின் மத்தியில் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்தால், சேமிப்பு என்று பெரிதாய் எதுவுமில்லை – நம்பிக் கடன் கொடுத்த நண்பர்கள் தந்த ஏமாற்றம் - அப்பா, அம்மாவின் அவசரத் தேவைகளுக்கு உதவமுடியாமல் போனது – போன்ற நிகழ்வுகளால் உத்வேசமாக – மிக உத்வேகமாக பணத்தைத் துரத்தி – நான் நினைத்ததை அடைந்தேன்.

இன்று வரை தளராத ஓட்டம் - தன்னம்பிக்கையுடனும் சரியான வழியிலும் - யாரையும் வஞ்சகமாக வீழ்த்தாமல் பயணித்துக்கொண்டே இருக்கிறது.

இப்போது மகிழ்ச்சியாக, திருப்தியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தாலும் எதிர்காலத் தேவைகள் கருதி தேடல் இன்னமும் தொடர்கிறது.

ஓடும் வரை ஓட்டம்
உழைக்கும் வரை பணம்

எனினும் எனது ஒரு கொள்கையில் மிகத் தெளிவாக உள்ளேன். எவ்வளவு பணம் தந்தாலும் குடும்பத்துக்கென ஒதுக்கிய நேரத்தில் குறை வைக்காமை. சில கொள்கைகள், எனக்கு சரியெனப்படும் விடயங்களை விட்டுக்கொடுக்காமை.



அழகு

அழகு அளவீடுகளிலும் மனவோட்டங்களிலும் தங்கியுள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகாய்த் தெரியும் - ரசனைகள் மாறுபாட்டின் தன்மையில் அழகு மாறுபடும்.

எல்லோருக்குமே பிடித்த, எல்லோருமே ஏற்கின்ற அழகுகளும் இல்லாமலில்லை.

பிஞ்சுக் குழந்தையின் அழகு முகம்
புன்னகைப் பெண்கள்
கடற்கரை சூரியோதயம்
காலைநேர மலையகப் பசுமை
பூக்களில் உறங்கும் பனித்துளி

இவை அனைவருமே ரசிக்கின்ற சில அழகுகள்....

என்னைப் பொறுத்தவரை அழகு என்பது மனதிலும், ரசிக்கின்ற சூழ்நிலையிலும் கூட இருக்கின்றது.

கடும் பசி வேளையிலோ, அடக்க முடியாத துன்ப நிலையிலோ அழகை ரசிக்க முடியுமா?

மனமும் பார்வையும் அழகாயிருந்தால் பார்க்கும் அனைத்துமே அழகுதான்!

***************************


இந்தத் தொடர் பதிவு சுவாரஸ்யமானது...
எனினும் நான் யாரையும் தனியாகப் பெயரிட்டு அழைக்கப் போவதில்லை..
என் இந்தப் பதிவை வாசிக்க இருக்கின்ற எந்த நண்பர்களும் பதிவிடலாம்.. என்னிடமிருந்து சங்கிலியைத் தொடர்வதாக சொன்னால் எனக்கு அதில் மகிழ்ச்சி.. ;)


பிற்சேர்க்கை= ராமாவின் கேள்விக்கான பதில்.. கடவுளின் தலைப்பின் கீழ் இடப்பட்டுள்ள படம், கடவுள் நம்பிக்கையற்றோர் அதிகமாகப் பயன்படுத்தும் சின்னங்களில் ஒன்று.




Post a Comment

18Comments

Please Select Embedded Mode To show the Comment System.*